2000-ங்களிலிருந்து பிரதான பிரசுர பணி என்பது, விஸ்கி பார்ட்டிகள் பற்றியும் வளர்ப்பு பிராணிகளின் மணம் பற்றியும் எழுதுவதாக மாறியது. சாமானிய மக்களுக்கு பிரச்சினைகளாக இருப்பவற்றை எழுதும் நிலை இருக்கவில்லை. உங்களின் லட்சியங்களுக்கு இயைந்து செயல்பட்டால் ’ஜோல்னா பை’ என்ற (இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு வட இந்தியாவில் கேலியாக சுட்ட பயன்படுத்தப்படும் பெயர்) என்ற பெயர் கிடைக்கும்.
நாட்டில் 69 சதவிகிதம் இடம்பெற்றிருக்கும் - கிட்டத்தட்ட 800 மொழிகளுக்கும் மேலாக பேசும் 833 மில்லியன் மக்கள் - கிராமப்புற இந்தியா பற்றிய செய்திகள், அச்சு செய்திகளின் முதல் பக்கத்தில் 0.67 சதவிகிதம்தான் இடம்பெறுகிறது என்கிறது ஊடக ஆய்வுகள் மையத்தின் 2014ம் ஆண்டு கணக்கெடுப்பு. புது தில்லியை சார்ந்த செய்திகள் மட்டும் தேசிய செய்தித்தாள்களின் பிரதான பக்கத்தில் 66 சதவிகிதம் நிறைந்திருக்கிறது என்கிறது அந்த கணக்கெடுப்பு.
“இதழியலில் இருந்த 35 வருடங்களில், விவசாயம், தொழிலாளர்கள் மற்றும் பல முக்கியமான துறைகள் சார்ந்து எந்த செய்தித்தாளும் தொலைக்காட்சி சேனலும் தனிச் செய்தியாளரை வைத்திருக்கவில்லை என்பதை கண்டறிந்தேன். பாலிவுட், மேட்டுக்குடி நிகழ்வுகள், வணிகம் போன்ற விஷயங்களுக்கு முழு நேர செய்தியாளர்களை கொண்டிருந்தனர். ஆனால் தொழிலாளர் மற்றும் விவசாயத் துறைகளுக்கென முழு நேர செய்தி ஆசிரியர்கள் இல்லை. இந்த நிலைக்கு எதிராக உருவானதுதான் கிராமப்புற இந்தியாவுக்கான மக்களின் பெட்டகம் என்னும் பாரி ,” என்கிறார் பலகும்மி சாய்நாத். பாரியின் நிறுவன ஆசிரியரான அவர், 43 வருடங்களாக இந்திய கிராமப்புற செய்திகளை சேகரித்து 60 இதழியல் பரிசுகளை பெற்ற பிரபலமான பத்திரிகையாளர் ஆவார்.
அன்றாட மக்களின் அன்றாட வாழ்க்கைகளை கொண்ட பல்லூடக சேமிப்பகமான பாரி, வாழும் பத்திரிகையும் பெட்டகமுமாகும். CounterMedia Trust-ன் முன்னெடுப்பான, இது ஒரு டஜனுக்கும் குறைவான மக்களை கொண்டு டிசம்பர் 2014-ல் உருவாக்கப்பட்டது. கிராமப்புற இதழியல் தளமாக தொடங்கப்பட்ட பாரி, கிராமப்புறத்தை சார்ந்த அரசு ஆவணங்கள் மற்றும் அரிதான ஆவணங்கள் கொண்ட நூலகமும் கிராமக்கலைகளும் கல்விக்கான சாத்தியமும் கொண்ட முன்னெடுப்பாக வளர்ந்தது. மெய்யான களச் செய்திகளை எழுத்து, புகைப்படங்கள், விளக்கப்படங்கள், ஒலி, காணொளி மற்றும் ஆவணப்படங்களின் வாயிலாக பாரி உருவாக்குகிறது. சாமானிய இந்தியர்களின் அன்றாட வாழ்க்கைகள் பற்றிய செய்திகளை கொண்ட அவை, தொழிலாளர், வாழ்வாதாரம், கைவினை, நெருக்கடி, கட்டுரைகள், பாடல்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கிறது.
பாரியின் விதைகள் சாய்நாத்தின் வகுப்பறைகளில் விதைக்கப்பட்டிருக்கின்றன. கல்வியாளராக அவரின் 35 வருடப் பணியில், 2,000 பத்திரிகையாளர்களுக்கு செய்தி சேகரிப்பின் விழுமியங்கள் பற்றிய வலுவான அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறார். என்னைப் போல, பத்திரிகையாளராகும் விருப்பத்தில் இருப்பவர்களுக்கு அது உதவியது. அசமத்துவம் மற்றும் அநீதி நிறைந்த பின்னணியை அவதானிக்க எங்களுக்கு உதவியது. தொழில்ரீதியிலான இவ்வுலகில் மனசாட்சியினூடாக மனிதர்களை அணுகவும் கற்றுக் கொடுத்தது.
“இத்தனை வருடங்களில் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக நிலைத்தது. பாரியை நோக்கி எங்கள் அனைவரையும் ஈர்த்த லட்சியவாதம்தான் அது,” என்கிறார் பாரியின் நிர்வாக ஆசிரியரான நமிதா வாய்க்கர். பிரதான ஊடகங்களின் நெருக்கடிக்கு இடையே பாரிதான் இதழியலாளர்களுக்கு உயிர்மூச்சு வழங்கும் இடமாக இருக்கிறது.
மறக்கப்பட்டவற்றை மீட்டெடுத்து காத்தல்
ஒரு காலக்கட்டத்தில் நிகழ்ந்தவற்றை பாரியின் கட்டுரைகள் கொண்டிருந்தாலும் அவற்றுக்கு காலமென ஒன்று இல்லை. ஏனெனில் பாரி, ஒரு பெட்டகம். ஒரு சரியான உலகில், பாரி அவசியமில்லை. ஆனால் சாய்நாத் சொல்கையில், “25லிருந்து 50 வருடங்கள் கழித்து, கிராமப்புற இந்திய மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், வேலை செய்தார்கள் என தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் வந்து சேரும் இடம் பாரியாகத்தான் இருக்கும்,” என்பார்.
பிரதான ஊடகம் தில்லி வெள்ளத்தை பற்றி ஜூலை 2023-ல் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் காணாமல் விட்ட விஷயத்தை பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இடம்பெயர்த்தப்பட்ட விவசாயிகள் மீண்டும் வீடுகளை கட்ட எதிர்கொள்ளும் சிரமங்களை கூறினோம். அமைப்புரீதியாக நுட்பமானவர்களும் உணர்வுரீதியாக மெல்லிய மனம் கொண்டவர்களுமான சாமானியர்களும் அவர்களின் வாழ்க்கைகளும்தான் கட்டுரைகளின் மையம். தூர தேசத்தில் வாழும் மக்களை பற்றிய கற்பனை கதைகளல்ல இவை. சில தலைமுறைகளுக்கு முன் வரை, ஒவ்வொரு நகர்ப்புற இந்தியனும் ஒரு கிராமத்தில்தான் வாழ்ந்தான். கிராமவாசியின் பால் வாசகர்களுக்கு கரிசனத்தை உருவாக்குவதுதான் பாரியின் இலக்கு. ஆங்கிலம் பேசும் நகர்ப்புற இந்தியனுக்கு கிராமப்புற இந்தியர்களின் வாழ்க்கை பற்றிய பார்வை வழங்கப்படுகிறது. இந்தி பேசும் விவசாயி, நாட்டின் பல்வேறு இடங்களில் வசிக்கும் விவசாயிகள் பற்றி தெரிந்து கொள்ள முடியும். பாடப்புத்தகங்களில் சொல்லி தரப்படாத வரலாறுக்கு இளைஞர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அழிந்து வரும் வாழ்க்கைகள் மற்றும் கலைகள் ஆய்வாளர்களுக்கு கையளிக்கப்படுகின்றன.
வளர்ச்சி முறைகளை ஏதோவொரு சம்பவம் போல் கடந்து விடாமல், ஒரு பத்திரிகையாளராக அதன் உள்ளூர்தன்மை புரிந்து, அதற்குள் சென்று, நுட்பங்களை அறிந்து தெளிய பாரி செய்தி சேகரிப்பு எனக்கு உதவியிருக்கிறது. நான் புது தில்லியில் பிறந்து வளர்ந்தவன். எனினும் பாரியில் வெளியாகும் நாடு முழுவதும் வெளிப்படும் காலநிலை மாற்ற விளைவுகள் பற்றிய கட்டுரைத் தொடரை ஆராய்ந்ததில்தான், நான் வாழுமிடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் 40 வருடங்களுக்கு முன் வரை ஆமைகளும் கங்கையின் டால்ஃபின்களும் யமுனையில் நீந்திக் கொண்டிருந்தன என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. தில்லி அரசிதழை (1912) ஆராய்ந்து, யமுனையில் கடைசியாக எஞ்சியிருக்கும் விவசாயிகளையும் மீனவர்களையும் நேர்காணல் செய்ததில்தான் தற்காலம் மற்றும் கடந்தகாலம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகளை புரிந்து கொண்டு எதிர்காலம் பற்றிய கேள்விகளை எழுப்ப முடிந்தது. தொற்றுக்காலத்துக்கு பிறகு வளர்ச்சியின் பெயரால் அவர்கள் இடம்பெயர்த்தப்பட்ட நிகழ்வை ஆராய்ந்தேன். 2023ம் ஆண்டு வெள்ளத்தின் அழிவையும் ஆராய்ந்தேன். விளைவாக, இப்பிரச்சினை பற்றிய செறிவான அறிவு கிடைத்தது. பிரதான ஊடகங்களில் நிலவும் ‘பாராசூட் செய்தி சேகரிப்பு’ (பிரச்சினை ஏற்படும்போது அந்த இடத்துக்கு சென்று சேருதல்) இந்த ரகம் அல்ல. ஓர் இதழியலாளராக அப்பிரச்சினை குறித்து எந்த தளத்திலும் விவாதத்திலும் பேச முடிகிற நம்பிக்கையுடன் திரும்பி வர முடியும். அதன் மூலம் அப்பிரச்சினைகள் பற்றிய விவாதத்தை தொடர்ச்சியாகவும் பரவலாகவும் கொண்டு செல்ல முடியும்.
பாரியின் கட்டுரைகளிலுள்ள மக்கள் பலரும் சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல மட்டங்களில் பிரச்சினைகளை சந்தித்தவர்கள். அதை கேட்பதும் கவனிப்பதும் முக்கியத் தேவை. பாரி சொல்லும் செய்திகளில் வருபவர்கள்தான் அக்கட்டுரைகளின் மையம். யமனை ஆற்று விவசாயிகளை பற்றி ஆங்கில்த்தில் கட்டுரை வெளியாகும்போது, அவர்களுடனான என் பணியை இந்தி மொழியில் பகிர்ந்து கருத்துகளை பெற்றேன். பத்திரிகையாளர்கள் என்பதால் மட்டும் மக்கள் அவர்களின் க்தைகளை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அதற்கு அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும்.
இதழியலை போல கலையும் ஒரு சமூகம் அதற்குள்ளாகவே உரையாடலை நிகழ்த்த உதவுகிறது. எனவே பாரி படைப்புரீதியிலான எழுத்துகளையும் ஏற்கிறது. “சில நேரங்களில் உண்மையை பேசும் ஒரே தளமாக கவிதைதான் இருக்கிறது. கிராமப்புற இந்தியாவிலிருந்து பல மொழிகளில் வெளியாகும் அசலான எளிய கவிதைகளுக்கு பாரி இடம் தருகிறது,” என்கிறார் பாரியின் கவிதை ஆசிரியரான பிரதிஷ்தா பாண்டியா. ஒரு பத்திரிகையாளராக, வழக்கமான செய்தியில் இடம்பெற முடியாத கதைகளை நான் கவிதை ஆக்குகிறேன்.
பொது நலம்
ஜனநாயகத்தின் இயக்கமாக இதழியல், தகவல்களை பரிசோதிக்கவும் அதற்கான செய்தித் தரத்தை நிர்ணயிக்கவும் அதிகாரம் பற்றிய உண்மையை தெரிவிக்கவும் வேண்டும். அதற்கான முறைமைகளும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த கொள்கைகள் யாவும் சமூக தளத்தின் வரவாலும் புதுவகை இதழியலாலும் அழிவுக்குள்ளாகின்றன. சிறு நிறுவனங்களும் சுயாதீன இதழியலாளர்களும் இன்று செய்திகளை யூ ட்யூப் போன்ற தளங்களில் சொல்ல முடியும். ஆனால் வெளியே சென்று களம் கண்டு செய்தி சேகரித்து, வாசகர் பரப்பை உருவாக்கி, வருமானம் ஈட்டுவது சவாலாகவே இருக்கின்றன.
“பாரியின் அதன் இதழியலாளர்களும் நான்காவது தூணை காத்துக் கொண்டிருக்கின்றனர். மிராத் உல் அக்பர் (1822ம் ஆண்டு ராஜா ராம் மோகன் ராயால் உருவாக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளில் விமர்சித்த) பத்திரிகை, கேசரி (1881-ல் திலகரால் உருவாக்கப்பட்ட பத்திரிகை) போல சுதந்திரப் போராட்டத்திலிருந்து பெற்ற பாரம்பரியத்தை நாங்கள், குறைவான நிதியுடன் பிற வேலைகள் செய்து எங்களின் வாழ்க்கைகளை ஓட்டி, உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம்,” என்கிறார் பாரியின் தொழில்நுட்ப செய்தி ஆசிரியர் சித்தார் அதெல்கர்.
லாபம் கருதாத இதழியல் அமைப்பான பாரி, பொது மக்களின் நன்கொடைகளையும் அறக்கட்டளை நிதி உதவிகளையும், CSR நிதியையும், தன்னார்வ உழைப்பையும் சார்ந்து இயங்குகிறது. பாரியின் இதழியலுக்காக பெறப்பட்ட 63 விருதுகள் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாயை பெற்று தந்தது. வெகுஜன ஊடகங்கள் விளம்பரங்கள் மற்றும் பிரபலங்கள் சார்ந்தும் அரச ஆதரவுடனும் இயங்குபவை. ஆனால் பாரியோ விளம்பரங்களால் இயங்குவதில்லை. தலையிடும் நபர்களிடமிருந்தும் மூலங்களிலிருந்தும் பாரி நன்கொடைகளை பெறுவதுமில்லை. திரள்நிதியில் இயங்கும் பாரி பதிலளிக்க வேண்டிய பொறுப்பை வாசகர்களிடம் மட்டும்தான் கொண்டிருக்கிறது.
இதன் உள்ளடக்கத்துக்கு காப்புரிமை இல்லை. கட்டணம் கட்டும் ஏற்பாடும் இல்லை. மூலத்தை குறிப்பிட்டு மக்கள் உள்ளடக்கத்தை மறுபிரசுரம் செய்து கொள்ளலாம். எல்லா கட்டுரைகளும் 15 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புக் குழுவான PARIBhasha-வால் மொழிபெயர்க்கப்படுகின்றன. ஆங்கிலத்திலும் வெளியாகிறது. ”பன்முகத்தன்மையை சுமக்கும் தோணியாக மொழி செயல்படுகிறது. மொழிபெயர்ப்பை நான் சமூகநீதியின் கண் கொண்டு பார்க்கிறேன். இந்தியா பன்மொழிப் பகுதி. அறிவை மொழிபெயர்ப்பின் வழியாக பரவலாக்குவது நம் கடமை. நுட்பமான மொழிப்பகுதியை ஒற்றை மொழியில் ஆளப்படுவதற்கு எதிராக மொழிகளை ஜனநாயகப்படுத்துவதுதான் பாரி மொழிபெயர்ப்புப்பணியின் இலக்கு ஆகும்,” என்கிறார் பாரி பாஷாவின் ஆசிரியரான ஸ்மிதா காடோர்.
ஆசிரியர்களும் மாணவர்களும் உருவாக்கும் தரவுகளிலும் பாரி கவனம் செலுத்துகிறது. அதன் கல்வி பிரிவு , பெருநகரங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சென்றடைந்து, சர்வதேச மனிதன் என்பவன் வெளிநாட்டு மொழி பேசி, பல நாட்டு தகவல்களை தெரிந்திருப்பவன் மட்டுமல்ல, அவர்களிடமிருந்து 30-50-100 கிலோமீட்டர் தூரத்தில் வேறு ஒரு வட்டார வழக்கில் பேசி, வேர்களை கொண்டவனும்தான் என்பதை உணர்த்துகிறது. “மாணவர்கள் (பாரியில்) பிரசுரிக்கும் கட்டுரைகள் அனுபவப்பூர்வமாக கற்றலுக்கான உதாரணங்களாக நாங்கள் பார்க்கிறோம். அவை வழக்கங்களை கேள்வி கேட்க அவர்களை தூண்டுகிறது. கேள்வி கேட்கக் கற்றுக் கொடுக்கிறது: ஏன் மக்கள் இடம்பெயருகின்றனர்? தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஏன் கழிவறை வசதிகள் இல்லை? உத்தரகாண்டை சேர்ந்த ஓர் இளம்பெண், அவரது உறவினர்கள் ஏன் மாதவிடாயின் காலத்தில் ‘அசுத்தமானவர்களாக’ பார்க்கப்படுகிறார்கள் என கேட்கிறார்; அவரின் வகுப்பறையில் படிக்கும் இளம் மாணவர்களும் அதையேதான் செய்வார்களா எனக் கேட்கிறார்,” என்கிறார் பாரியின் நிர்வாக ஆசிரியரான பிரிதி டேவிட்.
கிராமப்புற இந்தியாவில் பல தனித்துவமான, பன்முகத்தன்மை வாய்ந்த கதைகள், மக்கள் சார்ந்தும், மொழி சார்ந்தும், தொழில்கள் சார்ந்தும் கலை சார்ந்தும் இன்னும் பலவாகவும் இருக்கின்றன. இவை யாவும் அருகிக் கொண்டிருந்தாலும் மாறிக் கொண்டிருந்தாலும் பல மொழிகளில் அவை சென்றடையும் வகையில் ஆவணப்படுத்தி வகுப்பறைகளுக்கு அவற்றை கொண்டு சென்று கொண்டிருக்கும் பாரி, ”எதிர்காலத்துக்கான பாடப்புத்தகம்” ஆகும். இந்தியாவின் 95 வரலாற்றுப்பூர்வமான பகுதிகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு மானியப் பணியாளரை தேர்ந்தெடுத்து அன்றாட மக்களின் வாழ்க்கைகள் பற்றிய கட்டுரைகளை அவரவர் வசிக்கும் பகுதிகளின் சாரம் மாறாமல் வழங்கிட இலக்கு கொண்டிருக்கிறது,” என்கிறார் அதெல்கர். பாரியில் இருக்கும் எங்களை பொறுத்தவரை இது இதழியல் கிடையாது. மனிதனாக இருப்பதற்கான நடைமுறை இது.
இக்கட்டுரையின் முதல் பதிப்பு Dark ‘n Light-ன் ஆதரவில் முதன்முறையாக அவர்களின் தளத்தில் டிசம்பர் 2023-ல் வெளியானது
தமிழில் : ராஜசங்கீதன்