இரண்டு புல்டோசர்கள் வந்த போது மதியம் ஆகியிருந்தது. பள்ளியின் மைதானத்தில் இருந்த குழந்தைகள் "புல்டோசர், புல்டோசர், சார்... சார்..." என்று கூச்சலிட்டனர். அவர்களின் அழுகையைக் கேட்டு பள்ளியின் முதல்வர் பிரகாஷ் பவாரும் நிறுவனர் மதின் போசாலேவும் பள்ளியின் அலுவலகத்திலிருந்து ஓடி வந்தனர்.
"நீங்கள் எதற்கு இங்கு வந்திருக்கிறீர்கள்", என்று பவார் அவர்களைக் கேட்டார். "நாங்கள் நெடுஞ்சாலை அமைப்பதற்காக இந்த வகுப்பறைகளை இடிக்க விரும்புகிறோம். தயவு செய்து ஒதுங்கி இருங்கள்", என்று ஒரு புல்டோசரின் ஓட்டுனர் கூறினார். "ஆனால் எங்களுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லையே", என்று போசாலே எதிர்ப்பு தெரிவித்தார். "இந்த உத்தரவு மேலிடத்திலிருந்து வந்துள்ளது (அமராவதி ஆட்சியாளர் அலுவலகத்திலிருந்து)", என்று அந்த ஓட்டுனர் கூறினார்.
பள்ளி ஊழியர்கள் விரைந்து பெஞ்சுகள் மற்றும் பச்சை நிற எழுதும் பலகைகளை வெளியே எடுத்து வந்தனர் மேலும் அவர்கள் தற்காலிக நூலகத்தையும் காலி செய்தனர் அதில் அம்பேத்கர், பூலே, காந்தி, உலக வரலாறு மற்றும் பலவற்றை பற்றிய மராத்தி மொழியிலான சுமார் 2,000 புத்தகங்கள் இருந்தன. இவை அனைத்தும் அருகில் உள்ள பள்ளி விடுதிக்குள் கொண்டு செல்லப்பட்டது. விரைவில் புல்டோசர்கள் இடிக்கத் தொடங்கின. ஒரு சுவர் அப்படியே தரையில் இடிந்து விழுந்து நொறுங்கியது.
பிரஷ்னாசின் ஆதிவாசி ஆசிரமசாலை (கேள்விக்குறி ஆதிவாசி தங்கும் விடுதி பள்ளி)யில் ஜூன் 6ஆம் தேதி அன்று இப்பணி இரண்டு மணி நேரம் தொடர்ந்தது. விடுதியில் தங்கியிருந்த குழந்தைகள் -ஏப்ரல் முதல் அங்கு கோடை விடுமுறையில் தங்கியிருந்தவர்கள் - தங்கள் வகுப்பறைகள் இடிக்கப்படுவதை பார்த்தார்கள். "எங்களது பள்ளி ஜூன் 26 அன்று தொடங்கப்பட்டதா? ஏன் அவர்கள் இதைச் செய்கிறார்கள்?", என்று அவர்களில் சிலர் கேட்டனர்.
விரைவில் 3 குடிசை வகுப்பறைகளும் 4 கான்கிரீட் வகுப்பறைகள் மற்றும் நூலகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது பான்சி பர்தி ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த 417 குழந்தைகளும், கொற்கு ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த 30 குழந்தைகளும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்தனர். கல்விக்கான அரசியலமைப்பு உரிமையும் இடிபாடுகளுடன் சேர்ந்து தகர்ந்தது.
மகாராஷ்டிரா அரசு அமைக்கவிருக்கும் 700 கிலோமீட்டர் தொலைவைக் கொண்ட சம்ருதி மகாமார்க் (செழிப்பான நெடுஞ்சாலை) அமைப்பதற்கு வழிவகுக்க அமராவதி மாவட்டத்திலுள்ள இப்பள்ளி இடிக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை 26 தாலுகாக்களில் உள்ள 392 கிராமங்கள் வழியாகச் செல்லும். அமராவதி மாவட்டத்தில் இந்நெடுஞ்சாலை மூன்று தாலுகாக்களில் 46 கிராமங்கள் வழியாகச் செல்லும்.
எங்களது 7 வருட கடின உழைப்பு வீணாகி விட்டது என்று 36 வயதாகும் மதின் கூறுகிறார். ஆதிவாசி குழந்தைகளுக்காக அவர் ஆரம்பித்த இப்பள்ளி நந்காவுன் கண்டேஸ்வரர் தாலுகாவில் உள்ள ஒரு ஆளரவமற்ற குறுகலான சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டு கழகம் ஜூன் 2010 - 2011ம் ஆண்டு ஜூன் மாதம் அமராவதி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் "இழப்பீடு வழங்குவதற்கான கேள்வி கூட எழவில்லை என்று தெரிவித்திருக்கிறது", ஏனெனில் இந்தப் பள்ளி அரசுக்குச் சொந்தமான மேய்ச்சல் நிலத்தின் ஒரு பகுதியாக சர்வே எண் 25 இல் 19.49 ஹெக்டேரில் கட்டப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்த வளமான நெடுஞ்சாலை 60 சிறுமிகள் மற்றும் 49 சிறுவர்கள் வசிக்கும் 10 அறைகளைக் கொண்ட இரண்டு மாடி கான்கிரீட் விடுதியை மட்டும் விட்டு வைக்கும் ஏனெனில் அது பள்ளியை நடத்திவரும் ஆதிவாசி பான்சி பர்தி சமிதிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது (மதின் அந்த சமிதியின் தலைவர்). 2016 ஆம் ஆண்டில் மராத்தி செய்தித்தாள் நடத்திய ஆதரவு பிரச்சாரத்தின் பின்னர் வந்த பொது நன்கொடைகளை வைத்து விடுதி மற்றும் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டன.
ஆனால் இந்த மூன்று ஏக்கர் நிலத்திலும் ஏறக்குறைய ஒரு ஏக்கர் நிலத்தை அரசாங்கம் கேட்கிறது. அமராவதி மாவட்ட நிர்வாகம் 2019ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதியன்று வெளியிட்ட நோட்டீஸில் சர்வே எண் 37 இல் உள்ள விடுதிக்கும் இப்போது இடிக்கப்பட்ட வகுப்பறைகளுக்கும் இடையில் உள்ள 3800 சதுர மீட்டர் நிலமும் (அதாவது ஒரு ஏக்கர் என்பது சுமார் 4046 சதுர மீட்டர்) நெடுஞ்சாலை அமைக்க தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இதற்காக மாநில அரசு இந்த சமிதிக்கு இழப்பீடாக 19.38 லட்சம் ரூபாய் தொகையை வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
இந்தப் பணம் பள்ளியை மீண்டும் புதுப்பிப்பதற்கு போதுமானதாக இல்லை. வகுப்பறைகள் நூலகம் மற்றும் சமையல் கூடம் ஆகியவை அரசாங்க நிலத்தில் இருந்தாலும் அதற்கான இழப்பீட்டுத் தொகை எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தான் சட்டம் தெரிவிக்கிறது என்று 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதினை சந்தித்தபோது அவர் என்னிடம் தெரிவித்தார். நாங்கள் இன்னமும் அந்த டீலில் கையெழுத்திடவில்லை (அந்த 3800 சதுர மீட்டர் நிலத்திற்கு மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டு கழகத்திற்காக). நாங்கள் அமராவதி மாவட்ட ஆட்சியரிடம் எங்களது ஆட்சேபனையை பதிவுசெய்துள்ளோம் மேலும் எங்களது பள்ளிக்கான மாற்று இடம் ஏற்படுத்தித் தரும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
மதின் அமராவதி மாவட்ட ஆட்சியருக்கு மகாராஷ்டிர மாநில முதலமைச்சருக்கும் பல்வேறு கடிதங்கள் எழுதியிருக்கிறார், 2018 ஆம் ஆண்டு 50 - 60 குழந்தைகள் மற்றும் பள்ளி ஊழியர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வரை மூன்று முறை பேரணி நடத்தியுள்ளார், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருநாள் உண்ணாவிரத போராட்டமும் நடத்தியுள்ளார் ஒவ்வொரு முறையும் அவரது கோரிக்கை இப்பள்ளிக்கு போதுமான இடவசதியும் புனரமைப்பும் செய்து தர வேண்டும் என்பதே.
இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இப்பள்ளி இடிக்கப்படுவது கவலை அளிக்கிறது. பள்ளியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் 50 குடிசைகள் கொண்ட பான்சி பர்தி குடியிருப்பில் வசிக்கும் 36 வயதாகும் சுர்னிதா பவார் தன் வீட்டிற்கு வெளியே அமர்ந்தபடி பீன்சை உரித்துக் கொண்டு என்னிடம், "இந்தப் பள்ளியில் எனது மகள் சுர்னிதா பத்தாம் வகுப்பு வரை பயின்றார். இப்போது 11ஆம் வகுப்பை தொலைதூரக் கல்வியில் பயின்று வருகிறார்". மங்ருள் சாவலா என்ற 3,763 மக்களைக் கொண்ட அருகாமையில் உள்ள கிராமத்தில் சுர்னிதா விவசாய கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பள்ளி வகுப்பறைகள் இடிக்கப்பட்ட பிறகு நான் அவருடன் தொலைபேசியில் பேசிய போது "நான் பள்ளி வகுப்பறைகள் இடிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன்", என்று கூறினார். எனது மகன் சுர்னேஷ் ஐந்தாம் வகுப்பு அங்கு படித்துக் கொண்டிருக்கிறார். அவன் கோடை விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருக்கிறான். இனி அவன் எங்கு செல்வான்?".
அவரது சமூகமான பான்சி பர்தி சமூகம் பல்வேறு பழங்குடியின சமூகத்துடன் காலனித்துவ பிரிட்டிஷ் அரசாங்கத்தால் குற்றப்பரம்பரைச் சட்டத்தால் 'குற்றவாளி' என்று முத்திரை குத்தப்பட்ட சமூகம். 1952 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்த சட்டத்தை நீக்கிய பிறகும் இப்பழங்குடியினர் 'சீர்மரபினர்' என்றே அழைக்கப்படுகின்றனர். அவர்களில் சில சமூகம் பட்டியலினத்திலும், சில சமூகம் பட்டியல் பழங்குடியினத்திலும், சில சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது (மேலும் காண்க குற்றம் ஏதும் இல்லை, ஆனால் தண்டனை மட்டும் தொடர்கிறது ) 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மகாராஷ்டிராவில் சுமார் 223,527 பர்தி மக்கள் இருக்கின்றனர் மேலும் இச்சமூகத்தில் பால் பர்தி, பில் பர்தி மற்றும் பான்சி பர்தி ஆகிய உட்பிரிவுகள் இருக்கின்றன.
அவர்கள் தொடர்ந்து பல்வேறு மட்டங்களில் பாகுபாட்டை எதிர்கொண்டு வருகின்றனர். "கிராமவாசிகள் எங்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்", என்று சுர்னிதா கூறுகிறார். எனவே எங்கள் மக்கள் அமராவதிநகருக்கோ அல்லது மும்பைக்கோ அல்லது நாசிக்குக்கோ அல்லது புனேவிற்கோ அல்லது நாக்பூருக்கோ சென்று பிச்சை எடுக்கின்றனர்.
அப்படித்தான் அவரது பக்கத்து வீட்டுக்காரரான 40 வயதாகும் ஹிண்டோஸ் பவாரும் செய்தார். சில தசாப்தங்களுக்கு முன்பு வரை அவர் பிச்சை கேட்டு வாழ்ந்து வந்தார். பின்னர் எப்போதாவது பண்ணைகள் அல்லது கட்டுமானங்களில் அவருக்கு வேலை கிடைத்தது. "எனது வாழ்நாள் முழுவதும் நான் துக்கத்தை மட்டுமே கண்டிருக்கிறேன்", என்று அவர் கூறுகிறார். "எப்போது வேண்டுமானாலும் போலீசார் எங்களை பிடிப்பார்கள். இது இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது அப்படித்தான் எனது தாத்தா காலத்திலும் நடந்தது. எதுவுமே மாறவில்லை. எங்களது குழந்தைகள் மட்டும் படிக்கவில்லை என்றால் அவர்களும் எங்களை போலத் தான் பிழைப்பு நடத்த வேண்டியிருக்கும்", என்று கூறினார். சில மாதங்களுக்கு முன்பு நான் அவர்களை சந்தித்தபோது, அவரது மகன் சர்தேஷ் மற்றும் மகள் சர்தேசா ஆகியோர் 7 மற்றும் 10 ஆம் வகுப்பு முறையே பிரஷ்னாசின் ஆதிவாசி ஆசிரமசாலையில் படித்து வந்தனர்.
மகாராஷ்டிராவின் 25 மாவட்டங்களில் உள்ள சீர்மரபினர் நாடோடி மற்றும் அரை நாடோடி பழங்குடியினர் குறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த சமூக மேம்பாட்டு கவுன்சில் நடத்திய 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 199 பர்தி குடும்பங்களில் 38 சதவீத குழந்தைகள் தொடக்கப்பள்ளியுடன் தங்களது கல்வியை நிறுத்தி கொண்டதாக கூறுகிறது அதற்கு காரணமாக பாகுபாடு, மொழி தடைகள், திருமணம் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு இல்லாதது ஆகியவை கூறப்பட்டுள்ளது. 2% பதிலளித்த நபர்கள் தாங்கள் பின் வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் மேலும் 4 சதவீத நபர்கள் ஆசிரியர்கள் அவர்களிடம் நடந்து கொண்ட அணுகுமுறை அவர்களை புண்படுத்தும் விதமாக இருந்ததாகக் தெரிவிக்கின்றனர்.
ஜில்லா பரிஷத் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை சரியான முறையில் நடத்துவது இல்லை என்று சுர்னிதா கூறுகிறார். 14 வயதாகும் ஜிபேஷ் பவாரும் அதனை ஒப்புக் கொள்கிறார். நான் மீண்டும் ஜில்லா பரிஷத் பள்ளிக்கு போக விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார். 2014 ஆம் ஆண்டு வரை யாவத்மால் மாவட்டத்தில் உள்ள நேர் தாலுகாவில் இருக்கும் அஜந்தி கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். "ஆசிரியர்கள் என்னை பின் வரிசையில் அமர வைப்பார்கள். மற்ற குழந்தைகள் என்னை கேலி செய்தார்கள் என்னை பர்தி பர்தி என்று அழைத்தார்கள்... கிராம மக்கள் நாங்கள் அழுக்கானவர்கள் என்று கூறுகிறார்கள். எங்கள் குடிசைகள் கிராமத்திற்கு வெளியே தான் இருக்கிறது. எனது அம்மா பிச்சை எடுக்கிறார் . நானும் அவருடன் சேர்ந்து செல்வது வழக்கம். என் தந்தையோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்", என்று கூறினான்.
பின்னர் ஜிபேஸ் தங்கள் வசிப்பிடத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரஷ்னாசின் ஆதிவாசி ஆசிரமசாலையில் சேர்ந்தார். அவர்களது வசிப்பிடத்தில் தண்ணீர் வசதியோ மின்சார வசதியோ இல்லை, அதனால் அவன் விடுதியில் தங்கியிருக்கிறான். "நான் படித்து ராணுவத்தில் சேர விரும்புகிறேன். என் அம்மா பிச்சை எடுப்பதை நான் விரும்பவில்லை", என்று அவர் கூறுகிறார். இப்போது தான் அவர் ஒன்பதாம் வகுப்பை முடித்து இருக்கிறார், ஆனால் முக்கியமான பத்தாம் வகுப்பை அடைவது குறித்த அவரது உற்சாகம் இப்போது கவலையாக மாறியுள்ளது.
14 வயதாகும் கிரண் சவான் துலே மாவட்டத்தில் உள்ள சக்ரி தாலுகாவில் இருக்கும் ஜமதே கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் படித்து வந்தார். அவரது பெற்றோர் இரண்டு ஏக்கர் வன நிலத்தில் நெல் மற்றும் கம்பு பயிரிட்டு வருகின்றார். "நாங்கள் ஜில்லா பரிஷத் பள்ளியில் சேர்வதை கிராம மக்கள் எதிர்க்கின்றனர் என்று அவர் கூறுகிறார். மற்ற குழந்தைகள் அவர்களை கேலி செய்வது எனது நண்பர்கள் அங்கிருந்து வெளியேறினர். எங்களது குடிசைகள் கிராமத்திற்கு வெளியே தான் இருக்கிறது. எங்கள் நீங்கள் கிராமத்திற்குள் நுழையும்போது 'ஜாக்கிரதை, இங்கு திருடர்கள் இருக்கிறார்கள்' என்று அவர்கள் உங்களிடம் கூறுவார்கள். நான் திருடன் அல்ல. காவல்துறையினர் பெரும்பாலும் எங்கள் கிராமத்திற்கு வந்து திருட்டு மற்றும் கொலைக்காக யாரையும் பிடித்துக் கொண்டு செல்வார்கள். அதனால் தான் நான் போலீசாக விரும்புகிறேன். ஆனால் நான் அப்பாவிகளை தொந்தரவு செய்ய மாட்டேன்", என்று கூறுகிறார்.
இதையெல்லாம் நன்கு அறிந்த மதின் போசாலே பான்சி பர்தி குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை கட்ட முடிவு செய்தார். அவர் தனது குடும்பத்துக்கு சொந்தமான ஆறு ஆடுகளை விற்று தனது சேமிப்பை ஆசிரியராவதற்கு பயன்படுத்தினார் பின்னர் 85 குழந்தைகளுடன் 2012ஆம் ஆண்டில் பள்ளியைத் தொடங்கினார். அப்போது பள்ளி, அவரது 76 வயது மாமா சங்கிலி போசாலே கொடுத்த மூன்று ஏக்கர் நிலத்தில் குடிசை வகுப்புகளுடன் தான் இருந்தது. எனது மாமா பல ஆண்டுகள் சேமித்து 1970 ஆம் ஆண்டு 200 ரூபாய்க்கு வாங்கியதாக தெரிவித்தார் மதின். அவர் உடும்பு, மணல் புறா, முயல், காட்டு பன்றி ஆகியவற்றை வேட்டையாடி அமராவதி நகரில் உள்ள சந்தையில் விற்று விடுவார்.
'இவையெல்லாம் பர்தி மக்களுக்கு இருக்கும் விடையில்லா கேள்விகள். எனவே இது தான் பிரஷ்னாசின் (கேள்விக்குறி) ஆதிவாசி ஆசிரமசாலை'.
மதின் மனைவி சீமா இப்பள்ளியை நடத்த உதவுகிறார் மேலும் அவர்களின் 3 குழந்தைகளும் அதே பள்ளியில் அமராவதி, பீட், துலே, வாசிம் மற்றும் யாவத்மால் மாவட்டங்களில் இருக்கும் பான்சி பர்தி குழந்தைகளுடன் படிக்கின்றனர். இங்கு வழங்கப்படும் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. பள்ளியில் உள்ள எட்டு ஆசிரியர்களில் நான்கு ஆசிரியர்கள் பான்சி பர்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
"பான்சி பர்தி மக்களுக்கு நிரந்தரமான வீடு இல்லை மேலும் அவர்களுக்கு நிரந்தர வருமானமும் கிடையாது. அவர்கள் பயணம் செய்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் பிச்சை எடுப்பார்கள், வேட்டையாடுவார்கள் அல்லது ஏதேனும் வேலை கிடைத்தால் அதையும் செய்வார்கள்", என்று மதின் கூறுகிறார். அவரது தந்தை வேட்டையாடுவார், தாய் பிச்சை எடுக்கச் செல்வார். "பெரும்பாலும் குழந்தைகளும் தங்கள் பெற்றோருடன் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் பிச்சை கேட்கிறார்கள். அவர்களுக்கு பெரும்பாலும் கல்வியோ, நல்ல வேலையோ கிடைப்பதில்லை. அவர்களது வளர்ச்சிக்கு கல்வியும், ஸ்திரத்தன்மையும் மிகவும் முக்கியம். ஆனால் பர்தி குழந்தைகள் இன்னமும் உண்மையில் ஜில்லா பரிஷத் பள்ளிகளில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்களுக்கான கல்வி உரிமை எங்கே? மகாராஷ்டிர மாநில அரசு போதுமான உண்டு உறைவிட பள்ளிகளை ஆதிவாசி மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரவில்லை. அவர்கள் எப்படி முன்னேறுவார்கள்? இவையெல்லாம் பர்தி மக்களுக்கு இருக்கும் விடையில்லா கேள்விகள். எனவே இது தான் பிரஷ்னாசின் (கேள்விக்குறி) ஆதிவாசி ஆசிரமசாலை".
மதினும் அவரது குடும்பத்தினரும் சமூகத்தினரும் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு இருந்தாலும் 2009 ஆம் ஆண்டில் அமராவதியில் உள்ள அரசு ஆசிரியர் கல்லூரியில் கல்விக்கான டிப்ளமோ பட்டம் அவரால் படிக்க முடிந்தது. இரண்டு ஆண்டுகள் அவர் மங்ருள் சாவ்லாவில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார், அதே கிராமத்தில் தான் அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் அவர் அந்த கிராமத்திற்கு வெளியே குடிசையில் வசித்து வந்தார். அவர் அதே பள்ளியில்தான் படித்தார் அவரது ஆசிரியர் ஆதரவாக இருந்ததன் காரணமாக அவர் இடை நிற்கவில்லை என்று கூறுகிறார்.
1991 ஆம் ஆண்டில் மதினுக்கு எட்டு வயதுஇருந்த போது நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்கிறார் , நாங்கள் பிச்சை எடுப்போம் அல்லது முயல் மற்றும் மணல் புறாவை வேட்டையாடுவோம். அல்லது நானும் எனது 3 மூத்த சகோதரிகளும் கிராமவாசிகள் தூக்கி எறியப்பட்ட பழைய உணவை சாப்பிடுவோம். ஒருமுறை நாங்கள் ஐந்தாறு நாட்களுக்கு தொடர்ந்து எதுவும் சாப்பிடவில்லை. எங்கள் அப்பாவால் நாங்கள் பட்டினி கிடப்பதை பார்க்க முடியவில்லை. அதனால் அவர் யாருடைய வயலில் இருந்தோ 2 - 3 கம்பு தட்டைகளை பறித்து வந்தார். என் அம்மா கம்பை சமைத்துக் கொடுத்தார். பின்னர் அந்த வயல் உரிமையாளர் என் தந்தையின் மீது அவர் 5 குவிண்டால் கம்பை திருடியதாக காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். அவர் எங்களை பட்டினியாக பார்க்க முடியாத வேதனையால் தான் திருடினார், ஆனால் 2 - 3 கம்பு தட்டைக்கும் ஐந்து குவிண்டால் கம்புக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது", என்று கூறினார்.
அவரது தந்தை சங்கர் போசாலே அமராவதியில் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் அங்குள்ள சீருடையில் இருப்பவர்களை பார்த்த பிறகு தான் அவரால் கல்வி மற்றும் அறிவின் ஆற்றலை உணர முடிந்தது என்று மதின் கூறுகிறார். "அவர் சிறையிலிருந்த பர்தி கைதிகளிடம் அவர்களது குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும்படி வலியுறுத்தினார்". 'அறிவு மற்றும் கல்வியை தவறாகப் பயன்படுத்தி அப்பாவிகளை கொடுமைப்படுத்த முடியுமானால் அதை நல்ல விதமாக பயன்படுத்தினால் அவர்களைப் பாதுகாக்கவும் முடியும்', என்று என் தந்தை கூறியிருக்கிறார் என்று தன் தந்தையின் வார்த்தைகளை நினைவு கூர்கிறார்.
மதின் தனது தந்தையின் வார்த்தைகளை பின்பற்றி ஆசிரியரானார். பின்பு அவர் பள்ளியையும் துவங்கி இருக்கிறார். ஆனால் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும், மாநில பள்ளிக் கல்வித்துறை மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு துறைக்கு ஏராளமான கடிதங்கள் எழுதி இருந்த போதிலும் பள்ளிக்கு இன்னும் அரசாங்க அங்கீகாரம் மற்றும் மானியங்கள் கிடைக்க போராடி வருகிறார்.
அங்கீகாரம் மற்றும் மானியங்கள் வழங்கப்படாதது குறித்து 2015 ஆம் ஆண்டில் மதின் மகாராஷ்டிர மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்தார். பின்தங்கிய குழுக்களின் குழந்தைகள் தொடக்கக் கல்வியை முடிப்பதை உறுதி செய்வதற்கான கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள கடமையை ஆணையம் மாநில அரசுக்கு நினைவூட்டியது. மனுதாரருக்கு பள்ளியை நடத்துவதற்கும், சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட படி பள்ளிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும் பட்சத்தில் அங்கீகாரம் பெறுவதற்கும் உரிமை உண்டு என்று அந்த ஆணையம் தெரிவித்திருக்கிறது.
"சாதி, வர்க்கம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு குழந்தையின் ஆரம்ப கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதைத்தான் கல்வி உரிமைச் சட்டம் தெளிவாக கூறுகிறது. இதை அரசாங்கம் பின்பற்றியிருந்தால் இந்தக் கேள்வி எழுந்திருக்காது. யாராவது தங்கள் சொந்த முயற்சியில் அத்தகைய பள்ளிகளை நிறுவும் போது அரசாங்கம் அதற்கு அங்கீகாரம் கூட வழங்குவதில்லை", என்று அஹமது நகரைச் சேர்ந்த கல்வி ஆர்வலரான பாவ் சாஸ்கர் கூறுகிறார்.
"அந்த உத்தரவு வந்து கூட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் பழங்குடியினர் துறையோ அல்லது கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை", என்று அப்பள்ளியின் முதல்வரான பிரகாஷ் பவார் கூறுகிறார், இவரும் பான்சி பர்தி சமூகத்தைச் சேர்ந்தவரே. மானியங்கள் மூலம் அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், நூலகம், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், விடுதிகள், ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் பலவற்றிற்கு மாநில அரசால் நிதி அளிக்க முடியும். "இவை அனைத்தையும் நாங்கள் பொது நன்கொடைகள் மூலம் நிர்வகித்து வருகிறோம்", என்று பவார் கூறுகிறார்.
நன்கொடைகள் ஒரு சில தனியார் பள்ளிகளிடமிருந்து நோட்டு புத்தகங்களாகவும், நூலகத்திற்கான புத்தகங்களாகவும், உணவுப் பொருட்களாகவும் மற்றும் சில தனிநபர்கள் மற்றும் குழுவினரிடமிருந்து வரும் பணம் எட்டு ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும் மாதத்திற்கு (3,000 ரூபாய் தலா ஒரு ஆசிரியருக்கு) மற்றும் 15 உதவியாளர்களுக்கு (தலா 2,000 ரூபாய்) சம்பளம் கொடுப்பதற்கும் பயன்படுகிறது.
சவால்கள் நிறைந்திருந்த போதிலும் சுமார் 50 குழந்தைகள் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பை முடித்துள்ளனர் மேலும் மகாராஷ்டிராவின் நகரங்களில் அவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் பெண்கள் கபடி குழு 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தாலுகா மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வென்றுள்ளது.
ஆனால் இப்போது இந்த நெடுஞ்சாலை அவர்களின் கனவுகளை குறுக்கிடுகிறது. "இந்த ஆண்டின் வகுப்புகளை நாங்கள் எவ்வாறு தொடங்குவோம் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நாங்கள் விடுதி அறைகளில் வகுப்புகள் எடுப்போம்", என்கிறார் பள்ளியின் முதல்வரான பிரகாஷ் பவார். "நாங்கள் பாகுபாடு, நிராகரிப்பு, அடிப்படை வசதிகள் இல்லாதது போன்ற பல கேள்விகளை சந்தித்திருக்கிறோம். அதற்கு 'கல்வியை' ஒரு பதிலாக நாங்கள் கண்டறிந்த போது நீங்கள் (மகாராஷ்டிரா அரசு) இந்த புதிய கேள்வியாக இடமாற்றம் செய்ய கேட்டுள்ளீர்களே ஏன்? என்று மதின் கோபமாக கேட்கிறார். "நான் அனைத்து குழந்தைகளையும் உண்ணாவிரதத்திற்கு (தெற்கு மும்பையில்) உள்ள ஆசாத் மைதானத்திற்கு அழைத்துச் செல்வேன். புனரமைப்பு செய்வது குறித்து எழுத்துப்பூர்வமான வாக்குறுதியை பெறும்வரை நாங்கள் இங்கிருந்து நகரமாட்டோம்", என்று அவர் தெரிவித்தார்.
தமிழில்: சோனியா போஸ்