“விளிம்புநிலை மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்லிக் கொண்டு குளிர்சாதன அறைகளுக்குள் நடத்தப்படும் கண்காட்சிகள், அந்த கலை பேசும் மக்களை வரச் செய்வது கூட இல்லை. நான் ஒருமுறை கல்வியின் ஒரு பகுதியாக டெல்லியில் நடந்த கலை கண்காட்சிக்கு சென்றிருந்தேன். கூடத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும் சிற்பங்களும் ஓவியங்களும் யாவும் வறிய மக்களை பற்றியவை. ஆனால் மொத்த இடத்திலும் மேட்டுக்குடிதன்மைதான் நிரம்பியிருந்தது. என்னால் அவர்களுடன் ஒட்ட முடியவில்லை,” என்கிறார் 22 வயது ஹைருன்னிசா.
”ஏற்கனவே சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் அங்கு வந்திருந்தால், அவருக்கு எப்படி இருந்திருக்குமென யோசித்துப் பாருங்கள். அது அவருக்கான இடமாக அவர் உணர்ந்திருக்க மாட்டார். கண்காட்சியென ஒன்றை நான் நடத்தினால், நிச்சயமாக அது வித்தியாசமாக இருக்கும். வெறுமனே சுவர்களில் புகைப்படங்களை சுவர்களில் தொங்க விட்டுவிட்டு, யாரோ ஒருவர் அவற்றை பற்றி பேசுவதாக அது அமையாது. உண்மையான மக்களை நான் அழைத்து வந்து வருபவர்களுடன் கலந்துரையாடச் செய்வேன். புகைப்படங்கள் பிரதிபலிக்கும் நிலப்பரப்பை கண்காட்சியுடன் தொடர்புறச் செய்வேன்.” அவரின் எண்ணங்கள் வேகமாக இருந்தன. கல்லூரி நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் ஹைருன்னிசா. கே. 20 நிமிடங்களில் மீண்டும் நிகழ்ச்சிக்கு திரும்ப வேண்டும்.
புது டெல்லியின் ஜமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் வெகுஜன ஊடக முதுகலை படித்துக் கொண்டிருக்கும் ஹைருன்னிசா, வடசென்னை இஸ்லாமிய குடும்பத்திலிருந்து வரும் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். “அங்கிருந்து இத்தனை தூரம் வந்து படிக்கும் முதல் நபர் நான். எங்களின் சமூகத்தை சேர்ந்த பெண்கள் பட்டப்படிப்பு படிக்க வைக்கப்படுவதில்லை. 18 வயதை நான் எட்டியதும், என்னை மணம் முடித்துக் கொடுப்பதற்கான அழுத்தம் தொடங்கியது. ஆனால் நான் வீட்டை விட்டு ஓடி விட்டேன். வெளியே பெரியதொரு உலகம் இருப்பதை புகைப்படக் கலைதான் எனக்கு காண்பித்தது,” என்கிறார் அவர்.
















