கீழ்முதுகின் வலி தாளமுடியாதபோது ஹோமியோபதி மருத்துவரை சென்று தனுஜா பார்த்தார். “கால்சியம் மற்றும் இரும்புச் சத்து குறைபாடு இருப்பதாகவும் தரையிலேயே நான் உட்காரக் கூடாது என்றும் அவர் கூறினார்.”
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியான அவர், எட்டு மணி நேரம் தொடர்ந்து தரையில் அமர்ந்து பீடி சுற்றுவார். “காய்ச்சல் வருவது போலவும் பலவீனமாகவும் உணர்ந்தேன். முதுகிலும் கடுமையான வலி இருந்தது,” என்கிறார் 40 வயதுகளில் இருக்கும் அவர். “ஒரு மேஜையும் நாற்காலியும் வாங்க முடிந்தால் நன்றாக இருக்கும்,” என்கிறார்.
அது நவம்பர் மாத இறுதி. இதமான வெளிச்சம் ஹரெக்நகரிலிருக்கும் அவரது வீட்டின் கடினமான சிமெண்ட் தரையில் விழுந்து கொண்டிருந்தது. ஒரு பனையோலைப் பாயில் அமர்ந்திருந்த தனுஜா ஒன்றன்பின் ஒன்றாக பீடி சுருட்டிக் கொண்டிருந்தார். அவரது விரல்கள் சாமர்த்தியமாக பீடி இலைகளை சுருட்ட, முழங்கை நிலைத்து தோள்கள் சற்று உயர்ந்து தலை ஒரு பக்கமாக சாய்வு கொண்டது. “விரல்கள் இருக்கின்றனவே என தோன்றும் அளவுக்கு அவை மரத்துப் போய்விட்டன,” என்கிறார் அவர் வேடிக்கையாக.
பீடி இலைகள், தூசு படிந்த புகையிலை மற்றும் நூற்கண்டுகள் ஆகிய பீடி சுற்றத் தேவையான பொருட்கள் அவரைச் சுற்றிக் கிடக்கின்றன. சிறு கூரான கத்தியும் ஒரு கத்திரிக்கோலும்தான் அவரின் தொழிலுக்கான உபகரணங்கள்.
வீட்டு மளிகை வாங்கவும் சமைக்கவும் நீரெடுக்கவும் வீட்டை சுத்தப்படுத்தவும் பிற வீட்டுவேலைகள் செய்யவும் சிறிது நேரம் தனுஜா விடுப்பு எடுத்துக் கொள்வார். ஆனால் எல்லா நேரமும் அவர் செய்து முடிக்க வேண்டிய இலக்கான 500-700 பீடிகளின் எண்ணிக்கை குறைந்தால், மாத வருமானமான 3,000 ரூபாய் குறையும் என்கிற எண்ணத்துடனேயே செயல்படுகிறார்.
















