விற்கள் செய்து ஷெரிங் டோர்ஜீ புடியா வருமானம் ஈட்டவில்லை என உணர நேரம் எடுத்துக் கொள்கிறார். ஏனெனில் வில் செய்யும் கலையில் அந்தளவுக்கு அவரது வாழ்க்கை ஒன்றிப் போயிருக்கிறது. கர்தோக் கிராமத்திலுள்ள வீட்டில் 83 வயது ஷெரிங் பேசிய எல்லாமும் அதைப் பற்றித்தான். 60 வருடங்களாக அவரது வருமானம், மரச்சாமான்களை சரி செய்வது போன்ற தச்சு வேலையில் இருந்துதான் வருகிறது. ஆனால் வில் வித்தை மீது அவர் கொண்ட ஈர்ப்பு, சிக்கிம் கலாச்சாரத்தில் ஆழமாக வேர் கொண்டுள்ளது.
மரத் தச்சராக அவரின் பலகால அனுபவம் அவருக்குப் பெரிய விஷயமில்லை. பாக்யோங் மாவட்டத்தின் வில் தயாரிப்பவர் என்றே அவர் அறியப்பட விரும்புகிறார்.
“10, 12 வயது இருக்கும்போதே நான் மரக்கட்டைகளை கொண்டு பொருட்கள் உருவாக்கத் தொடங்கிவிட்டேன். படிப்படியாக அவை விற்களின் உருவம் எடுக்கத் தொடங்கின. மக்களும் அவற்றை வாங்கத் துவங்கினர். அப்படித்தான் இந்த வில்லுக்காரன் பிறந்தான்,” என்கிறார் ஷெரிங்.
“முன்பெல்லாம் வில் வேறு விதத்தில் செய்யப்பட்டது,” என்கிறார் அவர், அவரின் சிலப் பொருட்களைக் காண்பித்து. “இந்த பழைய ரகத்துக்கு பெயர் தப்ஜூ (நேபாள மொழியில்). இரண்டு சாதாரண குச்சிகள் ஒன்றாக்கப்பட்டு, கட்டப்பட்டு, தோலால் மூடப்பட்டது. இந்த காலத்தில் நாம் செய்யும் ரகத்துக்குப் பெயர் ‘படகு வடிவம்’. ஒரு வில் செய்யக் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் ஆகும். அதுவும் சுறுசுறுப்பான இளமையான கை செய்தால்தான். முதிய கை இன்னும் சில நாட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும்,” என்கிறார் ஷெரின் குறும்புப் புன்னகையுடன்.
காங்டாக்கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த ஊரில் ஷெரிங் 60 வருடங்களுக்கும் மேலாக வில் மற்றும் அம்புகளை தயாரித்து வருகிறார். கார்தோக் அதன் புத்த மடாலயத்திற்காக பெயர் பெற்றது. சிக்கிமில் ஆறாவது பழமையான புத்த மடம் அது. கார்த்தோக்கில் ஒரு காலத்தில் அதிகமான வில் தயாரிப்பாளர்கள் இருந்தனர் என்றும் இப்போது ஷெரிங் மட்டுமே எஞ்சியுள்ளார் என்றும் கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள்.
ஒரு முக்கியமான அம்சத்தில், ஷெரிங்கின் வீடு கார்த்தோக்கின் அழகை பிரதிபலிக்கிறது. கிட்டத்தட்ட 500 வகையான பூக்கள் மற்றும் தாவரங்கள் உள்ள ஒரு பிரகாசமான, வண்ணமயமான தோட்டத்தை கடந்து சென்ற பிறகுதான் நீங்கள் முகப்பு வாசலை அடைய முடியும். தனது கொல்லைப்புறத்தில் ஒரு பசுமைக் குடிலும் மற்றும் சிறு தோட்டத்தையும் வைத்திருக்கிறார். மூலிகைகள், அலங்கார வகைச் செடிகள் மற்றும் பொன்சாய்ச் செடிகள் தவிர சுமார் 800 பழத் தோட்டங்களும் அங்கு இருக்கின்றன. எல்லாமும் அவரது 38 வயது மூத்த மகனான சங்கய் ஷெரிங் பூட்டியாவின் முயற்சியாகும். அவர் சிறந்த தோட்டக்கலை நிபுணர். சங்கய் பல வகையான தோட்டங்களை வடிவமைத்துச், செடிகளை விற்கிறார். தோட்டக்கலையை மற்றவர்களுக்குக் கற்றும் கொடுக்கிறார்.
"நாங்கள் ஆறு பேர் இங்கே வாழ்கிறோம்," என்று ஷெரிங் எங்களிடம் கூறுகிறார். 'இங்கே' என அவர் சுட்டுவது, கார்த்தோக்கில் உள்ள அவரது சாதாரண வீடு. “நான், என் மனைவி தவ்தி பூட்டியா [ வயது 64], என் மகன் சங்கய் ஷெரிங் மற்றும் அவன் மனைவி டாஷி டோர்மா ஷெர்பா [வயது 36]. எங்கள் பேரக்குழந்தைகள் சியாம்பா ஹெசல் பூட்டியா மற்றும் ரங்செல் பூட்டியா.” இன்னொரு குடும்ப உறுப்பினரும் இருக்கிறார்:டோலி என்னும் நாய். பெரும்பாலும் மூன்று வயது சியாம்பாவுடன்தான் அது இருக்கும். ரங்செல்லுக்கு இன்னும் இரண்டு வயதாகவில்லை.
ஷெரிங்கின் இரண்டாவது மகன், சோனம் பலசோர் பூட்டியா. 33 வயது. சிக்கிமின் இந்திய ரிசர்வ் படையில் இருக்கிறார். தில்லியில் பணியமர்த்தப்பட்டு, அங்கு தனது மனைவி மற்றும் மகனுடன் அவர் வசிக்கிறார். திருவிழாக்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சோனம் தனது தந்தையை கார்த்தோக்கில் சந்தித்து விடுகிறார். ஷெரிங்கின் குழந்தைகளில் மூத்தவர் அவரது மகளான 43 வயது ஷெரிங் லாமு பூட்டியா. திருமணமாகி காங்தோக்கில் வசிக்கிறார். இளையவரான 31 வயது சங்கய் கியாம்போவும் அதே நகரத்தில் தங்கியிருக்கிறார். ஆராய்ச்சி மாணவரான அவர் ஆய்வுப்படிப்புப் படிக்கிறார். இவர்கள் புத்த லாமா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிக்கிமின் பெரிய பட்டியல் பழங்குடியான பூட்டியாவைச் சேர்ந்தவர்கள்.
ஷெரிங்கின் விற்களைப் பயன்படுத்த நாங்கள் கற்க முயற்சிக்கும்போது, சங்கய் ஷெரிங் "அப்பாதான் இதை எனக்குச் செய்து கொடுத்தார்" எனக் கூறுகிறார், பழுப்பு மற்றும் மஞ்சள் காவி நிற வில் ஒன்றை எங்களுக்குக் காட்டினார். "நான் வில்வித்தை பயிற்சி செய்யும் ஒரே வில் இதுதான்." வில்லைப் பயன்படுத்துவதில் உள்ள நுட்பத்தை நிரூபிக்க அவர் தனது இடது கையை நீட்டினார்.
வில்வித்தை சிக்கிமின் மரபுகளில் ஆழமாகப் பதிந்துள்ளது. அங்கு அது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. கலாச்சாரமும் கூட. பொதுவாக, அறுவடைக்குப் பிறகு, மக்கள் ஒன்று கூடுவததற்கான திருவிழாக்கள் மற்றும் போட்டிகள் நடக்கும்போது வில்வித்தை உயிர் பெறுகிறது. சிக்கிம் இந்திய ஒன்றியத்துடன் இணைவதற்கு முன்பே இங்கு தேசிய விளையாட்டாக வில்வித்தை இருந்தது.
இரண்டு முறை உலக வில்வித்தை போட்டியிலும் இரண்டு முறை ஆசிய விளையாட்டிலும் பதக்கம் வென்ற தருண்தீப் ராய் சிக்கிமைச் சேர்ந்தவர். ஏதென்ஸ் 2004, லண்டன் 2012 மற்றும் டோக்கியோ 2021 ஆகிய மூன்று ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே வில்வித்தை வீரர் என்ற பெருமையையும் கொண்டவர் அவர். தருண்தீப் பத்மஸ்ரீ விருது வென்றதை கௌரவிக்கும் வகையில் கடந்த ஆண்டு சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்-கோலே, மாநிலத்தில் தருண்தீப் ராய் வில்வித்தை பயிற்சி நிறுவனத்தை அமைப்பதாக அறிவித்தார் .
மேற்கு வங்கம், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வில்வித்தை அணிகள் சிக்கிமின் காங்தோக் மற்றும் பிற பகுதிகளிலுள்ள அரச அரண்மனை மைதானங்களில் நடக்கும் உயர்தரப் போட்டிகளில் பங்கேற்க வருவதுண்டு. சுவாரஸ்யமாக, வில் மிகவும் சிக்கலான தொழில்நுட்ப சாதனமாக இருக்கும் நவீன விளையாட்டை விட, வில் வித்தையுடன் கூடிய பாரம்பரிய விளையாட்டுகள் சிக்கிம் மக்களிடையே பிரபலமாக உள்ளன.
பாரம்பரிய வில் வாங்கக்கூடிய குறிப்பிட்ட கடைகள் எதுவும் இல்லை எனக் கூறுகின்றனர் பூட்டியா குடும்பத்தினர். அம்புகளை இன்னும் சில உள்ளூர் கடைகளில் வாங்கலாம், ஆனால் வில் வாங்க முடியாது. "வாங்குபவர்கள் உள்ளூர் சந்தைகள் மற்றும் வில்லாளர்களிடமிருந்து எங்களைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். எங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். இது பெரிய இடம் இல்லை, எங்கள் வீட்டைக் கண்டுபிடிக்க யாரும் போராட வேண்டியதில்லை. இங்குள்ள எல்லோரையும் எல்லோருக்கும் தெரியும்,” என்கிறார் எண்பது வயதுகளில் இருப்பவர்.
வில் வாங்குபவர்கள் சிக்கிம், அண்டை மாநிலங்கள் மற்றும் பூடானின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள். "அவர்கள் காங்தோக் மற்றும் கார்த்தோக்கில் இருந்தோ அல்லது அந்த வழியாகவோ வருகிறார்கள்" என்று நேபாளியில் ஷெரிங் கூறுகிறார். மாநிலத்தில் உள்ள பலரைப் போலவே அவரது குடும்பத்தினரும் பேசும் மொழி அது.
வில் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் ஷெரிங் எப்போது வில்வித்தைக் கற்றுக்கொண்டு அவற்றைத் தயாரிக்கத் தொடங்கினார் என்பதைப் பற்றியும் கேட்டபோது, அவர் அமைதியாக வீட்டிற்குள் சென்று எதையோ தேடுகிறார். மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, அவர் பல பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் உருவாக்கிய வில் மற்றும் அம்புகள் மற்றும் அவற்றுக்கான கருவிகள் ஆகியவற்றோடு புன்னகையுடனும் உற்சாகத்துடனும் வெளிப்படுகிறார்.
"நான் இவை அனைத்தையும் 40 ஆண்டுகளுக்கு முன்பு செய்தேன். இவற்றில் சில மிகவும் பழமையானவை. என்னை விட சற்றுதான் வயது குறைவு,” என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார். “இவற்றைத் தயாரிக்க நான் எந்த மின் சாதனங்களையும் கருவிகளையும் பயன்படுத்தியதில்லை. எல்லாம் ஒழுங்காகக் கையால் உருவாக்கப்பட்டவை.”
"நாங்கள் இப்போது பயன்படுத்தும் அம்புகள் மாற்றியமைக்கப்பட்ட பதிப்புகள்" என்கிறார் சங்கய் ஷெரிங். “நான் மிகவும் சிறியவனாக இருந்தபோது, அம்பின் வால் வித்தியாசமாக இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது, வாலில் வாத்து இறகு பொருத்தப்பட்டிருந்தது. இப்போது நவீன பதிப்புகள் பெரும்பாலும் பூட்டானிலிருந்து வருகின்றன.” சங்கய் அம்புகளை என்னிடம் ஒப்படைத்துவிட்டு, நவீன இயந்திரத்தால் செய்யப்பட்ட வில்லைப் பெறுவதற்காக வீட்டிற்குள் திரும்பிச் செல்கிறார்.
"நல்ல மெருகூட்டல் இல்லாமல் தோராயமாக தயாரிக்கப்பட்ட வில்லை, இலகுவான மற்றும் மலிவான பதிப்பு வேண்டும் என்று எங்களை அணுகுபவர்களிடம் 400 ரூபாய்க்கு விற்கிறோம்," என்கிறார் சங்கய். “அப்போதுதான் மூங்கிலின் மேற்பகுதியைப் பயன்படுத்துகிறோம், அதன் வலிமை குறைவாக இருப்பதால் பொதுவாக அதைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் நன்றாக, மூன்று முறை மெருகூட்டப்பட்ட, பளபளப்பான வில், 600-700 ரூபாய்க்கு செல்லும். அதை உருவாக்க மூங்கிலின் கீழே இருக்கும் வலுவானப் பகுதியைப் பயன்படுத்துகிறோம்.
"ஒரு சிறந்த வில் செய்ய, பயன்படுத்தப்படும் மூங்கிலின் விலை 150 ரூபாய். நூல் அல்லது கம்பிக்கு 60 ரூபாய், மெருகூட்டும் விலையைக் கணக்கிடுவது கடினம்" என்று சங்கய் சிரிக்கிறார்.
ஏன் அப்படி?
“நாங்கள் வீட்டில் மெருகூட்டுகிறோம். பெரும்பாலும் தசரா பண்டிகைச் சமயங்களில் ஆட்டுத்தோல் வாங்கி, அதிலிருந்து மெழுகுகளை மெருகூட்டுவதற்காக எடுத்துக்கொள்கிறோம். ஒரு வில் தயாரித்து முடிந்ததும், மெழுகு அதன் மீது பூசப்படுகிறது. முதல் அடுக்கு காய்ந்ததும் மற்றொரு அடுக்கு பயன்படுத்தப்படுகிறது. மூன்று பூச்சுகள் வரை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. 1 x 1 அடி ஆட்டுத் தோலுக்கு 150 ரூபாய் செலவாகும்” என்கிறார் சங்கய். அவர்கள் அதைப் பயன்படுத்திய விதம் மெருகூட்டல் செயல்முறையின் சரியானச் செலவைக் கண்டுபிடிப்பதை கடினமாக்குகிறது.
"ஓ, முக்கியமானப் பொருள், வில்லின் முதுகெலும்பு," என்று அவர் கூறுகிறார், "அதற்கான மூங்கில், ஒரு துண்டுக்கு 300 ரூபாய் செலவாகும். ஒரு பெரிய மூங்கிலில் இருந்து ஐந்து வில்களை நாம் எளிதாகச் செய்யலாம்.”
"இதோ சமீபத்திய வில் வடிவமைப்பு இது." சங்கய் உள்ளே சென்று, ஒரு பெரிய வில் பையுடன் மீண்டும் தோன்றினார். ஒரு பெரிய மற்றும் கனமான வில்லின் பதிப்பை வெளியே எடுத்தார். "ஆனால் எங்கள் உள்ளூர் போட்டிகளில் இது அனுமதிக்கப்படவில்லை. ஒருவர் அதைக் கொண்டு பயிற்சி செய்யலாம். ஆனால் போட்டியில் விளையாட, பாரம்பரிய வில் கட்டாயம். நானும் என் சகோதரர்களும் அந்தப் போட்டிகளில் அப்பா செய்த வில்லுடன் விளையாடுகிறோம். என் சகோதரர் டெல்லியில் இருந்து சில வித்தியாசமான மர மெழுகுக் கொண்டு வந்து, அதை தனது வில்லில் பூசினார். என்னுடைய வில், அப்பா பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் பாரம்பரிய பூச்சு மூலம் மெருகூட்டப்பட்டுள்ளது.”
பல ஆண்டுகளாக வில் விற்பனை குறைந்துள்ளதாக பூட்டியாக்கள் வருத்தப்படுகின்றனர். அவர்களின் தயாரிப்பு பெரும்பாலும் பூட்டியா பழங்குடியினரின் சிக்கிம் புத்தாண்டான லோசூங்கின் புத்த பண்டிகையில் விற்கப்படுகிறது. டிசம்பரில் அனுசரிக்கப்படும் இப்பண்டிகை, அறுவடைக்குப் பிந்தைய காலத் திருவிழாவாகும். இதில் வில்வித்தை போட்டிகள் நடக்கும். "அப்போதுதான் பெரும்பாலான மக்கள் இங்கு வந்து எங்களிடம் வாங்குகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில், நாங்கள் ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து விற்களைத்தான் விற்றிருக்கிறோம். செயற்கை வில் இப்போது சந்தையை ஆக்கிரமித்துள்ளது. அது ஒரு ஜப்பானிய தயாரிப்பு என நான் நினைக்கிறேன். முன்னதாக, ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆண்டொன்றுக்கு சுமார் 10 விற்களை விற்க முடிந்தது,” என்று ஷெரிங் டோர்ஜீ கூறுகிறார்.
ஆனால் வருடத்திற்கு 10 வில் கூட அவருக்கு கணிசமான வருமானத்தைத் தந்திருக்காது. தச்சு வேலை, மரச்சாமான்கள் செய்தல் மற்றும் பழுது பார்த்தல் மற்றும் பிற சிறிய மரவேலைகள்தான் அவரது குடும்பத்தை காப்பாற்றியது. பத்தாண்டுகளுக்கு முன்பு, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபராக அவர் இருந்து அந்தத் தொழிலில் முழு நேரமாகச் செயல்பட்டபோது மாதந்தோரும் ரூ.10,000 வருமானம் ஈட்டினார். ஆனால் அன்றும் இன்றும் அவரைக் கவர்ந்தது விற்கள்தானே தவிர, தச்சு வேலை அல்ல.
பூட்டானிய மூங்கில் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு வகை மரத்தில் இருந்துதான் பூட்டியாக்கள் செய்யும் விற்கள் தயாரிக்கப்படுகின்றன. "அப்பா தயாரிக்கும் அனைத்து வில்களும் பூட்டான் மூங்கிலில் இருந்து வடிவமைக்கப்பட்டவை. முன்னர் இது இந்தியாவில் கிடைக்கவில்லை" என்று சங்கய் கூறுகிறார். "இங்கிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு வங்காளத்தின் காலிம்போங்கில் இந்த வகையின் விதைகளைப் பயிரிட்ட விவசாயிகளிடமிருந்து நாங்கள் வாங்குகிறோம். நானே அங்கு சென்று, ஒரே நேரத்தில் இரண்டு வருடத்திற்கான மூங்கில்களை வாங்குகிறேன், அதை இங்கே கார்த்தோக்கில் உள்ள வீட்டில் சேமித்து வைக்கிறோம்.”
“முதலில் உங்களுக்கு ஒரு குரு வேண்டும். குரு இல்லாமல் யாராலும் எதுவும் செய்ய முடியாது” என்கிறார் ஷெரிங். “ஆரம்பத்தில், நான் ஒரு தச்சன் மட்டுமே. ஆனால் பின்னர், என் தந்தையிடம் வில் கட்ட கற்றுக்கொண்டேன். என் நண்பர்கள் விளையாடிய வில்லின் வடிவமைப்புகளைப் பார்த்தேன். சிலவற்றைச் செய்ய முயற்சித்தேன். படிப்படியாக, அது நன்றாக மாறத் தொடங்கியது. அவற்றில் ஒன்றை வாங்க யாராவது என்னை அணுகினால், அதை எப்படி பயன்படுத்துவது என்பதை முதலில் நான் அவர்களுக்குக் காண்பிப்பேன்!”
83 வயதான அவர் வில் தயாரிக்கும் கலையில் கழித்த தனது ஆரம்ப நாட்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார். "இதில் இருந்து எனது வருவாய் தற்போது மிகக் குறைவு. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக இருந்தது. எனது வீடு, இந்தக் குடும்பம், சுமார் பத்தாண்டுகளாக எனது குழந்தைகளால் நடத்தப்படுகிறது. இப்போது நான் செய்யும் விற்கள் சம்பாதிப்பதற்கான ஆதாரம் அல்ல, மாறாக அன்பிற்கான உழைப்பு ஆகும்.”
"அப்பா இப்போது அதிகமாக உருவாக்குவதில்லை. அவரது கண்பார்வை பலவீனமடைந்துள்ளது. ஆனாலும் அவர் இன்னும் சிலவற்றை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறார், ”என்று சங்கய் ஷெரிங் கூறுகிறார்.
"அவருக்குப் பிறகு இந்த கைவினைக் கலையை யார் தொடர்வார்கள் எனத் தெரியவில்லை"
தமிழில் : ராஜசங்கீதன்