2022ம் ஆண்டு தயாநிதா சிங், பாரியுடன் இணைந்து தயாநிதி சிங் - பாரி ஆவண புகைப்பட விருதை அறிவித்தார். முதல் விருது பாரியின் எம்.பழனி குமார் பெற்றார்.
இந்த வருடத்துக்கான தயாநிதா சிங் - பாரி ஆவண புகைப்பட விருது மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவற்றுக்கு, மற்றுமோர் வளர்ந்து வரும் திறமை கொண்ட புகைப்படக் கலைஞரை அவர் தேர்தெடுத்திருக்கிறார். பாரியை சேர்ந்த ஆய்னா.
தனிப்பட்ட வாழ்க்கையின் நிமித்தமாக புகைப்படக் கலைக்கு ஆய்னா வந்தார். அவர் மறக்க விரும்பிய யதார்த்தங்களை நினைவில் வைத்திருக்கும் வழியாக புகைப்படக் கலையை அவர் தேர்ந்தெடுத்தார். உள்ளார்ந்து மீளுவதற்கான கருவியாக இருக்கும் இக்கலை, பலரின் சொல்லப்படாத கதைகளை சொல்வதற்கான அரசியல் கருவியாகவும் பயன்படும் என்பதை கற்றுக் கொண்டார். செபாஸ்தியாயோ சல்காடோ, விவியன் மேயர், ஷங்கர் சர்கார், பழனி குமார் போன்ற பலரின் பணிகளை கண்டபோது இத்தகைய புரிதலை அவர் எட்டினார். கோவிட் தொற்றுக்காலத்தில் பாரியுடன் பணிபுரிந்த அனுபவம், அந்த விழிப்புணர்வை உறுதிபடுத்தியது.
கோவிட் தொற்று காலத்தில் மருத்துவம் இன்றி நடைபாதைகளில் வசித்த புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் காமாத்திப்புராவின் பாலியல் தொழிலாளர்கள் குறித்த புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் மனதில் ஆழ பதியும் வண்ணம் அவரின் லென்ஸ் பதிவு செய்திருக்கிறது. ஆய்னாவின் 23 புகைப்படக் கட்டுரைகள், மெட்ரோ நகரங்களின் மூலைகளில் வசிக்கும் மனிதர்களின் ஆச்சரியகரமான வாழ்க்கைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது. மும்பை ரயில்களின் ராஜஸ்தானி புலம்பெயர் இசைஞர், டாக்ஸி டிரைவக்ரள், இந்தியா கேட்வேயின் புகைப்படக் கலைஞர்கள், கழுதைப் பால் விற்பவர், கர்நாடகாவிலிருந்து புலம்பெயர்ந்து மும்பையின் தெருக்களில் தன்னை சட்டையால் அடித்துக் கொண்டு ஆடுபவர் என பலரின் வாழ்க்கைகளை அவர் பதிவு செய்திருக்கிறார். நகரத்துக்குள் இருக்கும் கிராமத்தை நுட்பமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பரிவுடனும் அணுகும் அவரது தன்மை பலருக்கு வாய்த்திராதது.















