"உண்மையில் ஒரு கலை வடிவத்தின் மீது உங்களால் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த முடியுமா?" என்று மணிமாறன் கேட்கிறார். சில நிமிட அமைதிக்குப் பின்னர், "நாங்கள் இந்த வாரம் வங்கதேசத்தில் இருந்திருக்க வேண்டும்", என்று அவர் கூறினார். "செல்ல இருந்த எங்கள் 12 பேருக்குமே இது ஒரு மிகப்பெரிய தருணமாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு பதிலாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாங்கள் செய்யவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டது". ஆனால் 45 வயதான பறை இசைக் கலைஞரும் ஆசிரியருமான -தமிழ்நாட்டில் மிகச்சிறந்த பறை இசை கலைஞர்களில் ஒருவரான - இவரால் சும்மா இருக்க முடியவில்லை.

அதனால் மணிமாறனும் அவரது மனைவி மகிழினியும் ஊரடங்கு நேரத்திலும் தொடர்ந்து கலையாடல் செய்துவருகின்றனர் - முகநூல் வாயிலாக நேரலையாகவோ அல்லது யூடியூப் வாயிலாக பதிவு செய்யப்பட்ட காணொளியின் மூலமாகவோ தினமும் இதனைச் செய்து வருகின்றனர்.

கோவிட் 19 அவரது குழுவின் 2 மாத திட்டங்களை நாசம் செய்து இருந்தாலும், - மணிமாறன் எப்போதும் போலவே - இந்த வைரஸ் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடலைக் கொண்டு வந்துள்ளார். ஒரு கலைஞரால் எழுதப்பட்டு அதை அவரது மனைவி மகிழினி பாடியுள்ளார் மேலும் அவருடன் சுப்பிரமணியன் மற்றும் ஆனந்த் ஆகியோரும் பின்னணியில் பாடியுள்ளனர், இந்தப் பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. "துபாயில் உள்ள ஒரு வானொலி நிலையம், இப்பாடலை தேர்ந்தெடுத்து அவர்களது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளது".

காணொளியில் காண்க: கொரோனா பாடல்

தமிழ்நாட்டில் மிகவும் வெற்றிகரமான நாட்டுப்புறக் குழுக்களில் ஒன்றான புத்தர் கலைக்குழுவை (புத்தர் கலைக் குழு 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டது) நடத்தி வருகின்ற மணிமாறன் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான ஆர்வமுள்ள மக்களுக்கு பறையிசை பயிற்சி அளித்து வருகிறார், பறை முன்னொரு காலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே இசைக்கப்பட்டது மற்றும் இறுதிச் சடங்கில் மட்டுமே இசைக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று, மணிமாறன் போன்ற கலைஞர்கள் அதனை மீட்டெடுக்க முயற்சி செய்ததில், பறை ஒரு கருவியாக மட்டுமல்லாமல் விடுதலையின் கலை வடிவமாகவும் பார்க்கப்படுகிறது.

"இருப்பினும், இறுதி சடங்குகளில் இன்றும் பறை இசைக்கப்படுகிறது, ஆனால் அவர்கள் கலைஞர்களாக அங்கீகரிக்கப்படாதவர்கள். தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது கூட நாட்டுப்புற கலையில் பறை இசையினை ஒரு கலை வடிவமாக அரிதாகவே அங்கீகரிக்கிறது", என்று கலைஞர்கள் புகார் கூறுகின்றனர். ஆனால் மணிமாறன் தொடர்ந்து பறை இசையினை, வாராந்திர வகுப்புகள் மற்றும் வருடாந்திர முகாம்களை தொடர்ந்து நடத்தி இச்சமூகத்தின் தீண்டாமை மற்றும் அலட்சியத்தையும் தாண்டி பறை இசையினை முன்னெடுத்துச் செல்கிறார். இவர்கள், இந்த தாள கருவியின் உற்சாகமான சுறுசுறுப்பான வடிவத்தை கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ள அனைத்து தரப்பு மக்களையும் மாணவர்களாக ஈர்த்து இருக்கின்றனர். அவர்கள் இதன் அரசியலையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். ஊரடங்கு நேரத்தில் நிச்சயமாக அவர்களது பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்களைப் பரப்பும் ஒரு சில கானா பாடல்களை கண்ட பிறகு வைரஸை பற்றிய இந்த பாடலை அவர் எழுதியதாக மணிமாறன் கூறுகிறார். "சில கலைஞர்கள் தாங்கள் செவி வழி கேட்ட விஷயங்களின் மூலம் தவறாக வழி நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. உதாரணத்திற்கு கொரோனா வைரஸ் அசைவ உணவுகளின் மூலம் பரவுகிறது என்ற குற்றச்சாட்டு. ஆனால் அசைவ உணவிற்கு எதிராக ஏற்கனவே ஒரு வலுவான அரசியல் நடந்து கொண்டிருக்கும் போது கொரோனாவை பயன்படுத்தி அதனை மேலும் முன்னெடுத்துச் செல்வது சரியாக இருக்காது. அதனால் தான் நாங்கள் இந்த பாடலை கொண்டு வரவேண்டியிருந்தது".

இதைத்தாண்டி, மணிமாறன் எப்போதுமே நெருக்கடியான நேரத்தில் முதலில் குரல் கொடுக்கும் கலைஞராகவே இருந்துள்ளார். "நான் கலை ஒரு அரசியல் என்று நம்புகிறேன். ஒரு கலைஞனுக்கு தான் சார்ந்த சமூகத்தில் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதற்கு ஏற்றவாறு கலையாடல் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன். நாட்டுப்புற மற்றும் கானா கலைஞர்கள் இதனை செய்துள்ளனர், நெருக்கடியான பல நேரங்களில் அவர்கள் தங்களது கலை சார்ந்த பங்களிப்பினை செய்துள்ளனர். தவறான தகவலுக்கு பதில் அளிக்கும் விதமாக இருப்பதையும் தாண்டி எங்களது கொரோனா பாடல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது", என்று கூறுகிறார்.

2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு பின்னரும் மற்றும் 2018 ஆம் ஆண்டு தமிழகத்தின் பல மாவட்டங் களை பேரழிவுக்கு உட்படுத்திய கஜா புயலின் போதும், மணிமாறன் பாடல்களையும், நிகழ்ச்சிகளையும் கொண்டு வந்து வேதனைக்குள்ளானவர்களுக்கு ஆறுதல் அளித்தார்." நாட்டுப்புற கலை என்பது அடிப்படையில் மக்களின் கலை வடிவம். ஒரு பேரழிவு மக்களைத் தாக்கும் போது அவர்களுடன் சேர்ந்து நிற்க வேண்டியது நமது கடமை. நாங்கள் பணத்தை நன்கொடை அளிக்கும் நிலையில் இல்லை, எனவே மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எங்களது கலையை பயன்படுத்துகிறோம்", என்று மகிழினி தாங்கள் சமீபத்தில் உருவாக்கிய கொரோனா பாடல் பற்றி கூறுகிறார்.

PHOTO • M. Palani Kumar

2018 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புத்தர் கலைக்குழு கலையாடல் நிகழ்த்திய கோப்பு படங்கள். அவர்களின் நிகழ்ச்சிகளும், பாடல்களும் மீண்டவர்களுக்கு ஆறுதல் அளித்தன.

இது அவர்கள் கஜா புயலுக்கு பின்னர் செய்ததைப் போலவே சில வகையில் இருக்கிறது. மணிமாறனும் அவரது குழுவும் கஜா புயல் பாதித்த பகுதிகளை குறிப்பாக காவிரி டெல்டா பகுதியில் உள்ள மக்களை பார்வையிட்டனர் மேலும் அவர்கள் பறை இசைத்து மக்களை கவர்ந்தனர். மேலும் அவர்கள் தொடர்ந்து பறை இசைத்து மக்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய பாடல்களையும் பாடினார். "கூட்டத்திலிருந்து ஒரு நபர் எழுந்து வந்து என்னிடம், 'அனைவரும் பிஸ்கட் மற்றும் பிற பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினர். ஆனால் நீங்கள் தான் எங்களது ஆத்மாவில் உழன்று கொண்டிருந்த பயத்தை போக்கினீர்கள் என்று கூறினார்', என்னால் அதை மறக்கவே முடியாது. கலைஞர்களாகிய எங்களுக்கு வேறு என்ன வேண்டும்?", என்று மணிமாறன் கேட்கிறார்.

இப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் வட்டத்தில் இருக்கும் தேனூர் கிராமத்தில் தங்கியுள்ள இத்தம்பதியினர் ஒவ்வொரு நாளும் முகநூல் நேரலையில் கலையாடல் செய்து அல்லது கோவிட் 19 மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். "நாங்கள் இந்த நிகழ்ச்சியினை கொரோனா கும்பிடு என்று அழைக்கிறோம். இதனை ஊரடங்கு ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கினோம் ஊரடங்கும் முடியும் வரை இதனை தொடர்ந்து செய்ய திட்டமிட்டுள்ளோம்".

இந்த தொடர் நிகழ்ச்சியின் முதல் நாள் இந்த புதிய பாடலை தவிர கொரோனா வைரஸ் தாக்கி இருக்கும் இந்த நேரத்தில் நடைபாதையில் வாழும் மக்களின் அவலநிலை குறித்தும் மணிமாறன் பேசினார். இரண்டாவது நாள் இந்த வைரசால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியவர்களான -  முதியவர்கள் பற்றி பேசினார். மூன்றாவது நாள் குழந்தைகளை பற்றி பேசும்போது மணிமாறன் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுத்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால் எவ்வளவு நன்மைபயக்கும் என்று பேசினார். நான்காவது நாள் திருநங்கைகள் இந்த ஊரடங்கு நேரத்தில் எத்தகைய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதை குறித்தும் அவர் பேசினார்.

"நாம் இப்போது மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் அவர்களை பற்றி சிந்திக்க வேண்டும்", என்று அவர் குறிப்பிட்டார். "அதை நான் எனது முகநூல் நேரலையிலும் கூறி வருகிறேன். ஆனால் இப்போது நாம் அதை கூறும்போது கொரோனாவால் அவர்கள் சந்திக்கக்கூடிய உளவியல் நெருக்கடியை பற்றி பேசும்போது அந்த செய்தி இன்னும் சக்தி வாய்ந்த முறையில் தெரிவிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்", என்று கூறினார்.

PHOTO • M. Palani Kumar

மேல் இடது: மணிமாறன் மற்றும் மகிழினி ஆகியோர் திருவள்ளுவரின் சிலையைச் சுற்றி இருபுறமும் அமர்ந்துள்ளனர். அவர்களது குழுவும் பறையுடன் அவரது திருக்குறளை கவிதைகளாக்கி ஒரு தொடராக வழங்கி வருகிறது.

மேல் வலது: பறை கற்றுக் கொள்பவர்களுடன் இத்தம்பதியினர்.

கீழ் வரிசை: மணிமாறனும் அவரது குழுவினரும் இரவில் பறை இசைத்து நிகழ்ச்சி நடத்துகின்றனர் (கோப்புப் படம்).

பெரம்பலூரில் சில கிராமங்களில் கிராமப்புற மேம்பாட்டுக்காக பணியாற்றிவரும் அமைப்பான பயிருடன் மணிமாறன் இணைந்து குழந்தைகளுக்கான புதிய விளையாட்டுகளை உருவாக்க விரும்புகிறார், இது தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் அதேவேளையில் வலுவான சமூக விழுமியங்களையும் அவர்களிடம் வளர்த்தெடுக்கும். "அதற்கான வேலையை நாங்கள் ஏற்கனவே துவங்கிவிட்டோம், ஆனால் தற்போதைக்கு எங்களுடைய முழு கவனமும் கோவிட் 19 பற்றிய விழிப்புணர்வை எங்களது கிராமத்தில் ஏற்படுத்துவதிலேயே இருக்கிறது, ஏனெனில் இது ஒரு புது வியாதி மேலும் எங்களது மக்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. குழந்தைகளுக்கான இத்தகைய விளையாட்டுகளை உருவாக்குவதற்காக நாங்கள் விரைவில் மணிமாறன் மற்றும் மகிழினியுடன் இணைந்து பணியாற்றுவோம்", என்கிறார் பயிரின் வழிகாட்டியான ப்ரீத்தி சேவியர்.

இது குறிப்பாக இவர்களைப் போன்ற கலைஞர்களுக்கு கடுமையான நேரம் தான் என்று மணிமாறன் ஒப்புக்கொள்கிறார். நாட்டுப்புறக் கலைஞர்கள் மக்கள் எத்தகைய நெருக்கடியை சந்தித்தாலும் மக்களுடனே இருப்பர். ஆனால் இப்போது தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டிய நேரம் அதனால் ஒதுங்கி இருப்பது சற்று கடினமாக இருக்கிறது". வேலையை இழந்து நிற்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசாங்கம் சில நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். அதற்கு பதிலாக நாங்கள் சமூக ஊடகத்தில் எங்களது கலை நிகழ்சிகளை நடத்துகிறோம். பொருளாதார ரீதியாக நாட்டுப்புறக் கலைஞர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே இந்த அரசாங்கம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்", என்று அவர் ஆர்வத்துடன் கூறுகிறார்.

ஆனால் நிவாரணம் வழங்கப்பட்டாலும் வழங்கப்படவில்லை என்றாலும் மணிமாறனும் மகிழினியும் தொடர்ந்து பறை இசைப்பார்கள், பாடுவார்கள் கொரோனா வைரஸ் குறித்து ஏற்படும் அச்சங்களை தவிர்க்க ஒவ்வொரு நாளும் பாடுவார்கள். நாங்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் படி தொடர்ந்து வலியுறுத்துவோம் மேலும் வைரஸ் பரவுவதை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். கொரோனா கும்பிடு போட்டு நம்மை விட்டு வெளியேறும்போது, நாங்கள் அதை எங்கள் பறையுடன் கொண்டாடுவோம்".

கொரோனா பாடல்

தானா தனத் தந்தானா
தாண்டவம் ஆடுது கொரோனா
வீணா புரளிகள
வீசிப் பலர் வராணா
வதந்திகள் வேண்டாம்
வம்படிகள் வேண்டாம்
அலட்சியம் வேண்டாம்
அச்சப்படவும் வேண்டாம்
கொரோனா கொடுஞ்செயல
தடுத்திட வழியத்தேடு
கொரோனா வராதிருக்க
துணியால மூக்க மூடு
விழிப்புணர்வு மட்டும் தான்
கொரோனாவ தடுக்கும்
விலகி நாம இருந்தோமுன்னா
கொரோனா ஓட்டம் எடுக்கும்

அசைவம் உண்பதால
கொரோனா வருவதில்லை
சைவம் என்பதால
கொரோனா விடுவதில்லை
எல்லா நாடுகளும்
அதிர்ச்சியில இருக்கு
எப்படி வந்ததுன்னு
ஆய்வு நடந்திட்டிருக்கு
நோய் எதிர்ப்புச் சக்தி தரும்
உணவுகள உட்கொள்ளு
தற்காப்பு துணையோடு
பொய்கள உதறித்தள்ளு

இருமல் உள்ளோரிடம்
இடைவெளி வேண்டும்
தும்மல் கொண்டோரிடம்
தூரம் நிற்க வேண்டும்
காய்ச்சல் அதிகரிச்சா
கருத்தில் கொள்ள வேண்டும்
மூச்சிரைப்பு அதிகமானா
முழிச்சிக்கொள்ள வேண்டும்
எட்டு நாளா எல்லாம் இருந்தா
கொரோனாவா இருக்கும் - ஒரு
எட்டுப் போயி சிகிச்சை எடுத்தா
கொரோனாவ குறைக்கும்

தமிழில்: சோனியா போஸ்

Kavitha Muralidharan

कविता मुरलीधरन, चेन्नई की एक स्वतंत्र पत्रकार और अनुवादक हैं. वह 'इंडिया टुडे' (तमिल) की संपादक रह चुकी हैं, और उससे भी पहले वह 'द हिंदू' (तमिल) के रिपोर्टिंग सेक्शन की प्रमुख थीं. वह पारी के लिए बतौर वॉलंटियर काम करती हैं.

की अन्य स्टोरी कविता मुरलीधरन
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

की अन्य स्टोरी Soniya Bose