“போனமுறை நாங்க கபில் பட்டீலுக்கு வாக்களித்தோம். என்ன ஆச்சு? இன்னும்கூட இந்தக் கிராமத்தில ஆரம்ப சுகாதார நிலையம் கூட வரல. அப்பறம் இந்த ரோடுங்க. ஜெயிச்சபிறகு திரும்பி பாக்கக்கூட அவர் வரலே. அவருக்கு ஏன் மறுபடியும் ஓட்டு போடனும்? என்று கேட்கிறார் மாருதி விஷே.

38 டிகிரி வெயில் காலம். சாலைகள் கொதிக்கின்றன. மத்தியான வேளையில் டெம்ப்பரே கிராமமே வெறுமையாக இருக்கிறது. 70 வயதான விஷேயின் பக்காவான வீட்டின் முன் அறையில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் பாய்களிலும் பிளாஸ்டிக் நாற்காலிகளிலும் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த அறையின் ஒரு ஓரத்தில் அவரது ஐந்து ஏக்கர் நிலத்தில் விளைந்த அரிசி சாக்குப்பைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது.

அந்தக் குழுவில் அனைவரும் விவசாயிகளே. ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரண்டு அல்லது ஐந்து ஏக்கர்கள் நிலம் இருக்கிறது. அதில் நெல்லும் பருவகாலங்களில் விளைகிற காய்கறிகளும் உள்ளன.“ நாங்கள் இந்தமுறை யாருக்கு ஓட்டுப் போடுவது என்று உட்கார்ந்து பேசவேண்டும்” என்கிறார் 60 வயதான ரகுநாத் போயிர்.

இந்த விவாதத்தை நடத்துவதால் எந்த பயனும் இருக்காது என்கிறார் 52 வயதான மகது போயிர்.“ நாம் பிஜேபிக்கு ஐந்து வருடங்கள் கொடுத்தோம். அவர்கள் அதை வீணாக்கிவிட்டார்கள். இப்போ காங்கிரசுக்கு மறுபடியும் ஐந்து வருடங்கள் தருவோம். அவர்களும் அவற்றை வீணாக்குவார்கள். இதில எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லாருமே ஒரேமாதிரிதான்,” என்கிறார் அவர்.
People gathered at Maruti Vishe's house to discuss their poll choices
PHOTO • Jyoti Shinoli

மாருதி விஷேயின் வீட்டில் கூடிய மக்கள்

இந்த விவாதம் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஓடியது. அங்கிருந்த ஒவ்வொரு மனுசனுக்கும் தனியான சொந்தக் கருத்துகள் இருந்தன. விருப்பங்களும் பிரச்சனைகளும் இருந்தன. ஏப்ரல் 29 அன்று கூடினார்கள் அவர்கள். பிவாண்டி மக்களவை தொகுதியில் வாக்களிக்கப்போகிறவர்களும் அதில் இருந்தார்கள், தானே மாவட்டத்தில் உள்ள சகாப்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட   டெம்ப்பரே கிராமத்தின் உள்ள 1240 வாக்காளர்களில் இவர்களும் உள்ளனர்.

இந்தத் தொகுதியின் தற்போதைய உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியின் கபில் பாட்டீல். 2014 தேர்தலில்  411,070 வாக்குகளைப் பெற்றார். அவர் காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாத் பாட்டீலை தோற்கடித்தார். கபில் பாட்டீல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகத்தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவியிருந்தார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் சுரேஷ் தாவரேவை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2014 கணக்குப் படி ஏறத்தாழ 17 லட்சம் பேர்.

மகாராஷ்ட்ராவில் நான்கு கட்டமாக தேர்தல்கள் ஏப்ரல் 11 முதல் 29 வரையில் நடைபெற உள்ளன. 48 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள 87,330,484 வாக்காளர்கள் புதிய தேசிய அரசாங்கத்தை தேர்வு செய்ய உள்ளனர்.

“ விஸ்வநாத் பாட்டீல் எங்களது சாதியான குன்பியைச் சேர்ந்தவர். இதர பிற்படுத்தப்பட்ட சாதி அது. நாம் கட்டாயம் அவருக்கு ஓட்டுப் போடவேண்டும். அவர் கிராமங்களில் இறங்கி வேலை செய்கிறார். ஆனால் பிஜேபிகாரர்கள் 500,1000 ரூபாய்கள் செல்லாது என்று அறிவித்தபோது ஏழைபாழைகளை  கொன்னுபோட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கபில் பாட்டீல் என்ன செய்தார் நமக்கு? சொல்லுங்க பார்ப்போம்? என்று கேட்டார் குழுவில் உட்கார்ந்திருந்த விஷே.

Yogesh Bhoir listens to his fellows discussing politics
PHOTO • Jyoti Shinoli
Neha Vishe discusses politics
PHOTO • Jyoti Shinoli

நாம் சாதி அடிப்படையிலேயோ கட்சி அடிப்படையிலோ ஓட்டுப் போடவே கிடையாது. என்கிறார் யோகேஷ் போயிர் (இடப்புறம்) ஒரு கோயிலுக்காக லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்வதற்குப் பதிலாக ஒரு சின்ன கிராமத்தை மேம்படுத்துவதற்காக செலவு செய்யலாம்.” என்கிறார் நேகா விஷே (வலது புறம்)

நாம் சாதி. கட்சி பார்த்து வாக்களிக்கவே கூடாது. தேர்தல்ல தேர்வு செய்யப்பட்டவர் என்ன மாதிரியாக நமக்கு மத்தியில் வேலை செஞ்சிருக்கார்?  என்றுதான் பார்க்கிறார் 25 வயதான யேகேஷ் போயிர். “எதிர்த்தரப்பினர் நல்ல திட்டங்களை செய்வோம்னு நம்ம கிட்டே சொல்றாங்களா, அது நல்லதாக இருக்கும்” என்கிறார் அவர்.

விஷேயின் 30 வயதான மருமகள் நேகா சொல்கிறார்“ அரசியல் வாதிங்க சும்மா ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிறாங்க. சமுதாய வளர்ச்சியைப் பற்றி பேச மாட்டாங்க. அவுங்க ராமர்கோயில் பற்றி பேசுறாங்க. அதுல லட்சக்கணக்கான  ரூபாய்களை கோயில் மேல கொட்டுறதுக்கு அதுக்குப் பதிலா உருப்படியா ஒரு சின்னக் கிராமத்தை எடுத்து மேம்படுத்தலாம்” என்கிறார்

அவருக்குப் பக்கத்தில் இருப்பவர் ரஜ்ஜனா போயிர் தலையை அசைத்து ஆமோதிக்கிறார். “ அது தான் சரி. நம்ம கிராமத்தில நாலாம் கிளாஸ் வரைக்கும்தான் பள்ளிக்கூடம் இருக்கு. அதுக்கு மேல படிக்கனும்னா நம்ம குழந்தைங்க 3,4 கிலோ மீட்டர்கள் நடந்து பக்கத்து கிராமம் போக வேண்டியிருக்கு. போக்குவரத்துக்கான எதுவும் இங்கே கிடையாது. எங்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் கொடுங்க. ஒரு கோயில் கிடையாது”

கேட்டீங்களா? தேசிய வாத காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தா, விவசாயிகளின் கடன்கள் எல்லாத்தையும் ரத்துபண்றேன்னு சரத்பவார் சொன்னார்.அவர் விவசாய அமைச்சராக இருக்கிறப்போ கடன்களை ரத்து செய்தார். அவரு வாக்கைக் காப்பாத்துவாரு. அவருக்கு நாம ஒரு சான்ஸ் தரணும்” என்கிறார் 56 வயது விவசாயி போயிர்.
Villagers discussing upcoming elections
PHOTO • Jyoti Shinoli
Mahadu Bhoir and Jagan Mukne at their village.
PHOTO • Jyoti Shinoli

இடமிருந்து வலமாக மாருதி விஷே, மகது போயிர்,ஜெகன் முக்னே

மாருதிக்கு வீட்டுக்கு சில அடிகளுக்கு அப்பால், ஒரு தார் ரோடு  போடுவதற்கான வேலைகள் கிராம பஞ்சாயத்தால் நடைபெறுகின்றன. பஞ்சாயத்து உறுப்பினர் ஜெகன் முக்னே அதைப் பார்வையிடுகிறார். “இந்த வேலைங்க போன மாசம்தான் ஆரம்பிச்சது. எலக்ஷன் வருது இல்லையா, பிஜேபிக்கு ஏதோ கொஞ்சம் வேலைங்க நடக்குதுன்னு காட்ட வேண்டியிருக்கு. ஜெகன் கட்காரி ஆதிவாசி சமூகம். குறிப்பாக நலிவடைந்துள்ள ஆதிவாசிக்குழு என்று மத்திய அரசால் பட்டியலிடப்பட்டிருக்கிறது அது.

கடந்த ஐந்தாண்டுகளில் இங்கே இந்திரா அவாஸ் யோசனா (தற்போது பிரதம மந்திரியின் அவாஸ் யோசனா) திட்டத்தின் கீழ் ஒருவீடு கூட கட்டப்படவில்லை” என்கிறார் அவர். “ இரண்டு வருடங்களுக்கு முன்பு, நாங்க பஞ்சாயத்து மூலம் வீடு தேவைப்படுறவங்களோட லிஸ்டை  நாங்க அரசாங்கத்திட்ட கொடுத்தோம். இன்னும் அவங்க எங்களோட லிஸ்டை படிச்சுட்டுக்கிட்டு இருக்காங்க. பழைய இந்திரா அவாஸ் யோசனா மூலம் கட்டின வீடுகளை ரிப்பேர் பார்க்கறதுக்கான பணம் கூட எங்களுக்கு இன்னும் வரலே. பிஜேபிக்கு வாக்களித்ததன் மூலம் நாங்க பெரிய தப்பு பண்ணிட்டோம். தேசியவாதக் காங்கிரஸ் கட்சியாவது எங்களுக்குக் கொஞ்சம் வேலை செஞ்சது”

கூட்டத்தில் மற்றவர்கள் எல்லாம் அவரைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். “ இப்போ அவனுங்க ஓட்டுக்கு பிச்சை கேட்டு வருவானுங்க.” 30 வயதான ஜனாபாய் முக்னே கோபத்தோடு  சொன்னார்.

57 வயதான மிது முக்னே கூடியிருந்தவர்களிடம் சொன்னார்.“ இங்கே ரொம்ப சூடாக இருக்கு. என்னோட வீட்டுக்கு வாங்க.அங்கே பேசுங்க.” அரசாங்கத்துல 30 கட்காரி குடும்பங்களுக்கு இலவசமா காஸ் சிலிண்டர் கொடுத்தாங்க. அதற்குப் பிறகு நாங்க பணம் கட்டி வைச்சுக்கணுமாம். மாசம் 800 ரூபாய் கட்டுவதற்கு எங்களால எப்படி முடியும்? எங்களுக்கு விவசாய வேலைங்க ஆறுமாசம் இருக்கும். அதிகபட்சம் தினம் 150 ரூபாய் முதல் 200 வரைக்கும் கிடைக்கும். நாங்க எப்படி இதை சமாளிப்போம்? அவுங்க இதெல்லாம் யோசிக்கணும்.
Janabai Mukne at her village
PHOTO • Jyoti Shinoli
Mithu Muke at his village
PHOTO • Jyoti Shinoli

' அவங்க இப்போ ஓட்டுக்குப் பிச்சையெடுக்க வருவாங்க என்கிறார் 30 வயதான ஜனாபாய் முக்னே.

மண்ணையும் செங்கலையும் வைத்து கட்டின அவரது வீட்டில எல்லோரும் பாய்களிலும் தரையிலும் உட்கார்ந்தார்கள். எட்டு ஆண்கள். ஆறு பெண்கள் . எல்லோருமே கட்காரி ஆதிவாசிக் குழுவினர். எல்லோருமே நிலம் சொந்தமாக இல்லாத விவசாயக்கூலிகள். “ டாக்டரே இங்கே இல்லை. ஆரம்ப சுகாதார நிலையமே இல்லை. 20 கிலோமீட்டர் தள்ளி இருக்கிற சென்ட்ரன் கிராமத்துக்கோ அல்லது 30 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கிற சகாப்பூர் டவுனுக்கோதான் நாங்கள்லாம் போகணும்.

சென்ட்ரன் கிராமத்தில் 580 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் பிஜேபியால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என்பது பலரை கோபமூட்டியிருக்கிறது.ஆகாஷ் பகத்துக்கு 21வயது. இணையத்தில் பொருள்களை விற்கும் கம்பெனிகள் அவரது கிராமத்திலிருந்து 10 அல்லது 12 கிலோமீட்டர் தூரத்தில் நெடுஞ்சாலையில் வாடிக்கையாளர்களுக்கு பொருள்களை அனுப்பும் இடங்களை சில வருடங்களாக வைத்திருக்கின்றன.

“ எங்கே எங்களுக்கு வேலைகள்” சகாப்பூர் தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இதுதான் நிலைமை. இணையத்தில் பொருள்களை விற்கும் கம்பெனிகளின் பொருள்களுக்கான குடோன்கள் மட்டும் இல்லையென்றால் இளைஞர்களின் நிலைமை என்ன என்பது எங்களுக்குத் தெரியாது.” என்கிறார் அவர். “ நாங்கள் மூன்றுமாத ஒப்பந்த அடிப்படையில் சுமைப்பணியாளர்களாகவும் பார்சல் தயாரிப்பவர்களாகவும் பணி செய்கிறோம். அதுவும் இல்லையென்றால் நாங்கள்  காலிவயிறுகளுடன் சாக வேண்டியதுதான்” என்கிறார் ஆகாஷ். அவர் வாஷிந்த் டவுனில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருக்கிற மாணவர்.
Akash Bhagat outside his house
PHOTO • Jyoti Shinoli
Young men gather at a house in Shendrun village to speak of the elections
PHOTO • Jyoti Shinoli

(' வேலைகள் எங்கே? என்கிறார் ஆகாஷ் பகத். அவரும் அவரது நண்பர்களும் சென்ட்ரன் கிராமத்தில் தேர்தல்களைப் பற்றி பேசுகின்றனர் )

“ எங்களது கிராமத்தில் 90சதவீதமான இளைஞர்கள் பட்டதாரிகள். ஆனால், அவர்கள் எல்லாம் குடோன்களில் உதவியாளர்களாக வேலை செய்கிறார்கள். அதுவும் ஒப்பந்தக்கூலிகளாக. நான் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படித்திருக்கிறேன். ஆனால் நான் ஒரு உதவியாளராக எட்டாயிரம் சம்பளத்தில் வேலை செய்கிறேன். இதுதான் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பேசவேண்டிய விசயம்.” என்கிறார் 26 வயதான மகேஷ் படோல்

“இங்கே பெரிய பெரிய தொழிற்சாலைகள் இருக்கவே செய்கின்றன. அவர்கள் எங்களை வேலைக்கு எடுப்பதில்லை. அவர்களுக்கு பெரிய இடத்து சிபாரிசுகள் தேவைப்படுகின்றன. அவர்கள் எங்களை செக்யூரிட்டி பணிகளுக்குக்கூட எடுப்பதில்லை. அதற்கே எடுப்பது இல்லை என்றால் மற்ற துறைகளின் பணிகளுக்கு எடுப்பதைப் பற்றி நினைத்தே பார்க்க முடியாது. ஓட்டு கேட்டு வரும்போது இதைப்பற்றி எல்லாம் அரசியல் தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு இதை சரிசெய்வதற்கு எதுவும் செய்வதில்லை” 25 வயதான ஜெயேஷ் படோல். அவரும் இணைய தள கம்பெனிகளின் குடோனில்தான் வேலை செய்கிறார்.

“புல்வாமா தாக்குதல் நடந்தபோது நாங்களும்தான் தியாகிகளான நமது படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். ஆனால், மதவெளி தூண்டும் வாட்ஸ்அப் செய்திகளை நாங்கள் நீக்கிவிட்டோம். இதையெல்லாம் அரசியலாக்கி ஓட்டு வாங்குவதற்கு பயன்படுத்தக்கூடாது.” என்கிறார் 29 வயதான நாகுல் தாண்ட்கர். அவரும் ஒரு பி.ஏ. பட்டதாரி. ஆனாலும் ஒரு பள்ளியில் உதவியாளராகத்தான் வேலை செய்கிறார்.  இத்தகைய இளைஞர்கள்தான் அந்த வீட்டில் கூடி விவாதம் செய்தனர்.

“கபில் பாட்டீல் ‘மோடி அலையால்’ வெற்றிபெற்றார். மக்களும் கபில் பட்டீலை மக்களும் நம்பினார்கள்.” என்கிறார் 24 வயதான சுவப்னில் விஷே. தற்போது அவர் வேலையில்லாமல் இருக்கிறார். “ வாக்காளரின் மனதைப் புரிந்துகொள்வது கடினம்.

அரசியலை அவரவர் தங்களின் பாணியில் புரிந்துகொள்கிறார்கள். வாக்களிப்பதற்கும் வாக்களிக்காமல் இருப்பதற்கும் அவரவர் தங்களுக்கு ஏற்ற காரணங்களையும் புரிதல்களையும் வைத்திருக்கிறார்கள். பிஜேபியை மக்கள் திட்டலாம். ஆனாலும் அவர்கள் உண்மையாகவே யாருக்கு வாக்களிப்பார்கள். எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள்  என்று நமக்குத்  தெரியாது. வாக்குகளை பணம் கொடுத்து வாங்குவது என்பதும் பல தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இறுதியான தேர்தல் முடிவுகள் நமக்கு எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும்.


தமிழில்: த நீதிராஜன்

Jyoti Shinoli is a Senior Reporter at the People’s Archive of Rural India; she has previously worked with news channels like ‘Mi Marathi’ and ‘Maharashtra1’.

Other stories by Jyoti Shinoli