“நான் வளர்ந்து வந்த நேரத்தில் இங்கு வட்டிக்கு பணம் அளிப்பவர்கள் அதிகமாக இல்லை. ஆனால், இப்போது பல விவசாயிகள் இயந்திரங்களை வாங்குவதற்கும், பூச்சிமருந்துகளையும் உரங்களையும் வாங்குவதற்காக கடன் வாங்குகிறார்கள்” என்கிறார் பட்கான் கிராமத்தைச் சேர்ந்த சுக்லால் சுலியா.
“நான் மாட்டுச் சாணத்தை உரமாகப் பயன்படுத்தினோம். அதுதான் மண்ணுக்கு நன்மை செய்தது. அதிகமாக செலவாகவுமில்லை. கூடுதல் மகசூல் பெறுவீர்கள் என்று சொல்லி அரசு தரப்பில்தான் பூச்சிமருந்துகளையும், உரத்தையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்கள். இப்போது, 40 வருடங்களுக்குப் பிறகு, தொடர்ந்து பூச்சி மருந்துகளையும், உரங்களையும் பயன்படுத்திய பிறகு மண்ணின்தன்மை கெட்டுவிட்டது. சொற்ப லாபத்துக்கு காய்கறிகளை சந்தையில் விற்கிறார்கள். வாடிக்கையாளர்களிடம் விற்பதைவிட மிகக் குறைந்த அளவிலான பணத்தையே தரகர்கள் தருகிறார்கள். அதனால், இறுதியில் விவசாயிகள் மிகக் குறைவான வருவாயையே பெறுகிறார்கள்” என்கிறார், வருத்தத்துடன்.
மத்திய பிரதேசத்தின் நிவாலி தாலுக்காவின் சாகட் கிராமத்தில் இருக்கும் ஆதர்ஷிலா கற்றல் மையத்தைப் பார்வையிடச் சென்றபோது, அஞ்சாட் தாலுக்காவைச் சேர்ந்த 83 வயது சுக்லால்ஜியைச் சந்தித்தோம். ஆசிரியராக இருக்கும் அவரது மகன் பத்ரியைப் பார்ப்பதற்காக அவர் அங்கு வந்திருந்தார். கடந்த அரை நூற்றாண்டின் குழந்தைப் பருவ நாட்களைக் குறித்தும், அதன் மாற்றத்தைக் குறித்தும் அறிந்துகொள்வதற்காக நாங்கள் நினைத்தோம். சுக்லால்ஜி நிம்மடி மொழியில் பேசினார். பிலாலா (பட்டியலின பழங்குடியினர்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பேசும் அம்மொழியை, அவரது மகன் பத்ரி எங்களுக்காக மொழிபெயர்த்தார்.
“மாட்டு வண்டிகள் அந்தக் காலத்தில் இல்லை. எங்கு சென்றாலும் நடந்துதான் சென்றேன். 48 கிலோ எடைப் பொருட்களைச் சுமந்துகொண்டு ஏழு கிலோமீட்டருக்கு நடப்பேன். அப்போது மிதிவண்டிகள் ஆடம்பரமானவை. அரசு அதிகாரி மட்டும்தான் மிதிவண்டியில் கிராமத்துக்கு வருவார். அதைப் பார்ப்பதற்கே நாங்கள் பயப்படுவோம்” என்கிறார் சுக்லால்ஜி, சிறு புன்னகையுடன்.
இளைஞராக இருந்தபோது, 14 ஏக்கர் பயிர்நிலத்தில் பயிரிட்ட சுக்லால்ஜியின் வாழ்க்கை, பயிர்க்காலம், கால்நடைகள் ஆகியவற்றைச் சுற்றியே இருந்துள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, நவனே, படாலி, சவாரியா, சன்னா, கருப்புக் கொண்டைக்கடலை, சோயாபீன்ஸ், கொள்ளு, ஆளிவிதைகள், கம்பு, பருத்தி மற்றும் வெள்ளரிக்காய் என பலவிதமான பயிர்களை பயிரிட்ட குடும்பம் அவருடையது. குடும்பங்கள் அனைத்து தன்னிறைவு அடைந்ததாக இருந்தது. அவர்களுக்கான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள்” என்கிறார். “எங்களின் விதைகளும், தானியங்களும் நாட்டுப்பயிர்கள்” என்கிறார். இப்போது, சுக்லால்ஜியும் அவரது மூத்த சகோதரருமான ராஜாராம்ஜியும் சோளமும், கோதுமையும் மட்டுமே பயிரிடுகிறார்கள்.
சுக்லால்ஜி, 30 வருடங்களுக்கு முன்னதாகவே பயிரிடுவதை நிறுத்திவிட்டார். இப்போது, தனது மகன் பத்ரியுடனும், சகோதரர் ராஜாராமுடனும் வாழ்கிறார். அவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் மற்றும் 17 பேரக்குழந்தைகளுடன் வாழ்கிறார். ராஜாராம் மட்டுமே தொடர்ச்சியாக பண்ணை வேலைகளை கவனித்து வருகிறார்.
சுக்லால்ஜி ஐந்து சகோதரர்களுடன் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தவர். அதில் 30 நபர்கள் இருந்திருக்கிறார்கள். “வீட்டில், பெண்கள் ஒவ்வொரு நாளும் 20 கிலோ தானியங்களை அரைப்பார்கள் – ஜோவார், கோதுமை, சோளம் அல்லது அரிசி முழுக் குடும்பத்துக்கான உணவுக்கும் ஏற்பாடு செய்வார்கள். சோள ரொட்டிகளையும், உடைத்த அரிசியினால் செய்யப்பட்ட கஞ்சி, எங்கள் வீட்டு பசுக்களிடமிருந்து கிடைக்கும் பால், மோர் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தோம்.
“அப்போது எந்த இயந்திரங்களும் இல்லை. எல்லா வேலைகளையும் கைகளின் மூலமாகத்தான் செய்யவேண்டும்” என்கிறார். கரும்பிலிருந்து அச்சு வெல்லத்தையும், கடலை எண்ணெயையும் உற்பத்தி செய்வோம். கட்டி (கல் அரைப்பான்) மூலம் கடலையை அரைத்தால், தெலி(எண்ணெய் வணிகர்) வந்து எண்ணெயைப் பிரித்துக் கொண்டு செல்வார். இந்தக் குடும்பம் ஒரு நாளைக்கு 12 முதல் 15 லிட்டர் எண்ணெயை உற்பத்தி செய்வார்கள்.
சோளத்தை அதன் உமியில் இருந்து பிரிப்பதற்கு பாரம்பரியமான முறைகளை கையாண்டோம். சோளத்தை உலரவைத்து, சாக்குகளில் நிரப்பி அதை பாறை மீது அடித்து உமியைப் பிரிப்போம். அந்த முறைகளைக் கைவிட்டு, இயந்திரத்திற்கு மாறிவிட்டார்கள்” என்கிறார்.
வகுப்புவாரியாகவோ, சமூகத்தின்படியோ உடைகளில் வித்தியாசம் இருக்கும் என்கிறார் சுக்லால்ஜி. “அரசு அதிகாரிகள், அழுத்தமான அடர் வண்ண ஆடைகளை அணிவார்கள். அது மிகவும் விலை உயர்ந்த ஆடைகளாக இருக்கும். பிறர் எளிமையான ஆடைகளை அணிவார்கள். பெண்கள் அடர் வண்ணத்தில் ஓரம் நெய்யப்பட்ட வெள்ளைச் சேலைகளை அணிவார்கள். இந்த சாயம் தோய்க்கும் பணியைச் செய்வதற்காக அந்தத் தொழிலைச் செய்யும் சமூகமக்கள் இருந்தனர்” என்கிறார்.
ஆடைகள் மற்றும் சில பொருட்களை வாங்குவதற்காக வாரத்துக்கு ஒருமுறை கிராமத்தினர் சந்தைக்கு (ஹாட்) செல்வார்கள். “அங்குதான் நெய் மற்றும் வெல்லம் போன்றவற்றை நாங்கள் விற்பனை செய்வோம்” என்கிறார்.
”இப்போது, கிராமத்து மக்கள் நகரங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட சோப்புகளோ, எண்ணெயோ, உணவோ இப்போது அவர்களுக்குத் தேவைப்படவில்லை” என்கிறார். ”பெரியவர்களின் அறிவுரைகளை அவர்கள் கேட்பதில்லை. கடைகளில் கிடைப்பதை மட்டுமே அவர்கள் வாங்க நினைக்கிறார்கள். பெற்றோர் பலர் கடனை வாங்கி அவர்களை படிக்க அனுப்பினால், அவர்கள் மது குடித்துவிட்டு, போதை பழக்கங்களுக்கு அடிமையாகவும் மாறுகிறார்கள். பெற்றோரிடம் பொய் கூறிவிட்டு செல்கிறார்கள். பெருமளவு பணம் அவர்களது மருத்துவச் செலவுகளுக்கும், மருத்துவமனைச் செலவுகளுக்குமே செல்கிறது” என்கிறார்.
மேலும், “உங்கள் குழந்தைகளை நீங்கள் இங்கேயே தங்குமாறு சொன்னாலும் அவர்கள் கேட்பார்களா என்ன? நான் இந்த கிராமத்தை நேசிக்கிறேன். ஆனால் இங்கு வாழ்க்கை மிச்சமில்லை” என்கிறார் மிகவும் வருத்தத்துடன்.
பத்ரி, ஜெயஸ்ரீ மற்றும் அமித் ஆகிய ஆதர்ஷிலா ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின் நேரத்தை எங்களுக்காக செலவிட்டிருக்கிறார்கள். எங்களுக்கு உதவியதற்காக ஆசிரியர் கமலா முகுந்தனுக்கு நன்றி
PARI மூலமாக ஊக்கமடைந்து, பெங்களூரு கற்றல் மையத்தைச் சார்ந்த இரண்டு இடைநிலைப் பள்ளி மாணவர்கள், அவர்களின் மத்தியப் பிரதேச கல்விச் சுற்றுலாவின்போது விவசாயியைச் சந்தித்து ஆவணப்படுத்தியுள்ளனர். PARI கிராமப்புற இந்தியாவின் வெவ்வேறு பரிணாமங்களையும், ஆவணப்படுத்தும் முறையையும் விளக்கியது.
தமிழில்
: குணவதி