அது திருவிழா திடலா, கிராமமா என்பதை நீங்கள் தொலைவிலிருந்தே கூறிவிடலாம்.
மூங்கில், தகர கொட்டகைகளில் பல்லாயிரக்கணக்கான பசுக்கள், எருதுகள், எருமைகள் உருமிக் கொண்டுள்ளன. நூற்றுக்கணக்கான மக்கள் அங்கும், இங்கும் திரிந்து கொண்டிருக்கின்றனர். தீவனம் ஏற்றிய மாட்டு வண்டிகள் வந்து சென்ற வண்ணம் உள்ளன.
சாணம் கொட்டி குவிக்கப்பட்டுள்ள இடத்தை நீங்கள் கடக்கும் போது மீத்தேனின் துர்நாற்றம் காற்றில் வீசுகிறது.
மகாராஷ்டிராவின் மாபெரும் “கால்நடை முகாம்களில்“ ஒன்றிற்கு வரவேற்கிறோம்- இது சரியான வரவேற்பு தானா- திருவிழா திடலுக்கான அத்தனை பரபரப்புடன் காட்சியளித்தாலும் அதற்கான வண்ணங்களும், கொண்டாட்டமும் இங்கு இல்லை.
ஆனால் இதற்கு மாறாக பல்வான் கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மராத்வாடாவின் 100 ஏக்கர் நிலங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
28 வயதாகும் விஷ்ணு பக்லானியின் வார்த்தைகளில் அது பிரதிபலிக்கிறது. தொலைதூரம், அருகமை என பல்வேறு கிராமங்களில் இருந்து கால்நடைகளுடன் இலவச முகாம்களுக்கு வந்துள்ள நூற்றுக்கணக்கானவர்களில் அவரும் ஒருவர். இலவச மதிய உணவு, கால்நடைகளுக்கான இலவச கொட்டகைகள், நீர், தீவனம் வழங்கப்படுவதால் ஈர்க்கப்பட்டு அவர்கள் இங்கு வந்துள்ளனர். தொடர் வறட்சியால் விளைநிலங்கள் தரிசாகிவிட்டதால் அரசின் உதவியில் இயங்கும் அரசு சாரா அமைப்பினால் இவை அனைத்தும் வழங்கப்படுகிறது.
“மனம் தளரக் கூடாது என எனக்கு நானே பல முறை சொல்லிக் கொள்கிறேன்,” என்றபடி விஷ்ணு 45 டிகிரி வெப்பநிலையில் தனது 20 கால்நடைகளில் ஒன்றின் மீது ஒரு குவளை தண்ணீரை தெளிக்கிறார்.
இந்த மழைக்காலம் நன்றாக மழை பொழியும் என அவர் நம்புகிறார்.
மராத்வாடாவில் நான்காவது ஆண்டாக மழை பொய்த்த காரணத்தால், விஷ்ணுவும், அவரது 64 வயது தந்தை ரகுநாத் பக்லானியும் செப்டம்பர் மாதத்திலிருந்து இங்கு தங்கியுள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை காந்லடைகளை அவரது மகன் மேய்க்கிறான். இரவு உணவிற்கு பிறகு மாட்டு தொழுவத்தில் தங்கி அவர்கள் இரவை கழிக்கின்றனர்.
ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள காகாதீரில் இருந்து அவர்கள் வீட்டுப் பெண்கள் குழந்தைகளுடன் அடிக்கடி முகாமிற்கு வருகின்றனர். சில நேரங்களில், நெருங்கிய உறவினர்களும் வந்து செல்கின்றனர்.
சரா சாவோனிகளின் நெடிய வரலாறு
கால்நடை முகாம்கள் அல்லது சரா சாவோனிக்கு மகாராஷ்டிரா, கர்நாடகாவில் நெடிய வரலாறு உள்ளது. இது 17ஆம் நூற்றாண்டில் ஷிவாஜி ஆட்சியில் வறட்சி காலத்தில் குறுகிய கால நடவடிக்கையாக தொடங்கப்பட்டது. இது மகாராஷ்டிராவில், குறிப்பாக வறண்ட மத்திய, மேற்கு பகுதிகளில் 2011ஆம் ஆண்டு முதல் கோடைகால காட்சியாக மாறிவிட்டது.
கடந்த ஆண்டு தான் முதன்முறையாக குளிர்காலம், புத்தாண்டு என இந்த கோடை காலம் வரை முகாம் தொடர்கிறது.
சமூக அமைப்புகள், சர்க்கரை ஆலைகள் வறட்சியால் வறண்ட விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து இந்த முகாம்களை அமைத்து, மாநில அரசு அல்லது நல்லெண்ண நோக்கம் கொண்ட அரசியல் கட்சிகளின் உதவியுடன் நடத்துகின்றன.
மராத்வாடாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட லத்தூர், உஸ்மானாபாத், பீட் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்படும் 350 கால்நடை முகாம்களில் சுமார் 250000 கால்நடைகள் தங்க வைக்கப்பட்டுள்ளன. சிறிதும், பெரிதுமாக பீடில் 265 முகாம்களும், உஸ்மானாபாத்தில் 80 முகாம்களும், லத்தூரில் ஒரு முகாமும் அமைக்கப்பட்டுள்ளன.
பீட் நகரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்வான் முகாமில் 32 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300 விவசாயிகளின் 5000 சிறிய, மற்றும் பெரிய கால்நடைகள் தங்கவைக்கப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசியவாத காங்கிரசிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த உள்ளூர் அரசியல்வாதி விநாயக் மேதியின் உதவியாளர் ராஜேந்திரா மஸ்கேவின் யஷ்வந்த் பஹூத்தேஷியா சேவாபவி அமைப்பினால் இந்த பல்நோக்கு முகாம் நடத்தப்படுகிறது.
65 பணியாளர்களுடன் முகாம் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. அங்கு தங்கியுள்ள விஷ்ணு போன்றோருக்கு அடையாள அட்டை, தினசரி கூப்பன், கொட்டகையில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தீவன ஒதுக்கீடு போன்றவை அளிக்கப்படுகின்றன. முகாமில் தீவனம் வழங்கும் போது ஒவ்வொரு விவசாயிக்கும் வரிசை எண் அளிக்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசல், குழப்பம் தவிர்க்கப்படுகிறது.
கால்நடை உரிமையாளர்கள் சிலர் தங்கள் கிராமங்களுக்கும், முகாமுக்கும் இடையே அலைந்து திரிகிறார்கள்; மற்றவர்கள் மாட்டுத் தொழுவங்களிலும், கூடாரங்களிலும் படுத்து உறங்குகின்றனர்.
60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிக்கல்பேட்டில் இருந்து தனது கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் நான்கு பசு மாடுகளுடன் சவிதா முண்டே ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தார். கணவர் சச்சின் முகாமில் வேலை செய்யும் போது அவர் கால்நடைகளை மேய்க்கிறார். "பருவமழை தொடங்கும் வரை நாங்கள் இங்கு இருப்போம்", என்று அவர் கடந்த மாதம் கூறினார். (மராத்வாடாவில் இப்போது பருவமழை தொடங்கிவிட்டது.)
கிராமத்தைப் போன்று முகாமிலும் ஒரு சமூக சூழல் உருவாகிவிட்டது. இங்கு தங்கியுள்ள குடும்பங்களில் 50 தம்பதிகளுக்கு அண்மையில் ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.
கவலைகளும், சவால்களும்
பெரிய விலங்கிற்கு ரூ.63, சிறிய விலங்கிற்கு ரூ.30 என அரசின் சார்பில் நாள் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் முகாம் கண்காணிப்பாளர் சதிஷ் ஷெல்கி இந்த மிக குறைவு என்கிறார்.
“எங்கள் சொந்த பணத்தை செலவிட வேண்டும்,” எனும் அவர், “மோசமான காலத்தில் மக்களுடன் நின்றால், அவர்கள் உங்களுடன் நிற்பார்கள்,” என்றார்.
கோடைகாலத்தில் தண்ணீர் மற்றும் தீவனத்தை (கரும்பு மற்றும் பச்சிலைகள்) தேடுவது ஷெல்கியின் மிகப்பெரும் சவால்.
“தினமும் எங்களுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. 12,000 லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரு தண்ணீர் லாரிக்கு ரூ.1500, தர வேண்டும்,” என்கிறார் அவர். எனவே தினமும் 25 தண்ணீர் லாரிகளுக்கு ரூ. 37,500 முகாம் சார்பில் செலவிடப்படுகிறது.
தீவனச் செலவுடன் 400 பேருக்கு இலவச மதிய உணவு, பிற செலவுகள், என மாதாந்திர செலவு பல கோடி ரூபாய் ஆகிறது என்கிறார் அவர். “பெரும்பாலான செலவை எங்கள் சொந்த தொழில், நன்கொடைகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு செய்கிறோம்.”
சதாரா, கோலாப்பூர், அகமதுநகரிலிருந்து கரும்புகளையும், பிற மாநிலங்களில் இருந்து பச்சிலை உணவுகளையும் பல்வான் முகாம் கொண்டு வருகிறது.
“இந்தாண்டு மிகவும் மோசம், எங்கும் தீவனம் கிடைக்கவில்லை,” என்கிறார் 67 வயது விநியோகஸ்தர் ஸ்ரீமந்த் பாபு குர்சலே. “சர்க்கரை ஆலைகள் தங்கள் கரும்புகளை விவசாயிகள் எங்களுக்கு வெட்டி விற்க அனுமதிக்கவில்லை, இதனால் அடுத்த ஆண்டு கரும்பு உற்பத்தி பாதிக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.”
அவர் சொல்கிறார், “தீவனங்களை தொலை தூரம் சென்று வாங்கினால் செலவும் அதிகரிக்கும். போக்குவரத்து செலவுடன், சேதங்களும் சேர்ந்து கொள்ளும்.”
2012-13 ஆண்டு மகாராஷ்டிராவின் மராத்வாடா மற்றும் மேற்கு பகுதிகளில் லட்சக்கணக்கான கால்நடைகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டன. இந்தாண்டு முகாம்களை மூன்று மாவட்டங்களுடன் சுருக்கிக் கொண்டதாக ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகளும், கூட்டணி கட்சியான சிவசேனாவும் விமர்சித்து வருகின்றன.
பல கால்நடை முகாம்களை அரசு ஆதரிக்க மறுக்கிறது. கடந்த காலங்களில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள், மோசமான நிர்வாகம் போன்றவையும் இதற்கு காரணம்.
பல இடங்களில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பல்வானிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லத்தூர் மாவட்டம் அம்பேத்வாலியில் விலை உயர்ந்த தேவ்னி பசுவினங்களை வளர்த்து வியாபாரிகளில் பாபா ஜாதவும் ஒருவர். கால்நடை வளர்ப்பிற்காக பல விருதுகளைப் பெற்றுள்ள 45 வயதாகும் அவரால் இந்தாண்டு தனது பசுக்களுக்கு உணவளிக்க முடியவில்லை. புனேவில் உள்ள தனது நண்பருக்கு அவர் சுமார் ஒரு டஜன் பசுக்களை விற்றுள்ளார்.
நான் ஆண்டுதோறும் டஜன் கணக்கான பசுக்கள், எருமைகளை நல்ல விலைக்கு விற்பேன். இந்தாண்டு வறட்சி இரண்டு ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்[கன்று ஈன்றெடுக்க ஆகும் காலம்], என்கிறார் ஜாதவ்.
ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்களில் மட்டும் அவரது கிராமத்தில் பாதியளவு கால்நடைகள் கிடைத்த விலைக்கு விற்கப்பட்டுள்ளன, பிற மாநில விவசாயிகளிடம் சில விற்கப்பட்டுள்ளன.
கோடை, குளிர்கால பயிர்கள் விளைச்சலின்றி போன போது தனது 10 பசுக்கள், இரண்டு எருதுகள், எட்டு எருமைகளை பாதுகாத்த பல்வான் முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கடன்பட்டுள்ளதாக கூறுகிறார் விஷ்ணு.
இளம் விவசாயிகள் ஏற்கனவே பல வறட்சிகளை கண்டுவிட்டனர். இது கடைசி அல்ல என்பதும் அவர்களுக்குத் தெரியும். இத்தருணம் கால்நடைகளை காப்பதே அவர்களின் இலட்சியம்.
“கால்நடைகளை இன்று காப்போம்,” எனும் அவர், “அது எதிர்காலத்திற்கு உதவும்” என்றார்.
இக்கட்டுரை முதலில் தி டெலிகிராமில் 2016, ஜூன் 21ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தமிழில்: சவிதா