“பாலியல் தொழில் செய்வதால் எங்களின் உடல்களை அவர்கள் எல்லாவற்றுக்கும் கட்டணமாக நினைத்துக் கொள்கின்றனர்,” என்கிறார் 30 வயது மிரா. 2012ம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் ஃபருக்காபாதிலிருந்து தில்லிக்கு வந்தவருக்கு மூன்று குழந்தைகள். திடீர் மாரடைப்பால் கணவர் உயிரிழந்துவிட்டார். கோபமும் சோர்வும் சம அளவில் அவரிடம் இப்போது இருக்கிறது.

“எனக்கு அவர்கள் மருந்து தரும்போது இப்படித்தான் செய்கிறார்கள்.” மருத்துவமனைப் பணியாளர்கள் தங்களின் கை கொண்டு உடலை தடவும் செய்கையை செய்து காட்டும் 39 வயது அமிதாவின் முகம் அருவருப்பில் சுருங்குகிறது. அவமானத்துக்கு அவர் அஞ்சுகிறார். ஆனாலும் பரிசோதனைக்கும் மருந்துகளுக்கும் மருத்துவமனைக்குத் திரும்பச் செல்கிறார்.

“ஹெச்ஐவி பரிசோதனைகளுக்காக நாங்கள் செல்கையில், நாங்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டால், உதவ முன் வருவார்கள். ‘பின்வாசலுக்கு வா. நான் உனக்கு மருந்து தருகிறேன்,’ என்பார்கள். அந்த சமயத்தை அவர்கள் எங்களை தவறாகத் தொட பயன்படுத்திக் கொள்வார்கள். 16 மாநிலங்களின் 4.5 லட்ச பாலியல் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பான அகில இந்தியப் பாலியல் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சொல்வதை ஆமோதிப்பதுபோல் தலையசைக்கிறார் 54 வயது குசும்.

வடமேற்கு தில்லியின் ரோகிணி பகுதியில் ஒரு சமூக தங்குமிடத்தில், தொற்றினால் வேலையின்றி இருக்கும் பாலியல் தொழிலாளர் குழு ஒன்றை PARI சந்தித்தது. குளிர்கால மதியவேளையில் கதகதப்பு தரும் வகையில் அருகருகே அமர்ந்திருக்கும் அவர்கள், டிபன் பாக்ஸ்களில் எடுத்து வந்திருக்கும் சிறிதளவு பருப்பு மற்றும் ரொட்டி உணவை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.

Sex workers sharing a meal at a community shelter in Delhi's North West district. Many have been out of work due to the pandemic
PHOTO • Shalini Singh

வடமேற்கு தில்லியின் ஒரு சமூகக் காப்பகத்தில் உணவைப் பகிர்ந்து கொள்ளும் பாலியல் தொழிலாளர்கள். தொற்றினால் வேலையின்றி பலரிருக்கின்றனர்

சுகாதாரச் சேவைகளை அணுகுவது தனிப் பாலியல் தொழிலாளர்களுக்குக் கடினமாக இருப்பதாகச் சொல்கிறார் மிரா

“இந்த ஆண்கள் பிற்பகல் 2 மணிக்கு மேல் என்னை திரும்ப வரச் சொல்வார்கள்.  ‘உன் வேலையை முடித்துத் தருகிறேன்’ என்பார்கள். இலவசமாக எதுவும் நடப்பதில்லை. மருந்துகள் கிடைப்பதற்காக, மருத்துவர்கள் என நான் தவறாக நினைத்துக் கொண்ட வார்டு பணியாளர்களிடம் பாலுறவு வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.  சில நேரங்களில் எங்களுக்கு வேறு வழிகள் இருப்பதில்லை. சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. நீண்ட வரிசையி எங்களால் காத்திருக்க முடியாது. நேரம் எங்களின் கையில் கிடையாது. குறிப்பாக வாடிக்கையாளர் வரும் சமயங்களில், அவர் விருப்பத்துக்கான நேரத்தில்தான் வருவார். நாங்கள் மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பட்டினியில் சாக வேண்டும்,” என்கிறார் மிரா எள்ளலுடன். “நான் ஒரு பாலியல் தொழிலாளி என சொன்னாலோ அல்லது என் குரலை உயர்த்தினாலோ, எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுவிடும்.”

அந்த வட்டாரத்தில் இருக்கும் இரண்டு அரசு மருத்துவமனைகளும் நாள்தோறும் பிற்பகல் 12.30லிருந்து 1.30 வரை, 60 நிமிடங்களை அருகே வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்காக ஒதுக்குகின்றன. குறிப்பிட்ட இந்த நேரம் பாலியல் தொழிலாளர்கள் ஹெச்ஐவி பரிசோதனை செய்து கொள்ளவும் பாலுறவு நோய்த்தொற்று பரிசோதிக்கவும் ஒதுக்கப்பட்ட நேரம். தன்னார்வ தொண்டு ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மருத்துவமனைகள் செய்து கொடுத்த வசதி இது.

“வரிசையில் நிற்பதாலும் பரிசோதனைக்கும் அதிக காலம் ஆகுமென்பதால் பொதுமக்களுடன் பாலியல் தொழிலாளர்கள் வரிசைகளில் நிற்பதில்லை,” என்கிறார் பாலியல் தொழிலாளர்களுக்கான தில்லியைச் சேர்ந்த தொண்டு அமைப்பின் தன்னார்வலர் ரஜ்னி திவாரி. வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது ஒரு வாடிக்கையாளர் அழைத்தால், அவர்கள் யோசிக்காமல் சென்று விடுவார்கள்.

ஒரு மணி நேர ஒதுக்கீட்டிலும் மருத்துவரைச் சந்திக்க வருவது சில நேரங்களில் சிரமம் என்கிறார் திவாரி. அவர்கள் சந்திக்கும் சுகாதார சவால்களின் ஆரம்பம்தான் இது.

பாலுறவு தொற்று நோய்களுக்கான மருந்துகளைத்தான் மருத்துவர்கள் அவர்களுக்குக் கொடுக்கிறார்கள். ஹெச்ஐவி மற்றும் சிஃபிலிஸ் பரிசோதனைக்கான பரிசோதனை உபகரணங்கள், தில்லி மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் நிதியுதவியுடன் தன்னார்வ அமைப்புகளால் வாங்கி பாலியல் தொழிலாளகளுக்குக் கொடுக்கப்படுகிறது.

A room at the office of an NGO, where a visiting doctor gives sex workers medical advice and information about safe sex practices
PHOTO • Shalini Singh
A room at the office of an NGO, where a visiting doctor gives sex workers medical advice and information about safe sex practices
PHOTO • Shalini Singh

ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அறை ஒன்றில் பாலியல் தொழிலாளர்களுக்கு ஒரு மருத்துவர் மருத்துவ ஆலோசனையும் பாதுகாப்பு முறைகளையும் விளக்குகிறார்

“பிற மக்களைப் போல பாலியல் தொழிலாளர்களுக்கும் காய்ச்சல், நெஞ்சு வலி, நீரிழிவு நோய் போன்ற நோய்களும் வருவதுண்டு,” என்கிறார் அவர். மேலும் பாலியல் தொழிலாளர்கள் எனத் தெரிந்ததும் வார்டு பணியாளர்கள் அவர்களைச் சுரண்டுவதும் வழக்கமாக நடக்கிறது என பாலியல் தொழிலாளர்கள் சொன்ன விஷயத்தை அவரும் ஆமோதித்தார்.

பெண் நோயாளிகளில் பாலியல் தொழிலாளர்களை அடையாளம் காணுவது ஆண் பணியாளர்களுக்கு சுலபம்.

பெண்களைச் சந்தித்த சமூகக் காப்பகம் மருத்துவமனையிலிருந்து குறைவான தூரம்தான். தொற்றுக்கு முன்பு, அமிதா தயாரானதும் மருத்துவமனை வாசலருகேதான் வாடிக்கையாளர்கள் வந்து அவரை அழைத்துச் செல்வார்கள். அதை மருத்துவப் பணியாளர்கள் பார்ப்பார்கள்.

“ஹெச்ஐவி பரிசோதனைக்கான குறிப்பிட்டத் துண்டுச் சீட்டுடன் நிற்பவர்களை பாலியல் தொழிலாளர்கள் எனக் காவலாளியும் புரிந்து கொள்வார்கள். பிறகு, நாங்கள் பரிசோதனைக்கு செல்லும்போது எங்களை அவர்கள் அடையாளம் கண்டு பிறரிடம் சொல்வார்கள். சில நேரங்களில் வரிசையில் காத்திருக்காமல் நாங்கள் மருத்துவரைச் சந்திக்க எங்கள் வாடிக்கையாளர்கள் உதவியதுண்டு,” என்கிறார் அமிதா. ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் மருந்துகளுக்கும் என தனித்தனி வரிசைகள் இருக்கின்றன.

20 வருடங்களுக்கு முன் பாட்னாவிலிருந்து தில்லிக்கு இரண்டு மகன்கள் மற்றுமொரு மகள் ஆகியோருடன் கணவன் ஓடிப் போனபிறகு வந்து சேர்ந்தவர் அமிதா.  ஓர் ஆலையில் தினக்கூலியாக பணியாற்றிய அவருக்கு ஊதியம் கொடுக்கப்படாமல் மறுக்கப்பட்டபோது ஒரு நண்பரின் மூலம் பாலியல் தொழிலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். “இந்த வேலை செய்ய மறுத்து பல நாட்கள் நான் அழுதிருக்கிறேன். ஆனால் 2007ம் ஆண்டில் நாளொன்றுக்கு 600 ரூபாய் என்பது பெரிய விஷயம். 10 நாட்கள் உணவுக்குப் பிரச்சினை இருக்காது.”

அமிதா, மிரா மற்றும் பிறர் சொல்வதிலிருந்து, பாலியல் தொழிலாளர்களுக்கு சுகாதாரச் சேவை பெறும் அனுபவம் மோசமாக இருப்பது சுலபமாக தெரியும். இத்தகைய காரணங்களால்தான் தங்களின் தொழிலை மருத்துவமனைகளில் வெளிப்படுத்துவதில்லை என 2014ம் ஆண்டு வெளியான பாலியல் தொழிலில் பெண்களின் நிலை என்கிற அறிக்கை குறிப்பிடுகிறது. “பெண் பாலியல் தொழிலாளர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். விமர்சிக்கப்படுகின்றனர். காலவரையின்றி காத்திருக்க வைக்கப்படுகின்றனர். சரியாக பரிசோதிக்கப்படுவதில்லை. ஹெச்ஐவி பரிசோதனை எடுக்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தனியார் மருத்துவச் சேவைகளுக்கு அதிகக் கட்டணம் கேட்கப்படுகிறது. மருத்துவச் சேவைகளும் பிரசவகால சிகிச்சையும் மறுக்கப்படுகிறது. அவர்களைப் பற்றிய தகவல்களின் ரகசியத்தன்மை காப்பாற்றப்படுவதில்லை,” என்கிறது பாலியல் தொழிலாளர்களுக்கான கூட்டமைப்புகள் மற்றும் ஆதரவு அமைப்புகள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்ட அறிக்கை.

Left: An informative chart for sex workers. Right: At the community shelter, an illustrated handmade poster of their experiences
PHOTO • Shalini Singh
Right: At the community shelter, an illustrated handmade poster of their experiences
PHOTO • Shalini Singh

இடது: பாலியல் தொழிலாளர்கள் பற்றிய தகவல் படம். வலது: சமூகக் காப்பகத்தில் பெண்களின் அனுபவங்களைப் பற்றி உருவாக்கப்பட்ட விளக்கப்படம்

அமிதாவின் அனுபவங்கள் அறிக்கையின் கருத்துகளை பிரதிபலிக்கின்றன. “ஹெச்ஐவி போன்ற பெரிய நோய்களுக்கும் கருக்கலைப்புகளுக்கும் நாங்கள் சரிசெய்ய முடியாத பிற நோய்களுக்கும் மட்டுமே நாங்கள் பெரிய மருத்துவமனைகளுக்கு செல்கிறோம். பிற நேரங்களில் உரிமம் பெறாத உள்ளூர் பயிற்சி மருத்துவர்களிடம்தான் நாங்கள் செல்வதுண்டு. நாங்கள் பாலியல் தொழில் செய்வது அவர்களுக்குத் தெரிந்தாலும் ஆதாயங்கள் கேட்பார்கள்,” என்கிறார் அவர்.

ஏறக்குறைய அவர்கள் சந்திக்கும் அனைவருமே அவர்களிடம் கண்ணியம் காட்டுவதில்லை என்கிறார் குசும். அவர்களின் தொழில் தெரிந்தவுடன், சுரண்டல் தொடரும். பாலுறவு இல்லையென்றாலும் கண நேர திருப்தியோ அவமானப்படுத்தி ஆனந்தமடைதலோ அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. “எங்கள் உடல்களைத் தொடவே அவர்கள் விரும்புகின்றனர்.”

விளைவாக சுகாதார சேவை பெற பாலியல் தொழிலாளர்களை வற்புறுத்த வேண்டியிருக்கிறது என்கிறார் சுமன் குமார் பிஸ்வாஸ். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவன அலுவலகத்தில் பாலியல் தொழிலாளர்களைச் சந்திக்கும் ரோகிணிப்பகுதியைச் சேர்ந்த மருத்துவர் அவர். ஆணுறைகள் விநியோகிக்கும் அவர் பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

கோவிட் தொற்று, பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான பாரபட்சத்தை கூர்மைப்படுத்தி, சுரண்டலுக்கு அவர்கள் ஆளாகும் வாய்ப்புகளை அதிகப்படுத்தியது.

“பாலியல் தொழிலாளர்கள் தீண்டத்தகாதோர் போல் நடத்தப்படுகின்றனர்,” என்கிறார் பாலியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான புடுல் சிங். “நாங்கள் நியாய விலைக்கடை வரிசைகளிலிருந்து அகற்றப்பட்டோம். ஆதார் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க தொந்தரவு கொடுக்கப்பட்டோம். எங்களின் சகோதரிகளில் ஒருவருக்கு கஷ்டமான கர்ப்பம். ஆனால் அவசர ஊர்தி வரவில்லை. சில கிலோமீட்டர் தொலைவுக்கு வர 5,000 ரூபாய் அதிகம் கேட்டார்கள். எப்படியோ நாங்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் பணியாளர்கள் அவருக்கு சிகிச்சைக் கொடுக்க மறுத்தனர். வெவ்வேறு காரணங்கள் கொடுத்தனர். ஒரு மருத்துவர் அவரைச் சந்திக்க ஒப்புக் கொண்டார். ஆனால் நோயாளியிடமிருந்து சற்று தூரத்தில் நின்று கொண்டார்.” அவரை தனியார் மருத்துவ மையத்துக்குக் கொண்டு சென்றும் குழந்தை இறந்துவிட்டது என்கிறார் சிங்.

****

Pinki was left with a scar after a client-turned-lover tried to slit her throat. She didn't seek medical attention for fear of bringing on a police case.
PHOTO • Shalini Singh
A poster demanding social schemes and government identification documents for sex workers
PHOTO • Shalini Singh

இடது: வாடிக்கையாளராக இருந்து காதலராக மாறிய ஒருவர் கழுத்தை அறுக்க முயற்சித்ததில் ஏற்பட்ட தழும்பு இன்னும் பிங்கியிடம் இருக்கிறது. காவல்துறை வழக்கு தேவைப்படும் என்கிற அச்சத்தில் அவர் மருத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை. வலது: பாலியல் தொழிலாளர்களுக்கு சமூகத் திட்டங்களும் அரசின் அடையாள ஆவணங்களும் வேண்டும் ஒரு படம்

தனியார் சுகாதாரமா பொதுச் சுகாதாரமா என தேர்ந்தெடுப்பது கஷ்டமான காரியம் என்கின்றனர் பெண்கள். “தனியார் மருத்துவமனையில் எங்கள் சுயமரியாதைக்கு இழுக்கு இன்றி நாங்கள் மருத்துவரைச் சந்திக்க முடியும்,” என்கிறார் அமிதா. ஆனால் இந்த மையங்களில் கட்டணம் பெருமளவில் இருக்கும். உதாரணமாக ஒரு கருக்கலைப்புக்கு மூன்று மடங்குக் கட்டணம் இருக்கும். குறைந்தபட்சம் 15,000 ரூபாயாவது தனியாரில் ஆகும்.

அரசு மருத்துவமனைகளில் இருக்கும் இன்னொரு பிரச்சினை கட்டாய ஆவணங்கள்.

28 வயது பிங்கி அவரது முகத்திலிருந்தும் கழுத்திலிருந்து துணியை நீக்கி ஒரு தழும்பைக் காட்டுகிறார். வாடிக்கையாளராக இருந்து காதலரான ஒருவர் பொறாமையில் கழுத்தறுக்க முயற்சி செய்ததில் ஏற்பட்டத் தழும்பு. “லட்சக்கணக்கான கேள்விகள் கேட்கப்படும். அடையாளங்கள் வெளியாகும். வழக்கு எங்கள் மேல் பதியப்படலாம். மேலும் எங்கள் வீடுகளை விட்டு வருகையில் நாங்கல் குடும்ப அட்டைகளையும் ஆவணங்களையும் எடுத்து வரவில்லை,” என்கிறார் அவர் அரசு மருத்துவமனைக்கு ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கு பதிலாக.

மார்ச் 2007-ன் பெண்கள் சுகாதார அறிக்கையின்படி பாலியல் தொழிலாளர்கள்  “பொதுச்சுகாதாரத்துக்கு ஆபத்தாக” பார்க்கப்படுகின்றனர்.  பத்தாண்டுகள் கழித்து தலைநகரத்திலேயே மிகக் கொஞ்சம்தான் மாறியிருக்கிறது. கோவிட் தொற்று பாலியல் தொழிலாளர்களுக்கு இன்னும் அதிக நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது

அக்டோபர் 2020-ல் தேசிய மனித உரிமை ஆணையம் கோவிட் காலத்தில் பெண்கள் உரிமை பற்றி ஆலோசனை வழங்கியது. பாலியல் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு பன்மடங்கு அதிகரிப்பதாக அது கூறியது. அவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டது. ஹெச்ஐவி உறுதிபடுத்தப்பட்டோர் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியவில்லை. பலர் அடையாள ஆவணங்கள் இல்லாததால் அரச நலத் திட்டங்கள் பெற முடியவில்லை. ஆனால் இறுதியில் மனித உரிமை ஆணையம் பாலியல் தொழிலாளர்கள் பற்றிய அதன் அறிக்கையை மாற்றி, அவர்களை முறை சாரா தொழிலாளர்களாக அங்கீகரிக்கும் யோசனையைக் கைவிட்டது. அதன்வழியாக தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் பயன்களை அவர்களும் அடைய முடியும். அதற்குப் பதிலாக அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டுமென்கிற யோசனையை ஆணையம் முன் வைத்தது.

At the NGO office, posters and charts provide information to the women. Condoms are also distributed there
PHOTO • Shalini Singh
At the NGO office, posters and charts provide information to the women. Condoms are also distributed there
PHOTO • Shalini Singh

ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் படங்களும் விளக்கப்படங்களும் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்குகின்றன. ஆணுறைகளும் இங்கு விநியோகிக்கப்படுகிறது

“கோவிட் காலத்தில் பாலியல் தொழிலாளர்களிடம் ‘நீங்கள் வைரஸ்ஸை பரப்ப வாய்ப்பிருப்பதால் நாங்கள் உங்களைத் தொட மாட்டோம்’ என அரசு மருத்துவமனைகள் சொன்னது மோசம். மருந்துகளும் பரிசோதனைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன,” என்கிறார் தில்லியின் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த ஸ்நேகா முகர்ஜி. ஆள் கடத்தல் சட்டமசோதா 2021 , எல்லா பாலியல் தொழிலாளர்களையும் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களாக பார்க்கிறது. மசோதா சட்டமாக்கப்பட்டால், பாலியல் தொழிலாளராக இயங்குவது இன்னும் சிரமமாகி விடும் என்கிறார் முகர்ஜி. பாலியல் தொழிலாளர்களை இது இன்னும் தூர நிறுத்தி வைக்கும் என எச்சரிக்கிறார் அவர்.

2020க்கு முன் நாளொன்றில் வரும் ஒன்றிரண்டு வாடிக்கையாளர் கொடுக்கும் 200-400 ரூபாய் பணத்தைக் கொண்டு ஒரு பாலியல் தொழிலாளர் மாதத்துக்கு 6,000லிருந்து 8,000 வரை சம்பாதிக்க முடிந்தது. கோவிட் முதல் அலையின் ஊரடங்குக்குப் பிறகு பல மாதங்களாக வாடிக்கையாளரின்றி, முறைசாரா தொழிலாளர்களைப் போலவே பாலியல் தொழிலாளர்களும் தொண்டு நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. குறைந்தபட்ச உணவே கேள்விக்குறியான பிறகு, மருந்துகளைப் பற்றியே கேள்விக்கே இடமிருக்கவில்லை.

“உணவும் மார்ச் 2021-ல் நின்றுபோனது. பாலியல் தொழிலாளர்களுக்கு என அரசும் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை,” என்கிறார் அகில இந்தியப் பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அமித் குமார். “கோவிட் வந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர்களுக்கு வாடிக்கையாளர் கிடைப்பது போராட்டமாக இருக்கிறது. உணவுப் பற்றாக்குறை மட்டுமின்றி வாழ்வாதாரத்தை இழந்து, குடும்பங்களுக்கு அவர்களின் வேலை தெரிந்துபோய் ஏற்பட்ட மனநலப் பிரச்சினைகளிலும் அவர்கள் உழலுகின்றனர்.”

பாலியல் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் 2014ம் ஆண்டு அறிக்கியின்படி இந்தியாவில் 8 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.  திவாரியைப் பொறுத்தவரை 30,000 பாலியல் தொழிலாளர்கள் தில்லியில் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 30 தொண்டு நிறுவனங்கள் அவர்களுடன் இயங்கி தொடர் பரிசோதனைகள் செய்கின்றன. ஒவ்வொரு அமைப்பும் 1,000க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களைக் கையாளுகிறது. வருமானம் ஈட்டுபவர்களாக பெண்கள் தங்களைக் கருதுகின்றனர். “பாலியல் தொழில் என்றுதான் நாங்கள் அழைக்கிறோம். விபச்சாரம் என்றல்ல. தினமும் நான் சம்பாதித்து உண்கிறேன். எனக்கென ஒரு தனி இடம் இருக்கிறது. ஒன்றிரண்டு நாட்களுக்கு ஒரு வாடிக்கையாளர் எடுத்துக் கொள்வேன். ஒவ்வொருவரும் 200லிருந்து 300 ரூபாய் கொடுப்பார்,” என்கிறார் 34 வயது கைம்பெண்ணான ராணி.

There are nearly 30,000 sex workers in Delhi, and about 30 not-for-profit organisations provide them with information and support
PHOTO • Shalini Singh
PHOTO • Shalini Singh

தில்லியில் கிட்டத்தட்ட 30,000 பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 30 தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு தகவலும் ஆதரவும் தருகின்றன

வருமானத்துக்கான வழி என்பது அவர்களின் ஒரு அடையாளம்தான். “பாலியல் தொழிலாளர்கள் தனிப் பெண்கள், தனிப் பெற்றோர், தலித் பெண்கள், கல்வியறிவில்லா பெண்கள், புலம்பெயர் பெண்கள் போன்றோராகவும் புரிந்துக் கொள்ளப்படுதல் முக்கியம். அவர்களின் வாழ்க்கையோட்டங்கள் பிற அடையாளங்களால் தீர்மானிக்கப்படுவதையும் உணர வேண்டும்,” என்கிறார் மும்பையைச் சேர்ந்த செயர்பாட்டாளரும் பெண்ணியக் கோட்பாட்டாளருமான மஞ்சிமா பட்டாச்சார்ஜியா. Intimate City என்கிற புத்தகத்தின் எழுத்தாளர் அவர். உலகமயமாக்கலும் தொழில்நுட்பமும் பாலியல் வர்த்தகத்தை எப்படி பாதிக்கிறது எனப் பேசும் புத்தகம் அது. “பல நேரங்களில் பெண்கள் பல வித முறைசாரா வேலைகள் செய்து பிழைக்கின்றனர். வீட்டு வேலை ஒரு நேரம், பாலியல் வேலை இன்னொரு நேரம், கட்டுமான வேலை அல்லது ஆலை வேலை ஒரு நேரம்,” என்கிறார் அவர்.

பாலியல் தொழிலில் பாதுகாப்பின்மையும் இருக்கிறது. “ஒருவருடைய வீட்டை நாம் வேலைக்கு பயன்படுத்தினால், அந்த நபரும் கமிஷன் வாங்குவார். எனக்கான வாடிக்கையாளராக இருந்தால், 200லிருந்து 300 ரூபாய் வரை வாடகையாக மாதத்துக்குக் கொடுப்பேன். வீட்டுக்கார அம்மாவின் வாடிக்கையாளராக இருந்தால், நிலையானத் தொகையை நான் கொடுக்க வேண்டும்,” என்கிறார் ராணி.

அத்தகைய ஒரு வீட்டுக்கு அவர் என்னை அழைத்துச் செல்கிறார். வீட்டு உரிமையாளரின் அடையாளத்தை வெளியிட்டு பிரச்சினை செய்ய மாட்டோம் என்கிற உறுதியை வாங்கிக் கொண்டு, உரிமையாளர் ஒதுக்கப்பட்ட அறையை எங்களுக்குக் காட்டினார். ஒரு படுக்கை, கண்ணாடி, இந்தியக் கடவுளரின் புகைப்படங்கள் மற்றும் ஒரு குளிர்சாதனப் பெட்டி இருந்த அறை அது. இரண்டு இளம்பெண் படுக்கையிலமர்ந்து செல்பேசிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பால்கனியில் நின்று புகைப்படித்துக் கொண்டிருந்த இரு ஆண்கள் எங்களிடமிருந்து பார்வையை விலக்கினர்.

‘உலகின் புராதனத் தொழிலில்’ உடல் பொருளாதாரப் பண்டமாக ஆக்கப்படுவதில் ஒருவரின் பங்கு என்ன என்கிற கேள்வி வரலாற்றுப்பூர்வமாகவே பதிலளிக்க முடியாத கேள்வி. பங்கு நல்லதாகவோ தார்மிகமானதாகவோ பார்க்கப்படாதபோது அதை தீர்மானிப்பது கடினம் என்கிறார் பட்டாச்சார்யா. “எந்தப் பெண் பாலியல் தொழில் செய்ய விரும்பும் பெண்ணாக சொல்லிக் கொள்ள விரும்புவாள்? காதலன் அல்லது இணையருடன் கலவிக்கு ஒப்புக் கொண்டதாக ஒரு பெண் சொன்னால், அவள் மோசமானவளாக பார்க்கப்படுவதற்கு ஒப்பான விஷயம்தான் இதுவும்.”

இவற்றுக்கிடையில் உணவு, இருப்பிடம், பள்ளிக் கட்டணம் மற்றும் மருந்துகள் ஆகியவற்றுக்கான பணத்தை ஈட்ட தாய் என்ன வேலை செய்வதாக வளரும் குழந்தைகளிடம் சொல்வது எனக் குழப்பத்தில் இருக்கிறார் ராணி.

பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது

கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின்  தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.

இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய [email protected] மற்றும் [email protected] ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

தமிழில் : ராஜசங்கீதன்

Shalini Singh

Shalini Singh is a founding trustee of the CounterMedia Trust that publishes PARI. A journalist based in Delhi, she writes on environment, gender and culture, and was a Nieman fellow for journalism at Harvard University, 2017-2018.

Other stories by Shalini Singh
Illustration : Priyanka Borar

Priyanka Borar is a new media artist experimenting with technology to discover new forms of meaning and expression. She likes to design experiences for learning and play. As much as she enjoys juggling with interactive media she feels at home with the traditional pen and paper.

Other stories by Priyanka Borar
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan