இன்னும் அந்த நாள் ஞாபகம் இருக்கிறது. அம்மாவுக்கு அருகே போர்வைக்குள் சுருண்டு படுத்துக் கொண்டு அவர் சொன்ன கதையை கேட்டுக் கொண்டிருந்தேன். “…பிறகு சித்தார்த்தன் வாழ்வின் உண்மையான அர்த்தத்தை தேடி வீட்டை விட்டு வெளியேறினான், “ என்றார். இரவு முழுக்க மழை பெய்தது. எங்களின் அறை பூமியின் மணத்தை கொண்டிருந்தது. மெழுகுவர்த்தியின் கரும்புகை கூரையைத் தொட முயன்று கொண்டிருந்தது.
“சித்தார்த்தனுக்கு பசித்தால் என்ன செய்வான்?” என கேட்டேன். எத்தகைய முட்டாள் நான்? கடவுளுக்கு எப்படி பசிக்கும்?
பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அதே அறைக்கு சென்றேன். மழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலின் கதவுகளிலிருந்து மழைநீர் சொட்டிக் கொண்டிருந்தது. எனக்கருகே போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த அம்மா செய்தியை கவனித்துக் கொண்டிருந்தார். “21 நாள் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து நகரங்களை விட்டு சொந்த ஊர்களுக்கு ஐந்து லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்றிருக்கின்றனர்.”
கேள்வி மட்டும் அப்படியே இருந்தது. அவர்களுக்கு பசித்தால் என்ன செய்வார்கள்?
ரத்தத்தின் சுவடுகள்
எறும்புகள் போல் நடக்கும் மக்களை
சிறிய ஜன்னலின் வழி
நான் பார்க்கிறேன்.
சிறுவர்கள் விளையாடவில்லை
குழந்தைகள் அழவில்லை.
கைவிடப்பட்ட சாலைகளை
பீடித்திருந்தது அமைதி.
அது அமைதியா, பசியா?
தலைகளில் மூட்டைகளையும்
மனங்களில் அச்சத்தையும்
பசி மீதான அச்சத்தையும்
கொண்டு செல்பவர்களை
ஜன்னலிலிருந்து பார்த்தேன்.
பல மைல்கள் நடந்து
பாதங்களில் கசிந்த ரத்தச்சுவடுகள்
அவர்களின் இருப்புக்கான
அடையாளங்கள்.
நிலம் சிவப்பானது.
வானமும் சிவந்தது.
சுருங்கிய மார்பகங்களில்
குழந்தைக்கு பால் புகட்டும் தாயை
ஜன்னலிலிருந்து பார்த்தேன்.
சுவடுகள் நின்றுபோயின.
வீடு சேர்ந்தனர் சிலர்
வழியில் மாண்டனர் சிலர்.
மருந்து தெளிக்கப்பட்டவர் சிலர்.
மாடுகளாக லாரிகளில்
அடைக்கப்பட்டவர் சிலர்.
வானம் இருண்டது. பின் நீலமானது.
நிலம் மட்டும் சிவப்பாகவே இருந்தது.
அவளை பொறுத்தவரை மட்டும்
ரத்தச்சுவடுகள் இன்னும்
மார்பகங்களில் இருக்கின்றன.
குரல்: சுதன்யா தேஷ்பாண்டே ஒரு நடிகராகவும் ஜன நாட்டிய மஞ்சில் இயக்குநராகவும் லெஃப்ட்வேர்ட் புக்ஸ்ஸில் ஆசிரியராகவும் இருக்கிறார்.
தமிழில்: ராஜசங்கீதன்