அவர்கள் அங்கு செல்ல கிட்டத்தட்ட 900 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளனர், இப்போது தினசரி கூலி வேலைக்கு முதலாளிகள் அவர்களை தேர்வு செய்வதற்கு காத்திருக்கின்றனர். நிச்சயமற்றதன்மை இந்தத் தொழிலாளர்களை பிணைக்கிறது. ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி மற்றும் கதிரி ஆகிய இடங்களில் இரு ரயில்கள் மாறி அவர்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கின்றனர். எங்களது கிராமங்களில் வறட்சி வேலைகள் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்) எதுவும் இல்லை மேலும் நாங்கள் பல வாரங்களாக செய்த வேலைகளுக்கே எங்களுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை என்று பல விவசாயிகள் என்னிடம் கூறினர். எந்த வேலையாக இருந்தாலும் உண்மையான தேவையில் கடந்த ஆண்டு பத்தில் ஒரு பங்காக அது குறைந்துவிட்டது.
எனவே ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குந்தக்கல் பயணிகள் ரயிலில் ஏறி கொச்சியை வந்தடைகின்றனர். "கொச்சிக்கு வரும்போது யாரும் டிக்கெட் எடுப்பதில்லை. திரும்பிச் செல்லும் போது பாதிப்பேர் டிக்கெட் எடுத்துக் கொள்கின்றனர் மீதி பாதி பேர் டிக்கெட் எடுப்பதில்லை", என்று அனந்தபூரின் முடிகுபா மண்டலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி சீனிவாசலு கூறுகிறார்.
சீனிவாசலு அனந்தபூருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு முறை பிடிபட்டிருக்கிறார். "கொச்சியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நான் தண்ணீர் பாட்டிலில் அரை லிட்டர் மது நிரப்பி ரயிலில் குடித்துக் கொண்டிருந்தேன். பாதியில், எனக்கு ஞாபகம் வந்தது நான் டிக்கெட் வாங்கவில்லை என்று". எனவே சீனிவாசலு தான் கேரளாவில் சம்பாதித்த 8,000 ரூபாயை ஒரு சக பயணியிடம் கொடுத்து வைத்துவிட்டு 80 ரூபாய் மட்டும் தன்னிடம் வைத்துக் கொண்டார், மேலும் அவரது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க பொறுமையாக காத்திருந்தார்.
காட்பாடியில் டிக்கெட் சேகரிப்பவர் சீனிவாசுலுவை நிறுத்தினார்.
"டிக்கெட் எங்கே?", என்று அவரிடம் டிக்கெட் சேகரிப்பவர் கேட்டார்.
"என்னிடம் டிக்கெட் இல்லை", என்று சீனிவாசலு பதிலளித்திருக்கிறார்.
"நில்லுங்கள்". டிக்கெட் சேகரிப்பவர் தெலுங்கில் பேசினார், "என்னுடன் வாருங்கள் மாமா (மச்சான்)".
"போகலாம் மச்சான்", சீனிவாசலு நம்பிக்கையுடன் பதிலளித்திருக்கிறார். டிக்கெட் சேகரிப்பவர் அவரிடம் இருந்து 50 ரூபாய் பெற்றுக்கொண்டு ஒரு எச்சரிக்கையுடன் அவரை அனுப்பி வைத்திருக்கிறார், குடித்துவிட்டு மீண்டும் ரயிலில் பயணம் செய்ய மாட்டேன் என்று சீனிவாசலு உறுதியளித்திருக்கிறார்.
டிக்கெட் சேகரிப்பவர் நடக்கத் துவங்கியதும், சீனிவாசலு, "ஐயா, என்னிடம் சாப்பிட பணம் இல்லை", என்று கூறியிருக்கிறார். டிக்கெட் சேகரிப்பவர் அவரை வசைபாடிவிட்டு அவரது பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தினமும் அதிகாலையில் கொச்சியில் உள்ள கல்லூர் சந்திப்பிற்கு வருகின்றனர்; வளைகுடாவின் பணத்தை வைத்து சாலைகள் மற்றும் வீடுகள் கட்டும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் வேலைக்கு அழைத்துச் செல்லட்டும் என்று அவர்கள் சாலையின் இருபுறமும் பொறுமையாக காத்திருக்கின்றனர். வேலை நாட்களில் அவர்கள் 6:00 மணிக்கு முன்பே கழிப்பறைக்குச் சென்று குளித்துவிட்டு சாலையோரம் வரிசையில் காத்திருக்கின்றனர். வேலை இல்லாத போது தான் ஆற்றில் குளிக்க நேரம் இருக்கிறது என்று தொழிலாளி நாகேஷ் கூறுகிறார்.
காலை 7 மணி அளவில் சந்திப்பு நெரிசலாகிறது. "சில மாதங்களில், நாங்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூட இருக்கிறோம்", என்று ஒரு தொழிலாளி கூறுகிறார். ஆந்திராகாரர்கள் நடத்தும் 2 தற்காலிக சாலையோர உணவகங்களில் ஒன்றில் இம்மக்கள் காலை உணவை சாப்பிடுகின்றனர் மதியத்திற்கான உணவையும் சேர்த்து பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் முத்தாவை (ராயலசீமாவில் ஒரு பிரதான உணவு கேழ்வரகினை பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது) ஊறுகாய் மற்றும் சாதம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
சந்திப்பில், எல்லா நாட்களும் சமமாக நம்பிக்கைக்குரிய நாட்களாக இருப்பதில்லை. ஒரு தொழிலாளி வேலைக்கு அழைத்துச் செல்லலாம் அல்லது அழைத்துச் செல்லப்படாமலும் இருக்கலாம். "வேலை இல்லாத நாட்களில், நாங்கள் குடித்துவிட்டு தூங்குகிறோம்", என்று புலம்பெயர்ந்தவர் ஒருவர் கூறுகிறார்.
கேரளாவில் தினசரி ஊதியம் குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக இருப்பதால் மக்கள் இங்கு வருகின்றனர். "அனந்தபூரில் நாளொன்றுக்கு எங்களுக்கு 200 ரூபாய் தான் வழங்கப்படும். ஆனால் இங்கே 650 முதல் சில சமயங்களில் 750 ரூபாய் வரை கூட கிடைக்கும்", என்று அனந்தபூரில் பழைய பொருட்கள் விற்பனை செய்துவந்த ரங்கப்பா. ஒரு நிலம் உரிமையாளர் ஒருமுறை சிறு வீட்டு வேலைக்கு ஆயிரம் ரூபாய் அளித்ததோடு மது மற்றும் உணவு வழங்கியதை பலர் நினைவுகூர்கின்றனர்.
சந்திப்பு பகுதியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உண்டு. கதைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது பொய்துப்போன நிலக்கடலை விவசாயம், மழை பற்றாக்குறை, ஆள்துளைக்கிணறுகளின் பெருக்கம், அவற்றின் இழப்புகளுக்கு ஈடு செய்யத் தவறிய அரசாங்கம் ஆகியவற்றுக்கு நன்றி. தவிர உயர்ந்து வரும் கடன் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்ததற்கு பல வாரங்களாக சம்பளம் கொடுக்காமல் இருப்பது ஆகியவை மேலும் வாழ்வை சிக்கலாக்கி இருக்கிறது.
இங்கு அனைத்து தொழில்களைச் சேர்ந்த மக்களும் இருக்கின்றனர். சில மணி நேரத்திற்குள் ஓவியர்கள், கைத்தறி நெசவாளர்கள், ஒரு ஆட்டோ டிரைவர், முன்னாள் சிஆர்பிஎஃப் ஜவான், 82 வயதாகும் பார்வையற்ற முதியவர் மற்றும் கோடை விடுமுறையில் இருக்கும் பல மாணவர்களை நான் சந்தித்தேன். தனது பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடிவுக்கு காத்திருக்கும் கதிரியைச் சேர்ந்த 17 வயதாகும் ராஜசேகருக்கு இவர் சம்பாதிக்கும் பணம் அவரது குடும்பத்திற்கு கூடுதலாக உதவியாக இருக்கிறது. பாலாஜி நாயக் போன்ற கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு கேரளாவிலிருந்து சம்பாதிக்கும் பணம் கல்லூரி கட்டணமாக பயன்படுகிறது.
23 வயதாகும் பாலாஜி கதிரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் தெலுங்கு இலக்கியத்தில் பட்டம் பயின்று வந்திருக்கிறார். அவர் கல்லூரிக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்கு சென்று வந்தார். ஆனால் கிராமத்தில் வேலைகள் இல்லாமல் போக ஆரம்பித்ததும் இரண்டாம் ஆண்டுக்கு பிறகு அவர் கல்லூரியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "பசியால் வயிறு எரிவது தான் மிகவும் மோசமான விஷயம்", என்று அவர் கூறுகிறார். பாலாஜி இறுதியில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் இப்போது கதிரிக்கும் கொச்சிக்கும் இடையில் வேலைக்காக பயணம் செய்கிறார், அவரது மனைவி மற்றும் வயதான பெற்றோருக்கு ஆதரவாக இருக்கிறார்.
அவரைப் போன்ற பல மாணவர்கள் இந்த வேலைக்காக காத்திருக்கின்றனர். நாங்கள் எங்களது பட்டங்களை பெற்றுவிட்டோம் என்று நன்கு உடை அணிந்த மாணவர் ஒருவர் கூறுகிறார். "எங்களில் சிலர் விடுமுறை நாட்களில் இங்கு வேலை செய்கின்றோம்".
ஒவ்வொருத்தராக, வீட்டு உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சந்திப்பிற்கு வருகின்றனர். மக்கள் அவர்களைச் சுற்றி கூட்டமாக கூடுகின்றனர். "ஒப்பந்ததாரர்கள் ஒரு மணி நேரம் அவர்களை சுற்றி கவனமாக பரிசோதித்து பின்னர் அவர்களின் வயது மற்றும் வலிமையைப் பொருத்து தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கின்றனர்", என்று சந்திப்பில் காத்திருக்கும் வீரப்பா கூறுகிறார். காலை 11 மணி அளவில் நாளுக்கான வேலை கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரிவதால் மீதமுள்ள தொழிலாளர்கள் சிறிது நேரம் அரட்டை அடிப்பர் அல்லது நடைபாதைகளில் தூங்குவார் சிலர் ஓரமாக தெரு மூலைகளில் மது அருந்துகின்றனர்.
மதியம் ஒன்றரை மணி அளவில், வேலை கிடைக்காத சில தொழிலாளர்கள் உள்ளூர் சிவன் கோவிலுக்கு செல்கின்றனர், இது விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது, அங்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. "சிவாலயம் பல உயிர்களை காத்து வருகிறது", என்று ஒரு தொழிலாளி கூறுகிறார். "அவர்கள் கேரளா சாதம் வழங்குகின்றனர், போதுமானதாக இருக்கும். அவர்கள் அனைவருக்கும் உணவளிக்கின்றனர். வேலை இல்லாத எங்களைப் போன்ற பலர் இங்கு சாப்பிடுகின்றனர்".
வேலை நாள் முடிந்ததும் தொழிலாளர்கள் தூங்குவதற்கு தங்களது குடியிருப்புகளுக்கு திரும்பி செல்கின்றனர். சிலர் சந்திப்பில் உள்ள நடைபாதையில் மற்றும் சிலர் உள்ளூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் மேடையில் தூங்குகின்றனர். மற்றவர்கள் வீட்டு மொட்டை மாடிகளிலும் கேரளகாரர்களால் வாடகைக்கு விடப்பட்ட பழைய அறைகளிலும் தூங்குகின்றனர்.
மாலை 5 மணி முதல் விளக்குகள் எரிய தொடங்குகின்றன ஆனால் மின்விசிறி கிடையாது. 10 மணி அளவில் விளக்குகள் அணைக்கப்படுகின்றன மின்விசிறிகள் போடப்படுகின்றன என்று மலையாளி வீட்டின் மாடியில் உறங்கி வரும் ராமகிருஷ்ணா விளக்குகிறார். "சுவிட்சுகளுக்கான அனுகல் எங்களிடம் இல்லை. நாளுக்கான வாடகையை நாங்கள் செலுத்திய பிறகு உரிமையாளர்கள் விசிறியை இயக்குகின்றனர். யாராவது ஒருவர் பணம் செலுத்த தவறினால் அவர்கள் இங்கு தூங்குவது 40 பேராக இருந்தாலும் அவர்கள் மின்விசிறியை அனைத்து விடுவர்", என்று கூறுகிறார்.
தெருவில் வசித்து வரும் மக்கள் வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்: கொசுக்கள். "ஆனால் அவை உங்களை கடிக்கும்பது உங்களுக்கு நோய் ஏற்படுவதில்லை", என்று 62 வயதாகும் வேங்கடம்மா கூறுகிறார். மற்றவர்களுக்கு கொசுக்கள் மற்றும் கசகசப்பான கொச்சியின் வானிலையினை சமாளிப்பதற்கு மற்றும் உறங்குவதற்கு மது தேவைப்படுகிறது.
800 ரூபாய்க்கு குறைவான சம்பளத்திற்கு வேலை செய்ய மறுக்கும் அனஞ்சநேயலு, மதுவில் மூழ்கி இருக்கிறார். அவர் எல்லா நேரமும் குடிக்கிறார். "சந்திரபாபு (நாயுடு)விடம் எனக்கு ஒரு கழிப்பறை கட்ட சொல்லுங்கள், நான் எனது குடிப்பழக்கத்தை குறைக்கிறேன், என்று அவர் கூறுகிறார். அங்கு எங்களது வீட்டில் கழிப்பறை இல்லை. நாங்கள் வாய்க்காலுக்கு செல்லும்போது மக்கள் எங்களை வசை பாடுகின்றனர்", என்று கூறினார்.
கல்லூர் சந்திப்பில் உள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலை சுழற்சி உள்ளது. பெரும்பாலான மக்கள் சுமார் மூன்று வாரங்களுக்கு தங்கியிருந்துவிட்டு ஒரு வாரத்திற்கு மீண்டும் தங்களது கிராமத்திற்கு செல்கின்றனர். பழைய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக சிலர் நீண்டகாலம் தங்குவர். "நான் கடந்த ஒரு வருடமாக வீட்டிற்கு திரும்பவில்லை", என்று முடிகுப்பாவைச் சேர்ந்த 40 வயதாகும் விவசாயியான நாராயணசாமி கூறுகிறார். "நான் ஒவ்வொரு வாரமும் சுமார் இரண்டாயிரம் ரூபாய் வீட்டிற்கு அனுப்புகிறேன்", என்று கூறினார்.
"எல்லோருக்கும் இங்கே ஒரு பைத்தியம் இருக்கிறது", என்று சீனிவாசலு கூறுகிறார். "சிலருக்கு சீட்டு விளையாட்டின் மீது பைத்தியம், சிலருக்கு மதுவின் மீது, இன்னும் சிலருக்கு லாட்டரியின் மீது", என்று கூறுகிறார்.
ஆனால் எங்கள் அனைவருக்கும் பொதுவானதாக ஒன்று இருக்கிறது அது அவர்கள் கல்லூர் சந்திப்பில் சாலையின் இருபுறமும் வேலைக்கு காத்திருப்பதன் நிச்சயமற்றதன்மை.
தமிழில்: சோனியா போஸ்