நீங்கள் 6-14 வயதுக்குள்ளான குழந்தையாக இருந்தால், “இலவச கட்டாயக் கல்வி”யை அருகாமை பள்ளிகளில் பெற நீங்கள் உரிமை பெற்றிருக்கிறீர்கள். 2009ம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் இந்த உரிமையை உங்களுக்கு வழங்குகிறது.
ஆனால் அருகாமை பள்ளியே வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 3.5 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது வயது சந்திரிகா பெஹெரா, இரண்டு வருடங்களாக பள்ளிக்கு செல்லவில்லை.
கிராமப்புற இந்தியாவில் கற்றலும் கற்பித்தலும் தொடர்ச்சியாக நடைபெறுவதில்லை. சட்டங்களும் கொள்கைகளும் காகிதத்தில்தான் இருக்கின்றன. குறைந்தபட்சம் சில இடங்களில், இத்தகைய அமைப்புரீதியான சிக்கல்கள், தனிப்பட்ட ஆசிரியர்களின் முயற்சியாலும் ஆர்வத்தாலும் களையப்படுகின்றன. எனினும் அது முழு அளவிலான மாற்றமாக பரிணமிக்க முடிவதில்லை.
உதாரணமாக காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பயணிக்கும் ஆசிரியர், லிட்டர் பள்ளத்தாக்கிலுள்ள குஜ்ஜார் வசிப்பிடத்தின் நாடோடி சமூக குழந்தைகளுக்கு கல்வி புகட்ட நான்கு மாதங்கள் இடம்பெயருகிறார். குறைவாக இருக்கும் சாத்தியங்களில் ஆசிரியர்கள் புதிய விஷயங்களையும் முயற்சி செய்து பார்க்கின்றனர். கோவையின் வித்யா வனம் பள்ளியிலுள்ள ஆசிரியர்கள், தம் மாணவர்களை மரபணு மாற்ற பயிர் குறித்து விவாதிக்க வைக்கின்றனர். அவர்களில் பலரும் ஆங்கிலம் பேசுவதில் முதல் தலைமுறையினர். ஆனாலும் ஆங்கிலத்தில் விவாதிக்கின்றனர். இயற்கையாய் விளைவிக்கப்பட்ட அரிசியின் முக்கியத்துவத்தையும் பல விஷயங்களுடன் பேசுகின்றனர்.
பாரி நூலகம் வழியாக, இந்தியாவில் இருக்கும் கல்வி கட்டமைப்பு மற்றும் வகுப்பில் நேரும் கற்றலின் விளைவுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள். கிராமப்புற கல்வியின் தரம், இடைவெளிகள், கிடைக்கும் தன்மை ஆகியவை பற்றிய அறிக்கைகள் கொண்டிருக்கிறோம். நூலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆவணமும், அது கொண்டிருக்கும் முக்கியமான தகவல்களை முதலிலேயே தருகிறது.







