தங்க்காக்கள் என அழைக்கப்படும், பட்டு ஒட்டுத்துணி அல்லது பருத்தியில் வரையப்பட்ட ஓவியங்களை மீட்கும் பணி சாதாரணமானது அல்ல. “ஒரு சிறு தவறு இருந்தாலும் காதின் வடிவம் சற்று மாறினாலும், மக்கள் புண்படுவார்கள்,” என்கிறார் மாதோ கிராமத்தில் வசிக்கும் டோர்ஜேய் அங்சோக்.

“இது மிக நுணுக்கமான வேலை,” என்கிறார் லெவிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மாதோ கிராமத்தில் வசிப்பவர். அங்கு வசிக்கும் 1,165 (கணக்கெடுப்பு 2011) பேரில் கிட்டத்தட்ட அனைவரும் பவுத்த மதத்தை சேர்ந்தவர்கள்தாம்.

நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பின் சென்று, நூற்றாண்டு கால ஓவியங்களின் வடிவங்களை இனங்கண்டு, ஆராய்ந்து, புரிந்து கொள்ளும் ஒன்பது பேர் கொண்ட ஒரு தங்க்கா குழுவால், அங்சோக் போன்ற அச்சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இருக்கும் அச்சம் ஓரளவுக்கு தீர்வை கண்டிருக்கிறது. ஒவ்வொரு நூற்றாண்டும் ஒவ்வொரு வகை வடிவங்களையும் பாணியையும் உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது.

மாதோவை சேர்ந்த பெண்கள் மீட்கும் தங்க்காக்கள், 15-18ம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார் நெல்லி ரையூஃப் என்பவர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அவர், ஓவியங்களை மீட்க பெண்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார். “தொடக்கத்தில், தங்க்காக்களை மீட்கும் பணியில் பெண்கள் ஈடுபட கிராமவாசிகள் ஒப்புக் கொள்ளவில்லை,’ என்கிறார் செரிங் ஸ்பால்டன். “ஆனால் தவறொன்றும் நாங்கள் செய்யவில்லை என எங்களுக்கு தெரியும். வரலாறை மீட்கும் பணியைத்தான் நாங்கள் செய்து கொண்டிருந்தோம்.”

பவுத்த துறவியான துக்சே டோல்மா சொல்கையில், “புத்தர், லாமாக்கள் மற்றும் போதிசத்துவர்கள் ஆகியோரை பற்றி கற்பிக்கும் உத்திகள்தாம் தங்க்காக்கள்,” என்கிறார். புதிய யூனியன் பிரதேசமான லடாக்கின் கார்கில் மாவட்டத்திலுள்ள சன்ஸ்கார் தாலுகாவின் கர்ஷா மடத்தில் டோம்லா இருக்கிறார்.

Left: The Matho monastery, home to ancient thangka paintings dating back to the 14th century, is situated on an uphill road .
PHOTO • Avidha Raha
Right: Traditional Buddhist paintings from the 14-15th century on the walls of Matho monastery
PHOTO • Avidha Raha

இடது: 14ம் நூற்றாண்டின் தங்க்கா ஓவியங்களை கொண்டிருக்கும் மாதோ மடாலயம் மலைக்கு போகும் சாலையில் அமைந்திருக்கிறது. வலது: 14-15ம் நூற்றாண்டின் பாரம்பரிய பவுத்த ஓவியங்கள் மாதோ மடாலய சுவர்களில்

Left: Tsering Spaldon working on a disfigured 18th-century Thangka .
PHOTO • Avidha Raha
Right: Stanzin Ladol and Rinchen Dolma restoring two Thangkas.
PHOTO • Avidha Raha

இடது: செரிங் ஸ்பால்டன், உடைந்திருக்கும் 18ம் நூற்றாண்டின் தங்க்காவில் பணிபுரியும் செரிங் ஸ்பால்டன். வலது: ஸ்டான்சின் லடோல் மற்றும் ரிஞ்சன் டோல்மா இரண்டு தங்க்காக்களை மீட்டுக் கொண்டிருக்கின்றனர்

விவசாயக் குடும்பங்களை சேர்ந்த செரிங்கும் பிற மீட்பர்களும் இமயமலை கலை பாதுகாப்பாளர்கள் (HAP) என்ற நிறுவனத்தை சேர்ந்தவர்கள். தங்க்காக்களை மீட்பதில் திறன் பெற்றவர்கள். “வரலாற்று ஓவியங்களை மீட்பதை விட தங்க்காக்களை மீட்பது கடினம். ஏனென்றால் பட்டுத்துணி கிடைப்பது அரிது. மேலும் அது அப்பழுக்கற்ற தரத்தை கொண்டிருக்கிறது. ஓவியத்தையோ துணியையோ பாதிக்காமல் அழுக்கை மட்டும் நீரில் அகற்றுவது மிகவும் நுட்பமான கடினமான விஷயம்,” என்கிறார் நெல்லி.

”மாதோ மடாலயத்தில் மீட்பு பணியை நாங்கள் 2010ம் ஆண்டில் கற்றுக் கொண்டோம். 10ம் வகுப்பு முடித்து விட்டு சும்மா இருப்பதற்கு அப்பணி மேலாக இருந்தது,” என்கிறார் செரிங்.

செரிங்குடன் இருக்கும் பிற பெண்கள்: தின்லெஸ் அங்மோ, உர்கெயின் சோடோல், ஸ்டான்சின் லாடோல், குன்சாங் அங்மோ, ரின்சென் டோல்மா, இஷே டோல்மா, ஸ்டான்சின் அங்க்மோ மற்றும் சுன்சின் அங்க்மோ. அவர்களுக்கு நாளொன்றுக்கு 270 ரூபாய் கொடுக்கப்படுகிறது. “நாங்கள் வசிக்கும் தூரம் மற்றும் குறைந்த வேலைவாய்ப்பின்மையில் அது நல்ல தொகை,” என்கிறார் செரிங். காலப்போக்கில், “இந்த ஓவியங்களை மீட்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொண்டோம். பிறகு கலையையும் வரலாற்றையும் நாங்கள் இன்னுமதிகமாக மதிக்கத் தொடங்கினோம்.”

2010ம் ஆண்டு மாதோ மடாலய அருங்காட்சியகம், பாதிக்கப்பட்ட தங்க்காக்களை மீட்பதற்கு உதவியது. “தங்க்காக்களையும் பிற மதரீதியிலான சின்னங்களையும் அவசரமாக மீட்க வேண்டிய தேவை இருந்தது. இந்த மீட்புப்பணியை நாங்கள் 2010ம் ஆண்டுவாக்கில் கற்றுக் கொள்ளத் தொடங்கினோம்,” என்கிறார் செரிங். அவரும் பிறருடன் சேர்ந்து மீட்புப் பணி பயிற்சி பெற தீர்மானித்தார்.

Left: The entrance to the Himalayan Art Preservers (HAP); an organisation that specialises in restoring Thangkas .
PHOTO • Avidha Raha
Right: HAP members (from left to right) Stanzin Ladol, Kunzang Angmo, Rinchen Dolma, Tsering Spaldon and Thinles Angmo.
PHOTO • Avidha Raha

இடது: தங்க்காக்களை மீட்பதில் திறன் கொண்ட இமயமலை கலை பாதுகாப்பாளர்கள் (HAP) என்னும் நிறுவனத்தின் நுழைவாயில். வலது: HAP உறுப்பினர்கள் (இடமிருந்து வலது) ஸ்டான்சின் லடோல், குன்சாங் அங்மோ, ரின்சென் டோல்மா, செரிங் ஸ்பால்டன் மற்றும் தின்லெஸ் அங்க்மோ

Left: One of the first members of Himalayan Art Preservers (HAP), Tsering Spaldon,  restoring a 17th century old Thangka painting.
PHOTO • Avidha Raha
Right: Kunzang Angmo is nearly done working on an old Thangka
PHOTO • Avidha Raha

இடது: இமயமலை கலை பாதுகாப்பாளர்களின் முதல் உறுப்பினர்களில் ஒருவரான செரிங் ஸ்பால்டன், 17ம் நூற்றாண்டு தங்க்காவை மீட்கும் பணியில் இருக்கிறார். வலது: குன்சாங் அங்மோ, ஒரு பழைய தங்க்காவை மீட்கும் பணியை முடிக்கும் தறுவாயில் இருக்கிறார்

தங்க்காவை பழுது நீக்குவதற்கு ஆகும் நேரம் அதன் அளவை சார்ந்த விஷயம். சில நாட்கள் தொடங்கி சில மாதங்கள் வரை ஆகலாம். “பனியால் துணி பாழ்படும் என்பதால் குளிர்காலத்தில் மட்டும்தான் தங்க்கா மீட்புப்பணியை நாங்கள் நிறுத்துவோம்.”

பணிகள் பற்றிய பார்வைக் கையேட்டை ஸ்டான்சின் லடோல் திறக்கிறார். இரண்டு படங்கள் ஒவ்வொரு பக்கத்தின் இரு பக்கங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன. முதல் படம் மீட்புக்கு முன் எடுக்கப்பட்டது, இரண்டாம் படம் மீட்புப்பணி முடிக்கப்பட்ட பிறகு எடுத்தது.

”இப்பணியை செய்யக் கற்றுக் கொண்டதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. நாங்கள் செய்வதற்கான வித்தியாசமான தொழிலை இது வழங்கியிருக்கிறது. நாங்கள் அனைவரும் திருமணமானவர்கள். குழந்தைகள் அவர்களின் வேலையை பார்த்துக் கொள்வதால், பெருமளவு நேரத்தை நாங்கள் மீட்புப் பணிக்கு செலவழிக்கிறோம்,” என்கிறார் தின்லெஸ் இரவுணவுக்கு காய்கறிகளை வெட்டிக் கொண்டே.

“அதிகாலை 5 மணிக்கு எழுவோம். எல்லா வீட்டு வேலையையும் விவசாய வேலையையும் முடிக்க முயற்சிப்போம்,” என்கிறார் தின்லெஸ். அவருடன் பணிபுரிபவரான செரிங் இடைமறித்து, “தன்னிறைவு கொள்ள எங்களுக்கு விவசாய வேலை மிகவும் முக்கியமானது,” என்கிறார்.

பெண்களுக்கு நிறைய வேலைகள். “நாங்கள்தான் மாடுகளில் பால் கறப்போம். சமைப்போம். குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவோம். பிறகு மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் பிறகு நாங்கள் HAP-க்கு வந்து வேலையைத் தொடங்குவோம்,” என்கிறார் தின்லெஸ்.

Left: Before and after pictures of a restored Thangka.
PHOTO • Avidha Raha
Right:  A part of the workshop where raw materials for the paintings are stored. Also seen are photographs from HAP’s earlier exhibitions
PHOTO • Avidha Raha

இடது: தங்க்கா மீட்கப்படுவதற்கு முன்னும் மீட்கப்பட்டதற்கு பின்னுமான படங்கள். வலது: ஓவியங்களுக்கான பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் பட்டறைப் பகுதி. HAP-ன் முந்தைய கண்காட்சிகளில் வைக்கப்பட்ட படங்களும் இருக்கின்றன

During a tea break, Urgain Chodol and Tsering Spaldon are joined by visitors interested in Thangka restoration work, while Thinles Angmo prepares lunch with vegetables from her farm.
PHOTO • Avidha Raha

தேநீர் இடைவேளையில் உர்கெயின் சடோல் மற்றும் செரிங் ஸ்பால்டன் ஆகியோருடன் ஆர்வம் கொண்ட பார்வையாளர்களும் இணைந்திருக்க, நிலத்தில் எடுக்கப்பட்ட காய்கறிகளுடன் தின்லெஸ் அங்க்மோ மதிய உணவை தயாரித்துக் கொண்டிருக்கிறார்

கிட்டத்தட்ட எல்லா நிதியும் புதிய தங்க்காக்கள் செய்யவே பயன்படுகிறது என்கின்றனர் மீட்புப்பணியில் இருப்பவர்கள். “இன்றைய மக்களில் பெரும்பாலானோர் பல நூற்றாண்டு கால தங்க்காக்கள் பற்றிய பாரம்பரியப் பெருமையை உணர்ந்திருப்பதில்லை. மீட்பதற்கு பதிலாக அவற்றை பொருட்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர்,” என்கிறார் பவுத்த அறிஞரான டாக்டர் சோனம் வாங்சோக். லெவில் இருக்கும் இமாலய பண்பாட்டு பாரம்பரிய அறக்கட்டளையை நிறுவியவர் அவர்.

“தற்போது யாரும் எங்களிடம் எதுவும் சொல்வதில்லை. ஏனெனில் பல வருடங்கள் ஓடிவிட்டன. இதை தொடர்ந்து நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்,” என்கிறார் செரிங் கிராமத்தில் தொடக்ககாலத்தில் எதிர்கொண்ட சிறு எதிர்ப்பை குறித்து. “இப்பணியை செய்யும் ஆண்கள் மிகக் குறைவு,” எனச் சுட்டிக் காட்டுகிறார் நூர் ஜஹான். லெவின் ஷெஸ்ரிக் லடாக் என்ற கலைப் பட்டறையின் நிறுவனர் அவர். “இங்கு லடாக்கில் பெரும்பாலும் பெண்கள்தான் கலை மீட்கும் பணியை செய்கின்றனர்.” தங்க்காக்களுடன் அவர்கள் தம் பணியை முடித்துக் கொள்ளவில்லை. சின்னங்களையும் சுவர் ஓவியங்களையும் மீட்கும் பணிக்கும் நகர்ந்திருக்கின்றனர்.

“பலரும் இங்கு வந்து எங்களின் பணியை பார்க்க நாங்கள் விரும்புகிறோம்,” என்கிறார் செரிங். மலைகளில் சூரியன் மறைகிறது. அவரும் பிறரும் விரைவில் வீடு திரும்புவார்கள். விலை அதிகமாக இருக்கும் மீட்பப் பணிக்கான மீட்புப் பொருள்தான் அதிக கவலையை தருவதாக சொல்கிறார் ஸ்டான்சின் லடோல். “இப்பணியில் லாபம் பெரிதாக கிடைக்கிறது என்பதாலெல்லாம் இப்பணியை நாங்கள் முக்கியமாக கருதவில்லை. இதைச் செய்வதால் எங்களுக்கு திருப்தி கிடைக்கிறது.”

புராதன ஓவியங்களை மீட்கும் திறனை தாண்டிய விஷயத்தை இப்பணி அவர்களுக்கு கொடுத்திருக்கிறது. அதிக நம்பிக்கை. “நாங்கள் தொடர்பு கொள்ளும் பாணியையும் மெல்ல இது மாற்றியிருக்கிறது. முன்பு, நாங்கள் லடாக்கி மொழி மட்டும்தான் பேசுவோம்,” என்கிறார் செரிங் புன்னகையோடு. “இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளையும் கற்றுக் கொண்டிருக்கிறோம்.”

தமிழில் : ராஜசங்கீதன்

Avidha Raha

Avidha Raha is a photojournalist interested in gender, history and sustainable ecologies.

Other stories by Avidha Raha
Editor : Vishaka George

Vishaka George is Senior Editor at PARI. She reports on livelihoods and environmental issues. Vishaka heads PARI's Social Media functions and works in the Education team to take PARI's stories into the classroom and get students to document issues around them.

Other stories by Vishaka George
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan