ஆனால், அவற்றுடன் கால்நடைகளை மேய்ப்பவர்களும் செல்கின்றனர். அதனால் தகுந்த வழிகாட்டுதலுடன் இந்தப் பயணம் நடக்கிறது. ஒவ்வோர் ஆண்டு ஒடிசாவின் ஜகத்சிங்புர் மாவட்ட கால்நடை விவசாயிகள் தங்களின் வளர்ப்பு எருமைகளை தேவி ஆற்றின் குறுக்கே நீந்தச் செய்து அழைத்துச் செல்கின்றனர். ஆற்றின் மறுபுறம் இருக்க மேய்ச்சல் நிலத்தை நோக்கி கோடை காலத்தில் இந்தப் பயணம் நடக்கிறது. மேய்ச்சலுக்குப் பின் அவை கரைக்குத் திரும்புகின்றன. செரிங்கிட்டி தேசியப் பூங்காவில் நடக்கும் இடம்பெயர்தல் போன்றது அல்ல இது. ஆனால், இதைப் பார்ப்பதும் காணக்கிடைக்காத காட்சியாக இருக்கும்.

இந்த வாழ்விடப் பெரும்பெயர்ச்சி நிகழ்வை நான் ஒருநாள் நேரில் கண்டேன். நஹரன கிராமப் பஞ்சாயத்தில் இதைப் பார்த்தேன். இந்த கிராமம் தேவி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தேவி ஆறு ஜகத்சிங்பூர், புரி போன்ற ஒடிசாவின் கடலோர மாவட்டங்களைத் தொட்டுச் செல்கிறது. இது மஹாநதியின் பிரதான கிளையாறு.

நஹரன கிராமப் பஞ்சாயத்து தேவி ஆற்றின் கரையில் கண்டகுலா கிராமத்தில் உள்ளது. அதற்கு அருகில் இருக்கும் மேய்ச்சல் பகுது மனு தியா. மனு டெல்டா என்று பரவலாக அழைக்கப்படுகிறது

நஹரன கிராம பஞ்சாயத்தைச் சுற்றிய பகுதிகளில் நிறைய மீனவக் குடும்பங்கள் வசிக்கின்றன. தேவி ஆறுதான் அவர்களின் பிரதான வாழ்வாதாரம். இந்த கடற்கரைப் பகுதி மீனவர்களுக்கு மட்டுமல்ல பால் வியாபாரிகளுக்கும் வசிப்பிடமாக உள்ளது. இங்கு பெரும்பாலான வீடுகளில் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. அது அவர்களுக்கு கூடுதல் வருமானத்தைத் தருகிறது.

ஒடிசா மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இங்கு நன்றாக நிறுவப்பட்டு செயல்படுகிறது. அதனால் இங்குள்ள பால் உற்பத்தியாளர்கள் தங்களின் பொருட்களுக்கு சந்தை கிடைக்குமா என எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இங்கு உற்பத்தியாகும் ஒட்டுமொத்த பாலையும் கூட்டுறவுச் சங்கமே கொள்முதல் செய்து கொள்கிறது.

(பட விளக்கம்: தேவி ஆற்றில் பிடிக்கப்பட்ட மீன்களை பிரித்தெடுக்கும் மீனவர்கள். தேவி ஆறு உப்புநீர் மீன்களுக்குப் பெயர் பெற்றது)

கழிமுகப் பகுதியானது நஹரனாவில் இருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. அதன் முகத்துவாரம் அகலமாக இருப்பதால் நிறைய டெல்டாப் பகுதிகள் அக்கிராமங்களைச் சுற்றி உருவாகியுள்ளன.

அருகிலிருக்கும் பிரம்மமுண்டலி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்திரப்படா கிராமத்தில், ஒரு பால் வியாபாரியின் குடும்பம் தினமும் தங்களின் 150 எருமை மாடுகளிடம் கறக்கப்படும் பாலை விற்கிறது. ஆனால் அவர்களுக்கு சொந்தமாக நிலமில்லை. இது போன்றோருக்கு இத்தகைய பெரும் கூட்டத்துக்கு கொட்டில் அமைப்பதும், மேய்ச்சல் நிலம் கண்டறிவதும் அவ்வளவு எளிதல்ல. தேவி ஆற்றங்கரையும் டெல்டாப் பகுதியும் தான் அவர்களுக்கு கிடைத்துள்ள வரம். டெல்டா மேய்ச்சல் நில உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சம் வாடகை செலுத்துகின்றனர். அதன் பின்னரே அப்பகுதியில் அவர்களின் எருமைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கின்றனர். இரவு நேரங்களில் சவுக்கு மரங்களுக்கு அடியில் எருமைகள் ஓய்வெடுக்கின்றன. பகல் நேரத்தில் டெல்டா மேய்ச்சல் நிலங்களுக்கு நீந்தி செல்கின்றன. பருவமழை காலத்தில் டெல்டாவுக்கு நன்நீர் வரத்து ஆரம்பிக்கும்வரை இது தொடர்கிறது. நன்நீர் வரத்து தொடங்கிவிட்டால் எருமைகளின் தாகம் தீர்கிறது.

பசுமையான மேய்ச்சல் நிலம் தேடி எருமைகளின் ஒற்றைவழிப் பயணத்தை இந்தப் புகைப்படங்கள் ஆவணப்படுத்துகின்றன.

எருமை மாடுகள் அவற்றின் தற்காலிக தங்குமிடமான சவுக்குத் தோப்புகளில் இருந்து இடம்பெயர்கின்றன

டெல்டாவை ஒட்டிய சாலைகள் வரை எருமைகள் கரைகட்டி நிற்கின்றன. அதனால் அவை குறைந்த தூரத்துக்கு மட்டுமே நீந்தினால் போதுமானதாக இருக்கிறது

எருமை மாடுகள் சாலையைக் கடந்து நதிக்கரைக்குச் செல்கின்றன. சிலவை தயக்கத்தில் நிற்க. இன்னும் சில எருமைகள் ஆர்வமாகக் குதித்து நீந்துகின்றன

3 மாதக் கன்று ஒன்று தனது தாயுடன் ஆற்றில் குதித்து நீந்துகிறது

கூட்டம் கூட்டமாக எருமைகள் நீந்துகின்றன. மேய்ச்சல்காரர்கள் தங்களின் கால்நடைகளை ஒரு சிறிய விசைப்படகில் பின் தொடர்கின்றனர்

PHOTO • Dilip Mohanty

அவை பாதுகாப்பு கருதி, பலவீனமான எருமைகளையும், கன்றுகளையும் நடுவில் விட்டு சுற்றிவளைத்து நீந்துகின்றன. பலவீனமான எருமைகள் மற்ற எருமைகள் மீது சாய்ந்து கொண்டு ஆற்றைக் கடந்து விடுகின்றன

ஆற்றின் நடுப்பகுதி வரை கடந்த பிறகு அந்த மூன்று நாட்கள் கன்றுக்குட்டிக்கு அன்றைய நீச்சல் பாடம் நின்றுபோனது. அதைத் தாண்டி அந்தக் கன்றால் நீந்த இயலவில்லை. வளர்ந்த எருமைகளும் திகைத்து நிற்க தாயும் செய்வதறியாது தவிப்பில் நிற்கிறது

இதனைக் கவனித்த மேய்ச்சல்காரர்கள் படகுடன் அந்த கன்றின் அருகில் சென்று அதை அப்படியே படகில் ஏற்றுகின்றனர்

அந்தக் கன்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது. ஆனால், அச்சத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை

தனது தாயின் கவனத்தைப் பெற அதை அழைத்துக் கொண்டே இருக்கிறது

தாயும் கன்றின் குரல் கேட்கும்போதெல்லாம் அதனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே நீந்தி முன்னேறுகிறது. மற்றவை அதன்போக்கில் நீந்துகின்றன

கரை நெருங்கியவுடன் கன்று படகில் எழுந்து நின்று தாவ ஆயத்தமாகிறது. தாயுடன் இணையும் ஆர்வத்தில் நிற்கிறது

மனு தியா கரையை எருமைக் கூட்டம் நெருங்குகிறது

முதலில் கன்று பத்திரமாக கரை சேர்க்கப்படுகிறது

தாய் ஆர்வத்துடன் உணர்வுகளைச் சுமந்துகொண்டு கன்றுடன் இணைகிறது

டெல்டாவில் கால் பதித்ததுமே மற்றவை தங்களின் பணியைத் தொடங்கிவிட்டன

இது நன்கு வளர்ந்த எருமை மாடு. இது கூட்டத்தில் இருந்து சற்று விலகியிருக்கிறது. தனித்து புசித்துக் கொண்டிருக்கிறது

தாய் வழிகாட்ட மற்ற கன்றுக்குட்டிகள் மேய்ச்சல் நிலத்தினுள் பிரவேசிக்கின்றன

எருமைகளை பத்திரமாக மேய்ச்சல் நிலத்தில் கொண்டு சேர்த்துவிட்டதால் கிராமவாசிகள் நிம்மதியுடன் தங்களின் கிராமத்திற்குத் திரும்புகின்றனர்

திலீப் மொஹாந்தி விளையாட்டுச் செய்திகள் ஊடகத்தில் பணிபுரிகிறார். இருப்பினும், அவருக்கு இந்தியாவின் கிராமங்களைப் பற்றி எழுதுவதிலும் புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வம் இருக்கிறது

தமிழில்: மதுமிதா

Dilip Mohanty

दिलिप मोहंती एका क्रीडा वाहिनीसाठी काम करतात, ग्रामीण भारत ते छायाचित्रण अशा विविध क्षेत्रात त्यांना रस आहे.

यांचे इतर लिखाण Dilip Mohanty
Translator : Madhumitha