நான் கீர்த்தி. தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். பள்ளியிலிருந்து எனக்கு ஒரு வருட காலம் புகைப்பட பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்பு புகைப்படம் எடுப்பது என்பது திருமணங்கள் மாதிரியான பெரிய நிகழ்ச்சிகளில் எடுப்பது தான் என்று நினைத்திருந்தேன். பிறகு முதல்முறையாக நம்மைப் போன்ற உழைக்கும் மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் புகைப்படங்களாக பதிவு செய்யலாம் என்பதையும் அவர்களை கண்ணியத்துடன் புகைப்படங்களில் காட்ட முடியும் என்பதை புரிந்து கொண்டேன்.
ஒருநாள், எனது புகைப்பட பயிற்றுனர் புகைப்பட கண்காட்சியை பற்றியும் உழைக்கும் மக்களின் புகைப்பட கண்காட்சியை பற்றியும் எனக்கு தெரிவித்தார். பிறகு எனது கையில் கேமராவை கொடுத்து மூன்று நாட்களில் புகைப்படம் எடுத்து வரும்படி கூறினார். அந்த மூன்று நாட்களில் நான் புகைப்படம் எடுக்கும் முயற்சி செய்தேன். முதலில் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, எதை எடுப்பது என்றும் தெரியவில்லை. அப்பொழுது எனது பயிற்றுனர் கூறியது எனக்கு நினைவில் வந்தது. ”கதைகளை வெளியில் தேடாதே… அது உன் முன்னாலேதான் இருக்கிறது,” என்றார்..
புகைப்படக் கலைஞர் பழனிக்குமார் அவர்களின் அம்மாவின் தெருவிளக்கின் வெளிச்சத்தில் என் தாயின் வாழ்க்கை என்ற கதை ஞாபகம் வந்தது. பிறகு எனது அம்மாவின் வாழ்க்கையையும் அவரின் போராட்டத்தையும் பதிவு செய்ய முடிவு செய்தேன். அந்த நாட்களில் என் அம்மாவுடன் நிறைய பேசினேன். காலையிலிருந்து இரவு வரை என் அம்மா வேலை செய்வதை பார்த்தேன். அப்போதுதான் என் அம்மாவின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என புரிந்து கொண்டேன். அம்மாவின் பெயர் முத்துலட்சுமி. வயது 42. மிகவும் துணிச்சலான தைரியமான பெண் அவர்.
அவர் எங்களுக்காக தனது கனவுகளை தியாகம் செய்தவர். முன்பு அப்பா, ஊரில் ஒரு சிறிய கடை ஒன்று நடத்தி வந்தார். அதற்கு முன்பு அவர் வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்பா கடை வைக்க, என் பாட்டி 1997-ல் 2000 ரூபாய் கடன் வாங்கி கொடுத்தார். சைக்கிளில் அருகில் உள்ள ஊரில் இருந்து பொருட்களை எடுத்து வந்து கடையை நடத்தினார் அப்பா.
2016-ல் ஒரு விபத்து நடந்தது. அப்போது அம்மா அருகில் உள்ள கிராமத்தில் எம்எஸ் ஆபீஸ் கற்கச் சென்றார். அம்மா பி.ஏ தமிழ் படிக்கவும் ஆசைப்பட்டார். ஆனால் அந்த நேரத்தில் என் அப்பாவும் என் அண்ணனும் நானும் விபத்தில் சிக்கினோம். அப்பாவின் கால் முறிந்து போனது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. நாங்கள் கால்களில் சிறிய காயங்களுடன் தப்பித்தோம். அப்பாவின் அறுவை சிகிச்சைக்காக மூன்று லட்ச ரூபாய் தேவைப்பட்டது. அப்போது அம்மாவிடம் அவ்வளவு பணம் இல்லை. எனவே அம்மா நகையை அடமானம் வைப்பதும் உறவினர்களிடம் இருந்து கடன் வாங்குவதுமாக அந்த பணத்தை ஓரளவு திரட்டினார்.
அம்மாவின் கனவுகள் அங்கே முடிவு பெற்றன. ஆனால் எங்களிடம் ஒருபோதும் இதைச் சொல்லிக் கொண்டது இல்லை. தனது குடும்பத்தை நேசிப்பதே கடமை என்று நினைத்தார். தன்னை வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்துக் கொண்டார். அதனால் தான் அவரின் வாழ்க்கையை நான் புகைப்படக் கதையாக பதிவு செய்ய முடிவு செய்தேன். நான் எனது புகைப்பட தொகுப்பை பள்ளியில் கொடுத்தேன். பிறகு நான் சென்னையில் நடக்கும் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதனால் எனது பெற்றோர் மிகவும் பெருமைப்பட்டனர். எனது அப்பாவும் கூட புகைப்பட கலையை கற்றுக் கொள்ள விரும்பினார். அவர் என்னுடைய புதிய பயணத்தை குறித்து மிகவும் ஆர்வமாய் இருந்தார்.
புகைப்பட கண்காட்சிக்கு நான் சென்றபோது அந்த அரங்கில் நான் முதன் முதலில் பார்த்தது எனது அம்மாவின் புகைப்படத்தோடு கூடிய பேனரைதான் . அப்பொழுது மிகவும் அதிர்ச்சியும் ஆனந்தமும் கலந்த ஒரு உணர்வை பெற்றேன். பல கலைஞர்களும் பத்திரிக்கையாளர்கள் வெளிநாட்டவர்கள் கூட வந்து இதை பார்த்து, என்னை பாராட்டினார்கள். சிலர் என்னிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த எனது புகைப்படங்களில் கையொப்பங்களும் கூட வாங்கினார்கள். ஆனால் இவற்றைப் பார்க்க முடியாத இரண்டு நபர்கள் எனது பெற்றோர். நாங்கள் இங்கு புகைப்பட கண்காட்சியில் இருக்கும் பொழுது எனது அம்மா, அங்கு கடை கணக்கை பார்த்துக்கொண்டும் தனது வாழ்க்கை போராட்டத்தை தொடர்ந்து கொண்டும் இருந்திருப்பார்.
முதன்முறையாக கேமராவை கையில் எடுத்து சென்று, அம்மாவை புகைப்படம் எடுத்த முதல் நாள் அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.
























