நான் கே. முகேஷ், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கிறேன். அங்கு நான் புகைப்படக் கலையை ஒரு விருப்பப் பாடமாகப் படிக்கிறேன். கேமராவை எவ்வாறு கையாள்வது, அதன் மூலம் என்ன ஆவணப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டேன். கல் குவாரியில் துளையிடும் தொழிலாளியாக இருக்கும் எனது 51 வயது தந்தை கதிர்வேலு.கே போன்ற உழைக்கும் மக்களின் போராட்டங்களை நான் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.
அப்பா வேலைக்கு வெளியூர் போயிருக்கும் போது, என் அம்மா வசந்தி கே. வீட்டை நிர்வகித்து, என் 12 வயது சகோதரி தர்ஷிகாவையும் என்னையும் கவனித்துக்கொள்கிறார். 15 நாட்களுக்கு ஒரு முறைதான் அப்பாவை நாங்கள் பார்க்க முடிகிறது. அவர் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வீடு திரும்புவார். பெரும்பாலும் அவர் மிகவும் சோர்வாகவும், மந்தமாகவும் இருப்பார். அவருடன் செலவிட எனக்குக் கிடைக்கும் ஒரே நேரம் அதுதான்.
அவர் வீட்டில் இருக்கும்போது, அவருடைய வேலையைப் பற்றி மேலும் அறிய நான் அவரிடம் பல கேள்விகள் கேட்பேன், அவர் எப்போதும் மிகவும் பொறுமையாக பதிலளிப்பார். ஆனாலும், அவரது வேலையின் தன்மையை நான் ஒருபோதும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை, எங்கள் புகைப்பட வகுப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்ரீபதியால் ஊக்குவிக்கப்பட்ட பிறகு, ஒரு நாள் நான் அவருடன் அவரது பணியிடத்திற்குச் செல்ல முடிவு செய்தேன் என் கேமராவும் என்னுடன் பயணித்தது.
நான் பார்த்த என் தந்தையின் வாழ்க்கைக் கதையை ஒரு சில வார்த்தைகளிலும் பல புகைப்படங்களிலும் பதிவு செய்துள்ளேன்.























