“இத்திருவிழா எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது,” என்கிறார் பாலாபதி மஜி. குடியா கோண்டு சமூகத்தைச் சேர்ந்த இவரும், இவரைப் போன்ற பிற பழங்குடியினப் பெண்களும் உள்ளூர் அளவில் நடைபெறும் நாட்டு விதைத் திருவிழாவில் பங்கேற்கத் தயாராகின்றனர். மலைக் குன்றுகளும், அடர்வனமும் சூழ்ந்த அவர்களின் புர்லுபாலு கிராமமே கொண்டாட்டத்திற்கு தயாராகிறது. பாரம்பரிய இசைக் கருவிகளான முரசுகள், தாப், தமுக்கு போன்றவை இசைக்கப்பட, சிறு சிறு மண் பானைகளில் விதைகளை நிரப்பி தலையில் சுமந்தபடி, பெண்கள் பாடிக்கொண்டே நடனமாடினர்.
கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள பூமித் தாய் கோயிலில் அவர்கள் திரண்டனர். கிராம பூசாரி பூஜை முடித்த பிறகு திருவிழா நடைபெறும் இடத்தை நோக்கி ஊர்வலம் தொடங்கியது. ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், துமுதிபந்தா தொகுதியில் உள்ள திறந்தவெளியில் அந்த இடம் அமைந்துள்ளது.
“நல்ல அறுவடைக்காக நாங்கள் பூஜை செய்கிறோம். சிலசமயம் எங்கள் தெய்வங்களுக்கு ஆடு, கோழியையும் பலி கொடுக்கிறோம். நல்ல விளைச்சல் இருந்தால் ஆண்டுமுழுவதும் உணவு கிடைக்கும். திருவிழாவின்போது நாங்கள் விதைகளை பரிமாற்றம் செய்து கொள்வோம், எங்களிடமிருந்து விதை பெறுபவர் நல்ல அறுவடை செய்ய வேண்டுவோம்,” என்கிறார் இரண்டு ஏக்கர் நிலத்தில் குடும்பத்துடன் தினை, சோளம் ஆகியவற்றை சாகுபடி செய்துவரும் 43 வயதாகும் பாலாபதி.
இந்தாண்டு நடைபெற்ற விதைத் திருவிழாவில் பாலாபதி உள்ளிட்ட சுமார் 700 பழங்குடியின பெண் விவசாயிகள் கோதாகர், ஃபிரிங்கியா, துமுதிபந்தா தொகுதிகளில் இருந்து பங்கேற்றனர். மார்ச் மாதத்தில் அறுவடையின்போது நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படும். விதைகளை காட்சிப்படுத்தவும், மரபு விதைகளை பரிமாற்றம் செய்யவும், இழந்த வகையினங்களை மீட்டெடுக்கவும், வேளாண் முறைகள் குறித்து பேசவும் இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்தாண்டு விதைத் திருவிழாவில் பங்கேற்ற பாலாபதி உள்ளிட்ட பழங்குடியின பெண் விவசாயிகள்.
புர்லுபாரு (பெல்கார் ஊராட்சி) கிராமத்தைச் சேர்ந்த குதியா கோண்டு சமூகத்தைச் சேர்ந்த 48 வயதாகும் குலேலாடு ஜெயின் பேசுகையில், கடந்த காலங்களில் இத்திருவிழா அவரவர் கிராமங்களில் கொண்டாடப்படும், அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விதைகளை பரிமாறிக் கொள்வோம். “நாங்கள் சந்தையிலிருந்து ஒருபோதும் விதைகள் வாங்குவதில்லை“ என்கிறார். இந்தத் திருவிழாவின் மூலமாகவே, அவர் எண்ணற்ற வகையிலான சிறுதானிய விதைகளை சேகரித்து அவற்றை தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளார்.
2012 முதல் நடைபெறும் இந்நிகழ்வு, மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பதன் மூலம் திருவிழாவாக புத்துயிர் பெற்றுள்ளது. மில்லட் நெட்வொர்க் ஆஃப் இந்தியாவின் ஆராய்ச்சியாளர்கள், உள்ளுர் அமைப்பினர், உள்ளூர் அரசு நிர்வாகத்தினர் போன்றோருடன், இளைஞர்களும் கிராமத்தினரும் இணைந்து இந்நிகழ்வை நடத்துகின்றனர்.
‘யாத்ராவின்‘ போது விவசாயிகள் கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, சோளம், மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், காய்கறி விதைகளை போன்றவற்றைக் காட்சிப்படுத்துகின்றனர். இவை தவிர பல வகையான நெல், உண்ணத் தகுந்த மர வேர்கள், உள்ளூரில் வளர்ந்த மூலிகைகளும் இடம்பெறுகின்றன. நாளின் இறுதியில் அவற்றை பரிமாற்றம் செய்துகொள்வது ஒரு சடங்காக கடைபிடிக்கப்படுகிறது. இவை சிறந்த தரமான விதைகள் என்கிறார் நந்தாபாலி கிராமத்தின் 38 வயதாகும் பிரமிதி மஜி. “நோய்கள், பூச்சிகள் தாக்காது, ஊட்டம் நிறைந்தது, நல்ல விளைச்சல் அளிப்பது.”
“ எங்கள் நாட்டு விதைகளுக்கு உரங்கள் தேவையில்லை” என்கிறார் குலேலாடு. “நாங்கள் பசுஞ்சாணம் கொண்டு பயிர்களை நன்கு வளர்க்கிறோம், அதில் விளையும் உணவுப் பொருட்களும் சுவையாக இருக்கும் [சந்தையில் விற்கப்படும் விதைகளில் விளையும் பயிர்களைக் காட்டிலும்], அடுத்த விதைப்பு காலத்திற்காக கொஞ்சம் விதைகளை சேமித்துக் கொள்வோம்.”
திருவிழாவில் பங்கேற்ற பெண்கள் விதைக்கும் முறைகள், விதைகள் பாதுகாப்பது குறித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். பழங்குடியின மற்றும் கிராமப்புற சமூகங்களில் நாட்டு விதைகள், மரபு விதைகளை பாதுகாப்பதில் பெண்களின் பங்கு மகத்தானது – அவர்கள் விதைப்பது முதல் அறுவடை வரையிலும் பல்வேறு பணிகளை செய்கின்றனர். “தலைமுறை தலைமுறையாக இந்த அறிவு கடத்தப்படுகிறது. விதைகளை விதைப்பது, பாதுகாப்பது, சேகரிப்பது குறித்து பெண்கள்தான் திட்டமிடுகின்றனர்,” என்கிறார் தினை, மக்காச்சோளம், சோளம் போன்றவற்றை பயிரிடும் மஜிகுடாவின் பிரணதி மாஜி.
“அறுவடைக்குப் பிறகு சில செடிகளை வெயிலில் உலர விடுவோம்,” என்கிறார் கோடாகர் தொகுதியின் பாராமலா கிராமத்தைச் சேர்ந்த பர்பாதி மாஜி. “உலர்ந்த பிறகு, அவற்றை தட்டி, விதைகளைப் பிரித்து, மண் பானையில் சேகரித்துக் கொள்வோம். பூச்சிகளிடமிருந்து அவற்றை பாதுகாக்க பானையின் மேல் பசுஞ்சாணத்தைக் கொண்டு மெழுகிவிடுவோம்.”
இங்கு பல கிராமங்களில், குடியா கோந்து சமூகத்தினர் சிறுதானியங்களை மையப்படுத்திய ஒருங்கிணைந்த வேளாண்மையின் மீது கவனம் செலுத்துகின்றனர். கந்தமாலில் உள்ள பழங்குடியின சமூகங்கள் தொன்றுதொட்டு சிறுதானியங்களையே உண்டு வந்தனர். ஆனால் கால போக்கில் பொது விநியோகத் திட்டத்தில் கிடைத்த அரிசியை உண்ணத் தொடங்கிவிட்டனர். எனினும் பல கிராமங்களில் சிறுதானிய உணவுகள் இப்போதும் பிரபலமாக உள்ளன. “ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசியில் சுவை, சத்து எதுவுமில்லை,” என்கிறார் பரிபங்கா கிராமத்தின் 45 வயதாகும் தைன்பாடி மாஜி, “ஆனால் சிறுதானியங்கள் உங்களுக்கு வலிமை அளிப்பதோடு, அதிக நேரத்திற்கு பசி தாங்கவும் உதவுகிறது,” என்கிறார் ஜரிகதி கிராமத்தின் 46 வயதாகும் சஸ்வந்தி பத்மாஜி. “மலை ஏறுவதற்கும், நீண்ட நேரம் வேலை செய்வதற்கு அவை நமக்கு சக்தி அளிக்கிறது.”
திருவிழாவின் இறுதியில் டிரம்ஸ், கைத்தாளம், கொம்புகளின் தாளத்திற்கு மெல்லிய குரலில் பாடி நடனமாடிய பிறகு, அரங்கின் நடுவில் வைக்கப்பட்டுள்ள நாட்டு விதைகளுக்கு இடையே இப்பெண்கள் ஒன்றுகூடுகின்றனர். பாக்கு இலைகள், சிறு காகித துண்டுகள் அல்லது புடவை முந்தானையில் முடிந்து பல்வேறு விதைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்படுகின்றனர்.
தமிழில்: சவிதா