ஒவ்வொரு நாள் காலையும் மொத்த ஷேக் குடும்பமும் வேலைக்கு கிளம்பி விடும். மத்திய ஸ்ரீநகரின் பதாமலூ பகுதியின் குப்பத்திலிருந்து காலை 9 மணிக்கு பாத்திமா கிளம்பி விடுவார். மாலை 5 மணி வரை சுமார் 20 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி, பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அட்டை பெட்டிகளை சேகரிப்பார். அவருடைய கணவர் முகமது குர்பான் ஷேக் சில நேரங்களில் நகர எல்லைகளையும் தாண்டி 30 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள டவுன்களுக்கும் கிராமங்களுக்கும் குப்பைகள் சேகரிக்கச் செல்வார். பாத்திமா பயன்படுத்தும் மூன்று சக்கர சைக்கிள் ரிக்‌ஷாவை போன்ற வாகனத்தில் டெம்போ போன்ற பகுதியை இணைத்து ஓட்டிச் செல்வார். 17லிருந்து 21 வரையிலான வயதுகளில் இருக்கும் மகள் மற்றும் இரு மகன்களும் கூட ஸ்ரீநகரில் குப்பை சேகரிக்கின்றனர்.

ஐந்து பேரும் சேர்ந்து ஸ்ரீநகரின் வீடுகள், உணவு விடுதிகள், கட்டுமான தளங்கள், காய்கறி மண்டிகள் மற்றும் இன்னும் பிற பகுதிகளிலிருந்து கொட்டப்படும் 450-500 டன் குப்பையின் ஒரு சிறுபகுதியை அகற்ற உதவுகின்றனர். ஸ்ரீநகரின் மாநகராட்சி அலுவலகம் குறிப்பிடும் அளவு அது.

நகராட்சி ஆணையரான அதர் அமிர் கான் சொல்வதன்படி நகராட்சியின் கீழ் முழு நேரமாகவும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் நகரத்தின் குப்பைகளை அகற்றும் வேலையை செய்யும் 4000 தூய்மைப் பணியாளர்களில் ஷேக்கின் குடும்பமும் பிற குப்பை சேகரிப்பாளர்களும் இல்லை. “ஆனாலும் குப்பை சேகரிப்பவர்கள் எங்களின் சிறந்த நண்பர்கள்,” என்கிறார் ஸ்ரீநகர் நகராட்சியின் தலைமை துப்புரவுத்துறை அதிகாரியான நசீர் அகமது. “100 வருடங்கள் ஆனாலும் அழிந்துபோகாத குப்பைகளை அவர்கள் அகற்றுகின்றனர்.”

குப்பை சேகரிப்பவர்கள் சுயதொழில் செய்பவர்கள் மட்டுமில்லை. எந்தவித பாதுகாப்பும் கூட  இல்லாமல் அவர்கள் பணிபுரிகிறார்கள். கோவிட் தொற்றுக்காலம் அவர்களுக்கு இன்னும் அதிக அபாயம் கொடுக்கும் சூழலை கொடுத்திருக்கிறது. “நான் மீண்டும் வேலைக்கு (ஜனவரி 2021-ல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டபோது) கடவுளை நம்பி செல்லத் தொடங்கினேன். என்னுடைய குடும்பத்துக்கான வருமானம் ஈட்டவென நியாயமான காரணங்களுடன் பணிக்கு செல்கிறேன். எனக்கு தொற்று ஏற்படாது என எனக்குத் தெரியும்…” என்கிறார் 40 வயது பாத்திமா.

PHOTO • Muzamil Bhat

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 20 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி, குப்பைகளாக எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அட்டை பெட்டிகளை சேகரிப்பார் பாத்திமா

அதே அச்சமும் நம்பிக்கையும்தான் 35 வயது முகமது கபீரையும் செலுத்திக் கொண்டிருக்கிறது. மத்திய ஸ்ரீநகரின் சவுரா பகுதி குப்பத்தில் வசிப்பவர் அவர். 2002ம் ஆண்டிலிருந்து குப்பை சேகரிக்கும் வேலையை செய்து வருகிறார். “எனக்கு (கோவிட்) தொற்று வந்தால், குடும்பத்துக்கும் வந்துவிடுமோ என கவலையாக இருக்கிறது. ஆனால் அவர்களை நான் பட்டினி போட முடியாது. எனவே நான் வேலைக்கு செல்கிறேன். கொரோனா தொடங்கியபோது நான் 50,000 ரூபாய் கடன் வாங்கினேன். அதை அடைக்க வேண்டும். எனவேதான் ஆபத்து இருப்பது தெரிந்தும் நான் வேலைக்கு செல்லத் தொடங்கியிருக்கிறேன்.” ஆறு பேர் உள்ள குடும்பத்தில் கபீர் மட்டுமே வருமானம் ஈட்டுகிறார். மனைவி மற்றும் 2லிருந்து 18 வரையிலான வயதுகளில் இருக்கும் இரு மகள்களும் இரு மகன்களும் கொண்ட குடும்பம் அது.

அவரும் பிற தூய்மைப் பணியாளர்களும் எண்ணற்ற பிற அபாயங்களையும் தாங்குகின்றனர். “குப்பைகளில் என்ன கிடக்கிறதென எங்களுக்கு தெரியாது. சில நேரங்களில் கத்தி பட்டு கையை கிழித்துவிடும். சில நேரங்களில் பயன்படுத்தப்பட்ட ஊசி குத்தி விடும்,” என்கிறார் வடக்கு ஸ்ரீநகரில் வசிக்கும்  45 வயது இமான் அலி. இத்தகைய காயங்களிலிருந்து காத்துக் கொள்ள நோயெதிர்ப்பை தூண்டும் சாதாரண ஓர் ஊசியை சில மாதங்களுக்கு ஒருமுறை அரசு மருத்துவமனை அல்லது மையத்தில் போட்டுக் கொள்கிறார்

50-80 கிலோ குப்பைகளை ஒருநாளில் சேகரித்த பிறகு, தங்களின் குடிசைகளுக்கு அருகே இருக்கும் திறந்தவெளியில் குப்பைகளை பிரிக்கின்றனர். பிளாஸ்டிக், அட்டைப் பலகைகள், தகரம் மற்றும் பிற பொருட்களை பெரிய பிளாஸ்டிக் சாக்குப் பைகளில் நிரப்புகின்றனர். “டன் கணக்கில் இருந்தால் காயலான் கடைக்காரர்கள் ட்ரக்கை இங்கு அனுப்புவார்கள். பெரும்பாலும் நாங்கள் சேர்த்து வைப்பதில்லை. என்ன சேகரித்தோமோ அவற்றை விற்றுவிடுவோம். அதற்கென 4-5 கிலோமீட்டர் வரை காயலான் கடைகளுக்கு சைக்கிளில் செல்வோம்,” என்கிறார் முகமது குர்பான் ஷேக். ஒரு கிலோ பிளாஸ்டிக்குக்கு ரூ.8ம் ஒரு கிலோ அட்டைகளுக்கு ரூ.5ம் கடைக்காரர்கள் கொடுப்பார்கள்.

குப்பை சேகரிப்பவர்கள் வழக்கமாக ஒரு மாதத்தில் 15-20 நாட்கள் வேலை பார்க்கவும் மிச்ச நாட்களை பொருட்கள் பிரிக்கவும் பயன்படுத்துவதாக சொல்கிறார் ஷேக். ஐந்து பேர் கொண்ட அவரின் குடும்பம் மொத்தமாக மாதத்துக்கு 20,000 ரூபாய் சம்பாதிக்கிறது. “இந்த பணத்திலிருந்து நாங்கள் வீட்டு வாடகை ரூ.5000 கொடுக்க வேண்டும். உணவு வாங்க வேண்டும். சைக்கிள் பராமரிப்புக்கு செலவு செய்ய வேண்டும். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். சுருக்கமாக சொல்வதெனில் சம்பாதிக்கும் எல்லாமுமே உணவுக்கு சென்று விடுகிறது. சேமிக்கும் வாய்ப்பை கொடுக்கும் வேலையல்ல இது,” என்கிறார் ஃபாத்திமா.

PHOTO • Muzamil Bhat

முகமது குர்பான் ஷேக் பிளாஸ்டிக் பாட்டில்களை பிரித்தெடுக்கிறார். அவற்றை காயலான் கடைக்கு எடுத்து செல்வார் அவர்

அவரின் குடும்பமும் பிற குப்பை சேகரிப்பாளர்களும் விற்பதற்கென சில காயலான் கடைகளுடன் பேசி வைத்திருக்கின்றனர். 50-60 கடைகள் ஸ்ரீநகரில் இருப்பதாக சொல்கிறார் நகரத்தின் வடக்கே இருக்கும் பெமினாவை சேர்ந்த 39 வயது காயலான் கடைக்காரர் ரியாஸ் அகமது. “குப்பை சேகரிப்பவர்கள் ஒரு டன் அளவு பிளாஸ்டிக்கும் 1.5 டன் அளவு அட்டைகளையும் தினமும் கொண்டு வருகிறார்கள்,” என்கிறார் அவர்.

இந்த வணிகச் சங்கிலியில் சில தரகர்களும் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் இமான் ஹுசேன். “காயலான் கடைக்கும் குப்பை சேகரிப்பாளர்களுக்கும் இடையில் தரகு வேலையை இந்த மொத்தப் பகுதிக்கும் நான்தான் செய்கிறேன்,” என்கிறார் 38 வயது இமான். “பிளாஸ்டிக் மற்றும் அட்டைகளின் தரத்தை பொறுத்து ஐம்பது காசிலிருந்து 2 ரூபாய் வரை ஒரு கிலோவுக்கு கமிஷனாக குப்பை சேகரிப்பாளர்களிடமிருந்து பெறுகிறேன். 8000லிருந்து 10000 ரூபாய் வரை மாதத்துக்கு கிடைக்கிறது.”

கழிக்கப்படாத குப்பைகள் வழக்கமாக அச்சான் சவுராவில் இருக்கும் குப்பை மேட்டில் கொட்டப்படும். 1986ம் ஆண்டு நகராட்சியால் 65 ஏக்கர் நிலத்தில் தொடங்கப்பட்டு பிறகு திடக்கழிவு அதிகமானதால் 175 ஏக்கர்களுக்கு விரிவாக்கப்பட்ட குப்பை மேடு அது.

அதிகாரப்பூர்வமாக நகராட்சியில் பதிவு செய்யாத 120 குப்பை சேகரிப்பாளர்களுக்கு, குப்பை மேட்டில் குப்பை சேகரிக்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் தலைமை துப்புரவு அதிகாரி நசீர் அகமது. “அவர்கள் கிட்டத்தட்ட 10 டன் அளவுக்கு ஒரு நாளில் குப்பை சேகரிக்கின்றனர்.”

வளரும் நகரம் கொட்டும் குப்பை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், கஷ்மீரில் ஏற்படும் தொடர் இடையூறுகள் மற்றும் ஊரடங்கு ஆகியவை குப்பை சேகரிப்பாளர்களை காயலான் கடைக்காரர்களிடம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. அல்லது உள்ளூர் மசூதிகளை உணவுக்காக சார்ந்திருக்கிறார்கள்.

இத்தகைய கஷ்டங்களை தாண்டி இன்னொரு பிரச்சினையும் அவர்களுக்கு இருக்கிறது. “எங்களின் வேலையால் எங்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை,” என்கிறார் இமான் ஹுசேன். “சிலர் நாங்கள் திருடுவதாக குற்றம் சாட்டுவார்கள். நாங்கள் திருடுவதில்லை. மக்கள் தூர ஏறியும் பிளாஸ்டிக் மற்றும் அட்டைகளைதான் நாங்கள் சேகரிக்கிறோம்.  நாங்கள் நேர்மையாக வேலை செய்வது மேலே உள்ள கடவுளுக்கு தெரியும்.”

PHOTO • Muzamil Bhat

வடக்கு ஸ்ரீநகரில் வருமானத்துக்காக குப்பை சேகரிக்கும் வேலையைச் செய்யும் குடும்பங்கள் இருக்கும் ஒரு குப்பம்

PHOTO • Muzamil Bhat

பார்பர்ஷா பகுதியிலிருக்கும் 16 வயது ஆரிஃப் மக்தூம் சாகெப் பகுதியில் குப்பைகளை சுத்தப்படுத்துகிறார். 'இன்று வேலைக்கு நான் தாமதமாக வந்தேன்,' என்கிறார் அவர். 'வழக்கமாக நகராட்சி ஊழியர்கள் வருவதற்கு முன்பே வந்துவிடுவேன். ஆனால் இன்று அவர்கள் வந்து குப்பைகளை எடுத்துச் சென்றுவிட்டார்கள். இப்போது நான் சென்று வேறெங்கேனும் குப்பை இருக்கிறதா என பார்க்க வேண்டும். இல்லையெனில் வெறும் சைக்கிளுடன் திரும்ப வேண்டும்'


PHOTO • Muzamil Bhat

35 வயது முகமது ரோனி ஒரு தெருவினருகே குப்பைகளை சேகரிக்கிறார்


PHOTO • Muzamil Bhat

32 வயது ஆஷாவும் அவருடன் வேலை செய்பவர்களும் சேகரித்த அட்டைகள் நிரப்பிய சாக்குகளை மைசுமா பகுதியில் அடுக்குகிறார்கள். ஆஷா வழக்கமாக லால் சவுக்குக்கு அருகேதான் வேலை செய்வார். அங்கு சந்தை இருப்பதால் அட்டைப் பெட்டிகள் கிடைப்பது சுலபம்


PHOTO • Muzamil Bhat

40 வயது முஜீபுர் ரெஹ்மான் முதல் நாள் சேகரித்த பிளாஸ்டிக் மற்றும் அட்டைகளை இறக்குகிறார்


PHOTO • Muzamil Bhat

காயலான் கடையில் எடை போடுவதற்காக அட்டைப் பெட்டிகளை வைக்கிறார் முகமது கபீர்


PHOTO • Muzamil Bhat

குப்பை சேகரிப்பாளர்கள் 40லிருந்து 70 கிலோ வரை இருக்கும் சாக்குப் பைகளை காயலான் கடைக்கு கொண்டு செல்ல ஒரு ட்ரக்கில் ஏற்றுகிறார். “பிளாஸ்டிக் பைகள் நிரம்பிய 10-12 சாக்குப் பைகளை இந்த வாகனத்தில் என்னால் தூக்க முடியும்,” என்கிறார் ட்ரக்கை ஓட்டும் 19 வயது முகமது இம்ரான்


PHOTO • Muzamil Bhat

'வேலைக்கு சென்றால் கொரோனா வரும். வேலைக்கு செல்லாவிட்டால், குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட முடியாத அழுத்தம் எனக்கு நோயை கொடுத்துவிடும்,' என்கிறார் 32 வயது ரியாஸ் ஷேக் அந்த நாளின் சேகரிப்பை ஒழுங்கமைத்துக் கொண்டே


PHOTO • Muzamil Bhat

டன் கணக்கில் பிளாஸ்டிக்கும் அட்டைப் பெட்டிகளும் காயலான் கடைக்காரர் ரியாஸ் அகமதின் குப்பை தளத்தில்

PHOTO • Muzamil Bhat

கஷ்மீரின் குளிர்கால நாளில் அதிகமாக குப்பைகளை சேகரிக்க முடியவில்லை என்ற அதிருப்தியுடன் வீடு திரும்பும் முகமது ஷாக்கூர்


PHOTO • Muzamil Bhat

கஷ்மீரின் குளிர்கால நாளொன்றின் வேலையின் முடிவில் முகமது ஷக்கூரும் அவரின் (பெயர் வெளியிட விரும்பாத) நண்பரும் குளிர் காய்கின்றனர்


PHOTO • Muzamil Bhat

சகோதரர்களான ஏழு வயது ரபுலும் (முன்னால்) எட்டு வயது ரகானும் தந்தையின் ரிக்‌ஷாவில் விளையாடுகின்றனர். “காசில்லாததால் அப்பாவால் ரிமோட் கண்ட்ரோல் சைக்கிள் வாங்கிக் கொடுக்க முடியவில்லை, எனவே நாங்கள் அப்பாவின் சைக்கிளில் விளையாடுகிறோம்,” என்கிறார் ரகான்


PHOTO • Muzamil Bhat

'என் மகள் கல்வி தொடர ஒரு செல்ஃபோன் அவளுக்கு நான் வாங்கித் தர வேண்டும். அவளும் குப்பை சேகரிக்கும் வேலை செய்ய நான் விரும்பவில்லை,' என்கிறார் முகமது இமான். அவரின் 17 வயது மகள் ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்


PHOTO • Muzamil Bhat

பாத்திமாவும் பக்கத்து வீட்டுக்காரரும் அருகே உள்ள வாய்க்காலில் நீரெடுக்க செல்கின்றனர். அவர்கள் வசிக்குமிடத்தில் குழாய் நீர் கிடையாது


PHOTO • Muzamil Bhat

பதாமலூவில் இருக்கும் பாத்திமா 9 வருடங்களாக குப்பை சேகரிக்கும் பணி செய்கிறார். “இங்கு நாங்கள் 20 குடும்பங்கள் இருக்கிறோம். எனக்கு தெரிந்தவரை இங்கு எவருக்கும் கொரோனா வரவில்லை. அல்லாவை நம்பி நான் வேலைக்கு செல்கிறேன்,” என்கிறார் அவர்


PHOTO • Muzamil Bhat

'முதலில் கோவிட் இருந்தது. பிறகு கொடுமையான குளிர்காலம் வந்தது. இத்தகைய குளிரை கடந்த நான்கு வருடங்களில் நான் பார்த்ததில்லை,' என்கிறார் பதாமலூ குப்பத்தில் வசிக்கும் 24 வயது முகமது சாகர். நான்கு வருடங்களாக சாகர் குப்பை சேகரிக்கும் வேலை செய்கிறார். 'காயலான் கடைக்காரரிடம் 40000 ரூபாய் (ஊரடங்கின்போது) கடன் வாங்கினேன். இனி எல்லாம் சரியாகி நான் வேலைக்கு சென்று கடனை அடைத்துவிடுவேனென நம்புகிறேன்'


PHOTO • Muzamil Bhat

ஸ்ரீநகர் நகராட்சி ஊழியர்கள் இயந்திரங்கள் கொண்டு குப்பைகளை சேகரிக்கின்றனர். நகராட்சியின் கீழ் முழு நேரமாகவும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் நகரத்தின் திடக்கழிவுகளை அகற்றும் வேலையை செய்யும் 4000 தூய்மைப் பணியாளர்களில் ஷேக்கின் குடும்பமும் பிற குப்பை சேகரிப்பாளர்களும் இல்லை


PHOTO • Muzamil Bhat

அச்சான் குப்பை மேட்டில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை


தமிழில் : ராஜசங்கீதன்

Muzamil Bhat

Muzamil Bhat is a Srinagar-based freelance photojournalist and filmmaker, and was a PARI Fellow in 2022.

यांचे इतर लिखाण Muzamil Bhat
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan