`ஒரு விவசாயிடம் இருக்கும் 500 ரூபாய் நோட்டு எப்போதும் அழுக்காக, பழையதாக இருக்கும்.  குறைந்தபட்சம் மடிக்கப்பட்டாவது இருக்கும்’ என்கிறார் ப.உமேஷ். வறட்சியால் பாதிக்கப்பட்ட டாடிமாரி கிராமத்தில் உர விற்பனை செய்பவர் உமேஷ்.

டாடிமாரியில் இருக்கும் உமேஷ் கடையிலிருந்து விதைகளும், உரமும் வாங்கும் விவசாய வாடிக்கையாளர்களிடம் புதிய 500 ரூபாய் நோட்டை சமீபகாலங்களில் பார்த்ததில்லை என்கிறார் அவர். அதனால் நவம்பர் 23 ஆம் தேதி ஒரு விவசாயி புதிதாக இருந்த நான்கு 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிய உரத்திற்காக கொடுத்த போது கொஞ்சம் ஜாக்கிரதையுணர்வுடனேயே அதை அணுகினார் உமேஷ். அந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் 2014 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டவை.

“அவையெல்லாம் இரண்டு ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்திருந்தால், இந்த அளவுக்கு புதியதாக தோற்றமளிக்காது’ என அவர் சந்தேகப்பட்டார். அவை கள்ள நோட்டுகளாக இருக்கும் என்பது உமேஷின் முதல் யூகமாக இருந்தது. நவம்பர் 8 ஆம் தேதிக்கு முன்பாக கள்ள நோட்டு என்பது டாடிமாரியில் மிகவும் அரிதான ஒன்றாக இருந்தாலும் கூட அவர் தனது கடைக்கு அடிக்கடி வரும் மக்கள் கொடுக்கும் நோட்டுகளில் சிலவற்றில் கள்ள நோட்டுகளை   கண்டுபிடித்தார். எனவே உமேஷ் அந்த புது நோட்டுகளையெல்லாம் அவருடைய `மணி-கவுண்டரில்’ வைத்து சோதனை செய்தார். அவையெதுவும் கள்ள நோட்டுகள் இல்லை.

PHOTO • Rahul M.

நவம்பர் 23 ஆம் தேதி ஒரு விவசாயி புதிதாக இருந்த நான்கு 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிய உரத்திற்காக கொடுத்த போது உமேஷ் கொஞ்சம் ஜாக்கிரதையுணர்வுடனேயே அதை அணுகினார்

அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. வங்கியிலிருந்து புதிதாக பெறப்பட்ட நோட்டுகள் போல அவை தொடர்ச்சியான எண்களைக் கொண்டிருந்தன. மறைத்து வைக்கப்பட்ட, அதுவரை உபயோகப்படுத்தப்படாத நோட்டுகள் எல்லாம் இப்போது வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன என அவர் நினைத்தார்.  டாடிமாரி மண்டலத்தில் உள்ள 11 கிராமங்களில் இருக்கும் விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்குவதற்காக அன்ந்தபூர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் அல்லது தமிழ்நாட்டிலிருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் கறுப்புப் பணம் உபயோகப்படுத்துவதாக உமேஷ் சந்தேகப்படுகிறார்.  . டாடிமாரி மண்டலின் மக்கள் தொகை 32,385. படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் கிராமம் இது..

உமேஷ் போன்ற ஒரு சிலரைத் தவிர, பணமதிப்பு நீக்கம் டாடிமாரி கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரையும் மோசமாகப் பாதித்திருக்கிறது. உமேஷ் பழைய நோட்டுகளைப் பெற்றுக் கொள்வதால் (அவர் அதை தனது வங்கிக் கணக்கில் சட்டப்படியான வருமானத்தின் ஒரு பகுதியாக டெபாசிட் செய்தார்) அங்கிருக்கும் விவசாயிகள் உரம் வாங்கி நீண்ட நாட்கள் கொடுக்கப்படாமல் இருந்த பணத்தை செலுத்தி வந்தனர்.

இதற்கிடையில், உரக்கடையிலிருந்து கொஞ்ச தூரத்திலிருக்கும் டாடிமாரி மதுக்கடைகளில் வியாபாரம் அமோகமாக நடந்தது – ஏனென்றால், அந்த கடைகள் எல்லாம் – அங்கீகரிக்கப்பட்டவை, அங்கீகரிக்கப்படாதவை- பழைய நோட்டுகளை ஏற்றுக் கொண்டன.

`இந்த 50 ரூபாயைத்தான் திரும்பப் பெற்றோம்’ என்று லேசான போதையிலிருந்த சின்ன கங்கண்ணா ஒரு தாளை  எங்களிடம் காண்பித்தார். அவர் தன்னிடமிருந்த 1000 ரூபாய் நோட்டைக் கொண்டு மது வாங்கினார் – அதை வேலையற்ற விவசாயத் தொழிலாளர்கள் 8 பேர் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். 500 ரூபாய் நோட்டை மாற்றுவதற்குக் குறைந்தபட்சம் 400 ரூபாய்க்கு மது வாங்க வேண்டும்.

டாடிமாரி கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் அவர்களுடைய பழைய ரூபாய் நோட்டுகளை எளிதாக மாற்றுவதற்கான வழி மது வாங்குவதுதான் என்று நினைக்கிறார்கள். விவசாயிகளின் வயல்களில் டிராக்டர் ஓட்டுபவர் எஸ். நாகபூஷணம். இவர் ஒவ்வொரு நாளும் வேலை முடிந்த பிறகு குவார்ட்டர் பாட்டில் மது குடிப்பது வழக்கம். ஒரு குவார்ட்டர் சாராயத்தின் விலை ரூ 60 லிருந்து ரூ 80 க்குள் இருக்கும். இப்போது நாகபூஷணம் வழக்கமாகக் குடிப்பதை விட 4-5 மடங்கு அதிகமாகக் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவருடைய தினசரிக் கூலி 500 ரூபாய் – ஆனால் இப்போது அவருக்கு வேலையில்லை, எனவே அவரது வருமானம் முழுவதும் பழைய நோட்டுகளாகத்தான் இருந்தன. அதை அவர் மதுக்கடையில் செலவு செய்தார்.

நாகபூஷணம் போல, டாடிமாரியில் இருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. இந்த வருடம் அனந்த்ப்பூரில் மழை சரியாகப் பெய்யாததால் நிலக்கடலைப் பயிரின் விளைச்சல் மிகவும் மோசமாக இருந்தது. பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பயிர்களை இழந்துவிட்டிருந்தனர், கூலி கிடைக்கும் வேலைநாட்களும் குறைந்து விட்டன.

டாடிமாரி மண்டலில் இருக்கும் விவசாயிகள் நிலக்கடலைப் பயிரை தீபாவளிக்குப் பிறகு நவம்பர் மாதம் அறுவடை செய்து டிசம்பர் மாதம் வரை அதை விற்பார்கள். விவசாயிகள் அவர்களுடைய வயல்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் கூலி கொடுப்பதில்லை. தொழிலாளர்களுக்கான மொத்தக் கூலியும் அறுவடைக்குப் பிறகு தான் கொடுக்கப்படும். எனவே, விவசாயிகளுக்கு வருடத்தில் இந்த சமயத்தில் அதிகமான பணம் தேவைப்படும்.

இந்தப் பணத்தை விவசாயிகள் அவர்களுக்குள்ளாக மாதம் 2 சதவிகித வட்டியில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்கும் பயன்படுத்துவது வழக்கம். ‘நாங்கள் இந்தப் பணத்தை இப்போது கொடுக்கவில்லையென்றால், வட்டி அதிகமாகிக் கொண்டே இருக்கும்’ என்று டாடிமாரி கிராமத்தில் சுமார் 16 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயியான பிரமானந்த ரெட்டி கூறினார்.

பணமதிப்பு நீக்கம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வாரத்துக்குப் பிறகு ரெட்டி அவருடைய நிலக்கடலைப் பயிரை விற்றதற்கு மற்ற மாவட்டத்திலிருக்கும் வியாபாரிகள் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைதான் கொடுத்தனர். அவர் அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தார். ஆனால் அவருடைய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கும், தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதற்கும் அதிகத் தொகை புதிய நோட்டுகளாக வேண்டியிருந்தது – டாடிமாரி மண்டலில் இருக்கும் மூன்று வங்கிகளில் இந்தப் புதிய நோட்டுகள் பற்றாக்குறையாக இருந்தன.

PHOTO • Rahul M.

டாடிமாரி மண்டலில் இருக்கும் ஒரு வங்கிக்கு வெளியே இருக்கும் விவசாயிகள் : டி . பிரமானந்த ரெட்டி போன்ற விவசாயிகள் கடனைத் திருப்பி கொடுப்பதற்கும் , தொழிலாளர்களுக்குக் கூலி கொடுப்பதற்கும் அதிகத் தொகையிலான புதிய நோட்டுக்கள் தேவைப்பட்டன இங்கிருக்கும் வங்கிகளில் அந்த நோட்டுகள் எல்லாம் பற்றாக்குறையாக இருந்தது .

அறுவடை காலத்தின் போது ரெட்டியும் மற்ற விவசாயிகளும் ஒவ்வொரு விவசாயத் தொழிலாளிக்கும் தினக்கூலியாக ரூ 200 கொடுப்பார்கள். சில வேளைகளில் வேலையின் தன்மை மற்றும் தொழிலாளர்களுக்கான தேவையைப் பொறுத்து கூலி ரூ 450 வரை கூட போகும்.

இப்போது வேலையும் குறைந்து விட்டது, சட்டப்பூர்வமான ரூபாய் நோட்டும் காணாமல் போய்விட்டது, இதனால் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘எங்களுக்குக் கடந்த ஒருமாதமாக பணம் கொடுக்கவில்லை’ என்று வேலையில்லாமல் இருக்கும் விவசாயத் தொழிலாளி நாராயணசுவாமி குற்றஞ்சாட்டினார்.

‘ஆனால் எப்போதாவது குடித்துவிட்டு வந்து தொழிலாளர்கள் பணம் கேட்டால் நாங்கள் எங்களது கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்களுக்கு ரூ 500, 1000 என கொடுப்பதுண்டு’ என்று 22 ஏக்கர் வைத்திருக்கும் நிலக்கடலை விவசாயி வி. சுதாகர் கூறினார்.

பெரும்பாலான விவசாயத் தொழிலாளர்களால் வங்கிக்குப் போய் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக வேலை தேடிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலனவர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. எனவே வேலை கிடைக்காதவர்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூ 500, 1000 –எடுத்துக் கொண்டு தங்களுக்குத் தெரிந்த, பழைய நோட்டுகளை வாங்கிக் கொள்ளக்கூடிய இடமான உள்ளூர் மதுக்கடைக்குச் சென்றார்கள்.

PHOTO • Rahul M.

டாடிமாரியில் இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியாவிற்கு முன்னால் நிற்கும் நீண்ட வரிசை பெரும்பாலான விவசாயத் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நிற்பதற்குப் பதிலாக அவர்கள் வேலை தேடிக் கொண்டிருந்தார்கள் , பெரும்பாலனவர்களுக்கு வங்கிக் கணக்கு கூட இல்லை .

“வலியை உணராமல் இருப்பதற்கு (வயலில் கடினமாக வேலை செய்வதால்) நாங்கள் குடிக்க வேண்டியிருக்கிறது” என்று சுவாமி கூறினார். காலையில் 10 மணிக்குள் இவர் குடித்திருந்தார். பெரும்பாலும், இந்த மாதிரி குடிப்பதை விவசாயிகள் ஊக்குவித்தார்கள் – மிகவும் திறம்பட அவர்களுடைய வேலையை செய்வதன் ஒரு பகுதி என அவர்கள் இதைப் பார்த்தார்கள்.

’நாங்கள் கூலி தவிர்த்து (இது பருவகாலத்தின் முடிவில் கொடுக்கப்படும்) தினமும் ரூ 30 அல்லது ரூ 40 கொடுப்பதுண்டு, அதில் அவர்களுக்குத் தேவையான மூன்று அவுன்ஸ் மதுவை வாங்கிக் கொள்ள முடியும். ‘ என்கிறார் சுதாகர். இந்த பரஸ்பர புரிதலினால் தொழிலாளருக்கு முதலாளியின் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டு, உண்மையாக கூலி கொடுக்காவிட்டாலும் கூட, மறுநாள் அவர்களை வேலைக்கு வர வைக்கும்.

இதற்கிடையில், டாடிமாரியில் இருக்கும் தொழிலாளர்கள் வழக்கமாக வேலை முடிந்த பிறகு மாலை நேரத்தில் மட்டும் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் இப்போது, எப்போதெல்லாம் வேலை கிடைக்கவில்லையோ அப்போதெல்லாம் குடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் – அதற்கு தங்களிடம் மீதமிருக்கும் பழைய 500 ரூபாயைக் கொடுக்கிறார்கள்

புகைப்படங்கள்: ராகுல்.எம்.

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

Rahul M.

Rahul M. is an independent journalist based in Andhra Pradesh, and a 2017 PARI Fellow.

Other stories by Rahul M.
Translator : Siddharthan Sundaram

Siddharthan Sundaram is a Bangalore-based market researcher, entrepreneur and translator, who has translated 11 books from English into Tamil; he is also a regular contributor to various magazines.

Other stories by Siddharthan Sundaram