ஒருவரை மட்டும் கொரொனா வைரஸ் பாதித்திருந்தது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. கிராமவாசிகளுடன் கூடிப் பேசி ஊர் தலையாரி ஓர் உத்தரவிட்டார். ஒரு மாதத்துக்கு அந்த குடும்பம் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. கொரோனாவுக்கான தனிமை சிகிச்சை என்னவோ வெறும் 14 நாட்கள்தான். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்தான் பாதிப்பு இருந்தது.
இதில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. ஒஸ்மனாபாத் மாவட்டத்திலேயே அவருக்குதான் முதல் பாதிப்பு. பிரச்சினை என்னவென்றால், தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு ஊர் திரும்பியிருந்தார்.
ஒஸ்மனாபாத்தின் உமர்கா தாலுகாவிலுள்ள அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, அவரின் குடும்பம் அறிவிக்கப்படாத வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தது. “எங்களின் நிலத்துக்கு சென்று அறுவடை கூட செய்ய முடியவில்லை,” என்கிறார் 31 வயதாகும் முகமது சல்மான் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). “பயிர்கள் அறுவடைக்கு தயாராகிவிட்டன. நாங்கள் செல்ல முடியாததால் அழிந்து கொண்டிருக்கின்றன. கால்நடை கொஞ்ச பயிரை அழித்துவிட்டது. மிச்சம் இருந்தவை காய்ந்துவிட்டது. எங்களால் அவற்றை காக்க முடியவில்லை. கிட்டத்தட்ட்ட 50,000 ரூபாய் நஷ்டம்.”
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்த மார்ச் 24ம் தேதிதான் சல்மான் ஊர் திரும்பினார். அதே வாரத்தில், கிட்டத்தட்ட 2000 பேர் தப்லிகி ஜமாத்தின் தலைமையிடமான மர்க்காஸ் நிசாமுத்தின்னில் தங்கியிருந்த விஷயத்தை தில்லி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தப்லிகி ஜமாத் என்பது1926ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தில்லியில் இயங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் இஸ்லாமிய அமைப்பாகும். மார்ச் 13லிருந்து 15 வரை அவர்கள் தில்லியில் நடந்த மாநாட்டுக்காக கூடினர். அந்த மாநாடு வைரஸ் பரவுவதற்கான முக்கியமான இடமாக மாறிப் போனது. அந்த நிகழ்வுக்கு பிறகு மிக மோசமான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. மொத்த இஸ்லாமிய சமூகத்தின் மீதும் பழி போடும் வேலை தொடங்கியது.
சல்மானும் அவர் மனைவியும் அதே மாநாட்டுக்கு செல்லவில்லை என்பது எவருக்கும் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. “கிராம மக்கள் எங்களுக்கு பின்னால் பேசத் தொடங்கினார்கள்,” என்கிறார் அவர். “என்னிடம் எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆனாலும் கிராமப் பஞ்சாயத்து எங்களை பரிசோதிக்க சொன்னது. அவர்கள் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என நினைத்தார்கள். இந்தியா முழுக்க இஸ்லாமியர்கள் மோசமாக சித்தரிக்கப்பட்டு கொரொனா வைரஸ் பரவலுக்கு காரணமென குற்றம் சாட்டப்பட்டனர். கிராமத்தில் இருக்கும் மக்கள் என்னை சந்தேகத்துடன் பார்த்தார்கள்.”
நிலவரம் இன்னும் மோசமாகவிருந்தது. சல்மானுக்கு கொரோனா தொற்று இருப்பது ஏப்ரல் 2ம் தேதி உறுதியானது. “நல்லவேளையாக என் குடும்பத்தில் இருந்த வேறு எவருக்கு பாதிப்பு இல்லை,” என்கிறார் அவர். “அடுத்த நாளே என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.”
சேதம் என்னவோ ஏற்படுத்தப்பட்டுவிட்டது. “கொரோனா வைரஸ்ஸை ஒஸ்மனாபாத்துக்கு கொண்டு வந்ததற்காக என் குடும்பத்தை கிராம மக்கள் அவமதிக்க தொடங்கினார்கள்,” என்கிறார் அவர். “ஊர் தலையாரி என் குடும்பம் ஒரு மாதத்துக்கு வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவிட்டார். மறுபக்கத்தில் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளிட்ட சில நல்லவர்கள் என் குடும்பத்துக்கு தேவையான உணவு வீட்டில் இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், கடந்த ஆறு மாதமாக எங்களின் ரத்தமும் வியர்வையும் சிந்தி நாங்கள் விதைத்த பயிர்களை மறந்து விட வேண்டியிருந்தது.”
கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் 4.5 ஏக்கர் விவசாய நிலம் சல்மானுக்கு இருந்தது. மனைவி, இரண்டு குழந்தைகள், சகோதரர், பெற்றோர் உள்ளிட்டு மொத்தம் எட்டு பேர் கொண்ட குடும்பம் சோயாபீன்ஸ் மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை சம்பா பருவத்திலும் வெள்ளைச்சோளம் மற்றும் சுண்டலை குறுவை பருவத்திலும் விளைவிக்கின்றனர். “கூலிகளை கூட அறுவடை செய்ய கேட்டுப் பார்த்தோம். ஆனால் எங்களுக்கு வேலை பார்க்க எவரும் விரும்பவில்லை,” என்கிறார் அவர். இரண்டு ஆழ்துளைக் கிணறுகளும் ஒரு கிணறும் எங்கள் நிலத்தில் இருக்கிறது. ஆனாலும் நிலம் காய்ந்துபோய் கிடக்கிறது. ஏனென்றால் யாரும் எங்களுக்கு வேலை பார்க்க வரவில்லை.”
தற்போது வரை மகாராஷ்டிராவில் 4,80,000 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆரம்பக்கட்ட ஊரடங்கின்போது இருந்த அச்சம் மிகவும் கொடுமையானது. எதிர்காலம் அச்சத்தை கொடுத்தது. செய்திகளும் உடனுக்குடன் பரவும் வாய்ப்பு இல்லை. பதட்டம் அதிகமாக இருந்தது.
”ஊரடங்கால் அனைவரும் பாதிப்பு அடைந்திருக்கின்றனர்,” என்கிறார் சல்மான். அறுவடை செய்யப்பட்ட தானியங்களை மண்டிகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்தனர். நஷ்டங்களால் பெரும் நிச்சயமின்மை நிலவியது. கூடுதலாக வைரஸ் தொற்றிவிடுமோ என்ற பயமும் இருந்தது. நடக்கும் கொடுமைகளுக்கு பழிபோட நம் சமூகம் ஆள் தேடிக் கொண்டிருந்தது. இஸ்லாமியர்கள் இலக்காகினர்.”
இஸ்லாமியர்களுக்கு எதிரான அச்சுறுத்தலை அதிகரிப்பதில் தொலைக்காட்சிகள் முக்கியமான பங்கு வகித்ததாக சொல்கிறார் சல்மான். “மக்கள் ஊரடங்கு காலத்தில் எந்த வேலையும் செய்யவில்லை,” என்கிறார் அவர். “செல்ஃபோன்களின் வரும் செய்தித் துணுக்குகளை நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருந்தனர். செய்தித்துணுக்குகள் இஸ்லாமியர்களை கெட்டவர்களாக காட்டிக் கொண்டிருந்தன.”
மராத்தி சேனல் ஒன்று சல்மான் புகைப்படத்தையும் கொரொனா பாதிப்புக்கு பிறகு ஒளிபரப்பியது. ”அந்த காணொளி அதிகமாக வாட்சப்பில் பகிரப்பட்டது,” என்கிறார் அவர். “தாலுகாவில் இருக்கும் அனைவரும் அதை பார்த்து விட்டார்கள். மக்கள் என்னை வித்தியாசமாக பார்க்கத் தொடங்கினார்கள். என் குடும்பம் அவமதிக்கப்பட்டார்கள். அவமானமாக இருந்தது.”
மருத்துவமனையில் நிலவரம் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. ஆரம்பத்திலேயே அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் சல்மானும் ஒருவர். மருத்துவர்கள் நன்றாக கவனித்துக் கொண்டனர். அதிக நோயாளிகளும் இல்லை. “தொடர் பரிசோதனைகள் எனக்கு சரியாக நடத்தப்பட்டது,” என்கிறார் அவர். என்னுடைய வார்டு சுத்தமாக இருந்தது. 20 நாட்களுக்கு பிறகு சிகிச்சை முடித்து அனுப்பும்போது ஒரு சிறு விழா கூட நடத்தினார்கள். ஏனெனில் முதலில் குணமானவன் நான்தான்.”
ஷில்பாவுக்கு தனுஜ் பகெட்டியும் இந்த விஷயத்தில் கொடுத்து வைக்கவில்லை. ஜல்னா மாவட்டத்தில் இருவருக்கும் கொரோனா தொற்று ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் உறுதிப்படுத்தப்பட்டபோது மகாராஷ்ட்ராவின் மொத்த பாதிப்புகள் 1.5 லட்சத்தை தாண்டி விட்டது. நகரங்களோடு வைரஸ் முடங்கவுமில்லை. ஊருக்குள்ளிருந்து பாழடைந்த சுகாதார மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஒஸ்மனாபாத்திலிருந்து 220 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஜல்னா டவுனின் ஷில்பாவும் தனுஜ்ஜும் முதல் இரு நாட்களை மாவட்ட மருத்துவமனையில் கழித்தார்கள். ஒரு வாரம் கழித்து தனித்திருத்தல் மையம் ஒன்றில் கழித்தனர். இரு இடங்களையும் அவர்கள் சேர்ந்த விதமே வித்தியாசமாக இருந்தது.
அவருடைய சுற்றுவட்டாரத்தில் வசித்த யாரும் அச்சப்பட்டுவிடக் கூடாதென்பதற்காக, காய்ச்சலுடன் தனுஜ் இரு சக்கர வாகனத்தை தானே ஓட்டி வந்து மருத்துவமனையில் சேர்ந்தார். அவசர ஊர்தியை கூட அழைக்கவில்லை. “மருத்துவர்களுக்கு என்னை நன்றாக தெரியும்,” என்கிறார் அவர். “பொறுப்பில்லாமல் நான் நடந்துகொள்ள மாட்டேன் என்பதும் அவர்களிடம் நேராக வந்துவிடுவேன் என்பதும் அவர்களுக்கு தெரியும். என் மனைவி ஒரு ரிக்ஷாவில் வந்தார்.”
இருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டதும் 13 வயது மகளை ஜல்னா டவுனில் இருக்கும் பாட்டியின் வீட்டுக்கு அனுப்பினார்கள். மகளுக்கு கொரோனா இல்லை.
“எங்கள் இருவருக்கும் 102 டிகிரி காய்ச்சல் இருந்தது,” என்கிறார் 40 வயதாகும் ஷில்பா. அரசு உதவி பெறும் ஜல்னா கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிகிறார். “இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, எங்களை அருகே இருந்த ஒரு கட்டடத்துக்கு மாற்றினார்கள். தீவிர நோயாளிகளுக்கு இடம் தேவைப்பட்டது.” ஜல்னா மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும் அந்த கட்டடமும் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.
இரண்டு மாடி கட்டடத்துக்கு மாற்றப்பட்டதும் இருவரும் அவர்களின் பொருட்களுடன் நடந்து செல்ல வேண்டியிருந்ததாக சொல்கிறார் 42 வயதாகும் தனுஜ். “எங்களால் முடியவில்லை. காய்ச்சல் உச்சத்தில் இருந்தது. ரொம்ப பலவீனமாக இருந்தோம். சிகிச்சை மையத்தை அடைந்ததும் நாங்கள் இருவரும் இருப்பதற்கான அறையை கேட்டோம்,” என்கிறார் அவர். பொது நோயாளிகள் வார்டு கீழ்தளத்தில் இருந்தது. ஆனால் எங்களுக்கான அறையை நாங்கள் இரண்டாவது மாடியில் வாங்கிக் கொண்டோம். நாங்கள் சென்றபோது அழுக்கும் அசுத்தமுமாக இருந்தது. பொது கழிப்பிடம் சகிக்க முடியாததாக இருந்தது. விளக்கு இல்லை. தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.”
ஜல்னாவில் டெட்டால் பொருட்களை விநியோகிப்பவரும் அதே தளத்தில்தான் இருந்தார். தனுஜ்ஜுக்கு ஒதுக்கப்பட்ட அறை பல நாட்களாக அதே நிலையில்தான் இருப்பதாக அவர் சொன்னார். “கலெக்டரிடம் புகார் அளித்தேன். பல முறை தொலைபேசியில் அழைத்தேன். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சுத்தப்படுத்தப்பட்டது,” என்கிறார் அவர். “ஒரு வீடியோவை கூட நான் எடுத்து அது சமூக தளத்தில் அதிகமாக பகிரவும் பட்டது.”
சுகாதாரமற்ற கழிவறைகள் பெண்களுக்கு மோசமானவை என சுட்டிக் காட்டுகிறார் ஷில்பா. “ஆண்கள் கூட எப்படியோ சமாளித்துக் கொள்வார்கள்,” என்கிறார் அவர்.
அந்த சிகிச்சை மையத்தில் ஒருவாரம் ஒரு நோயாளி தங்க வைக்கப்பட்டால், அவரின் மனநிலை மோசமாகிவிடும் என்கிறார் தனுஜ். “இத்தகைய இடங்களில் கிடைக்கும் உணவு கூட குறைந்த தரத்திலே இருக்கிறது. என் நண்பனுக்கு கொடுக்கப்பட்ட பழங்களில் புழுக்கள் இருந்தன. ஏற்கனவே மனதளவில் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு நல்ல வசதிகளையாவது குறைந்தபட்சம் கொடுக்கலாம். கொரோனா வைரஸ்ஸை பற்றி பல கற்பிதங்கள் இருக்கின்றன. நீங்கள் ஏதோ குற்றம் செய்துவிட்டதை போல் மக்கள் பார்ப்பார்கள்.”
ஒருவழியாய் வசதியற்ற சிகிச்சை மையத்தை சகித்துக் கொண்டுவிட்டு இருவரும் ஜூலை மாதத்தில் இரண்டாவது வாரத்தில் வீடு திரும்பினார்கள். “மருத்துவர்கள் சொன்னதைபோல ஒரு வாரத்துக்கு நாங்கள் வீட்டை விட்டு வெளியேறவில்லை,” என்கிறார் தனுஜ்.
இவற்றுக்கு இடையில் ஊரடங்கால் அவருக்கு ஆதாயமும் இருந்தது. டெட்டால் விநியோகஸ்தராக அவர் இருந்ததால், தொடர் பிரச்சாரத்தின் விளைவாக ஜல்னா மாவட்டத்தின் டெட்டால் தேவை அதிகரித்திருந்தது. “கொரோனா வைரஸ்ஸுக்கு முன் நான் 30000 ரூபாய் சம்பாதித்திருந்தால், வைரஸ்ஸுக்கு பிறகு அது 50000 ரூபாய் அளவுக்கு அதிகரித்தது. நான் வேலை பார்க்காத ஒரு மாதத்தை தவிர்த்து, எனக்கு நல்ல வருமானம் இருந்தது.” ஷில்பாவுக்கு அரசு கல்லூரியில் வேலை என்பதால் குடும்பத்துக்கு பிரச்சினை இருக்கவில்லை.
”இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. எங்களின் வாழ்க்கை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. சுற்றியிருக்கும் மக்களும் எங்களுடன் பழைய பழக்கத்துக்கு வந்துவிட்டனர்,” என்கிறார் தனுஜ்.
ஆனால் சல்மானுக்கு இந்த வாய்ப்பு இருக்கவில்லை. வைரஸ் தொற்று போய் மூன்று மாதங்கள் கழிந்த பிறகும், சாலையில் நடக்கும்போது அவர் மீது சந்தேகப் பார்வை விழுந்துகொண்டுதான் இருக்கிறது. “அவர்கள் (கிராமத்தில் இருக்கும் மற்றவர்கள்) முகக்கவசம் இல்லாமல் எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். என் வீட்டை கடக்கும்போது மட்டும் போட்டுக் கொள்வார்கள்,” என்கிறார் அவர். “இன்னும் அவர்கள் என்னை வித்தியாசமாகத்தான் பார்க்கிறார்கள். எனக்கு பிறகு பல தொழிலாளர்கள் மும்பையிலிருந்தும் புனேவிலிருந்தும் வைரஸ்ஸை ஒஸ்மனாபாத்துக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் நான் பட்டதை போல், பட்டுக் கொண்டிருப்பதை போல் அவமானத்தை சந்திக்கவில்லை.”
மொபைல் ஃபோன்கள் விற்கும் ஒரு கடையை கடந்த நவம்பரில் சல்மான் தொடங்கினார். “அது தீபாவளி நேரம். புதிதாக எதையும் தொடங்க நல்ல நேரம்,” என்கிறார் அவர். சொல்லிக் கொள்ளும்படியான லாபத்தை 20000 ரூபாய் அளவுக்கு ஒவ்வொரு மாதமும் பார்த்துக் கொண்டிருந்தார். ஊரடங்கு வந்து குலைத்து போட்டது. ஜூன் மாதத்தில் மீண்டும் அவர் கடை திறந்தபோது மக்கள் அவரிடம் வந்து வாங்க தயங்குவதாக சொல்கிறார். கொரோனாவுக்கு முன் வரை அவருடன் வியாபாரம் செய்த பலர் தற்போது அவரின் அழைப்புகளை ஏற்பது கூட இல்லை.
அது ஒன்றும் பிரச்சினை இல்லை என சொல்லும் அவர் பிற கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைவதற்காக தன்னுடைய ரத்த ப்ளாஸ்மாவை தானமளித்துள்ளார். “இரண்டு வாரங்கள் என் கடையில் அமர்ந்திருந்தேன்,” என்கிறார் அவர். “அருகே வரக் கூட எவரும் தயாராக இல்லை. ஒன்றுமே செய்யாமல் உட்கார்ந்திருந்தேன். போக்குவரத்தை வேடிக்கை பார்த்தேன். மாலை ஆனதும் வீடு திரும்பினேன். இரண்டு வாரங்கள் கழித்து அதையும் நிறுத்திவிட்டேன். என்னுடைய கடையை மூட வேண்டியாதாயிற்று.”
முகப்பு ஓவியம்: அந்தரா ராமன், பெங்களூருவில் இருக்கும் சிருஷ்டி கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் பட்டதாரி. கருத்து ஓவியமும் எல்லா வடிவங்களின் கதை சொல்லலும் அவரின் ஓவியம் மற்றும் வடிவப் பயிற்சியில் மிகப் பெரிய தாக்கங்கள் கொண்டவை.
தமிழில்: ராஜசங்கீதன்