”வயல்வெளிகளில் வேலையில்லாதபோது, காட்டுக்குச் சென்று கர்மடா பழங்களையும், மற்ற பொருட்களையும் சேகரிக்கப் போவேன்” என்கிறார் கங்கய். பலெங்கா பரா என்னும் அவர் வாழும் குடிசைப் பகுதியைச் சுற்றியிருக்கும் செடிகள் நிறைந்த காட்டிலும் புனித தோட்டத்திலும் உள்ள லாவூட்டைத்தான் அவர் குறிப்பிடுகிறார். அடர் சாம்பல் நிற கற்பாறைகள், கிராமக் குடிசைகள், காரின் அளவிலான குடில்கள் சமவெளி முழுவதும் நிறைந்திருக்கின்றன. நிலப்பரப்பின் மீது பழைய மரங்கள் வேர்விட்டு இருக்கின்றன. அதன் கிளைகள் அடர்ந்த கொடிகளால் நிறைந்திருக்கின்றன.
பலெங்கா பரா என்பது, பஸ்தார் பகுதியின் அமராவதி காட்டின் எல்லையில் இருக்கும் பகுதியாகும். தெற்கு சத்தீஸ்கர் பகுதியின் ராஜ்நந்தகோன் நகரில் இருந்து, எட்டு மணி நேர பேருந்து பயணமும், இரண்டு கிலோமீட்டர் நடைபாதைப் பயணத்துக்குப் பிறகு அமைந்திருக்கும் பகுதி இது. இக்குடிசைப்பகுதியில், முதன்மைத் தெரு கரிபடிந்ததாகவும், மற்ற பகுதிகளில் அழுக்கடைந்தும், மாட்டுச் சாணம் நிரம்பியும் இருக்கும். பலெங்கா பராவின் 336 (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011) நபர்களும் முதன்மைத் தெருப்பகுதியைச் சுற்றி 60 ஓர் அறை வீடுகளில் தங்கியிருக்கிறார்கள். சில குடில்கள் பழைய, பழுப்பேறிய மண்ணாலும், செங்கலாலும் கட்டப்பட்ட வீடுகள். சில வீடுகள் கான்கீரீட்டிலும், பச்சையிலும், இளஞ்சிவப்பு வண்ணங்களாலும் பெயிண்ட் செய்யப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளாலும் ஆன வீடுகள்.
33 வயதான கங்கய் சொதி, கோண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ஹல்பி மொழியைப் பேசுகிறார். கோண்டி மொழியும், கொஞ்சம் ஹிந்தி மொழியும் பேசுகிறார். முதலில் கொஞ்சம் வெட்கப்பட்டாலும், அவரது வாழ்க்கையைப் பற்றி நாம் எழுதுவதற்கு ஒப்புக்கொண்டார்.
தனது குடும்பத்தைப் பராமரித்துக்கொள்ளும் கங்கய், அவரது தந்தையின் வயல்வெளியில் பணிபுரிகிறார். வார இறுதியில் வாரச் சந்தையான ஹாட்டில் (சந்தை) விற்பனை செய்வதற்காக மஹுவா மலர்களில் இருந்து மதுவைத் தயாரிக்கிறார்.
கங்கய் சொதியின் நாள் காலை 5 மணிக்குத் தொடங்குகிறது. “ஒரு நாளின் உணவுக்காக நெல்லில் இருந்து உமியைப் பிரித்துத் தயாரித்து வைப்பேன். பாத்திரங்களை சுத்தப்படுத்தி வைத்துவிட்டு, அருகில் இருக்கும் பம்பில் இருந்து தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு, சமையலுக்கான விறகுகளை சேகரிப்பேன். காலை உணவைத் தயாரித்து வைத்துவிட்டு, காலை 10 மணிக்கு வயல்வெளிக்கு வேலைக்குச் செல்வேன்” என்கிறார். பிற்பகலில் வீட்டுக்கு வந்து மதிய உணவுக்கான வேலைகளைச் செய்துவிட்டு மறுபடியும் வயலுக்குத் திரும்புகிறார். நான்கு மணிக்கு வேலைகளை முடிக்கிறார். “குளித்துவிட்டு, தண்ணீரைப் பிடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் விறகுகளைச் சேகரிப்பேன். தரையில் மாட்டுச் சாணத்தை மாற்றி மெழுகிய பிறகு, சோறும், கறியும் சமைப்பேன் (சைவம் மற்றும் அசைவம்). சிறப்பான சில நாட்களில் பூரியும், கீரும் (உடைத்த கோதுமையால் ஆன உணவுப்பொருள்) சாப்பிடுவோம்.
கங்கய், அவரது தாய் குமெண்டியுடனும், தந்தை மங்கல்ராமுடனும் வாழ்கிறார். ஷிவ்ராஜ், உமேஷ், சஹாந்தாய் மற்றும் ரத்னி ஆகியோர் உடன்பிறந்தவர்கள். 15 வயதான ஜித்தேஷ்வரி, 13 வயது ஜோதி மற்றும் 11 வயது ப்ரதீமா ஆகியோர் கங்கய் சொதியின் மகள்கள். அருகிலிருக்கும் தெருவின் ஒரு வீட்டில் வாழ்கிறார்கள். அவர்களின் வீடு, அந்தக் கிராமத்திற்கான ஒரே நீர்வளமான தண்ணீர் பம்புக்கு அருகில் அமைந்திருக்கிறது. களிமண் டைல்களால் ஆன கூரையுடன் இருக்கும் அவரது செங்கல் வீட்டுக்கு பச்சை பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். கதவின் நுழைவில், பல வண்ணங்களால் ஆன வளையல்களால் வளையங்களாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.
“வயல்வெளியில் (கங்கய் சொதியின் தந்தையின் நான்கு ஏக்கர் நிலம்) நாற்றுகள் கட்டுவேன். பயிரை அறுவடை செய்வேன்” என்கிறார். கங்கய் அவரது ஐந்து வயதிலிருந்து அந்த நிலத்தில் வேலை செய்து வருகிறார். அவர்களின் வயல்வெளியில், நெல், பருப்பு, கொள்ளு மற்றும் எண்ணெய் விதைகளை விளைவிக்கிறார்கள். அவர்களின் பெரிய தோட்டத்தில், ராகி, உளுத்தம் பருப்புடன் சில காய்கறிகளையும் விளைவிக்கிறார்கள். ஜூன் மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடையில் பருவமழையைப் பெறுகின்றன பயிர்கள்.
“கோடைக்கால மாதங்களில், நிலத்தில் விழும் மஹுவா பூக்களைச் சேகரித்து கற்பாறைகளில் அவற்றைக் காய வைப்பேன். பிறகு அதை சேகரித்து வைத்து, நீரில் நனைப்பதற்கு முன்பாக, மாண்ட் (மதுவில்) அதை புளிக்கவைப்பேன்” என்கிறார். கோண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்த பலரும், மஹுவா மலர்களில் இருந்து மதுவைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். “ஒரு பாட்டிலுக்கு 50 ரூபாய் வருகிறது” என்கிறார் கங்கய். 650 மில்லி லிட்டர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள் அவர்கள். ஒரு பிண்ட் பாட்டில் (450 – 500 மில்லி லிட்டர்) அட்டி எனப்படும். ஒரு அட்டியின் விலை 25 ரூபாய்.
வாரத்தின் இறுதியில் வெள்ளிக்கிழமை சந்தையான ஹாட்டில், 100 ஸ்டால்கள் போடப்பட்டிருக்கும். நடந்தும், மோட்டார் பைக்குகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களிலும் வரும் மக்கள், 20 கிலோமீட்டர் கடந்து தங்கள் பொருட்களை விற்பதற்காக வருவார்கள். தங்கள் வயல்வெளியில் உற்பத்தி செய்த காய்கறிகள், தயாரித்த இனிப்புகள் மற்றும் பொறித்த உனவுகள், ஆடைகள், அழகுப் பொருட்கள் மற்றும் ப்ளாஸ்டிக் பொருட்கள் என பலவற்றையும் விற்பனை செய்வார்கள்.
அமைதியான அந்த இடத்தில் அமைக்கப்படும் சந்தை, பலவிதமான வண்ணங்களைக் கொண்டிருக்கும். புளி, மாங்காய், (ஆம்சூர்) உலரவைத்த மாங்காய், கொலியாரி பாஜி (காய்கறியாக உண்ணப்படும் ஒரு வகை மரத்தின் இலைகள்), போஹாத் இலைகள் மற்றும் பழம், கர்மடா பழம் (காய்கறி தயாரிப்புகளுக்கானவை), பெஹாடா, ஹிர்டா (மருத்துவ குணமுடைய பழங்கள்), தேன், டிக்கூர் (மருத்துவ குணமுடைய வாசனை நிரம்பிய வேர்), கோசம் பழம், டோரா (மஹுவா எண்ணெய் விதைகள்) மற்றும் உலரவைத்த மஹுவா பூக்கள், சல்ஃபி (சல்ஃபி பனையின் இளம்செடி), நெல்லிக்காய், சார் விதைகள் (ஸ்ரீகண்ட் இனிப்புகளை அலங்கரிப்பதற்கான விதைகள்), பெல்வா விதைகள் (மருத்துவ குணம்), காளான்களின் வகைகள், வேர்களின் பல்வேறு வகைகள், சீண்டி ( பேரிச்சம் பழங்கள்), அத்திப்பழங்கள், ஜாமுன் மற்றும் டெண்டு பழங்கள்.
சாப்பிட முடியாத மரங்களைக் கொண்ட பொருட்களும் விற்கப்படுகின்றன. சால் விதைகள், கரஞ்சி விதைகள் மற்றும் வடங்குல் விதைகள் ஆகிய அனைத்து எண்ணெய் விதைகளும் சோப்பு செய்வதற்கும், மருத்துவ பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. துடைப்பங்கள் செய்வதற்குப் பயன்படும் பேரிச்சை இலைகள் அல்லது புற்கள் அல்லது மூங்கில் ஆகியவையும் இங்கு விற்கப்படுகின்றன.
பிற்பகல் தொடங்கி இரவு வரையில் இந்த சந்தை நடைபெறும். மாலை ஏழு மணிக்கு, இருள் வரத்தொடங்கும்போது, விற்பனைக்காக வந்திருந்த அனைவரும் பொருட்களை மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு அங்கிருந்து செல்வார்கள். வணிகர்கள் இன்னொரு சந்தையில் அவற்றை விற்பதற்காக வண்டிகளில் ஏற்றுவார்கள். கங்கய் சொதியைப் போல பலெங்கா பராவில் இருந்து வந்த மக்கள், அவர்கள் கொண்டுவந்த பழங்கள், காய்கறிகள், மீதமிருக்கும் ஒன்று அல்லது இரண்டு பாட்டில் மாண்டுடன் வீட்டுக்குத் திரும்புவார்கள்.
வயது குறைவாக இருக்கும்போது, கங்கய் பள்ளிக்குச் செல்ல விரும்பினாராம். ஆனால் அவரால் போகமுடியவில்லை. “இப்போது என் மகள்கள் படிக்கச் செல்கிறார்கள் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது” என்கிறார் கங்கய்.பின்னாளில் அவர்கள் திருமணம் செய்துகொண்டு அவர்களின் சொந்த வீட்டில் வாழவேண்டும் என கங்கய் விரும்புகிறார்.
கங்கய் சொதிக்கு 2002-இல் மணமாகியிருக்கிறது. 17 வயதில் செதிலால் சொதி என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அவரது சமூகத்தில், ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்பது வழக்கம். மணப்பெண்ணின் கிராமத்தில் திருமணம் நடந்திருக்கிறது. அதற்குப்பிறகு மணமகனின் கிராமத்தில் கொண்டாட்டம் இருந்திருக்கிறது.
“எனது பெற்றோர்தான் அவரைத் தேர்ந்தெடுத்தார்கள்” என்கிறார் கங்கய் சொதி. “ சில வருடங்களுக்கு முன்பாக அவரைப் பிரிந்து வந்துவிட்டேன். எனது குழந்தைகளுடன் என் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன். குடித்து விட்டு என்னை அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். எனது பெற்றோரும், அவரது பெற்றோரும், கிராமத்தில் இருப்பவர்களும் அவரைத் திருத்துவதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. சில நாட்கள் கழித்து அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு அந்த வீட்டிற்கு நான் செல்லவில்லை.”
மறுமுறை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என நினைத்தாரா கங்கய்? “இல்லை. எனது குழந்தைகளை விட்டுவிட்டு நான் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு என்னுடைய வீட்டில் இங்கேயே வாழவேண்டும்”.
செய்தியாளர்கள், தங்களுடனும், CFL-இன் ஆசிரியர்களுடனும் நேரம் செலவிட்டதற்கும், இக்கட்டுரையை எழுதுவதற்கு உதவியாகவும், வழிகாட்டுதல் அளித்ததற்கும் ப்ரயாக் ஜோஷிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள்.
PARI-இன் மூலமாக ஊக்கம் பெற்ற, பெங்களூரு கற்றல் மையத்தைச் சேர்ந்த இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மத்தியப் பிரதேசத்தில் பள்ளிச் சுற்றுலா சென்றபோது விவசாயி ஒருவரைச் சந்தித்ததை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். PARI அவர்களுக்கு கிராமப்புற இந்தியாவின் பல்வேறு பரிணாமங்களை விளக்கியதுடன், அவர்களது ஆய்வை எப்படி ஆவணப்படுத்தவேண்டும் என விளக்கினர்.
தமிழில்
: குணவதி