இரவு முழுவதும் அவர் விழித்திருந்தார். 15 வயதே ஆகும் அவர், அனுமந்தை கிராமத்தின் மாரியம்மன் கோவில் தெருவில் கண்ட காட்சிகளில் மெய்மறந்திருந்தார். “அவர்கள் அனைவரும் அலங்கார உடைகளில், மின்னும் மகுடங்கள் மற்றும் ஆபரணங்களை அணிந்து அழகிய நிறங்கள் மற்றும் பளிச்சென்ற ஒப்பனையுடன் இருந்தனர். அனைவரும் ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் பாடி, ஆடி, நடித்தனர். தாத்தாக்களும் பாட்டிகளும் கடவுளை வணங்குவது போல கைகளை கூப்பி வணங்கிக் கொண்டிருந்தனர். வேடிக்கையாக இருந்தது,” என்கிறார் 70 வயது வீரராகவன் தன்னுடைய பால்ய கால நாட்களை நினைவுகூர்ந்து.
முதன்முதலாக அந்த இரவில் அவர் பார்த்த தெருக்கூத்து வடிவம், அவரது மனதில் ஆழப் பதிந்து விட்டது. “சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை. எனக்குள் ஏதோவொன்று, ‘அவர்களைப் போல ஆக வேண்டும். அவர்கள் செய்வதை செய்ய வேண்டும்’ என சொல்லிக் கொண்டிருந்தது,” என்கிறார். அப்போது அவர் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது எதிர்காலத்தை அப்போதே முடிவு செய்து விட்டார். இசை, நடனம், கதை சொல்லல் ஆகியவற்றில் முறையான பயிற்சியின்றி, பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு அவர் தெருக்கூத்து குழுவில் இணைந்தார்.
விவசாயிகளான அவரது பெற்றோர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். மகனின் விருப்பத்துக்கு அவர்கள் தடை சொல்லவில்லை. “அதிகம் சம்பாதிக்கவில்லை எனினும், கற்றுக் கொள்வதில் சந்தோஷம் இருந்தது,” என நினைவுகூருகிறார். “சிறு வேலைகளை முதலில் எனக்கு தந்தனர்.” இறுதியாக நாடகத்தில் துரியோதனன் பாத்திரத்தை, இரவு முழுக்க வசனங்களை மனப்பாடம் செய்து அவர் நடித்தார். “பதட்டமே எனக்கு இல்லை. உண்மையில் நான் பரவசமாக இருந்தேன்,” என்கிறார் அவர் காலவோட்டத்தில் மங்கிடாத புன்னகை மற்றும் பெருமையுடன்.
கலையை கற்றுக்கொள்வது மட்டுமின்றி, நாடகங்கள் அடிப்படையாகக் கொண்டிருந்த புராணங்களையும் கற்று தேர்ந்தார். விரிவாக வாசித்த அவர் நூல் அகராதி, பெரிய புராணம் மற்றும் பாரதம் ஆகியவற்றையும் படித்திருக்கிறார்.
90களின் பிற்பகுதியில் 5-லிருந்து 10 ரூபாய் வரை ஒரு நிகழ்ச்சிக்கு அவர் வருமானம் பெற்றார். “வருடம் முழுக்க நிகழ்ச்சிகள் இருக்கும். 250 நாட்களுக்கு இதை மட்டுமே செய்வோம்,” என்கிறார் புன்னகையுடன். நிகழ்ச்சிக்கான செலவை ஊர் பஞ்சாயத்தும் மக்களின் நன்கொடையும் பார்த்துக் கொள்ளும். “நிகழ்ச்சியின் மீது கொண்ட விருப்பத்தின் வெளிப்பாடாகவும் மக்கள் பணம் கொடுப்பார்கள். கடவுளரின் நிகழ்ச்சி என நம்பிக் கொடுப்பார்கள்,” என்கிறார் அவர். அதிக வருமானம் ஈட்டவில்லை என்னும் அவர், தங்களின் விருப்பத்தால்தான் அதை செய்ததாக சொல்கிறார்.




























