"திடீரென ஒரு பெரும் சத்தம் கேட்டது. புகை சூழ்ந்த மேகங்களைத் தொடர்ந்து ஓடினேன். வெடிவிபத்தில் தொழிற்சாலைச் சுவர்கள் பல இடிந்து விழுந்திருந்தன. லிங்கசாமி இடிபாடுகளிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். அவரின் உடைகள் அனைத்தும் எரிந்த நிலையில் அரை நிர்வாணமாக ஓடி வந்துகொண்டிருந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, அவர் உயிருடன் இருப்பதை மீண்டும் மீண்டும் கேட்டு உறுதி செய்துகொண்டே இருந்தார். அவரால் இரு சக்கர வாகனத்தில் உட்கார முடியவில்லை. தள்ளுவண்டியில் படுக்க வைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம்," என்று வெடிவிபத்து நடந்து ஒரு நாள் கழித்து உள்ளூர் நிருபர் மாரீஸ்வரனிடம் என்னிடம் கூறினார். சிவகாசியில் ஜூலை 1, 2025 அன்று விபத்து நடந்த பட்டாசு தொழிற்சாலையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் அவர் வசிக்கிறார்.
வெடிவிபத்து நடந்த இடத்திற்கு மறுநாள் நான் சென்றிருந்தேன். அந்த தொழிற்சாலையின் கதவுகள் மூடி இருந்தன. அந்த தொழிற்சாலையின் ஒரு பகுதி முற்றிலுமாக சிதைந்து போயிருந்தது. தொழிற்சாலையை சுற்றி சாலைகள் ஏதுமில்லை. எனது இருசக்கர வாகனத்தை ஓட்டுவது கூட அங்கு சிக்கலாக இருந்தது. ஆனால் அங்கிருந்து மருத்துவமனைக்கு 25 கிலோ மீட்டர் செல்ல வேண்டியிருக்கும் நிலையில் எப்படி காயம் அடைந்தவர்களை அவர்கள் மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்கள் என்பதை நினைக்கும் போது என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.




















