"ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. எனவே, நான் பழங்களையும் பாலையும் நன்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமென மருத்துவர் சொல்கிறார். என்னால் அவற்றை எப்படி வாங்கமுடியும், சொல்லுங்கள். ஆற்றுப் பக்கம் போக அனுமதித்தால், நான் ஒரு படகை ஓட்டி என் குழந்தைகளும் நானும் அதன் மூலம் பிழைக்கமுடியும்." என்கிறார், சுஷ்மா தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அடிகுழாயில் தண்ணீருக்காகக் காத்திருக்கும்போது நம்மிடம் இவ்வாறு கூறிய அவர், இப்போது ஏழு மாத கர்ப்பிணி; இணையரை இழந்தவரும்கூட.
படகு சவாரியா? 27 வயதான சுஷ்மா தேவி, நிசாத் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சாதியைச் சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் படகுக்காரர்களாக உள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில், மஜ்கவன் வட்டாரத்தில் உள்ள கேவத்ரா எனும் சிற்றூரில், இந்த சமூகத்தைச் சேர்ந்த 135 பேர் வாழ்ந்துவருகின்றனர். சுஷ்மாவின் இணையரான 40வயது விஜய்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அப்போது, இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தன. சுஷ்மா, ஒருமுறைகூட படகை ஓட்டும் பயிற்சி பெற்றிருக்கவில்லை. ஆனால், விஜயுடன் பல முறை படகில் சவாரிசெய்த அனுபவத்தை வைத்து, தன்னால் படகோட்ட முடியுமென அவர் நம்புகிறார்.
பொதுமுடக்கத்தின்போது, மந்தாகினி ஆற்றின் இந்த நெடுக்கில் ஒரு படகும் ஓடவில்லை. மத்தியப்பிரதேசத்துக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும் இடையில் உள்ள சித்திரகூட் பகுதியை பிரிக்கும்வகையில் இந்த ஆறு ஓடுவது குறிப்பிடத்தக்கது.
சூரியன் மறைந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கேவத்ராவுக்குச் செல்லும் பாதையில் முதல் தெருவிளக்கை எரிவதைப் பார்த்தோம். தன் சிறு பிள்ளையுடன் தண்ணீர் எடுத்துச்செல்வதற்காக ஒரு பிளாஸ்டிக் வாளியோடு அடிகுழாய்க்கு வந்தார், சுஷ்மா. அங்குதான் நாங்கள் அவரைச் சந்தித்தோம்.
மந்தாகினி ஆற்றில் படகோட்டுவதன் மூலம் நிசாத்துகள் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுகிறார்கள். சித்திரகூட் ஆனது, ஒரு புகழ்பெற்ற புனித யாத்திரை மையம் ஆகும். தீபாவளி சமயத்தில் இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவார்கள். மந்தாகினி ஆற்றின் கரையில், கேவத்ராவிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் நிசாத்துகளின் படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும். தெய்வீக உலா வரும் பக்தர்களை நிசாத் படகுக்காரர்கள், பாரத் காட், கோயங்கா காட் ஆகிய தலங்களுக்கு அழைத்துச்செல்வார்கள்.
நிசாத்துகள் ஆண்டில் அதிக வருமானம் பார்ப்பது அப்போதுதான். அதாவது, அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 600 ரூபாய் கிடைக்கும். திருவிழா அல்லாத காலகட்டத்தில் அவர்கள் ஈட்டுவதைவிட 2-3 மடங்கு தொகை, இது.
ஆனால், இப்போது முடக்கம் காரணமாக படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விஜயும் இல்லை. அவருடைய அண்ணன் வினீத் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), - அந்தக் குடும்பத்தின் சம்பாதிக்கும் ஒரே நபர், அவராலும் படகை எடுக்கமுடியாது. (சுஷ்மா, தன் மூன்று மகன்கள், மாமியார், கணவரின் சகோதரர் மற்றும் அவரின் மனைவி ஆகியோருடன் கூட்டாக வசிக்கிறார்).
“எனக்கு ஆண் பிள்ளைகள் மட்டுமே... ஒரு பெண் பிள்ளை வேண்டும் என்பது எங்களின் விருப்பம். இந்த முறை ஒரு மகளையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன், பார்ப்போம்.”என்கிறார் சுஷ்மா. இதைச் சொல்லும்போது, அவரின் முகம் புன்னகையால் மலர்ந்தது.
கடந்த 2-3 வாரங்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துவருகிறது. இந்த முடக்கத்தில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள நயாகானுக்கு நடந்தேசென்று மருத்துவரைப் பார்த்துவிட்டுவந்தார். அப்போதுதான், அவருக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதை மருத்துவர் கூறியிருக்கிறார். சுஷ்மா, தனக்கு இரத்தம் குறைவாக இருக்கிறது என்கிறார்.
தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு- 4இன்படி, மத்தியபிரதேசத்தில் உள்ள பெண்களில் 53 சதவீதம் பேர் இரத்தசோகை உடையவர்கள். இதில் ஊரகப் பெண்களில் கிட்டத்தட்ட 54 சதவீதம் பேர். நகர்ப்புறப் பெண்களைப் பொறுத்தவரை, இது 49 சதவீதமாகும். ஒட்டுமொத்த மத்தியபிரதேசப் பெண்களில் 72 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"ஹீமோகுளோபின் ரொம்பவும் குறைந்துபோகும்போது கர்ப்பமடைவதால் இரத்த அடர்த்தியும் குறைந்துவிடுகிறது. சரிவர உணவு எடுத்துக்கொள்ளாமல் விடுவதும் கர்ப்பினிகளின் பேறுகால இறப்புக்கு ஒரு முக்கிய காரணம்." என்கிறார், சித்திரகூட் அரசு மருத்துவமனையின் மகளிர் மருத்துவ முதுநிலை வல்லுநர் இராமகாந்த் சௌரியா.
வலக்கையால் சுஷ்மா வாளியைப் பிடித்துக்கொண்டிருக்க அவரின் இடக்கை விரல் ஒன்றைக் கெட்டியாகப் பிடித்தபடி இருக்கிறான், அவரின் இரண்டரை வயது மகன். அவரின் சேலைத் தலைப்பானது தலையை மூடியபடி இருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவ்வப்போது சுஷ்மா வாளியை சிறிதுநேரம் கீழே வைத்துவிட்டு பின் தூக்கிக்கொள்கிறார்.
"என் கணவர் போய்விட்ட பிறகு, என் மைத்துனர்தான் எங்கள் ஏழு பேருக்கும் சேர்த்து சம்பாதிக்கும் ஒரே நபர். ஆனால், இப்போது அவரால்கூட வேலைசெய்ய முடியாது. எங்களைப் பொறுத்தவரை நாள் முழுவதும் படகு ஓடினால்தான், இரவில் உணவு. முடக்கத்துக்கு முன்னர், ஒரு நாளைக்கு அவர் 300 - 400 ரூபாய் சம்பாதிப்பார். சில நேரம் வெறும் ரூ. 200தான் கிடைக்கும். என் இணையரும் இவ்வளவுதான் சம்பாதித்தார். அப்போது இரண்டு பேர் சம்பாதித்தனர். இப்போது, அந்த நிலைமை இல்லை.” என்கிறார் சுஷ்மா.
கேவத்ராவில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களைப் போலவே, சுஷ்மாவின் குடும்பத்துக்கும் ரேசன் அட்டை இல்லை. இதில் எங்கே பாலும் பழமும் என எள்ளலாகச் சொல்லிக்கொள்கிறார். "ரேசன் அட்டை இல்லையென்றால் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுவதே பெரும்பாடு! "என்றவர், ஏன் ரேசன் அட்டை இல்லை என்பதற்கு ஆண்களே நன்றாக பதில் கூறமுடியும் என்றும் சொல்கிறார்.
சுஷ்மாவின் மூத்த பையன்கள் இருவரும் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கின்றனர். ஒருவன் 3ஆம் வகுப்பு, மற்றவன் முதல் வகுப்பு. “அவர்கள் இப்போது வீட்டில் இருக்கிறார்கள். நேற்றிலிருந்து சமோசா வேண்டுமெனக் கேட்டுவருகின்றனர். விரக்தியில் அவர்களைக் கத்திவிட்டேன். இன்று, என் பக்கத்து வீட்டுக்காரர் தன் பிள்ளைகளுக்காக சமோசா செய்தபோது இவர்களுக்கும் சிறிது கொண்டுவந்து தந்தார்.” என்று எங்களிடம் கூறினார், சுஷ்மா. வாளியில் பாதியளவு மட்டுமே அடிகுழாய்த் தண்ணீரைப் பிடித்திருந்தார். " இந்த சமயத்தில் இதைவிட அதிகமான எடையைத் தூக்குவதில்லை." என விளக்கமாகக் கூறினார். அவர்களின் வீடு அந்த அடிகுழாயிலிருந்து 200 மீ. தொலைவில் இருக்கிறது. இந்த சமயத்தில் அவரின் கொழுந்தியார் அடிக்கடி தண்ணீரைத் தூக்கிச்சென்று தருகிறார்.
அடிகுழாய்க்குப் பக்கத்தில், ஊரின் கோயிலுக்கு அருகிலும்கூட இரண்டு ஆண்கள் தங்கள் குழந்தைகளுடன் நிற்கிறார்கள். அவர்களில் ஒருவரான 27 வயது சுன்னு நிசாத். ”ரேசன் அட்டைக்காக தொடர்ந்து விண்ணப்பித்துக்கொண்டு இருக்கிறேன். வட்டாரத் தலைமையிடமான மஜ்கவானுக்குப் போகுமாறு அங்குள்ளவர்கள் கூறிக்கொண்டுவருகின்றனர்.” என்று சொல்கிறார். அதற்கும் மேலேபோய், " கிட்டத்தட்ட 85 கிமீ தொலைவில் இருக்கும் மாவட்டத் தலைநகர் சத்னாவுக்குப் போக வேண்டியிருக்கும் என அங்கு இருப்பவர்கள் கூறுகிறார்கள். மூன்று முறை விண்ணப்பித்தும் எனக்கு ரேசன் அட்டை கிடைக்கவில்லை. இப்படி ஆகுமென முன்னரே தெரிந்திருந்தால், அதை வாங்குவதற்காக எந்த இடத்துக்கும் போய்வந்திருப்பேன். குறைந்தது, நகரத்தில் இருக்கும் என் உறவினர்களிடமிருந்து கடன்பெறாமல் இருந்திருப்பேன்.” என குறைபட்டுக்கொள்கிறார், சுன்னு.
தாய், இணையர், ஒரு வயது மகள் மற்றும் தன் சகோதரரின் குடும்பத்துடன் சுன்னு சேர்ந்து வாழ்கிறார். கடந்த 11 ஆண்டுகளாக ஒரு படகை ஓட்டிவருகிறார். அவரின் குடும்பத்துக்கு நிலம் எதுவும் இல்லை. பொதுமுடக்கத்தில் அங்குள்ள 134 படகுக்காரர்களைப் போல இவரின் குடும்பத்துக்கும் வருமானம் எதுவும் இல்லை.
மூன்று முறை விண்ணப்பித்தும் ரேசன் அட்டை கிடைக்காதது, முன்னைவிட மோசம். ஆனால், சுன்னுவோ, “எல்லா அட்டைதாரர்களுக்கும் பொருள் வழங்கிய பிறகு மீதமுள்ள ரேசன் பொருள்களை எங்களுக்கு கூடுதல் விலைக்குத் தருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.”என்றார். ஆனபோதும் இங்குள்ள பல ரேசன் அட்டைதாரர்களுக்கும்கூட அவர்களுக்கான ஒதுக்கீட்டு அளவுகூட கிடைப்பதில்லை.
முடக்கம் நீட்டிக்கப்பட்ட பின்னர், மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் வெளியிட்ட அறிவிப்பில், உணவுப்பொருள் பெறுவதற்கு ரேசன் அட்டையோ வேறு எந்த அடையாளச் சான்றோ கட்டாயம் தேவை எனும் விதியை ரத்துசெய்தார். மாநில அரசின் ஒதுக்கீட்டிலிருந்து 32 இலட்சம் பேருக்கு மத்தியபிரதேச அரசு இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொருவருக்கும் தலா நான்கு கிகி கோதுமை, ஒரு கிகி அரிசி ஒதுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சத்னா மாவட்ட நிர்வாகமாது அங்கு குடியிருக்கும் அனைவருக்கும் எந்தவிதப் பதிவுகளும் இல்லாமல் இலவச ரேசன் பொருள் வழங்கல் குறித்து அறிவித்தது. சித்திரகூட் நகராட்சி எல்லைக்குள் இதுபோல மொத்தம் 1,097 பேரைக் கொண்ட 216 குடும்பங்கள் உள்ளன என்று உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் ரேசன் வழங்குநர்களோ சுஷ்மாவின் சிற்றூரான கேவத்ரா (கியோத்ரா)வைக் கணக்கில்கொள்ளவே இல்லை எனத் தெரிகிறது.
இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பு இந்த சமயத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து உணவுக் கொள்கை ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (ஐ.எஃப்.பி.ஆர்.ஐ) அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், “ கோவிட் -19 கொள்ளைநோயானது ஒரு கொடுமையான யதார்த்த நிலைமையை வெளிப்படுத்தியுள்ளது. பற்றாக்குறையான, சீரற்ற பாதுகாப்புக் கட்டமைப்பானது, பொருளாதார வலுக்குறைந்த மக்கள்பிரிவினருக்கு உணவும் பிற சேவைகளும் கிடைக்காதபடி செய்துவிடும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தன் இணையருடன் சேர்ந்து எப்படியெல்லாம் இராம்காட்டுக்குப் பயணம்செய்வோம் என்பதை நினைவுகூர்கிறார், சுஷ்மா. “ரொம்பவும் மகிழ்ச்சியான நாள்கள், அவை. பெரும்பாலும் ஞாயிறுதோறும் இராம்காட்டுக்குப் போய்விடுவோம். என்னை சின்ன படகு சவாரியாக அழைத்துச்செல்வார். அப்போது, வேறு யாரையும் படகில் ஏற்றமாட்டார்.” - பெருமிதம் பொங்கச் சொல்கிறார். "அவர் இறந்தபிறகு அங்கு போனதில்லை. இனியும் போக விரும்பவில்லை. எல்லோரும் முடங்கிக்கிடக்கிறார்கள். படகுகள்கூட அவற்றுக்கான ஆள்களை இழந்திருக்க வேண்டும்.” என்று பூடகமாகச் சொன்னபடி பெருமூச்சுவிட்டார் சுஷ்மா.
தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்