உழவர் திருமூர்த்தி, தன் தந்தையின் நினைவு நாளுக்கு வைக்கும் படையல் மிகவும் புதுமையானது. பத்து விதமான சோப்புகள்; பலவகை தேங்காய் எண்ணெய் ரகங்கள் மற்றும் அவருடைய மாபெரும் வெற்றிப் படைப்பான மஞ்சள் தூள். இவை தவிர, செவ்வாழை சீப்பு, பூக்கள், தேங்காய் போன்றவையும் படைக்கப்பட்டு, மாலையிடப்பட்ட தந்தை சுந்தரமூர்த்தியின் புகைப்படத்துக்கு காட்டப்படும் கற்பூர ஆரத்தியுடன் நினைவு நாள் படையல் நிறைவு பெறுகிறது
’என் அப்பாவுக்கு இதைவிடச் சிறந்த மரியாதை வேறென்ன இருக்க முடியும்?’, எனத் தன் முகநூல் நிலைத்தகவலில் கேட்கிறார் திருமூர்த்தி. பல ஆண்டுகள் முன்பேயே அவர் தந்தை மஞ்சள் விவசாயத்தை நிறுத்தி விட்டிருந்தார். திருமூர்த்தி, அதை மீண்டும் கையில் எடுத்த போது, அனைவரும் வேண்டாம் எனச் சொன்னார்கள்.
‘மல்லிப்பூ விவசாயம் பண்ணு.. தினமும் வருமானம் வரும் என்றார்கள்.. அதை மறுத்து, மஞ்சள் விதைத்த போது அனைவரும் சிரித்தார்கள்’, எனப் புன்னகையுடன் நினைவு கூர்கிறார் திருமூர்த்தி. மஞ்சள் வேண்டாம் எனச் சொன்ன ஆலோசனை தவறு என நிரூபித்தார் திரு. மஞ்சள் சாகுபடியில் அவரது வெற்றி, அரிதான ஒன்று. மகத்தான ஒன்று.
ஈரோடு மாவட்டம், பவானி சாகர் தாலுக்கா, உப்புப்பள்ளம் குக்கிராமத்தில் வசிக்கும் 43 வயதான திருமூர்த்தி, 12 ஏக்கர் நிலத்தில் (அவரும், அவரது சகோதரரும் உரிமையாளர்கள்) விவசாயம் செய்து வருகிறார். மஞ்சள், வாழை, தென்னை என மூன்று பயிர்களைச் சாகுபடி செய்துவருகிறார். ஆனால், அவற்றை மொத்த வியாபாரிகளுக்கு விற்பதில்லை. அந்த வணிக முறையில், விற்பனை விலை உங்கள் கையில் இல்லை.. எனவே, அதைச் செய்வதில் எந்தப் பிரயோசனமுமில்லை என்கிறார் திருமூர்த்தி. உள்ளூரில், மாநில அளவில், தேசிய அளவில், உலக அளவில், விலை நிர்ணயம் செய்வது பெரும் வணிகர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசுகள்
2019 ஆம் ஆண்டு, இந்தியா 190 மில்லியன் டாலர் மதிப்புள்ள மஞ்சள் பொருட்களை ஏற்றுமதி செய்தது. இது உலக மஞ்சள் வணிகத்தில் 62.6% சதவீதமாகும். இந்தியா உலகின் இரண்டாவது பெரிய (11.3%)மஞ்சள் இறக்குமதியாளரும் கூட. கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரும் இறக்குமதி, இந்திய மஞ்சள் உற்பத்தியாளர்களைப் பெரிதும் பாதித்துள்ளது .
உள்ளூர் சந்தைகள், குறிப்பாக ஈரோடு மஞ்சள் மண்டிகள், உற்பத்தியாளர்களை நசுக்கி வருகின்றன. பெரும் வணிகர்களும் நிறுவனங்கள் சார்பாக பெருமளவில் கொள்முதல் செய்பவர்களும்தான், மஞ்சளின் விற்பனை விலையை நிர்ணயிக்கிறார்கள். இங்கே இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சளுக்கு உயர் விலை கிடைப்பதில்லை. மஞ்சள் விலைகள் வருடத்துக்கு வருடம் பெருமளவில் வேறுபடுகின்றன. 2011 ஆம் ஆண்டு, குவிண்டாலுக்கு 170000 என்னும் உயர்விலையைத் தொட்ட மஞ்சள், அடுத்த ஆண்டே, அதில் நான்கில் ஒரு பங்காக வீழ்ச்சி அடைந்தது. 2021 ஆம், மஞ்சள் குவிண்டாலுக்கு 7000 ரூபாய் என்னும் அளவில் உள்ளது.
தன் முனைப்பு, விடா முயற்சி மற்றும் சமூக ஊடக ஆதரவு இவற்றின் மூலமாக, இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை திருமூர்த்தி அடைந்துள்ளார் – மதிப்புக் கூட்டுதல் என்பதே அது. இவ்வழியை எல்லா உழவர்களும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், இது மிக முக்கியமான சாதனை.
‘நான் என் தோட்டத்தில் விளையும் தேங்காயை அப்படியே விற்றால், எனக்கு ஒரு காய்க்கு 10 ரூபாய் கிடைக்கும். ஆனால், அதிலிருந்து எண்ணெயை எடுத்து, சோப்புகள் மற்றும் கூந்தல் எண்ணெய் தயாரித்து விற்கையில், ஒரு காய்க்கு 30 ரூபாய் வரை கிடைக்கிறது. மஞ்சளிலும் இதேதான். 1.5 ஏக்கரில் இயற்கை வழியில் நான் உற்பத்தி செய்யும் மஞ்சளான 3000 கிலோவை, நான் மண்டியில் விற்றால், எனக்கு கிலோவுக்கு 50 ரூபாய் நஷ்டம் ஆகும்’, என்கிறார் திருமூர்த்தி.
இயற்கை வழியில் மஞ்சள் உற்பத்தியில் ஈடுபடுவதால், திருமூர்த்திக்கு உற்பத்திச் செலவுகள் அதிகம். ஆனாலும், அவர் உரம், பூச்சி மருந்துகளை உபயோகித்து உற்பத்தி செய்யும் தன் சக உழவர்களை விட, மஞ்சள் உற்பத்தியில் லாபம் சம்பாதிக்கிறார். இதன் காரணம், அவர் மஞ்சளை, மண்டியில் மொத்த வியாபாரிகளிடம் விற்காமல், மதிப்புக் கூட்டி, நேரடியாக நுகர்வோருக்கு விற்பதேயாகும்.
சத்தியமங்கலம் மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் திருமூர்த்தியின் தோட்டம் ஒரு அழகிய சோலை எனச் சொல்ல வேண்டும். மரகதப்பச்சை வயல்களின் முடிவில் நீல நிற மலைத்தொடர்.. மலைகளின் உச்சியில் மேக மணிமுடி என மனதைக் கொள்ளை கொள்ளும் சூழல்
தோட்டத்தில் மஞ்சள் பயிர் உயரமாக வளர்ந்து, லேசான மழையில் நனைந்து, அக்டோபர் மாத வெயிலை உள்வாங்கி அகலமான இலைகளுடன் இருந்தன. வயல்களின் விளிம்பில் வரிசையாக வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களில், தூக்கணாங் குருவிகள் கூடு கட்டியிருந்தன. கீச் கீச் எனச் சத்தமிட்டுக் கொண்டு முன்னும் பின்னும் பறந்து கொண்டிருந்தன. அந்தச் சூழல், திருமூர்த்தி என்னும் உழவரின் போராட்டங்களை, பிரச்சினைகளை சில கணங்கள் மறக்கச் செய்கின்றன
பின்னர், பிங்க் நிறச் சுவர்களும், சிமெண்ட் தரையும் கொண்ட அவர் வீட்டில் அமர்ந்து பேசத் தொடங்குகிறோம். அவர் மடியில் அமர்ந்திருக்கும் நான்கு வயது மகளின் வெள்ளிக் கொலுசுகள், ’ஜல் ஜல்’, எனப் பின்ணணி இசை போல ஒலிக்கின்றன.
’ நான் உற்பத்தி செய்யும் மஞ்சளைப் பொடியாக்கி, ½ கிலோ, 1 கிலோ என நேரடியாக நுகர்வோருக்கு விற்றால் மட்டுமே என்னால் லாபம் பார்க்க முடியும்.. தேங்காயிலும் அது போலத்தான். தேங்காயாக விற்காமல், எண்ணெயாக மாற்றி, சோப், கூந்தல் தைலம் என விற்கிறேன்’, என்கிறார் திருமூர்த்தி. அவர் பயிர் செய்யும் எல்லா வேளாண் பொருட்களையும் மதிப்புக் கூட்டி மட்டுமே விற்கிறார்.
எல்லா மஞ்சள் உற்பத்தியாளர்களையும் போல, இவரும் மஞ்சளை அறுவடை செய்து, வேகவைத்து, காய வைத்து, பாலீஷ் செய்கிறார். பாலீஷ் செய்த பிறகு மற்ற உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு மண்டிக்கு அனுப்பவோ அல்லது நல்ல விலை வரும் வரை காத்திருக்கவோ செய்கிறார்கள். ஆனால், திருமூர்த்தி, பாலீஷ் செய்யப்பட்ட மஞ்சளை, தன் வீட்டிலேயே பத்திரமாக வைத்து, மதிப்புக் கூட்டும் பணிகளைத் தொடங்குகிறார்.
தன்னிடம் உள்ள மஞ்சள் விரலிகள் மற்றும் கிழங்குகளை நுகர்வோர் தேவைக்கேற்ப பொடிகளாக மாற்றி அனுப்பத் தொடங்குகிறார். மஞ்சளில் இருந்து அழகுப் பொருட்களாகவும், மாற்றவும் செய்கிறார். இந்த மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல் மூலமாக, ஒரு கிலோவுக்கும் 150 ரூபாய் வரை கூடுதல் வருமானம் ஈட்டுகிறார்.
‘எல்லாப் பணத்தையும் நானே வைத்துக் கொள்வதில்லை’, என்கிறார் திரு. ஒரு பாகத்தை நிலத்தில் மீண்டும் முதலீடு செய்கிறார்.. இதன் மூலமாக, அறுவடை மற்றும் சந்தைப்படுத்தும் சீசனின் போது, 5 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வேலை கொடுக்க முடிகிறது. ஆண்களுக்கு 400 ரூபாயும், பெண்களுக்கு 300 ரூபாயும் கூலி.. தினமும் இருவேளை டீ மற்றும் போண்டா கூடுதல் செலவு. ‘கேட்டால், பெட்ரோல் 100 ரூபாய்க்கு விக்கிது, ஒரு க்வார்ட்டர் சாராயம் 140 ரூபாய்னு சொல்றாங்க.. ஆனா இதெல்லாமே மஞ்சள் விலையை உயர்த்த மாட்டேங்குது’, எனச் சிரிக்கிறார் திரு.
*****
தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும்; குன்றகச் சிலம்பும்.
தமிழகத்துக்கும் மஞ்சளுக்கும் உள்ள உறவு தொன்று தொட்ட ஒன்றாகும். இதற்குச் சான்றாக, மலைபடுகடாம் என்னும் சங்கப்பாடலை மேற்கோள் காட்டுகிறார் OldTamilPoetry.com என்னும் இணைய தளத்தை நடத்தி வரும் செந்தில்நாதன்
இந்தியச் சமையலறையின் ராணியான மஞ்சளின் அறிவியற் பெயர் Curcuma longa. இதுவும் இஞ்சியும் தாவரவியல் கணக்குகளின் படி ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை. மண்ணின் கீழ் விளையும் மஞ்சளின் பருத்த பகுதி கிழங்கு என அழைக்கப்படுகிறது. அதிலிருந்து விரல் போல வளரும் பகுதிகள், ‘விரலி’, என அழைக்கப்படுகின்றன. அறுவடைக் காலத்தில், கிழங்கும், விரலியும் பிரிக்கப்படுகின்றன. அவை தனித்தனியே வேகவைக்கப்பட்டு, காய வைக்கப்பட்டு பின்னர் பாலீஷ் செய்யப்படுகின்றன. பாலீஷ் செய்யப்பட்ட மஞ்சள் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சந்தையில், ‘விரலி’, அதிக விலைக்கு விற்கப்படுகிறது
உணவு வரலாற்றாசிரியரான கே.டி ஆச்சையா மஞ்சள் இந்தியப் பகுதிக்குச் சொந்தமான தாவரமாக இருக்க வேண்டும் என்கிறார். இதன் அடர் மஞ்சள் நிறமும், கெட்டியான சாயமும், இதற்கு இந்திய மதம் மற்றும் மாந்த்ரீகச் சடங்குகளில், இதற்கு ஒரு முக்கியமான இடத்தைக் கொடுத்திருக்கக் கூடும் என மேலும் சொல்கிறார். இந்தியாவெங்கும் மஞ்சள் உணவிலும், கலாச்சாரச் சடங்குகளிலும் உபயோகிக்கப்படுகிறது. உணவில் ஒரு சிட்டிகை மஞ்சள், உணவுக்கு நிறத்தையும், மணத்தையும் தருகிறது, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கர்க்யூமென் (Curcumin) என்னும் பொருளுக்கு மருத்துவ சக்தி உள்ளது. உடல் அழற்சி மற்றும் பல மருந்துகளில் இது ஒரு உட்பொருளாகப் பயன்படுகிறது
நவீன அறிவியலர்களுக்குப் பல நூற்றாண்டுகள் முன்பேயே இதன் மருத்துவ குணங்களை நமது மூதன்னையர் கண்டுபிடித்து விட்டனர்.. வீட்டில் யாருக்குச் சளி பிடித்தாலும், மஞ்சளும், குறுமிளகும் கலந்து காய்ச்சிய பால்தான் நமது பாட்டிகள் வசம் இருந்த வைத்திய முறை . புகழ்பெற்ற ஸ்டார் பக்ஸ் நிறுவனம், டர்மரிக் லாட்டே (Turmeric Latte) என்னும் ஒரு பானத்தை விற்பனை செய்கிறார்கள். ஓட்ஸ் பாலும், வனில்லாவும் கலந்து நுரைக்கும் அந்த பானத்தை டர்மரிக் லாட்டே என அழைப்பதை என் பாட்டி ஒருக்காலும் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்
மஞ்சம் மங்கலகரமான ஒரு பொருளாக இந்தியாவில் கருதப்படுகிறது. தென்னிந்தியாவில், திருமணமான பெண்கள், மஞ்சள் பூசப்பட்ட கயிறைத் தாலிக்கயிறாகக் கட்டிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. பெண் குழந்தைகள் பூப்பெய்துவதைக் கொண்டாடும் விழா, மஞ்சள் நீராட்டு என அழைக்கப்படுகிறது. மஞ்சள் ஒரு கிருமி நாசினியாக, காயங்களின் மீது பூசப்படுகிறது. விலங்குகளுக்கான கிருமிநாசினி மருந்துகளிலும் மஞ்சள் உபயோகிக்கப்படுகிறது
1997 ஆம் ஆண்டு, அமெரிக்கா, மஞ்சள் மீதான காப்புரிமையை வழங்க முடிவெடுத்த போது, இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR), இந்தியாவில், மஞ்சள் பல நூற்றாண்டுகளாக , காயத்தைக் குணப்படுத்தும் மருந்தாகச் சமூகத்தில் பயன்படுத்தப்படுவதை நிறுவி, அதற்கான காப்புரிமை தனியாருக்கு வழங்கப்படுவதைத் தடுத்தி நிறுத்தியது.
அதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெரிதும் வரவேற்றிருப்பார். 1959 ஆம் ஆண்டு வெளியான ‘வீரபாண்டியக் கட்ட பொம்மன்’ திரைப்படத்தில் கட்ட பொம்மனாக நடித்த அவர், தன்னிடம் வரிகேட்டு வந்த வெள்ளை அதிகாரி ஜாக்சனைப் பார்த்து, ‘வானம் பொழிகிறது; பூமி விளைகிறது.. உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி? எங்களுடன் வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? இல்லை அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா?‘, என சிம்மக்குரலில், உள்ளூர் சமூகத்தின் உரிமைக்குரலாக முழங்கியவரல்லவா?
*****
"
என் தந்தையின் கடின உழைப்பின் பலனை
நான் அறுவடை செய்கிறேன்."
– திருமூர்த்தி
PARI யின் கட்டுரைக்காக, இரண்டு முறை திருமூர்த்தியைச் சந்தித்தோம். 2021 மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில். காற்றில் அசையும் மஞ்சள்ப் பயிர் வரிசைகளுக்கு நடுவே, தன் வேட்டியின் நுனியைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து வரும் திருமூர்த்தி, தனது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார். தனது 18 வயதிலிருந்தே வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார்.
’இப்போது நாங்கள் வசிக்கும் உப்புப்பள்ளம், எங்கள் அம்மாவின் ஊர். 70 களில், ஏக்கர் 10-20 ஆயிரம் என வாங்கி, அப்பா இங்கேயே குடிவந்தார். இப்போ இங்கே ஏக்கர் விலை 40 லட்சம் வரை போகிறது. பத்து ஏக்கர் மொத்தமாக வாங்கவும் முடியாது’, என்கிறார் திருமூர்த்தி. பத்தாம் வகுப்போடு தன் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட திருமூர்த்தி, 2009 ல், தனது 31 ஆவது வயதில் தொடங்கினார் முழுமையாக இயற்கை வேளாண்மையைத் தொடங்கினார்.
விவசாயம் அவரது முதல் தேர்வு அல்ல.. அதற்கு முன் பல தொழில்களைச் செய்திருக்கிறார். வீட்டிலேயே ஒரு மளிகைக்கடை தொடங்கி, எலந்த வடை, தின்பண்டங்கள், அரிசி, சிகரெட், பீடி, தீபாவளிக் காலத்தில் பட்டாசுகள் என விற்பனை செய்திருக்கிறார். தொழில் செய்ய வேண்டும் என்னும் ஆசை, அவரைப் பல தொழில்களுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. கேபிள் டீவி, பால் வணிகம் என.
பின்னர், தன் அக்கா வசிக்கும் பெங்களூர் சென்று மோட்டார் சைக்கிள் சர்வீஸ் சென்டர் தொடங்கி நடத்தியிருக்கிறார். அதையடுத்து, ஒரு சின்ன நிதிநிறுவனத்தில் வேலை. கடைசியாக பழைய கார்களை வாங்கி விற்றல்.. ’14 வருடங்களில், ஆறு தொழில்கள் / வேலை என மிகச் சிரமப்பட்டேன். கையைச் சுட்டுக் கொண்டேன். மிகக் குறைவான வருமானம், 2500 ரூபாய் வாடகைக்கு, 6X10 என்னும் சிறிய அறையை, இன்னொரு நண்பருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல். நாய் படாத பாடு பட்டேன்’, எனத் தன் பெங்களூர் நாட்களை நினைவு கூர்கிறார்.
’2009 மார்ச் மாதம் திரும்பவும் சத்தியமங்கலம் வந்ததும், விவசாயம் மீது பெரும் ஈடுபாடு வந்துருச்சு’. தன் அப்பா செய்து வந்த கரும்பு உற்பத்தியுடன், குச்சிக் கிழங்கு மற்றும் வெங்காயத்தைப் பயிர் செய்யத் தொடங்கினார்.
’நெறயத் தப்புப் பண்ணி விவசாயத்த கத்துகிட்டேன்.. 2010 ஆம் வருஷம், விதை வெங்காயம் கிலோ 80 ரூபாய்னு வாங்கி வெதச்சேன். அறுவடை செய்யறப்போ, வெங்காய வெல கிலோ 11 ந்னு விழுந்துருச்சு. மரண அடி’, எனப் பெருமூச்செறிகிரார். நல்ல வேளையாக, அவர் பயிரிட்ட மற்ற பயிர்கள் அவரைக் காப்பாற்றின. அவர் தந்தை மறைந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, அவர் குடும்பம் மஞ்சள் சாகுபடியை நிறுத்தி ஒன்பதாண்டுகள் கழித்து, 2014 ஆம் ஆண்டு அவர் மீண்டும் மஞ்சள் சாகுபடியைத் தொடங்கினார்.
*****
"மஞ்சள் வணிகத்தில் யாரோ லாபம் சம்பாதிக்கிறார்கள்.. அது பெரும்பாலும்,
மஞ்சள் உற்பத்தி செய்யும் உழவராக இருப்பதில்லை..."
– ஈரோடு மஞ்சள் உற்பத்தியாளர்கள்
தமிழ்நாட்டில் மஞ்சள் 56000 ஏக்கர் நிலத்தில் பயிர்செய்யப்படுகிறது. வருட உற்பத்தி 86000 டன். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 12750 ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. மஞ்சள் உற்பத்தியில், தமிழகம், நான்காவது இடத்தில் உள்ளது.
திருமூர்த்தி பயிர் செய்யும் 1.5 ஏக்கர் அதிலொரு சிறுதுளி மட்டுமே. 2014 ஆம் ஆண்டு, அரை ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யத் தொடங்கினார். மீதமுள்ள நிலத்தில் வாழையும், தென்னையும் நட்டார். அறுவடை செய்து, பதப்படுத்திய முதல் 10 நாட்களிலேயே, தனது முகநூல் தொடர்புகள் வழியே 300 கிலோ மஞ்சள் தூளை விற்றுவிட்டார்.. அரை ஏக்கர் நிலத்தில் உற்பத்தியான 1 டன் மஞ்சளையும் மிக எளிதாக விற்க முடிந்தது. தனது பொருட்களுக்கு, ‘ஏர்முனை’, எனப் பெயரிட்டார். ‘ஏன்னா, ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை’. அவரது ‘ஏர்முனைச் சின்னம் இரட்டை மாடுகள் பூட்டி ஏர் உழும் ஒரு உழவனின் சின்னம். தன் முயற்சியில் பெரு வெற்றியடைந்தார் திரு
அதனால் ஊக்கமடைந்து, அடுத்த ஆண்டு 2.5 ஏக்கர் நிலத்தில் மஞ்சள் பயிரிட்டார். கிடைத்த 5 டன் மஞ்சளில், 1 டன் மட்டுமே விற்கமுடிந்தது. மீதி 4 டன் மீந்து போனது. தனது உற்பத்திக்கு, ‘இயற்கைவழி உற்பத்தி’, எனச் சான்றிதழ் பெற முயன்றார். மிகக் கடினமான, செலவு பிடிக்கும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. வேறு வழியின்றி, மஞ்சளை, ஈரோட்டில் உள்ள ஒரு மசாலாக் கம்பெனிக்கு விற்க வேண்டி வந்தது. குவிண்டால் 8100 என்னும் விலைக்கு வாங்கிக் கொண்ட மசாலாக் கம்பெனி, ஒரு வாரம் கழித்து, 15 பின் தேதியிட்ட, வெளி மாநிலக் காசோலையாகப் பணம் கொடுத்தார்கள்.
அந்தக் காசோலை பணமாக மாற பல வாரங்கள் பிடித்தது. அந்த வருடம்தான் பணமதிப்பிழப்பு நடந்த வருடம் – 2017. ‘அதிலிருந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன். என்னால், சில்லறையாக விற்க முடியும் வகையில், 1 அல்லது 1.5 ஏக்கர் நிலத்தில் தான் மஞ்சள் பயிரிடுகிறேன். ஒரு வருடம் பயிர் செய்த பின்னர், ஒரு வருடம் பயிர் எதுவும் செய்யாமல், நிலத்துக்கு ஓய்வு கொடுத்து விடுகிறேன்’, என்கிறார் திரு.
ஜனவரி மாதத்தில், நிலத்தைத் தயார் செய்து, இரண்டு முறை சிறுதானியங்களை விதைத்து, 45 நாட்களில் மடக்கி உழுதுவிடுகிறார். இது மண்ணுக்கு நைட்ரஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை அளிக்கிறது. இதற்கு ஏக்கருக்கு 15000 செலவாகிறது. அதன் பின்னர், மஞ்சள் விதைக்க, உழவு ஓட்டி, பாத்திகளைத் தயார் செய்கிறார். இதற்கு 15000 ஆயிரம் செலவாகிறது. அதன் பின்னர் சொட்டு நீர்க் குழாய்களை வயலில் அமைக்கிறார். 800 கிலோ விதைக் கிழங்குகளை, கிலோ 40 என்னும் செலவில் நடுகிறார். இதற்கன வேலையாள் கூலி ரூபாய் 5000. மஞ்சள் முளைத்த பின்னர், ஏக்கருக்கு 2 டன் ஆட்டுப் புழுக்கை உரமிடுகிறார். இது மஞ்சள் பயிருக்கு, மாட்டுச்சாணத்தை விட நல்ல பலனைத் தருகிறது என்பது அவர் அனுபவம். அதன் செலவு 14000.
பின்னர், பயிர் அறுவடை வரையில், 6 முறை களையெடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் ஏக்கருக்குப் பத்தாயிரம் வரை செலவாகிறது. அறுவடைக்கு ஆகும் செலவு 40000. 20 ஆண்களும், 50 பெண்களும் வந்து ஒரே நாளில் அறுவடையை முடித்து விடுகிறார்கள். அறுவடை நன்றாக இருந்தால், இன்னும் ஒரு 5000 சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும்.
இறுதியாக, அறுவடை செய்யப்பட்ட மஞ்சள், வேகவைத்து, காய வைக்கப்படுகிறது. பின்னர், அது பாலீஷ் செய்யப்படுகிறது. இதை இரண்டு வரிகளில் எழுதுவது சுலபம். உண்மையில், மிகவும் நுட்பமான உழைப்புடன், பல நாட்கள் தேவைப்படும் வேலை. இதற்கு ஒரு 65000 செலவாகிறது. ஒரு புறம் செலவு ஏறிக்கொண்டே செல்ல, மறுபுறம், மஞ்சளின் எடை பாதியாகக் குறைந்து விடுகிறது.
பத்துமாதங்கள் உழைத்து 2.38 லட்சம் ரூபாய் செலவுக்குப் பின்னர், கையில் 2000 கிலோ பாலீஷ் செய்யப்பட்ட மஞ்சள் கிடைக்கிறது. உற்பத்திச் செலவு கிலோவுக்கு 119 ரூபாயாகிறது. (இயற்கை முறையில், உயர் மகசூல் தரும் ரகங்களைப் பயிர் செய்கையில், மஞ்சளின் உற்பத்தி விலை, கிலோவுக்கு 80 ரூபாய் வரை ஆகிறது என்கிறார் கொடுமுடியைச் சேர்ந்த மஞ்சள் உற்பத்தியாளர் கே.என்.செல்லமுத்து)
திருமூர்த்தி, தன் விற்பனை விலையை மிகவும் புத்திசாலித்தனமாகத் திட்டமிடுகிறார். மஞ்சளைப் பொடியாக்கி, தயார் செய்ய கிலோவுக்கு 40 ரூபாய் வரையிலும், அதைப் பேக் செய்து, தனியார் அஞ்சல் வழி அனுப்ப கிலோவுக்கு இன்னொரு 40 ம் செலவாகிறது
அவரிடம் மொத்தமாக (20 கிலோ பேக்கில்) வாங்குபவர்களுக்கு கிலோ முன்னூறு என்னும் விலையில் தருகிறார். தன் பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்பவர்களுக்கு கிலோ 400 என்னும் விலையிலும், இந்தியாவிற்குள் உள்ள நுகர்வோருக்கு கிலோ 500 என்னும் விலையிலும் விற்கிறார். சந்தையில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டுத் தயார் செய்த மஞ்சள் தூள், கிலோ 375 முதல் ஆயிரம் வரை விற்கிறது. ஆனால், ஈரோட்டில், பாலீஷ் செய்த மஞ்சள் கிலோ 70 க்கு விற்கிறது. வாங்கும் இடைத்தரகர்கள், அதை மூன்று மடங்கு வரை விலை வைத்து விற்கிறார்கள்.
*****
"கத்தியின்றி ரத்தமின்றி, கார்ப்பரேட் நிறுவனங்கள் உழவர்களைத் தோற்கடித்து விட்டார்கள்."
– பி.கே.தெய்வசிகாமணி, தலைவர், இந்திய மஞ்சள் உற்பத்தியாளர்கள் சங்கம்
’நான் கடுமையான முயற்சிகள் செய்து போராடிப் பார்த்தேன்.. ஆனால், உழவர்களுக்கு ஒரு நியாயமான விலையை நிர்ணயிக்க என்னால் முடியவில்லை’, என்கிறார் தெய்வசிகாமணி. அக்டோபர் மாதத்தில் ஒரு மழைநாளில், ஈரோடு அருகில் உள்ள அவர் இல்லத்தில் PARI யின் சார்பாக அவரைச் சந்தித்தோம்.
’அரசாங்கங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களை நோக்கிச் செல்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசை உருவாக்குகின்றன. அது மாறும் வரையில், சிறு உழவர் மட்டுமல்ல, எந்த உழவருக்கும் எதிர்காலமில்லை. அமெரிக்காவிலும் வேளாண்மை லாபகரமாக இல்லை. அதை அவர்கள் ஆங்கிலத்தில் சொல்வார்கள்; நாங்கள் தமிழில் சொல்கிறோம். அவ்வளவுதான் வேறுபாடு’, என்கிறார்.
அந்தக் காலத்துப் பண்ணையார்களின் இடத்தை இன்று கார்ப்பரேட்கள் பிடித்துக் கொண்டுவிட்டன. நிதி வலிமை, பெரும் அலகு போன்றவை அவர்களுக்குச் சாதகமாக இருக்கையில், அவர்களால் நூற்றுக்கணக்கான டன்களை வாங்கிப் பதப்படுத்தி விற்பனை செய்ய முடிகிறது. சில டன்களை உற்பத்தி செய்யும் ஒரு சிறு உழவர், அவருடன் எப்படிப் போட்டி போட முடியும்?
ஈரோடு அருகில் உள்ள பெருந்துறை மஞ்சள் ஒழுக்குமுறை விற்பனைக் கூடம், தினமும் மஞ்சளை ஏலம் விடுகிறது. இதுதான் மஞ்சள் உற்பத்தியாளர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இடம். பல்லாயிரக்கணக்கான மஞ்சள் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க இங்கே வசதியுண்டு. PARI யின் சார்பாக நாம் சென்ற அக்டோபர் 11 ஆம் தேதியன்று, அதிக பட்ச விலையாக விரலி குவிண்டால் 7449 க்கும், கிழங்கு 6669 க்கும் விற்பனையானது. வணிகர்கள் ஏலத்தில் எடுக்கும் தொகையை எப்போது 9ல் முடியும்படியே எழுதுகிறார்கள்.. நியுமராலஜியின் மீதான நம்பிக்கை என்கிறார் விற்பனைக் கூட கண்காணிப்பாளர் அரவிந்த் பழனிச்சாமி.
ஏலம் தொடங்கும் முன்னர், விற்பனைக்கு வந்துள்ள 50 மஞ்சள் லாட்களில் இருந்து சாம்பிள்கள் எடுக்கப்பட்டு, ப்ளாஸ்டிக் ட்ரேகளில் வைக்கப்பட்டிருந்தன. வணிகர்களும், கொள்முதல் செய்பவர்களும், ஒவ்வொரு சாம்பிளையும் ஆராய்ந்து, உடைத்து நுகர்ந்து பார்க்கிறார்கள். சிலர், மஞ்சளைத் தரையில் விழவைத்து, அது எகிறுவதையும் கவனிக்கிறார்கள். கையில் எடைபோட்டு, விரலிடுக்குகள் இடையே விழவைத்துக் கவனிக்கிறார்கள்.. தங்கள் நோட்டுகளில் குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டு, அவர்கள் வாங்க விரும்பும் விலையை முடிவு செய்கிறார்கள். உள்ளூர் மசாலாக் கம்பெனியின் சார்பாக, கொள்முதல் செய்ய வந்திருந்த சி.ஆனந்த குமார், ‘நாங்கள் முதல் தர மஞ்சளை மட்டுமே வாங்குகிறோம்’, எனச் சொன்னார். ஏலத்துக்கு வந்திருந்த 459 மூட்டைகளில், 23 மூட்டைகளை அவர் அன்று கொள்முதல் செய்தார்.
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வருடாந்திர விற்பனை 40 கோடி ரூபாய் என்னும் தகவலை அரவிந்த் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். கொடுமுடியில் இருந்து 30 குவிண்டால் மஞ்சள் கொண்டு வந்திருந்த எல்.ரசீனாவுக்கு, அன்று குவிண்டாலுக்கு 5489 மட்டுமே கிடைத்தது.
தன்னிடம் மஞ்சளை பாதுகாப்பாக வைக்க வசதியில்லாத ரசீனா, மஞ்சளை அரசு குடோனில் வைத்திருக்கிறார். அதற்கான குடோன் வாடகை, நாளொன்றுக்கு, குவிண்டாலுக்கு 20 பைசாவாகும். சில உற்பத்தியாளர்கள் நல்ல விலை வர 4 வருடங்கள் கூடக் காத்திருக்கிறார்கள். ரசீனா, ஏழு மாதங்கள் மஞ்சளை, நல்ல விலை வரும் எனக் காத்திருந்து, 5 முறை ஏலத்தில் கலந்து கொண்டு இன்று குவிண்டாலுக்கு 5449 ரூபாய் என்னும் விலையில் விற்க முடிவு செய்தார். இதில் அவருக்கு நஷ்டமே.
’ஈரோடு, கோவை, சேலம் என்னும் கொங்குப் பகுதியில், வேளாண்மையை உழவர்கள், ஒரு கூடுதல் தொழிலாகத்தான் செய்கிறார்கள்.. இதை மட்டுமே செய்தால், பெரும் சிரமத்துக்குள்ளாவார்கள்’ என்கிறார் தெய்வசிகாமணி
தற்போது தமிழ்நாட்டில் 25000 முதல் 50000 பேர், மஞ்சள் உற்பத்தியில் இருக்கலாம் எனச் சொல்லும் தெய்வசிகாமணி, ‘ஒரு காலத்தில் விற்றது போல் குவிண்டால் 17000 க்கு விற்றால், தமிழகத்தில் 5 கோடி மஞ்சள் உற்பத்தியாளர்கள் இருப்பார்கள்’, எனச் சிரிக்கிறார். ’விலை குவிண்டாலுக்கு 5000 ஆக இருக்கையில், 10000 பேராக அது குறைந்துவிடும்’
’மஞ்சளை அதிகம் உற்பத்தி செய்யக்கூடாது. உற்பத்தி குறைவாக இருந்தால், நல்ல விலை கிடைக்கலாம்’, என்பது அவரது ஆலோசனை.
*****
"அதிக மகசூல் தரும் உயர் ரக விதைகளைத் தவிர்த்து, உள்ளூர் ரகங்களைப் பயிரிட
வேண்டும்."
– திருமூர்த்தி
சென்ற ஆண்டு மார்ச் மாதம் திருமூர்த்தி 2 டன் மஞ்சளை அறுவடை செய்திருந்தார். குவித்து வைக்கப்பட்டிருந்த மஞ்சளை, காய்ந்த மஞ்சள் இலைகளை வைத்து மூடாக்குப் போட்டிருந்தார். அதை வேகவைத்து, காயவைத்து, பாலீஷ் செய்யும் தொழிலாளர்கள் வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார். திருமூர்த்தி பழமைவாதியல்ல. தன் பண்ணையில் நீர்ப்பாசனத்துக்காக சூரிய ஒளிச் சக்தியைப் பயன்படுத்துகிறார். பயிர் செய்ய உள்ளூர் ரகங்களையே பயன்படுத்துகிறார். ‘ ஈரோடு ரக’ , மஞ்சளுக்கு பௌதீக அடையாளம் கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக இருக்கிறது.
அதிக மகசூலை மட்டுமே லட்சியமாக வைத்து இயங்கும் வேளாண் ஆராய்ச்சி நிலையங்களின் மீது, திருமூர்த்தி கடுமையாக விமரிசிக்கிறார். அது வேதி உரப்பயன்பாட்டை அதிகரித்து, உற்பத்திச் செலவை அதிகரிக்கும் ஒன்று என்கிறார். ‘அதற்கு பதிலாக, எங்கள் உற்பத்திக்கு ஒரு நல்ல விலை கிடைக்குமாறு செய்தால் என்ன?’, என்பது அவர் கேள்வி.
வேளாண் திட்டங்களை உருவாக்குபவர்களுக்கு, நேரடியான விவசாய அனுபவம் வேண்டும் என்கிறார் திருமூர்த்தி. அவர் மனைவியும் தொழிற் பங்குதாரருமான கோமதியும், அதை ஆமோதிக்கிறார். ‘வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் எங்களுடன் வந்து வயலில் இறங்கி வேலை செய்தால் உண்மையான நிலைமை அவர்களுக்குப் புரியும், இல்லையெனில் அவர்கள் உயர் ரக விதைகளே தீர்வு என அவற்றையே உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்’, என்கின்றனர் இருவரும்.
அவர்களது துயரம் புரிந்து கொள்ளத்தக்கதே. பெரியதாக, பளபளப்பாக இருக்கும் உயர் ரக மஞ்சள் ரகங்களுக்கு அதிக வேதி உரங்கள் தேவை. அவற்றுக்குச் சந்தையில் குவிண்டால் 200 வரை விலை அதிகமாகக் கிடைக்கிறது.
திருமூர்த்தி விவசாயம் செய்யத் தொடங்குகையில், அவருக்குப் பணத்தட்டுபாடு இருந்தது. மஞ்சள் பயிரில் வருமானம் பார்க்க ஒரு வருடத்துக்கும் மேலாகக் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. அவரது தந்தை வங்கியில் கடன் வாங்கியிருந்ததால், மேலும் கடன் வாங்க சாத்தியங்கள் இல்லை. அவர் விட்டுப் போன 14 லட்சம் கடனை திருமூர்த்தி இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறார். எனவே, செலவுக்கு, தெரிந்தவர்களிடம் இரண்டு வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கிறார் (வருடம் 24%)
’சில முகநூல் நண்பர்கள் ஆறுமாதகாலம் வரை வட்டியில்லாமல் கடன் கொடுத்து உதவினார்கள். நல்லவேளையாக, இப்போது கடன் வாங்கும் தேவைகள் இல்லாமல் இருக்கிறேன். நண்பர்களிடம் வாங்கிய கடன்களையெல்லாம் அடைத்து விட்டேன்.. ஆனால், அப்பா வாங்கிய வங்கிக் கடனை இன்னும் அடைத்துக் கொண்டிருக்கிறேன்’
இப்போது மாதம் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்.. இதற்காக, அவர், அவரது மனைவி மற்றும் அம்மா என மூவரும் தினமும் 12 மணி நேரம் உழைக்கிறார்கள். இதை அவர் உற்பத்திச் செலவில் கணக்கிடுவதில்லை.
மஞ்சளை அரைக்கும் அறைக்குள் நம்மை அழைத்துச் சென்று, மஞ்சள் கிழங்குகளைக் கைகளில் அள்ளி, நம்மிடம் காட்டுகிறார். தங்க நிறமான மஞ்சள் கிழங்குகள் பாறை போல உறுதியாக இருக்கின்றன. அவற்றை அப்படியே மஞ்சள் அரைக்கும் இயந்திரத்தில் போட்டால், அரைக்கும் ப்ளேட்கள் உடைந்து விடும் என்பதால், முதலில், கல்லுரலில் கிழங்குகளை உடைத்துச் சிறு சிறு துண்டுகளாக்கி, பின்னரே அரைக்கும் இயந்திரத்தில் பொடியாக அரைக்கிறார்கள்
ஃப்ரெஷ்ஷாக அரைக்கப்படும் மஞ்சளின் மணம், அந்த அறை முழுவதும் விரவியுள்ளது. அறை முழுதும் நிறைந்திருக்கும் அந்த மணம் மனதுக்கு இதமாகத்தான் இருக்கிறது. மஞ்சள் அரைக்கும் இயந்திரம், ஸ்விட்ச் பெட்டி என அனைத்தின் மீதும், அரைக்கப்படும் மஞ்சளின் தங்கத் தூசி படிந்திருக்கிறது. அறையின் மூலையில் இருக்கும் எட்டுக்கால் பூச்சியின் வலை கூட தங்க ஆபரணம் போல ஜொலிக்கிறது.
மருதாணியிட்ட திருமூர்த்தியின் உள்ளங்கைகள், சிவப்பும் ஆரஞ்சுமாக தெரிகின்றன. ஆனால், தசை முறுக்கேறிய முன்கைகள், அவை கடுமையாக உழைப்பவை என இன்னொரு கதையைச் சொல்கின்றன. ஆனால், இந்தக் கதையில் வெளியில் தென்படாத சில விஷயங்கள் உண்டு. மதிப்புக் கூட்ட திருமூர்த்தி எடுக்கும் சில முனைப்புகள் தோல்வியில் முடிவதே அது. இந்த ஆண்டு, இஞ்சியை விளைவிக்க அவர் எடுத்த முயற்சி பெரும் தோல்வியில் முடிந்தது. ஆனால் அதை அவர், ‘புத்தி கொள்முதல்’ என எடுத்துக் கொள்கிறார். அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், கோமதி எங்களுக்காக, சூடான பஜ்ஜியும், தேநீரும் கொண்டு வருகிறார்.
*****
"மஞ்சள் பயிரின் முக்கியத்துவத்தை
உணர்ந்து, ஈரோடு மாவட்டம் பவானி சாகரில், 100 ஏக்கரில், புதிய மஞ்சள் ஆராய்ச்சி
நிறுவனம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது."
– எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறை
அமைச்சர், தமிழ்நாடு அரசு.
தரமான மஞ்சள் கிலோ 93.5 க்கும் ஏற்றுமதி செய்யப்படும் போது, கிலோ 86 க்கு இறக்குமதி செய்யப்பட்டால், உழவருக்கு எப்படி நல்ல விலை கிடைக்கும்? குறைந்த விலை இறக்குமதி, கடந்த நான்காண்டுகளில், இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இது, அடுத்த சில ஆண்டுகளுக்கு உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் சாத்தியங்களே இல்லாமல் செய்திருக்கிறது
தமது அரசாணையில், தமிழக அரசு, இந்தப் பிரச்சினையை அங்கீகரித்துள்ளது . ’இந்தியா உலகின் மிகப் பெரும் மஞ்சள் உற்பத்தியாளராக இருந்தும், நம்மிடம் அதிக கர்க்யூமின் (curcumin) கொண்ட ரகங்கள் இல்லை. அதனால்தான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது’, என்கிறார் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம்
சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம், வேளாண்மைக்கென தனி பட்ஜெட்டை அறிவித்த அமைச்சர் பன்னீர்செல்வம், மஞ்சளுக்காக உருவாக்கப்படும் ஆராய்ச்சி நிலையத்துக்கு 2 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார். நல்ல தரமான ரகங்கள், மதிப்புக் கூட்டல், பயிற்சி முதலியன முன்னெடுக்கப்பட்டு, உற்பத்தியாளர்கள், மஞ்சள் உற்பத்தியை விட்டு, இன்னொரு பயிரை நாட வேண்டிய அவசியமில்லாத நிலை உருவாகும் என்பது அவரது நம்பிக்கை.
திருமூர்த்தியின் பாதை எளிதானது. நுகர்வோருக்கு நல்ல பொருளைத் தரவேண்டும். 300 பேர் வாங்கினால், அது நல்ல பொருளாக இருந்தால், அவர்கள் 3000 பேரிடம் சொல்வார்கள். மோசமானதாக இருந்தால், அதுவும் அது 30000 பேருக்குச் சென்று விடும். தமது முகநூல் தொடர்புகள், ஏற்கனவே வாங்கியவர்களின் நற்சான்றுகள் மூலம் வரும் புதிய நுகர்வோர் என, மாதம் சராசரியாக 300 கிலோ மேனிக்கும், வருடம் 3 டன் மஞ்சள் தூளை அவர் நேரடியாக நுகர்வோருக்கு விற்கிறார். இந்த முயற்சியில் அவர் கற்றுக் கொண்ட பாடங்கள் இரண்டு.
1.
மொத்த விலைச் சந்தையில், இயற்கை
முறையில் விளைவிக்கப்பட்ட பொருளுக்கு நல்ல விலை கிடைக்காது.
2.
நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை
செய்யாமல், உழவருக்கு ஒருபோதும் நல்ல விலை கிடைக்காது.
திருமூர்த்தி, மஞ்சளை இரு வழிகளில் பதப்படுத்துகிறார். வேகவைத்து, காயவைத்து, பொடி செய்தல். அதில் கர்க்யூமின் (Curcumin %) 3.6 % உள்ளது. இரண்டாவது ஒரு புதியவழி. மஞ்சள் கிழங்கு, சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, வெயிலில் காயவைக்கப்பட்டு, பொடி செய்யப்படுதல். இம்முறையில், கர்க்யூமின் 8.6% ஆக மாறுகிறது. அவரிடம் உள்ள பரிசோதனை முடிவுகளைக் காட்டுகிறார். ‘கர்க்யூமின் தேவைப்படும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இது சரியாக இருக்கலாம். சாப்பாட்டில் பயன்படும் மஞ்சள் தூளுக்கு எதுக்கு அதிகக் க்ர்க்யூமின்? எனக் கேட்கிறார் திருமூர்த்தி.
இது தவிர, அறுவடை செய்த உடனேயே மஞ்சளை விற்கிறார். அது கிலோ 40 க்கு விற்கப்படுகிறது. தவிர, அவரும் கோமதியும், மாதம் 3000 சோப்புக் கட்டிகளைத் தயாரிக்கிறார்கள். இதற்காக, பல மூலிகைகளை கொள்முதல் செய்து, தரம் பிரித்து, சலித்து, 9 வகை சோப்புக்கட்டிகளை உருவாக்குகிறார்கள். இரண்டு வகை மஞ்சள் சோப்புகள், கற்றாழை, வெட்டிவேர், குப்பைமேனி, அரப்பு, சீகக்காய், வேம்பு முதலியன
’சோப்பு தயாரிக்கும் முறைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொல்லுவாங்க.. ஆனா, இவரு, என்னென்ன சேக்கனும், எப்படித் தயாரிக்கனும்னு, எல்லாத்துக்கிட்டியிம் சொல்லிர்றாரு’, எனச் சீண்டுகிறார் கோமதி.
திருமூர்த்தி, மஞ்சளில் இருந்து கேசச் சாயம் தயாரிக்கும் முறையை முகநூல் பதிவொன்றில் பகிர்ந்திருக்கிறார். தனது தயாரிப்பு முறைகளைப் பொதுவெளியில் சொல்வதைப் பற்றி அவர் அலட்டிக் கொள்வதில்லை.. ‘மத்தவங்களும் முயற்சி செஞ்சி பாக்கட்டும்.. ஆரம்பத்துல இருக்கற ஆர்வத்தை தொடர்ந்து தக்க வச்சிக்கறது ரொம்ப கஷ்டம்’, என்பது அவர் கருத்து.
*****
"
உழவர், தான் உற்பத்தி செய்வதில்
சிறந்தவற்றைத் தானே உண்பதில்லை. அது விற்பனைக்குச் சென்று விடும். எல்லாப்
பொருள்களிலும் அப்படித்தான். உடைந்து போன சோப்புக்கட்டிகள், பிய்ந்து போன வாழைச்
சீப்பு என மிஞ்சுவதுதான் எங்களுக்கு."
– தி.கோமதி, மஞ்சள் உற்பத்தியாளர்
திருமூர்த்திக்கும் கோமதிக்கும் 2011 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. வழக்கம் போலவே பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம்தான். அப்போதே அவர் இயற்கை வழி விவசாயத்தைத் தொடங்கி விட்டிருந்தார். ஆனால், அதில் மதிப்புக் கூட்டுவதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. 2013 ஆம் ஆண்டு, முகநூலில், தனது முயற்சிகளைப் பற்றி எழுதிய நிலைத்தகவல்களுக்குக் கிடைத்த வரவேற்பே, சமூக ஊடகத்தின் சக்தியை அவருக்கு உணர்த்தியது.. நுகர்வோருக்கும், உற்பத்தியாளருக்கும் இடையே உள்ள இடைவெளி முதலியனவற்றைப் புரிந்து கொண்டார்
ஒரு நாள் அவர் தனது காலை உணவான ராகிக்களியைப் பற்றி இட்ட முகநூல் நிலைத்தகவலில் இருந்து இது தொடங்கியது. இது ஒரு சாதாரண விஷயம் என்பது போலத்தான் அவர் நினைத்தார். ஆனால், அதற்குக் கிடைத்த விருப்பக் குறிகளும், கமெண்டுகளும் அவரை உற்சாகப்படுத்தின. பண்ணை வாழ்க்கையைப் பற்றிய பல தகவல்களையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். களை பறித்தல், இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் போன்ற பண்ணை வேலைகளை ‘லைவ்’ ஆகப் பகிர்ந்து கொண்டார்.
இயற்கை வழி உற்பத்தி செய்த மஞ்சளை, ‘ஆன் லைனில்’ விற்கத் தொடங்கினார்.. கோமதியும் இதில் பங்கு கொள்ளத் தொடங்கினார். சோப்புகள், கூந்தலெண்ணெய், மஞ்சள் பொடி போன்ற பொருட்களுக்கு, ஆர்டர்கள் ‘வாட்ஸ் அப்’, வழியே வருகின்றன. அவற்றைக் கோமதிக்கு அனுப்ப்ப, அவர், வரும் ஆர்டர்களுக்கேற்ப, பொருட்களைத் தயார் செய்து அனுப்பும் வேலையைச் செய்கிறார். 10 வயது நிதுலனயும், 4 வயது நிகழினியையும் பார்த்துக் கொண்டே, இந்த வேலையையும் செய்கிறார்.
கோவிட் கால ஊரடங்கு, ஆன் லைன் வகுப்புகள் அவர் மகனின் கல்வியைப் பாதித்துள்ளன. நாங்கள் முதல் முறை சென்ற போது, தலைப்பிரட்டைகளை கண்ணாடி பாட்டிலில் அடைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்..அவர்கள் நாய் அதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. அடுத்த முறை செல்கையில் இரும்புப் பைப்களில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.. ‘இந்தப்படிப்புதான் இப்ப நடக்குது’, எனப் பெருமூச்சு விடுகிறார் கோமதி.
அவருக்கு உதவி செய்ய உள்ளூரில் இருந்து ஒரு பெண்மணி வருகிறார். நாங்க தயாரிக்கற 22 பொருட்கள்ல இருந்து, ஒன்னோன்னு ஆர்டர் வரும். அதைச் சேர்த்து அனுப்பறது ரொம்பக் கஷ்டம்’, என்கிறார் கோமதி. வீட்டு நிர்வாகத்தோடு கோமதி, வணிகத்தையும் கவனித்துக் கொள்கிறார். பேசுவதை விட அதிகம் புன்னகை செய்கிறார்.
தான் இயற்கை முறையில் தயாரிக்கும் மஞ்சள் தூள் ஏன் சந்தையில் கிடைக்கும் இதர மஞ்சள் தூளைவிட இரண்டு மடங்கு விலை அதிகம் என நுகர்வோரிடம் சொல்லிப் புரிய வைப்பதிலேயே, திருமூர்த்தியின் நாளில் பல மணிநேரம் செலவாகிறது. ஒரு நாளில் குறைந்த பட்சம் 10 நுகர்வோரிடமாவது பேசுகிறார். இயற்கை முறை வேளாண்மை என்றால் என்ன, மஞ்சள் தூளில் நிகழும் கலப்படம், பூச்சி மருந்துகளினால் நிகழும் கேடுகள் போன்றவற்றைப் பேசுகிறார்.
கிட்டத்தட்ட 30000 பேர் முகநூலில், திருமூர்த்தியைப் பின்பற்றுகிறார்கள். அவரது முகநூல்த்தகவலுக்கு 1000 பேர் விருப்பக் குறியிடுகிறார்கள். 200 பேர் கமெண்ட் செய்கிறார்கள்’. நிறையக் கேள்விகள் கேட்கிறார்கள். கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். இல்லையென்றால், என்னை அவர்கள் போலி எனக் கருதிவிடுவார்கள்’
தன் தோட்டத்தைச் சுற்றி வருதலும், தனது இணைய வழித் தொழிலைப் பாத்துக் கொள்ளுதலுமே (அதை E-business என அழைக்கிறார்கள் என்பதையே போன மாதம்தான் தெரிந்து கொண்டேன்!) முழுநேர வேலையாக இருப்பதனால், கடந்த ஐந்து வருடத்தில் விடுமுறை என்பதே இல்லை அவருக்கு. ‘அஞ்சி வருஷத்துக்கும் அதிகமாவே இருக்கும்’ எனச் சிரிக்கிறார் கோமதி.. ‘அதிக பட்சம் ஆறுமணிநேரம் தான் அவரால இத விட்டுட்டு இருக்க முடியும்.. உடனே மாடு, மஞ்சள், மரச் செக்குன்னு ஓடி வந்திருவார்’
உறவுகளில் திருமணம் என்றால், அவர் அம்மாதான் பெரும்பாலும் கலந்து கொள்கிறார். அவரது அண்ணன் அவரைக் காரில் கூட்டிச் சென்று விடுவார். திருமூர்த்தியினால், தன் வேலைகளை விட்டுச் செல்ல முடிவதில்லை. ‘கொரொனாவால, எங்களுக்கு நல்லதுதான். முந்தியெல்லாம், கார்ல போக வர பெட்ரோலுக்கு 1000 ரூவா செலவாகும். இப்ப, அது மிச்சம் ‘, என ஜோக்’கடி’க்கிறார் திருமூர்த்தி
’தோட்டத்துக்கு வரும் தொழிலாளர்களை அம்மாதான் கவனித்துக் கொள்கிறார். எனக்கு மற்ற மேல்வேலையே சரியா இருக்குது’, என்கிறார் திருமூர்த்தி. இரண்டு முறை திருமூர்த்தியின் தோட்டத்துக்குச் சென்ற போதும் கவனித்தேன்.. கோமதி சமையலறை அல்லது அவர்களின் ஒர்க்-ஷாப் – இரண்டில் ஏதாவது ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டிருப்பார். வொர்க் ஷாப் என்பது அவர்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் ஒரு அறை. அங்கேதான் அவர்கள் உற்பத்தி செய்யும் சோப்புக் கட்டிகள் பல்வேறு ஷெல்ஃபுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். காலை 5:30 மணிக்கு எழுந்திருக்கும் திருமூர்த்தியும், கோமதியும் தினமும் 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.
அவர்களுக்கு, பல்வேறு மூலிகைகள் அவற்றின் குணநலன்கள் பற்றிய நல்ல அறிதல் இருக்கிறது. கடகடவென மூலிகைகளின் பெயர்களை ஒப்பிக்கிறார்கள். கோமதி, மரச்செக்கில் ஆட்டியெடுக்கும் தேங்காயெண்ணையில் பூக்களையும், மூலிகைகளையும் சேர்த்து, வெயிலில் ஊற வைத்து, வாசனை மிகுந்த கூந்தல் எண்ணெய்களைத் தயாரிக்கிறார். ‘நுகர்வோருக்கு அனுப்பும் முன்னர், ஒவ்வொரு பொருளையும், தரம் சோதித்த பின்னரே அனுப்புகிறோம்’, என்கிறார் கோமதி.
மொத்த குடும்பமுமே இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறது என்கிறார் திருமூர்த்தி. கூலியில்லாத அவர்கள் உழைப்பே, உற்பத்திச் செலவை மிகக் குறைவாக வைத்திருக்கிறது
*****
"நுகர்வோர் பொருளுக்குச் செலுத்தும் விலையில்
80% மதிப்பு, அமுல் பால் உற்பத்தியாளருக்குக் கிடைக்கிறது; உலகில் இதற்கிணையான
வணிக மாதிரி எங்குமே இல்லை."
– பாலசுப்ரமணியம் முத்துசாமி, எழுத்தாளர் மற்றும் துறை
வல்லுநர்
திருமூர்த்தியின் வணிக மாதிரி ஒரு தனித்துவமான தன் முனைப்பு. சராசரி சிறு உழவர் (2 ஏக்கருக்கும் கீழே) இதைப் பின்பற்றுதல் கடினம். எனவே இது எல்லா உழவருக்குமான தீர்வு அல்ல என்கிறார் பாலசுப்ரமணியம் முத்துசாமி. உழவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரு கூட்டுறவு நிறுவனமாக உருவாகி, இடைத்தரகர்கள் விலக்கப்பட்டு, உற்பத்தியாளர்கள், நேரடியாகத் தங்கள் பொருளை நுகர்வோருக்குக் கொண்டு செல்லும் வகையில் ஒரு வலுவான வணிகச் சங்கிலி உருவாக்கப்படுவதே இதற்கான நிரந்தரத் தீர்வு என்கிறார். அப்போதுதான் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கான சரியான விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் அவர்களிடம் வந்து சேரும் என்பது அவர் கருத்து.
நுகர்வோர், வேளாண் பொருளுக்குத் தரும் விலையில் எவ்வளவு உற்பத்தியாளருக்குக் கிடைக்கிறது என்னும் ஒரு புள்ளியில் இருந்து அவர் பல்வேறு வணிக மாதிரிகளை அலசுகிறார். இதில், கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் நிறுவன வணிக மாதிரிதான் வெல்கிறது.
தனியார் துறை கோலோச்சும் மஞ்சள் வணிக மாதிரியில், நுகர்வோர் தரும் விலையில், 29% தான் (மஞ்சள் தூள் விலை கிலோ 240) உற்பத்தியாளருக்குக் கிடைக்கிறது. அமுல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு மாதிரியில், நுகர்வோர் தரும் விலையில், கிட்டத்தட்ட 80% உற்பத்தியாளருக்குக் கிடைக்கிறது என்கிறார் அவர்
இதில் வெற்றி என்பது, அமுல் போல, உற்பத்தியாளர்களை பெரும் அளவில் ஒன்றிணைத்தல். அப்படி ஒன்றிணைக்கப்பட்டு, உற்பத்தியில் தொடங்கி, நுகர்வோரை அடையும் வரையிலான வணிகச் சங்கிலியை, இடைத்தரகர்கள், வணிகர்கள் எவருமின்றி, நிர்வகிக்கும் ஒரு வணிக மாதிரிதான், உற்பத்தியாளர்களுக்குச் சரியான விலையைப் பெற்றுத்தரும் என்கிறார் மேலும்.
’கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்குவதிலும், நிர்வகிப்பதிலும் பிரச்சினைகள் உள்ளன. அவற்றின் நிர்வாகம் மேம்பட வேண்டும்’, என்பதை ஒத்துக் கொள்ளும் அவர், ‘ஆனால், இதை விடச் சிறந்த தீர்வு வேறு இல்லை. வேளாண்மை லாபகரமாக மாற இது ஒன்றே வழி’, என்கிறார்.
மஞ்சள் உற்பத்தியில் லாபம் பார்க்க முடியும் எனச் சொல்லும் திரு, அது மதிப்புக் கூட்டி, நுகர்வோரிடம் நேரடியாக விற்பதால் மட்டுமே வரும் என்கிறார். கடந்த 7 ஆண்டுகளில், 4300 கிலோ மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய், சோப், வாழைப் பழம், குங்குமம் போன்ற பல பொருட்களை உருவாக்கி விற்றிருக்கிறார். இதெல்லாம், நிலம் இல்லாமல் சாத்தியமில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் (திருமூர்த்தியின் தொழில் மாதிரி ஏன் சிறு உழவர்களுக்குப் பொருந்தாது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு)
என்னிடம் இருக்கும் 10 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 4 கோடி ரூபாய். இதை முதலீடாகப் போட்டு, இந்தத் தொழிலை லாபமாகச் செய்ய முடியாது என்கிறார் திரு. திருமூர்த்தியின் வணிகம் முழுவதுமே இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியே நடக்கிறது. அவரிடம் ஜி.எஸ்.டி எண் உள்ளது. நுகர்வோர் அனுப்பும் பணத்தை, அவர் ஜி பே, ஃபோன் பே, பே டிஎம், பீம் செயலிகள் வழியாகவும், அவரது வங்கி எண் வழியாகவும் பெற்றுக் கொள்கிறார்.
2020 ஆம் ஆண்டு, நடிகர் கார்த்தி சிவக்குமாரின், ‘உழவன் ஃபவுண்டேஷன்’, என்னும் இயக்கம், இயற்கை வேளாண்மையை வெற்றிகரமாக நடத்தியதற்காக, திருமூர்த்திக்கு, ஒரு லட்சம் பரிசு கொடுத்தது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நடிகர் சத்தியராஜ், விருதை அளித்தார்.
ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு சிறு வெற்றியும், திருமூர்த்தியை மேலும் தன் பாதையில் நம்பிக்கை கொண்டவராக ஆக்குகின்றன. அவரால் தோல்வியடைய முடியாது. ‘உழவர், நஷ்டம் என்னும் வார்த்தையையே கேட்கக் கூடாது என நினைக்கிறேன். இவ்வழி வெற்றி பெற்றேயாக வேண்டும்’, என்கிறார் திருமூர்த்தி.
கட்டுரையாளர், இந்தக் கட்டுரை எழுதுவதற்கு, க்ருஷி ஜனனி நிறுவனத்தைத் தோற்றுவித்தவரும், அதன் தலைமை நிர்வாகியுமான உஷா தேவி வெங்கிடாச்சலம் அவர்கள் செய்த உதவிகளையும், விருந்தோம்பலையும் நன்றியுடன் நினைவு கூர்கிறார்.
இந்த ஆய்வு, அசீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தின் 2020 ஆம் ஆண்டு ஆய்வு நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்டது.
அட்டைப் படம்: எம். பழனி குமார்
தமிழில்: பாலசுப்ரமணியம் முத்துசாமி