"எனக்கு என் குழந்தைங்களை ஸ்கூலுக்கு போக எழுப்பிவிட்டு, அவங்களுக்கு சாப்பாடு செஞ்சு கொடுத்து, அவங்களோட நிறைய நேரம் வீட்டுலேயே இருக்குற அம்மாவா இருக்கனும்னு ரொம்ப ஆசை. ஆனா அவங்க எழுந்துக்குறதுக்கு நாலு மணி நேரத்துக்கு முன்னாடியே நா வேலைக்கு போயாகணும். நா வேலையில இருந்து வீட்டுக்கு வரும்போது குழந்தைங்க தூக்கத்துல இருப்பாங்க. வாரம் முழுக்க ஞாயிறுக்காக காத்துட்டு இருப்பேன். எப்போ எட்டு மணி நேரம் தூங்கலாம், மூணு வேள சாப்படலாம், வீட்டுல குழந்தைங்களோட நிறைய நேரம் இருக்கலாம்னு இருக்கும்," என்கிறார் அமுலு அக்கா. இன்று வார நாள்தான். என் வீட்டிலிருந்து கல்லூரிக்கு நான் சென்றுகொண்டிருந்தபோது, அமுலு அக்கா தனது காய்கறி வண்டியைத் தள்ளிக்கொண்டு எதிரே வந்தார். இந்த வட சென்னையின் திருவொற்றியூரில் உள்ள தெருக்களில்தான் அக்காவுடன் எப்போதும் பேசுவேன்.
காலை 10 மணி போல, நான் கல்லூரிக்கு செல்லும்போது, பூ போட்ட பூனம் புடவையை கட்டிக்கொண்டு, 100 கிலோக்கும் மேற்பட்ட எடைகொண்ட காய்கறி தள்ளுவண்டியை கஷ்டப்பட்டு எங்கள் தெருவை நோக்கி தள்ளி கொண்டு வருவார் அமுலு அக்கா. மதியம் 2 மணிபோல கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கையில், இன்னும் அதே திருவொற்றியூர் தெருக்களில் மீதமுள்ள காய்கறியை விற்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். 2024 ஆம் ஆண்டின் வெயில் காலம் அது. திருவள்ளூரில் 40 டிகிரி செல்சியஸ்ஸுக்கு மேல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை 44.3°C ஆகப் பதிவானது. இவை எதுவும் 41 வயதான அமுலு அக்கா வாழ்க்கையில் எந்த வித மாற்றத்தையும் கொண்டுவர போவதில்லை. இந்தியாவின் 10 மில்லியன் பெண் தெரு வியாபாரிகளில், 40 சதவீதத்தினரைப் போலவே அமுலுவும் கோடை கால வெப்பத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொள்கிறார். 68 சதவீத தெரு வியாபாரிகளைப் போலவே இவரும் எந்தவித இடைவெளியுமின்றி உழைக்கிறார். பல நேரங்களில் மதிய உணவுகூட உண்ணுவதில்லை.






















