லுகோர் கோதா நுகுனிபா,
பதோத் நங்கோல் நச்சாச்சிபா
(மக்கள் சொல்வதை கேட்காதே,
சாலையோரத்தில் ஏரை மென்மையாக்காதே)
அஸ்ஸாமிய மொழியில் சொல்லப்படும் இந்த முதுமொழி, வேலையில் கவனம் கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்படுவது.
விவசாயிகளுக்கு ஏர் செய்து தரும் மரக் கைவினைக் கலைஞரான ஹனிஃப் அலி, விவசாயக் கருவிகள் செய்யும் தனக்கும் அந்த முதுமொழி பொருந்தும் என்கிறார். மத்திய அஸ்ஸாமின் டர்ராங் மாவட்டத்தில் அவரை சுற்றியிருக்கும் நிலத்தின் மூன்றில் இரண்டு பகுதியில் விவசாயம் நடக்கிறது. இந்த மூத்த கைவினைஞர் பல விவசாயக் கருவிகளை கொண்டிருக்கிறார்.
“ நங்கோல் (ஏர்), சோங்கோ (மூங்கில் ஏணி), ஜுவால் (நுகம்), ஹாத் நைங்க்ளே (மண் வெட்டி), நைங்க்ளே (மண் வாரி), தேகி (கால் மிதி), ஹார்பாத் (ஒரு மூங்கில் கழியில் இணைக்கப்பட்ட அரைவட்ட மரக் கருவி) போன்றவற்றை நான் தயாரிக்கிறேன்,” என்கிறார் அவர்.
காதொல் என உள்ளூர் வங்காள வட்டார வழக்கில் குறிப்பிடப்படும் பலாமரத்தைதான அவர் விரும்புகிறார். கதவுகள், ஜன்னல்கள் மற்றும் படுக்கைகள் செய்ய அம்மரம் பயன்படுகிறது. அவர் வாங்கும் மரத்தை வீணடிக்க முடியாதென்பதால், ஒவ்வொரு கட்டையிலும் முடிந்த அளவுக்கான கருவிகளை செய்கிறார்.
ஏர் முக்கியமான கருவி. “மரக்கட்டையின் எப்பகுதியையும் விட்டுவிட என்னால் முடியாது. விட்டால், மொத்தமும் போவிடும்,” என்கிறார் அவர், ரூ.250-300 வரை நஷ்டம் ஏற்படுமென.
வீட்டில் எருதுகள் கொண்ட விளிம்புநிலை விவசாயிகள்தான் அவரது வாடிக்கையாளர்கள். பல பயிர்களை விளைவிப்பவர்கள் அவர்கள். காலிஃபிளவர், முட்டைக்கோஸ், பட்டாணி, மிளகாய், சுரைக்காய், பூசணி, தக்காள், வெள்ளரி மற்றும் கடுகு, நெல் போன்றவற்றை விளைவிப்பவர்கள்.
“ஏர் வேண்டுமென விரும்புபவர்கள் என்னிடம் வருவார்கள்,” என்கிறார் அறுபது வயதுகளில் இருக்கும் அவர். “15-10 வருடங்களுக்கு முன், இப்பகுதியில் இரண்டு ட்ராக்டர்கள்தான் இருந்தன. மக்கள் விவசாயத்துக்கு ஏர்களைதான் நம்பியிருந்தனர்,” என்கிறார் அவர்.
இன்னும் மர ஏர் பயன்படுத்தும் விவசாயிகளில் ஒருவர், அறுபது வயது முகாத் தாஸ். “தேவைப்படும்போதெல்லாம் எனது ஏரை பழுது பார்க்க நான் ஹனிஃப்ஃபிடம்தான் செல்கிறேன். சேதங்களை அவர்தான் முறையாக சரி செய்வார். அப்பாவை போலவே அவரும் நன்றாக ஏர்களை செய்வார்.”
வேறு தொழில் செய்வாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்கிறார் அலி. “எருதுகளின் விலை அதிகரித்து விட்டது. விவசாயத்துக்கு தொழிலாளர்களும் எளிதாக கிடைப்பதில்லை. மேலும் ட்ராக்டரை விட ஏரில் உழுவது அதிக நேரம் எடுக்கிறது,” என அவர், மின்சார பொறிகள் மற்றும் ட்ராக்டர்களுக்கு ஏன் மக்கள் மாறினார்கள் என விளக்குகிறார்.
*****
ஹனிஃப், ஓர் இரண்டாம் தலைமுறை கைவினைக் கலைஞர். பால்ய காலத்தில் அவர் அக்கலையைக் கற்றுக் கொண்டார். “சில நாட்களுக்குதான் நான் பள்ளிக்கு சென்றேன். என் தாயோ தந்தையோ கல்வியில் ஆர்வம் காட்டவில்லை. என்னையும் அனுப்பவில்லை,” என்கிறார் அவர்.
பிரபலமான கைவினைக் கலைஞரான அவரது தந்தை ஹோலு ஷேக்குக்கு இளம்வயதிலிருந்து அவர் உதவத் தொடங்கி விட்டார். “கிராமத்தில் உள்ள அனைவருக்கும் என் தந்தை ஏர்கள் செய்வார். அனைவரும் எங்களின் வீட்டுக்கு வந்து, ஏர்களை பழுது பார்ப்பார்கள்.”
அவர் உதவத் தொடங்கிய பிறகு, அவரின் தந்தை இடங்களை குறிப்பார். ஏரை எந்த இடரும் இன்றி செய்ய உதவுபவை அந்த அடையாளங்கள். “எந்த இடங்களில் துளையிட வேண்டுமென சரியாக தெரிய வேண்டும். சரியான கோணத்தில் முரிகாத்துடன் (ஏரின் பிரதான பகுதி) பொருத்தப்படும் இடமும் தெரிய வேண்டும்,” என்கிறார் ஹனிஃப், தான் வேலை பார்க்கும் மரக் கட்டை மீது கையை வைத்து தடவியபடி.
ஏர் ரொம்ப வளைவாக இருந்தால், யாரும் வாங்க மாட்டார்கள். ஏனெனில், மண் உள்ளே புகுந்து விடும். இடைவெளி உருவாகி வேலை தாமதப்படும்.
அவர் நம்பிக்கை பெற ஒரு வருடம் பிடித்தது. பிறகு தந்தையிடம், “எங்கே அடையாளமிடுவது என எனக்கு தெரியும். இனி கவலைப்படாதீர்கள்,” என்றார்.
’ஹோலு மிஸ்திரி’ என அழைக்கப்படும் தந்தையுடன் அவரும் செல்ல ஆரம்பித்தார். அவரின் தந்தை கடையும் பார்த்துக் கொள்வார், ஏர் உள்ளிட்ட மர வேலைகளையும் செய்வார். தோள்களில் ஒரு குச்சியில் கருவிகளை சுமந்து கொண்டு வீடு வீடாக இருவரும் சென்று விற்றதை அவர் நினைவுகூருகிறார்.
சில வருடங்கள் பணிபுரிந்தபிறகு, தந்தைக்கு வயது முதிர்ந்ததும், ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் ஒரே மகனாக இருக்கும் ஹனிஃப் மீது, சகோதரிகளை மணம் முடித்து வைக்கும் பொறுப்பு விழுந்தது. “அனைவருக்கும் எங்களின் வீடு ஏற்கனவே தெரியும். தந்தையால் எல்லா வேலைகளையும் செய்து கொடுக்க முடியாததால், நான் ஏர்கள் செய்ய ஆரம்பித்தேன்.”
அது நடந்து நாற்பது வருடங்கள் உருண்டோடி விட்டன. இன்று, ஹனிஃப் தனியாக வாழ்க்கிறார். அவரின் வீடும் பணியிடமும் பருவாஜ்ஹர் கிராமத்தில் மூன்றாம் எண்ணில் இருக்கும் ஓரறை மட்டும்தான். அவரைப் போன்ற வங்காள இஸ்லாமியர் பலர் வாழும் கிராமம் அது. தல்காவோன் சட்டமன்ற தொகுதிக்குள் அந்த கிராமம் வருகிறது. மூங்கில் குடிசையான அவரது ஓரறை வீட்டில் ஒரு படுக்கையும் அரிசி பாத்திரமும், கடாயும், தட்டுகளும் தம்ளரும் உள்ளிட்ட சில பாத்திரங்களும் மட்டும்தான் இருக்கின்றன.
”என் தந்தையும் நானும் செய்யும் இந்த வேலை, இப்பகுதி மக்களுக்கு மிகவும் முக்கியம்,” என்கிறார் அவர், பக்கத்தில் வசிக்கும் பல விவசாயிகளை குறிப்பிட்டு. ஐந்து குடும்பங்கள் பகிர்ந்து கொள்ளும் முற்றத்தில் அவர் அமர்ந்திருக்கிறார். அவர்களும் அவரைப் போல ஓரறை வீடுகளில்தான் வசிக்கிறார்கள். மற்ற வீடுகள் சகோதரி, இளைய மகன் மற்றும் சகோதரி மகன்களுக்கு சொந்தமானவை. நிலங்களிலும் வீடுகளிலும் அவரது சகோதரி கூலி வேலை செய்கிறார். சகோதரி மகன்கள், வேலைக்காக தெற்கு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர்.
ஹனிஃப்ஃபுக்கு ஒன்பது குழந்தைகள். யாருக்கும் இத்தொழிலில் ஆர்வம் இல்லை. “ஒரு பாரம்பரிய ஏர் எப்படி இருக்கும் என்பதை கூட இளம் தலைமுறையினால் அடையாளங்காண முடியாது,” என்கிறார் முகாத்தாஸின் சகோதரி மகனான அஃபாஜுதீன். 48 வயதாகும் அவர், ஆறு பிகா மானாவரி நில விவசாயி. 15 வருடங்களுக்கு முன்பே ஏர் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டார்.
*****
”வளைந்த கிளைகளை கொண்ட பெரிய மரங்கள் கொண்ட வீடுகளை கடந்து செல்கையில், மரத்தை வெட்ட திட்டமிருந்தால் சொல்லும்படி வீட்டுக்காரரிடம் சொல்வேன். வளைந்த உறுதியான கிளைகளை கொண்டு நல்ல ஏர்கள் தயாரிக்க முடியும் என அவர்களிடம் சொல்வேன்,” என்கிறார் அவர் உள்ளூர் மக்களுடன் கொண்டிருக்கும் பரிச்சயத்தை வெளிப்படுத்தி.
உள்ளூர் மர வ்ணிகர்களும் வளைந்த கட்டை இருந்தால் அவரை அணுகுகின்றனர். ஏழு அடி நீள மையப் பகுதியும் 3 X 2 அங்குல அகல கட்டையும் அவருக்கு தேவை. அந்தக் கட்டை சால் (குங்கிலிய மரம்), ஷிஷு (கருங்காலி மரம்), திதாசாப் (சண்பக மரம்), ஷிரிஷ் (வாகை மரம்) மற்றும் பிற மரங்களிலிருந்து அந்தக் கட்டை எடுக்கப்படலாம்.
“25-30 வருட வயது கொண்ட மரங்களாக இருந்தால்தான் அவற்றிலிருந்து செய்யப்படும் ஏர், நுகம், வாரி போன்ற கருவிகள் அதிக காலத்துக்கு தாங்கும். பெரும்பாலும் கட்டைகள், மரத்தின் மையப் பகுதி அல்லது மரக் கிளைகளிலிருந்து எடுக்கப்படும்,” என்கிறார் அவர், இரண்டு பகுதிகளாக அவர் வெட்டியிருக்கும் ஒரு கிளையைக் காட்டி
ஆகஸ்ட் மாத நடுவில் அவரை சந்தித்தபோது, ஏரின் பிரதானப் பகுதியுடன் ஒரு கட்டையைப் பொருத்திக் கொண்டிருந்தார். “ஏர் செய்வதைத் தாண்டி இரண்டு ஹூத்நைங்களே (மரக் கைவாரிகள்) செய்ய முடிந்தால், இந்தக் கட்டையிலிருந்து கூடுதலாக 400-500 ரூபாய் எனக்குக் கிடைக்கும்,” என்கிறார் அவர் 200 ரூபாய்க்கு வாங்கிய வளைந்த மரத்தைக் காட்டி.
“ஒவ்வொரு கட்டையின் எல்லா பகுதிகளையும் முடிந்தளவுக்கு நான் பயன்படுத்திவிட வேண்டும். அது மட்டுமின்றி, வடிவமும் விவசாயிகள் விரும்பும்படி இருக்க வேண்டும்,” என்கிறார் அவர். நாற்பது வருடங்களுக்கும் மேலாக இதை அவர் செய்து கொண்டிருப்பதால், பரவலாக பயன்படுத்தப்படும் ஏரின் அளவு 18 அங்குல கட்டை மற்றும் 33 நீள பிரதானப் பகுதி என தெரிந்திருக்கிறார்.
விருப்பத்திற்கேற்ற மரம் கிடைத்ததும், சூரிய உதயத்துக்கு முன்னிருந்து அவர் வேலையைத் தொடங்கி விடுகிறார். வெட்ட, வடிவமைக்க, வளைக்க தேவையான கருவிகளை பக்கத்தில் வைத்துக் கொள்வார். கோடரி, ரம்பம் போன்ற கருவிகளை வீட்டிலுள்ள மர மேடையில் அவர் வைத்திருக்கிறார்.
ரம்பத்தின் கூரில்லாத பக்கத்தை கொண்டு, கட்டையில் அடையாளங்களை ஏற்படுத்துகிறார் அவர். கையைக் கொண்டு அவர் தூரத்தை கணக்கிடுகிறார். அடையாளங்கள் போட்டதும் 30 வருட கோடரி கொண்டு அவர் மரத்தின் பக்கங்களை சீவுகிறார். “பிறகு நான் தீஷா வை (கோடரி போன்ற வெட்டுக்கருவி) பயன்படுத்தி தளத்தை சமப்படுத்துவேன்,” என்கிறார் அவர். நங்கோல் எனப்படும் ஏரில் பொருத்தி உழும் பகுதி, இரு பக்கமும் மண் எளிதில் பிரியும் வகையில் கச்சிதமான வளைவாக வெட்டப்பட வேண்டும்.
”நிலத்தை உழும் பகுதி கிட்டத்தட்ட ஆறு அங்குல அளவு இருக்கும். அதன் அகலம் முடியும் இடத்தில் 1.5-லிருந்து 2 அங்குலங்களாக குறையும்,” என்கிறார் அவர். இப்பகுதிகள் கனம் 8 அல்லது 9 அங்குலங்களாக தொடங்கி, இரண்டு அங்குலங்களாக குறைந்து முடியும் இடத்தில் கட்டையில் அறையப்படும்.
இரும்பாலான இந்த அடிப் பகுதி ஃபால் என அழைக்கப்படுகிறது. 9-12 அங்குல நீளமும் 1.5-2 அங்குல அகலமும் கொண்டு இரு முனைகளும் கூராகக் கொண்டிருக்கும். “இரு முனைகளும் கூராக இருக்கும். ஏனெனில் ஒருமுனை மழுங்கினால், இன்னொரு முனையை விவசாயி பயன்படுத்திக் கொள்ளலாம்.” வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெச்சிமாரி சந்தையிலுள்ள உள்ளுர் இரும்புக் கொல்லர்களிடமிருந்து இரும்பைப் பெறுகிறார் ஹனிஃப்.
கட்டையை சீவி வடிவத்துக்குக் கொண்டு வர குறைந்தது ஐந்து மணி நேரங்கள் வெட்டுக்கருவியை பயன்படுத்த வேண்டும். பிறகு சீவல் கருவியைக் கொண்டு அது சீவப்பட வேண்டும்.
பிரதானப் பகுதி தயாரானதும், அதை பொருத்துவதற்கான துளை துல்லியமாக போடப்பட வேண்டும். ஹனிஃப் சொல்கிறார், “ஈஷுக்கு (பிரதானப் பகுதி) அருகே துளையிடப்படுவது நல்லது. ஏனெனில் அப்போதுதான் உழும்போது அது லூசாகும். பொதுவாக அது 1.5-லிருந்து 2 அங்குல அகலம் இருக்கும்,” என.
ஏரின் உயரத்தை சரி செய்ய, ஐந்திலிருந்து ஆறு துளைகளை பிரதானப் பகுதியின் உச்சியில் இடுகிறார் ஹனிஃப். இவற்றைக் கொண்டு, விவசாயிகள் தேவைக்கேற்ப ஏரை பொருத்திக் கொள்ளலாம்.
ரம்பம் கொண்டு மரத்தை அறுப்பது செலவானதும் களைப்பை தருவதும் ஆகும் என்கிறார் ஹனிஃப். “200 ரூபாய்க்கு கட்டையை வாங்கினால், அதை வெட்டுபவருக்கு 150 ரூபாய் நான் கொடுக்க வேண்டும்.” ஏர் செய்து முடிக்க இரண்டு நாட்கள் ஆகும். அதிகபட்சமாக ஒரு ஏரை 1,200 ரூபாய்க்கு விற்க முடியும்.
நேரடியாக வந்து ஏர் வாங்குவோர் சிலர் இருக்கிறார்கள் என்றபோதும் டர்ராங் மாவட்டத்தின் இரு வாரச் சந்தைகளான லால்பூல் சந்தை மற்றும் பெச்சிமாரி சந்தை ஆகிய சந்தைகளுக்கு பயணித்து ஹனிஃப் தன் பொருட்களை விற்கிறார். “ஏர் மற்றும் இதரக் கருவிகள் வாங்க ஒரு விவசாயி 3,500 முதல் 3,700 ரூபாய் வரை செலவழிக்க வேண்டி வரும்,” என்கிறார் அவர், அதிகரித்துக்கும் விலையால் குறைந்திருக்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை சுட்டிக் காட்டி. “பாரம்பரிய உழுபாணியை ட்ராக்டர்கள் மாற்றி விட்டன.”
எனினும் ஹனிஃப் ஓய்வதாக இல்லை. அடுத்த நாள் அவர், சைக்கிளை தயார் செய்கிறார். ஏருக்கான பிரதானப் பகுதி மற்றும் பிடியை அதில் ஏற்றுகிறார். “மண்ணை ட்ராக்டர்கள் நாசம் செய்த பிறகு, ஏர் செய்பவரை நோக்கி மக்கள் திரும்ப வருவார்கள்,” என்கிறார் அவர்.
இக்கட்டுரை மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையின் மானிய ஆதரவில் எழுதப்பட்டது
தமிழில் : ராஜசங்கீதன்