'ஹூன் ஜானோ, ஹூன் கபார்?' ('அது என்னவென்று எனக்கு எப்படித் தெரியும்?' உள்ளூர் வாக்ரி பேச்சுவழக்கில்)
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள போரி, கார்வேதா மற்றும் செமலியா ஆகிய கிராமங்களில், பெண்களுடன் உரையாடியபோது, அவர்களில் பெரும்பாலோர் ஒரு பாயில் அல்லது வெறும் தரையில் அமர்ந்திருப்பதை நான் கவனித்தேன். ஆண்களும், பெரியவர்களும் - நாற்காலிகளில், கட்டில்களில் என எப்போதும் மேலே உட்கார்ந்திருப்பார்கள் - ஆண்கள் முன்னிலையில், வயதான பெண்கள் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் தரையில் அமர்ந்திருப்பார்கள். இது குழந்தைகளுக்கும் பொருந்தும். சிறுவர்கள் மேலே உட்காருகிறார்கள், சிறுமிகள் தரையில்.
கார்வேதா மற்றும் செமலியாவின் பெரும்பாலான மக்கள் விவசாயிகள். அவர்கள் பாரம்பரியமாக நெசவாளர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் நெசவுத் தொழிலை நிறுத்தி சில தலைமுறைகள் ஆகிவிட்டன. போரியில், சில பெண்கள் பால் பண்ணையாளர்களாகவும் உள்ளனர்.
இதுகுறித்து கேட்டபோது, பெண்கள் தரையில் அமருவது வழக்கம் என்று அனைவரும் கூறினர். திருமணமானவுடன், குடும்பத்தின் மகள் தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்லும்போது மேலே உட்காரலாம், ஆனால் மருமகள் தரையில் தான் அமர வேண்டும்.
ஆண்கள் மற்றும் கிராமப் பெரியவர்கள் கூடும் போது மட்டுமல்ல, என்னைப் போன்ற பார்வையாளர்கள் இருக்கும்போதும் கூட பெண்கள் தரையில் அமர்ந்திருப்பார்கள் - அதாவது, காணும் யாவரும், எந்த வகையிலும் அவர்களை விட சக்திவாய்ந்தவர்கள் அல்லது சலுகை பெற்றவர்கள் என்று கருதுகிறார்கள்.
ஒரு சுய உதவிக் குழுவில் இதைப் பற்றி மெல்ல விவாதிக்கத் தொடங்கினோம். பெரியோர்களையும், மாமியாரையும் புண்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். சிலர் இந்த நடைமுறை மாற வேண்டும் என்று விரும்பினர், சிலர் அது தொடர வேண்டும் என்று விரும்பினர்.
கொஞ்ச நேரத்தில், அவர்கள் அனைவரும் நாற்காலி, கட்டில் அல்லது உயர்த்தப்பட்ட மேடையில் அமர்ந்து புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டனர். வீட்டிற்குள் அல்லது கொல்லைப்புறங்களில் அல்லது அவர்களின் மகன்களை மடியில் வைத்துக் கொண்டு புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்று அவர்கள் என்னிடம் அடிக்கடி வலியுறுத்தினர்.
ஒரு சிலர் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டனர், பலருக்கு இந்த தற்காலிக உயர்வை அனுமதிக்க நிறைய தயாரிப்பு தேவைப்பட்டது.
தமிழில்: சவிதா