காலை 8 மணிக்கு அமைதியாக இருக்கும் சாலையின் ஒரு ஓரத்திலிருந்து உரத்த டொக் - டொக் என்ற சத்தம் வருகிறது. பாலப்பா சந்தர் தோத்ரே நடைபாதையில் பெரிய கற்களை தன்னைச் சுற்றி வைத்து அமர்ந்துகொண்டு, உளியால் செதுக்கி கொண்டிருக்கிறார். அவரது தற்காலிக 'பட்டறைக்கு' பின்னால் நிறுத்தப்பட்டுள்ள ரிக்க்ஷாக்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் உரிமையாளர்கள் விரைவில் தங்கள் வேலைக்குச் சென்று விடுவர். தோத்ரேவும் சில மணி நேரங்களில் இங்கிருந்து நகரத் துவங்கி விடுவார் - வடக்கு மும்பையின் புறநகர் பகுதியான கண்டிவாலி கிழக்கில் உள்ள அந்த நடைபாதையிலிருந்து, தான் செய்த உரல்களை எடுத்துக்கொண்டு செல்வார்.
சட்னிகள் மற்றும் மசாலாக்களை அரைக்க பயன்படும் ஒரு உரலையும், குழவியையும் செதுக்க அவருக்கு ஒரு மணி நேரமாகும். அவர் அதை தோராயமாக கல்லு ரப்பு என்றும், கன்னடத்தில் கல் உரல் அல்லது மராத்தியில் கல்பட்டா என்றும் அழைக்கிறார். அவர் அவற்றை செய்து முடித்ததும் ஒரு கனமான ரெக்சின் பையில் வைப்பார் - வழக்கமாக 2 முதல் 3 உரல்கள், ஒவ்வொன்றும் 1 முதல் 4 கிலோ வரை எடை உள்ளவை. பிறகு அவர் தனது நடைபாதை 'பட்டறையில்' இருந்து அருகிலுள்ள பகுதிகளுக்கு நடக்கத் துவங்குவார். அங்கு பரபரப்பான சாலைகளின் மூலைகளில் அவர் 'கடை' அமைக்கிறார். அவர் சில சமயங்களில் சில காலா பாத்தர்களை (கருங்கல்லை) கைவசம் வைத்திருக்கிறார். ஒருவேளை அதிகமான வாடிக்கையாளர்கள் உரல்களைக் கேட்டு வந்தால் அவர் அந்த இடத்திலேயே உரலை செதுக்கி தருவார்.
"அவர்கள் என்னை பாத்தர்வாலா என்றே அழைக்கின்றனர்", என்று தோத்ரே கூறுகிறார்.
சிறிய கல் உரலை ரூபாய் 200 க்கும், பெரியவற்றை ரூபாய் 350-400 ஆகிய விலைக்கும் விற்கிறார். "சில வாரங்களில் நான் ரூபாய் 1000-1200 வரை சம்பாதிக்கிறேன் சில நேரங்களில் நான் எதையுமே சம்பாதிப்பது இல்லை" என்கிறார். இதை வாங்குபவர்களில் முக்கியமாக இரண்டு சாரர்கள் இருக்கிறார்கள் மின்சார அரைப்பான்களை வாங்க முடியாதவர்கள் அல்லது இந்தக் கல் உரலைத் தங்கள் வாழ்வியல் அறைகளில் காட்சிப்படுத்த விரும்புபவர்கள் அல்லது பாலப்பாவின் மனைவி நாகுபாயைப் போல, கல் உரல்களையே பயன்படுத்த விரும்புபவர்கள். "எனக்கு மிக்ஸியை (மின்சார அரைப்பானை) பிடிக்கவில்லை","அதில் எந்த சுவையும் இருப்பதில்லை. இந்தக் கல் தான் உணவுக்கு புதிய நல்ல சுவையைத் தருகிறது", என்கிறார் அவர்.
தோத்ரேவுக்கு அவரது வயது கூட நினைவில் இல்லை, ஆனால் அவரது 30 வயதிற்கு மேற்பட்ட மகன் அசோக், தனது தந்தைக்கு 66 வயது என்று கூறுகிறார். தோத்ரே, பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் (B.M.C) 2011 இல் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற போதிலும், அவர் தன்னை ஒரு 'கரிகார்', ஒரு கைவினைக் கலைஞர் என்றே வர்ணிக்க விரும்புகிறார். கல் வேலையே பல காலமாக அவரது குடும்பத் தொழிலாக இருந்து வருகிறது. இவரது தாத்தா மற்றும் தந்தை என அனைவரும் வடக்கு கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தின் ஹோம்நாபாத் தாலுகாவிலுள்ள இவர்களது கிராமமான மன்னேஹல்லியில் கற்களில் வேலை செய்தனர். இந்த குடும்பம் கல்லு வாதர் சமூகத்தை சேர்ந்தது (வாதர் சமூகத்தின் துணை குழுவான கல் தொழிலாளர்கள், கர்நாடகாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக பட்டியலிடப்பட்டுள்ளனர்).
1940-களில் மற்றும் 1950 களில், பல வீடுகளில் கல் உரல்களைப் பயன்படுத்தினர், மேலும் பாலப்பாவின் தந்தை மற்றும் தாத்தாவால் இதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடிந்தது - அந்த நேரத்தில் கல் உரல்கள் 5 முதல் 15 பைசாவுக்கு விற்பனையானது, என்று அவர் நினைவு கூர்ந்தார். சமயங்களில் இதைப் பிற பொருட்களுக்காக பரிமாற்றினர். "இந்தக் கல்லுக்கு ஈடாக கோதுமை, சோளம், அரிசி என எல்லாவற்றையும் நாங்கள் பெறுவோம்", என்று கூறினார்.
அவருக்கு 18 வயதாக இருந்தபோது, பாலப்பா நாகுபாயுடன் மகாராஷ்டிராவின் கிராமங்களில் பல வருடங்களாக பயணம் செய்த பின்னர், மும்பைக்குச் சென்றார். நான் என் தாத்தாவுடனும் எனது தந்தையுடனும் பீட் மற்றும் ஔரங்காபாத் மாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளேன், என்று அவர் நினைவு கூர்ந்தார். "எங்களிடம் அப்போது ஒரு கழுதை இருந்தது. நாங்கள் எங்கள் பொருட்களை அதன் முதுகில் வைத்து கிராமம் கிராமமாக கல்லை விற்பனை செய்தோம்", என்றார் அவர்.
ஒரு கடும் வறட்சி அவரை மும்பைக்கு துரத்தியது. 1970களின் முற்பகுதியில் ஏற்பட்ட வறட்சியை பற்றி குறிப்பிடுகையில், எங்கள் கிராமம் ஒரு துஷ்ட காலத்தை (துஷ்கால்) கடந்து சென்றது", என்று பாலப்பா நினைவு கூர்கிறார். பயிர்கள் வாடிவிட்டன, சாப்பிட எதுவும் இல்லை. "காடுகளும் தரிசாகி விட்டது, புற்கள் கூட இல்லை. கால்நடைகள் எதைச் சாப்பிடும்? தண்ணீரும் இல்லை, உணவும் இல்லை, பணமும் இல்லை(வரவாக), எதுவுமே இல்லை", என்று அவர் கூறுகிறார். மக்கள் பிற இடங்களுக்கு வெளியேறத் தொடங்கினர். சிலர் தங்கள் நிலங்களை விற்று நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். இது கல் உரல் விற்பவர்களுக்கு குறைவான வாடிக்கையாளர்கள் இருப்பர் என்பதையே குறிக்கிறது. அவர் குடும்பத்தை பற்றி கூறுகையில், அவர்களுக்கான சொந்த விவசாய நிலங்கள் இல்லை என்றும், அவர் குழந்தைப் பருவத்தை கழித்த குடிசை ஒன்று மட்டுமே இருக்கிறது (அது இன்றும் உள்ளது, வேறு ஒரு குடும்பத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது) என்றும் கூறுகிறார்.
பாலப்பா தனது தந்தை மற்றும் தாத்தாவிற்கு சொந்தமான உபகரணங்களை (ஔசார்களை) - கல் உரல்களை செய்வதற்கான - சுத்தி, உளி மற்றும் மண்வெட்டி ஆகியவற்றை தன்னுடன் பெரு நகரத்திற்கு கொண்டு வந்தார்.
பாலப்பாவும், நாகுபாயும் முதன்முதலில் மும்பைக்கு வந்த போது, தாதர் ரயில் நிலையத்திற்கு அருகில் தகரக் கூரை வேய்ந்த தங்குமிடம் ஒன்றில் தங்கினார். அடுத்தடுத்த வருடங்களில் அவர்கள் மும்பையின் வெவ்வேறு பகுதிகளான லோயர் பரேல், பாந்த்ரா, அந்தேரி ஆகிய இடங்களில் தங்கியிருந்தனர் - அவருடைய வேலை அவரை எங்கு அழைத்துச் செல்லும் என்பதை பொறுத்து, வெற்றிடம் கிடைத்த இடங்களில் எல்லாம் ஒரு குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர்.
கல் உரல்களை விற்க நாகுபாய் அவருடன் வெவ்வேறு இடங்களுக்கு சென்றார். " என் தந்தையும் ஒரு கல்லு தயாரிப்பவரே", என்று அவர் கூறுகிறார். " நானும், எனது அம்மாவும் அவற்றை விற்போம். திருமணத்திற்கு பிறகு, நான் இவருடன் (பாலப்பாவுடன்) விற்று வந்தேன். இப்போது எனக்கு முதுகுவலி இருப்பதால், அதை என்னால் செய்ய முடிவதில்லை", என்று கூறுகிறார்.
ஆனால், காலப்போக்கில் மின்சார அரைப்பான்கள் மிகவும் பிரபலம் அடைந்ததால், கல் உரல்களின் தேவை குறையத் தொடங்கியது. மன்னேஹல்லிக்குத் திரும்புவது அவருக்கு சரியான வழியாக இல்லை - ஏனெனில் அங்கு அவருக்கு எந்த வேலையும் இல்லை. எனவே பாலப்பா தோத்ரே, நாகுபாயுடன் மும்பையிலேயே தங்கியிருந்தார் (காலப்போக்கில் இன்று அவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருக்கின்றனர் - மூன்று மகன்களும் நான்கு மகள்களும்). கிடைக்கும் வேலைகளையெல்லாம் செய்ய துவங்கினார், சில நேரங்களில் மும்பையில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் வேலை செய்தார். "அந்த நேரத்தில் அவர்கள், எனக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 15 சம்பளம் தந்தனர்", அவர்களது உபகரணங்களை எடுத்துச் செல்லவும், இடத்தை சுத்தம் செய்யும் வேலையையும் செய்தேன், என்று அவர் நினைவு கூர்ந்தார்.
அவரது குடும்பம் அந்தேரி ரயில் நிலையத்திற்கு அருகில் தங்கியிருந்தபோது, ஒரு நாள் பிற்பகல், பி.எம். சி இவருக்கும் மற்ற ஆண்களுக்கும் போரிவாலியில் துப்புரவு பணியை வழங்கியது. "அவர்கள் தற்காலிக அடிப்படையில் தெருக்களை சுத்தம் செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்களது முதலாளிகள் அவர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற எண்ணினர்", என்று 30 களின் பிற்பகுதியில் இருக்கும் தோத்ரேவின் மூத்த மகன் துளசிராம் கூறுகிறார்.
பி.எம்.சி ஊழியர் அட்டையை பெற்ற பிறகு, தோத்ரே கண்டிவாலி கிழக்கில் ஒரு பகுதியை சுத்தம் செய்ய நியமிக்கப்பட்டார். அவர் தனது குடும்பத்தினருடன் தேவிபடாவில் குடியேறினார், அந்த சமயத்தில் அருகிலுள்ள போரிவாலி கிழக்கில், மூங்கில் கம்பங்கள் மற்றும் நெகிழி தாள்களால் ஆன கச்சா வீடுகளின் காலனி இருந்தது. பி.எம். சி ஊழியராக, ஆரம்பத்தில் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 500 சம்பளமாக பெற்றார்.
இவை அனைத்தினுடேயும், அவர் கல் உரல்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார். "அவர் காலை 6 மணிக்கு (பி.எம்.சி) வேலைக்குச் செல்வார்", என்று துளசிராம் நினைவு கூர்கிறார். "மதியம் 1:30 மணி அளவில், அம்மா அவரது டப்பாவை கொண்டு செல்வார்". டப்பாவில் மதிய உணவுடன் கூடிய பையில், உபகரணங்களும் இருக்கும் - சுத்தி, பல மாறுபட்ட அளவுகளிலான உளிகள் ஆகியவை. அவரது பணி நேரம் முடிந்த பிறகு, அவர் கற்களுடன் உட்கார்ந்து அவற்றை செதுக்குவார், பின்னர் மாலை 5 அல்லது 6 மணிக்கு வீடு திரும்புவார்.
அவருக்குத் தேவையான ஒரே மூலப்பொருள் காலா பத்தர் (கருங்கல்) மட்டுமே. " (ஒரு மண்வெட்டி மற்றும் ஒரு பெரிய சுத்தியலை பயன்படுத்தி) பூமியை தோண்டி நீங்கள் அதை (முன்பெல்லாம்) கண்டுபிடிக்க முடியும்", என்று தோத்ரே கூறுகிறார். ஆனால், இப்போது அவர் நகரத்தின் கட்டுமான தளங்களில் இருந்து அக்கற்களை வாங்குகிறார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக துப்புரவுப் பணியாளராக பணியாற்றிய பின்னர் பி.எம்.சி யிலிருந்து 2011 இல் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற போது அவரது வருமானம் சுமார் ரூபாய் 18000 - 20,000 ஆக இருந்தது என்று அவரது மகன் அசோக் கூறுகிறார். இப்போது அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூபாய் 8000 வழங்கப்படுகிறது.
அசோக் தனது தந்தையின் துப்புரவு வேலையை செய்துவருகிறார். துளசிராம் வேலை கிடைக்கும்போதெல்லாம், தினசரி கூலியாக வேலை பார்க்கிறார், தோத்ரேவின் மூன்றாவது மகனும் அதையே இருக்கிறார். அவர்களது 4 மகள்களுக்கும் திருமணமாகி மும்பையின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். என் குழந்தைகள் யாரும் குடும்பத்தின் பாரம்பரிய கல் வேலையை செய்வதில்லை. "எனக்கு அது பிடிக்கவில்லை, ஆனால் என்ன செய்வது? அவர்கள் அதை செய்ய விரும்பவில்லை, அதனால் அவர்கள் அதை செய்யவுமில்லை," என்று தோத்ரே தனது மகன்களை பற்றி குறிப்பிட்டுக் கூறுகிறார்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு கட்டுமான பணியில் இருக்கும் ஒருவர், தயாரான பிறகு கட்டிடத்தில் ஒரு பிளாட் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்ததை அடுத்து, தோத்ரேவும், நாகுபாயும் தேவிபடாவை விட்டு வெளியேறினர். இப்போதைக்கு அவர்கள் அருகில் உள்ள சாவலில் தங்கியிருக்கின்றனர்.
வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தாலும், தோத்ரே தொடர்ந்து கல் உரல்களை தயாரிக்கிறார். "எனது தந்தையும், தாத்தாவும் இதைச் செய்தார்கள், அவர்களைப் போலவே நானும் ஒரு கரிகார், இதுதான் நான்", என்று அவர் கூறுகிறார். "இவர் இதைச் செய்யவே விரும்புகிறார், இந்த வயதான காலத்திலும் இவர் இந்த வேலையைச் செய்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று நாகுபாய் கூறுகிறார்.
தமிழில்: சோனியா போஸ்