லட்சுமி டுடூ மருத்துவமனையை அடைந்தபோது கல்பனா இறந்திருந்தார். “குழந்தை, காலை கடும் பசியில் இருந்தாள். நான் அவருக்கு உணவு எடுத்துச்செல்ல எண்ணினேன். ஆனால், நான் தாமதமாகச் சென்றுவிட்டேன். மழை வேறு அதிகமாக பெய்தது“ என்று லட்சுமி நினைவு கூறுகிறார்.

2020ம் ஆண்டு ஜீன் மாதம் அவரது 26 வயது மகள் கல்பனா, தலைவலி மற்றும் இடைவிடாத வாந்தியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லட்சுமியின் மற்றொரு மகள் ஷிபானி அவருடன் மருத்துவமனையில் இருந்தார்.

2017ம் ஆண்டு முதல் கல்பனா ஒரு தனியார் நோய் கண்டறியும் மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். கங்காராம்பூர், உள்ளூரில் கல்திகி மருத்துவமனை என்று அழைக்கப்படும் அரசின் துணை பிரிவு மருத்துவமனை மருத்துவர்கள் அவரை தனியார் நரம்பியல் சிறப்பு மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து அவர் அங்கு சென்றார். 2019ம் ஆண்டில், அவரின் இரண்டாவது மகன் பிறந்த பின்னர், அவரது நிலை மிகவும் மோசமடைந்தது.

2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் போடப்பட்ட ஊரடங்கால் அவர் மாதமொரு முறை மருத்துவமனைக்குச் வழக்கமான பரிசோதனைகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. “நாங்கள் காத்திருந்திருக்கலாம். ஆனால், அவரது நாட்கள் தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டன. எனவே, நாங்கள் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளையே மீண்டும், மீண்டும் வாங்கினோம்“ என்று லட்சுமி நினைவு கூறுகிறார்.

கல்பனாவுக்கு 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது அவர் கங்காராம்பூர் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை படித்துக்கொண்டிருந்தார். 29 வயதான அவரது கணவர் நாயன் மார்டி, மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும், மேற்கு வங்கத்தின் தக்சின் தினாஜ்பூர் மாவட்டத்தின் கங்காராம்பூர் நகரிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனந்தப்பூர் கிராமத்தில் பகுதிநேர தையல் கலைஞராகவும் உள்ளார். அவரின் பெற்றோர் விவசாயக்கூலித்தொழிலாளர்களாவர். ஓராண்டு கழித்து, அவரது முதல் மகன் பிறந்த பின்னர், குழந்தையிலிருந்து அவருக்கு இருந்த தீவிர தலைவலி, மோசமடையத்துவங்கியது.

Her husband's death in 2016 left Laxmi Tudu as the sole earner and parent for their four children, including Shibani (right)
PHOTO • Saurabh Sarmadhikari
Her husband's death in 2016 left Laxmi Tudu as the sole earner and parent for their four children, including Shibani (right)
PHOTO • Saurabh Sarmadhikari

லட்சுமி டுடூவின் கணவர் 2016ம் ஆண்டு இறந்த பின்னர், ஷிபானி (வலது) உள்பட அவரின் 4 குழந்தைகளையும் லட்சுமி தனி ஒருவராக சம்பாதித்து வளர்த்து வருகிறார்

கல்பனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜீன் 28ம் தேதி, நாயன், கல்பனாவின் தங்கை ஷிபானியுடன் வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு, ஆனந்தப்பூரில் இருந்து கல்தகி மருத்துவமனைக்குச் சென்றார். சொல்லும் போதே கலங்குறார் லட்சுமி.  மருத்துமனையில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை . அவருக்கு நினைவிருப்பது ஒன்று மட்டும்தான் கல்பனா அடுத்த நாள் காலை இறந்துவிட்டார்.

2016ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லட்சுமியின் கணவர் இறந்து 5 ஆண்டுக்குள் இது நடக்கிறது. ஜியேத்து டுடூ, குளிர் காய்வதற்காக, குளிர்கால மாலையில் வைக்கோலை பற்ற வைத்போது, தவறி அவரது உடையில் நெருப்பு பற்றிவிட்டது. 58 வயதான ஜியேத்து, முன்னதாக, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக காசநோய் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாக இருந்தார். அவர் கங்காராம்பூர் நகரில் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியாக இருந்தார். ‘நாங்கள் அவரை கல்திகி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். 16 நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்“ என்று லட்சுமி நினைவு கூறுகிறார்.

இதனால், அவர் தனது நான்கு பிள்ளைகளான சந்தானா (தற்போது 30 வயது), கல்பனா (அவருக்கு 26 வயது), 21 வயதான ஷிபானி மற்றும் 15 வயது மகன் ஷிப்நாத் ஆகியோருக்கு தனிப்பெற்றோராகிவிட்டார். தற்போது குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டும் நபராக உள்ளார்.

“எனக்கு கவலை நிறைய உள்ளது. 3 பெண்கள் மற்றும் ஒரு சிறிய பையன். இவர்களை நான் தனியாக இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும்“ என்று லட்சுமி கூறுகிறார். அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்து பழங்குடியான சான்டல் ஜாதியைச் சேர்ந்தவர். கங்காராம்பூரில் உள்ள அவரது வீட்டின் முற்றத்தில் அமர்ந்துகொண்டு நம்மிடம் பேசிக்கொண்டிருக்கிறார். “கடும் வலியுடனே வாழப்பழகிக்கொண்டேன். நான் ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருந்து ஒரு நாள் கூட பார்த்திருக்க முடியாது“ என்று அவர் கூறுகிறார். “ஒவ்வொரு நாளும் நான் வேலை செய்கிறேன். அதுபோலவே எனது பிள்ளைகளையும் வளர்த்திருக்கிறேன்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஜியேத்து இறந்து 11 நாட்களிலேயே, 53 வயதான அவரது சகோதரர் சூபால் டுடூ, கொத்தனார் வேலை செய்து வந்தவர், ஜியேத்துவின் இறுதி சடங்கிற்காக அவர்களின் உறவினர்களை அழைக்கச் சென்றவர், திடீரென பக்கவாதத்தால் இறந்துவிட்டார்.

Built under the Pradhan Mantri Awas Yojana, Laxmi's house has a small pond in the backyard (left), and a kitchen with tarpaulin and tin walls and a mud floor (right)
PHOTO • Saurabh Sarmadhikari
Built under the Pradhan Mantri Awas Yojana, Laxmi's house has a small pond in the backyard (left), and a kitchen with tarpaulin and tin walls and a mud floor (right)
PHOTO • Saurabh Sarmadhikari

பிரதமரின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அவரது வீட்டிற்கு பின்புறம் சிறிய குளம் உள்ளது. (இடது) தார்ப்பாலின் போடப்பட்ட சமையலறை, தகர சுவர் மற்றும் மண் தரையால் ஆனது அவரது வீடு (வலது)

லட்சுமி, 2016ம் ஆண்டு பிரதமரின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் தற்போது வசிக்கிறார். அந்த வீட்டிற்கு பின்புறம் சிறிய குளம் உள்ளது. தார்ப்பாலின் போடப்பட்ட சமையலறை மற்றும் தகர சுவர், மண்தரையலானதாக அந்த வீடு உள்ளது. அவரது இடத்தை, அவரது மைத்துனி ஹிஷிமினி, மறைந்த சூபால் டுடூவின் மனைவி  பகிர்ந்துகொண்டுள்ளார். ஹிஷிமினி மண் குடிசையில் வசிக்கிறார். இரண்டு பெண்களும் விவசாயம் மற்றும் கட்டுமான கூலித்தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர்.

“நான் இரண்டு மாத குழந்தையாக இருந்தபோது எனக்கு ஜெய் பங்களா ஏற்பட்டதாக எனது தந்தை கூறினார். (1971ம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திரபோரின்போது, இந்தியாவில் ஏற்பட்ட வைரஸ் தொற்றுநோயை உள்ளூர் மொழியில் அவர்கள் ஜெய் பங்களா என்று அழைக்கின்றனர்). அந்த கணக்கின் படி அவருக்கு வயது 49, ஆனால் ஆதார் கார்டில் 55 வயது என்று இருக்கிறது. குழந்தையாக இருந்தபோது, அவரது மகள் கல்பனாவைப்போலவே அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். அதனால், அவரால் தொடர்ந்து பள்ளி செல்ல முடியவில்லை. எனவே ஒன்றாம் வகுப்போடு தனது படிப்பை முடித்துவிட்டார். எனவே அவருக்கு அவரது பெற்றோர் வீட்டில் உள்ள ஆடு,மாடுகளை பராமரிக்கும் வேலையை கொடுத்துவிட்டனர். லட்சுமியின் தந்தை கொத்தனார் மற்றும் தாய் விவசாயக்கூலித்தொழிலாளியாகவும் கங்கராம்பூரில் உள்ளனர்.

“எனக்கு எப்படி எழுதுவது, படிப்பது என்றே தெரியாது“ என்று லட்சுமி கூறுகிறார். அவரின் மற்ற இரு சகோதரிகளும் 10ம் வகுப்பு வரை படித்துள்ளனர். அவர் படிக்காததால்தான், அவரது குழந்தைகளின் கல்வி அவருக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. ஜியேத்து இறந்தவுடன், லட்சுமியின் ஒரு சகோதரி ஷிப்நாத்தை தன்னுடன் அழைத்துக்கொண்டார். அவர் அருகில் உள்ள உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தன்கோன் கிராமத்தில் உள்ளார். அவர் உள்ளூர் அங்கன்வாடி மையத்தில் பணிபுரிகிறார். பையனின் படிப்பிற்கு உதவியும் செய்கிறார். “பொதுத்தேர்வுகள் முடிந்தவுடன் அவனை நான் அழைத்து வந்துவிடுவேன்“ என்று ஷிப்நாத் குறித்து லட்சுமி கூறுகிறார். ஷிப்நாத் 10ம் வகுப்பு மாணவர்.

லட்சுமிக்கு சொந்தமாக விவசாய நிலம் கிடையாது. அவரது கணவரின் நிலம் (அதுகுறித்து அவர் விளக்கமாக பேச விரும்பவில்லை) அவரது இரண்டு மகள்களின் திருமண செலவிற்காக விற்கப்பட்டது. சந்தானாவுக்கு 2007ம் ஆண்டும், கல்பனாவுக்கு 2014ம் ஆண்டும் திருமணம் நடைபெற்றது. சந்தானா, கங்காராம்பூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடைல் கிராமத்தில் வசிக்கிறார். அவர் இல்லத்தரசியாக உள்ளார். அவரது கணவர் விவசாயக்கூலித்தொழிலாளியாகவும், தனியார் ஆசிரியராக பகுதிநேர வேலையும் செய்து வருகிறார்.

2020ம் ஆண்டு ஆகஸ்ட், காரீப் பருவ நெற்பயிருக்கான பணிகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தபோது, அருகில் உள்ள நில சொந்தக்காரர்களின் வயல்களில் வேலை செய்வதற்கு அவரது இளைய மகள் ஷிபானியின் உதவியை லட்சுமி நாடினார்.

In August 2020, when the kharif plantation of paddy was on, Laxmi (left) had enlisted Shibani's (right) help to work in the fields
PHOTO • Saurabh Sarmadhikari
In August 2020, when the kharif plantation of paddy was on, Laxmi (left) had enlisted Shibani's (right) help to work in the fields
PHOTO • Saurabh Sarmadhikari

2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், காரீப் பருவ நெற்பயிர்களுக்கான பணி முழுவீச்சில் நடைபெற்றபோது லட்சுமி (இடது) வயல்களில் வேலை செய்வதற்கு அவரது இளைய மகள் ஷிபானியின்(வலது) உதவியை நாடினார்

இந்தப்பகுதிகளில், ஜன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் நெல் விதைக்கப்பட்டு, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. லட்சுமி மற்ற பயிர்களையும் விளைவிக்கிறார். முக்கியமாக சணல், கடுகு, உருளைக்கிழங்கு, மிளகாய் ஆகியவையாகும். சில நேரங்களில் ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சணல் அறுவடை மற்றும் நெல் நடவு இரண்டும் ஒன்றாக நடைபெறும். லட்சுமி நெல் வயல்களில் வேலை செய்வதை விரும்புவார். சணல் அறுவடை கடினமானதாக இருக்கும். ஆனால் அவருக்கு வேறு வழி கிடையாது.

“மொத்தத்தில் ஆண்டுக்கு 2 முதல் 3 மாதங்கள் வயல் வேலை செய்வோம். எஞ்சிய நாட்களில் நாங்கள் கட்டுமான தொழிலாளராக பணிபுரிவோம்” என்று லட்சுமி கூறுகிறார். வீடுகளை சீரமைக்கும் பணிகளையும் அவ்வப்போது செய்வார். கங்காராம்பூர் நகராட்சியைச் சுற்றியுள்ள ஊர்களில் விவசாயச்கூலி தொழிலாளர்களுக்கு, கட்டுமானப்பணிகள் கிடைப்பது கடினம் என்று அவர் மேலும் கூறுகிறார். ஏனெனில் இவரைப்போன்ற கூலித்தொழிலாளர்கள், ஒப்பந்க்காரரின் வழக்கமான பட்டியலில் இருக்கமாட்டார்கள். பெரும்பாலான நேரங்களில், அவர்களுக்கு வேலை கிடைப்பதற்காக நிறைய நாட்கள் காத்திருக்க வேண்டிவரும்.

லட்சுமியைப்போன்று அவ்வப்போது  வேலை செய்யும் பணியாளர்களுக்கெல்லாம், கட்டுமான தொழிலில் நாளொன்றுக்கு ரூ.200 மட்டுமே கூலியாக கிடைக்கும். அதே நேரத்தில் விவசாயக்கூலித்தொழிலில் நாளொன்றுன்னு ரூ.150 முதல் ரூ.300 வரை கிடைக்கும். (மேற்கு வங்காளத்தில் திறன்பெறாத தொழிலாளருக்கான நாள் கூலி ரூ.257 ஆகும்) மாத வருமானம் ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரத்துடன், லட்சுமி, பொது வினியோக திட்டத்தை அரிசி, கோதுமை, சர்க்கரை (அது எப்போதும் கிடைப்பதில்லை) மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையில் கிடைக்கும் என்பதற்காக அதை சார்ந்திருக்கிறார்.

தொடர் விவசாய வேலைகள் இருக்கும் நாட்களில் லட்சுமி, அதிகாலை 4 மணி முதலே வேலைகளை துவக்கி விடுகிறார். வீட்டு வேலைகளை முடித்து, 4 மணி நேரம் கழித்து வேலைக்குச் சென்று விடுகிறார். அவரது மகள் ஷிபானியை அவர் வீட்டுவேலைக்கு அழைப்பதில்லை. வயலில் அவர் வேலை செய்த நேரம் போத எஞ்சிய நேரத்தில் அவர் படிக்கிறார். “என்னால் வேலைகளை கவனித்துக்கொள்ள முடிந்தபோது வேலைகளை நான் செய்துகொண்டு அவரை படிக்க விட்டுவிடுவேன்“ என்று லட்சுமி கூறுகிறார்.

Shibani has participated and won prizes – including a cycle – in many sports events, but she had to give up these activities to help her mother earn
PHOTO • Saurabh Sarmadhikari
Shibani has participated and won prizes – including a cycle – in many sports events, but she had to give up these activities to help her mother earn
PHOTO • Saurabh Sarmadhikari

ஷிபானி, நிறைய விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளை வென்றுள்ளார். ஆனால், அவரின் தாயாருக்கு உதவுவதற்காக அவர் இவற்றை விடவேண்டியுள்ளது

ஷிபானி, கங்காராம்பூர் கல்லூரியில் பிஏ இரண்டாமாண்டு மாணவி, அவர் கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படையில் (என்சிசி- இந்திய பாதுகாப்பு படையுன் இணைக்கப்பட்டது) சேர விரும்பம் தெரிவித்துள்ளார். அவர் ஒரு விளையாட்டு வீராங்கனை, 2011 மற்றும் 2012ம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற கபாடி போட்டியில் கலந்துகொண்டதற்காக சான்றிதழ்களை என்னிடம் காட்டினார். 2011ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான கபாடி போட்டிகளுக்கு உத்தர் பங்கா மண்டல (மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கியது) அணியை தனது 13 வயதில்  வழி நடத்திச்சென்றுள்ளார். அவர் 2013ம் ஆண்டில் உள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், வெற்றி பெற்று, பரிசாக பெற்ற சைக்கிளை நம்மிடம் பெருமையுடன் காண்பிக்கிறார்.

ஆனால், அவரை என்சிசியில் சேர லட்சுமி அனுமதிக்கதில்லை. “அதற்குத் தேவையான உடைகள் வாங்க அதிக பணம் தேவைப்படும். அவர் தினமும் கல்லூரி செல்ல வேண்டும்“ என்று லட்சுமி கூறுகிறார். ஷிபானி, தேர்வு நாட்கள் மற்றும் முக்கியமான நாட்களில் மட்டுமே கல்லூரிக்கு செல்கிறார். மற்ற நாட்களில், குறிப்பாக விவசாயப்பணிகள் நடைபெறும் நாட்களில், அவர், அவரது தாய்க்கு உதவ வேண்டும்.

அவரது என்சிசி கனவு மற்றும் அவரது மற்ற விளையாட்டு போட்டிகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்வது குறித்து, “எனக்கு மிகக் கஷ்டமாக உள்ளது. ஆனால், என்ன செய்ய முடியும். வேறு வழியில்லை“ என்று சோகமாக கூறுகிறார் ஷிபானி.

ஷிபானி மற்றும் ஷிப்நாத் படித்திருந்தாலும், அவர்களுக்கு வேலை கிடைப்பது கடினம் என்பது லட்சுமிக்கு தெரியும். “காலம் நன்றாக இல்லை. நான் என் குழந்தைகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால், நான் எந்த நம்பிக்கையும் வைக்கவில்லை‘ என்று அவர் கூறுகிறார். பாதுகாப்பு படையில் சேர வேண்டும் என்ற ஷிப்நாத்தின் கனவுகளை லட்சுமி ஆதரிக்கிறார். ஷிபானிக்கு, திருமணம் செய்யவே விரும்புகிறார். அதற்கு மணமகன் தேடும் பணியும் நடக்கிறது.

“நானும் விவசாய கூலித்தொழிலை சார்ந்து, அதே வழியை தொடர வேண்டும். (எனது தாயைப்போல்)“ என்று ஷிபானி கூறுகிறார். அவரது உறவினரிடம் இருந்து தையல் கலையை கற்றுக்கொண்டிருக்கிறார். அதன் மூலம் ஒரு கடையை திறப்பதற்கு லட்சுமிக்கு உதவுவதற்கு நம்பிக்கை கொண்டுள்ளார்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Saurabh Sarmadhikari

ସୌରଭ ସର୍ମାଧିକାରୀ ପଶ୍ଚିମବଙ୍ଗର ଗଙ୍ଗାରାମପୁର ପୌରାଞ୍ଚଳରେ ଏକ ମହାବିଦ୍ୟାଳୟରେ ଇଂରାଜୀ ସାହିତ୍ୟ ପଢାନ୍ତି।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Saurabh Sarmadhikari
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Priyadarshini R.