பந்தரிநாத்தும், கௌசல்யா ஷேல்கேவும் அவர்களது மகன் ரஞ்சித்திற்கு மூன்று ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு பெண் தேடி,ஒருவழியாக வரும் பிப்ரவரி மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து 52 வயதுடைய பந்தரிநாத் கூறுகையில் “நிராகரிக்கப்படுகின்ற அவமானத்தை வார்த்தைகளால் வருணிக்க முடியாது, எங்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே, விவசாயத்தைத் தாண்டி (மணமகனுக்கு) வருமானத்திற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?” என்பதாகத் தான் இருந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒஸ்மானாபாத் மாவட்டத்திலுள்ள கமஸ்வாதி கிராமத்தில், 26 வயதுடைய ரஞ்சித், அவரது குடும்பத்திற்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் சோயா பீன், பருப்பு மற்றும் கம்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகிறார். பந்தரிநாத், அந்தக் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் மாதம் 10,000 ரூபாய் சம்பளத்தில் எழுத்தராக பணிபுரிகிறார். இதேவேளையில், ரஞ்சித்தும் வேறு வேலைகளுக்கு முயற்சி செய்துள்ளார், ஆனால் அது தோல்வியில் முடியவே- விவசாயம் அவரது வருமானத்திற்கான ஒரே ஆதாரமாக மாறியுள்ளது.
விவசாயத் தொழிலாளரான கௌசல்யா கூறுகையில்,“ஒருவரும் அவர்களது மகள் ஒரு விவசாயியைத் திருமணம் செய்துகொள்வதை விரும்பவில்லை. குறிப்பாக, விவசாயிகள் அவ்வாறு செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். அவர்கள் தனியார் கடன்கொடுப்பவர்களிடம் இருந்து மிக அதிக வட்டிக்கு கடன் பெற்று, அளவுக்கதிகமாக வரதட்சணைக் கொடுத்து வேலையில் உள்ள யாரோ ஒருவருக்கு கட்டிக்கொடுக்கிறார்கள். ஆனால், விவசாயக் குடும்பத்தில் கட்டிக் கொடுக்க மாட்டார்கள்.” என்றார்.
ஒரு காலகட்டத்தில் மரத்வாடா பகுதியில் விவசாயிகளையே மாப்பிள்ளைகளாகத் தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால்,அதன் பிறகு விவசாயத்தில் ஏற்பட்ட நிச்சயமற்றத்தன்மையின் காரணமாக இந்த நிலைமை மாறிவிட்டது. அதிகரித்து வரும் இடுபொருட்கள் செலவு, நிலையற்ற சந்தை விலை, மாறிவரும் வானிலை மற்றும் கிராமப்புற கடன் அமைப்புகள் சிதைவு, இன்னபிற காரணிகளின் காரணமாக மரத்வாடாவைச் சேர்ந்த விவசாயிகள் பலர் மிகுந்த கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
'இங்கு யாரும் அவர்களது மகள் ஒரு விவசாயியைத் திருமணம் செய்துகொள்வதை விரும்பவில்லை. தனியார் கடன்கொடுப்பவர்களிடம் இருந்து மிக அதிக வட்டிக்கு கடன் வாங்கி, அளவுக்கதிகமாக வரதட்சணைக் கொடுத்து வேலையில் உள்ள யாரோ ஒருவருக்கு கட்டிக்கொடுக்கிறார்கள். ஆனால், விவசாயக் குடும்பத்தில் கட்டிக் கொடுக்க மாட்டார்கள்.' என விவசாயத் தொழிலாளரான கௌசல்யா கூறினார்
கமஸ்வாதி பகுதியைச் சேர்ந்த, 65 வயதுடைய, மூத்த விவசாயியான பாபாசாகேப் படேல், கூறுகையில், “என் இருபதுகளில்(20s), விவசாயிகள் அரசாங்க வேலையில் இருப்பவரைத் தாண்டி மதிக்கப்பட்டனர்.” இப்போது காலம் மாறிவிட்டது என்று குறிப்பிட்டார். ஒரு காலத்தில் விவசாய வேலை சமூக அந்தஸ்த்து மிக்கதாகவும்,போதுமான அளவு நிலையான வருவாய் தரக்கூடியதாகவும் இருந்ததுள்ளது. மேலும், “மகனை வைத்துள்ள விவசாயிகள் வரதட்சணை மற்றும் பரிசுகள் உட்பட திருமணத்திற்கான நிபந்தனைகளை நிர்ணயித்தனர்.” என்றார் பாபாசாகேப் படேல்.
ஆனால் தற்போது,”விவசாயத்திற்கு எந்த எதிர்காலமும் இல்லை”. என்றார் ஹனுமந்த் ஜகதாப். இவர் கமஸ்வாதி பகுதியில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லதூர் நகரப்பகுதியில், கடந்த 1997 ஆம் ஆண்டிலிருந்து, வரன் பார்க்கும் நிலையம் நடத்தி வருகிறார். அவரிடம் கிராமத்தை விட்டு தொலைவில் உள்ள நல்ல மணமகனைப் பார்க்குமாறு பெண்ணின் பெற்றோர்கள் தற்போது கேட்டு வருகின்றனர். “ஒருவேளை ஒரு ஆண் நகரத்தில் அல்லது நகர்ப்புறத்தில் வசித்தால், அவன் விவசாயத்தில் ஈடுபடமாட்டான், வேறு வேலையில் இருப்பான் என்று கருதுகின்றார்கள். பெண்ணுக்கு வரன் தேடும் பெற்றோர்கள், மணமகனின் படிப்பு, சம்பளத்தை அடுத்து தான் பார்க்கிறார்கள்.[மணமகனின் வேலையே முதன்மையானது]” என்றார் அவர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைக் கவனித்து வருவதாக கூறிய அவர், “முன்பு, ஒரு பொருத்தமான வரனைத் தேட 15 நாட்கள் எடுத்துக் கொண்டது, அல்லது சிலசமயங்களில் இரண்டு மாதம் ஆனது. ஆனால்,தற்போது, சராசரியாக ஆறு மாதம் ஆகிறது. அது கூடுதலாக ஒருவருடம் கூட ஆகிறது.இந்நிலையில், பெற்றோர்கள் பலர் தங்கள் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு ,அவுரங்கபாத் அல்லது புனே அல்லது மும்பை பகுதிக்கு செல்ல வேண்டுமென நினைக்கின்றனர். ஆனால், எனது தொடர்புகள் பெரும்பாலும் லதூர் போன்ற நகரங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் மட்டுமே உள்ளது. எனக்கு அங்கெல்லாம் அதிக பேரைத் தெரியாது.” என்றார்.
இந்நிலையில், இதன் அர்த்தம் என்னவென்றால், கிராமப் பகுதிகளில், விவசாயிகளாக உள்ள ஆண்கள் பலர், பொதுவான திருமண வயதினைக் கடந்து இருபதுகளின் இறுதியிலும், முப்பதுகளின் தொடக்கத்திலும் திருமணம் ஆகாத நிலையில் உள்ளார்கள் என்பதே எனக் கூறிய பந்தரிநாத், இதனால் “நாங்கள் 23-24 வயதிலேயே வரன் பார்க்கத் தொடங்கி விடுகிறோம்.” என்றார்.
பந்தரிநாத்தும், கௌசல்யாவும் ,ஒருவழியாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், அவர்களது மகன் ரஞ்சித்திற்கு மணப்பெண்ணைக் கண்டுபிடித்து விட்டனர். ரஞ்சித்தை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள பெண், அருகில் உள்ள கிராமத்தைச் சார்ந்த ஒரு விவசாயியின் ஐந்தாவது மகளாகும். இதுகுறித்து கூறிய கௌசல்யா, “பெண்ணின் தந்தை, அவரது நான்கு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், யாரிடம் இருந்தும் ஒருபைசா கூட கடன் வாங்க முடியாத நிலையில், அவளை(ஐந்தாவது மகள்) விட்டுவிட்டு சென்றுவிட்டார்”, இந்நிலையில், “ எங்களுக்கு உங்கள் மகளைத் தவிர வேறெதுவும் வேண்டாம் என நாங்கள் கூறினோம். என் மகனுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை என நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். அதுவே நல்ல பொருத்தமாக மாறிவிட்டது. எனினும், ஒருவேளை என் இளைய மகனுக்கு எப்போதும் திருமணம் நடக்காதோ என்பதும் எனக்கு வியப்பாக உள்ளது.” என்றார்.
மேற்கொண்டு பந்தரிநாத் கூறுகையில், “நாங்கள் பாதிக்கப்பட்டாலும் கூட, நாங்கள் யாரையும் குற்றம் சுமத்தமாட்டோம்” என்ற அவர், மேற்கொண்டு கூறுகையில், “எனக்கு மகள் இருந்தால், நானும் இதையே தான் செய்வேன். ஒரு விவசாயிக்குத் தெரியும் ஒரு விவசாயக் குடும்பத்தின் வாழ்க்கை நிலை என்னவென்று. ஒருவேளை நல்ல விளைச்சல் இருந்தால்,விலை சரிந்துவிடுகிறது. ஒருவேளை நல்ல விலை கிடைத்தால், பருவமழை பொய்த்து பாலைவனம் ஆகி விடுகிறது. வங்கியும் எங்களை கேவலமாக நடத்துகிறது. எல்லா விவசாயிகளுக்கும் கடனிருக்கிறது. இந்த வாழ்க்கை தங்கள் மகளுக்கும் கிடைக்க வேண்டுமென யார் தான் விரும்புவார்கள்?” என்றார்.
இத்தகைய சூழலில், பீத் மாவட்டத்தின் அம்பேஜோகை தாலுகாவில் உள்ள கிர்வுலி கிராமத்தைச் சார்ந்த, திகம்பர் ஜிர்மைலும் இதே உணர்வை எதிரொலிக்கிறார். இந்த கிராமம் கமஸ்வாதியில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவர் கூறுகையில்,”எனக்கு 19 வயதுடைய மகள் இருக்கிறாள். அவளுக்கு இன்னும் இரண்டு வருடத்தில் மாப்பிளைத் தேட ஆரம்பித்துவிடுவேன். அது ஒரு விவசாயியாக இருக்கக்கூடாதென நான் நிச்சயமாகத் தீர்மானித்து விட்டேன்.” என்றார்.
‘திருமணம் ஆகும் வரை, போலியான ஆவணங்கள் கொடுத்து ஏமாற்றி நகர்ப்பகுதிகளில் வேலை வாங்கிய பல ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு, அவர்களின் வேஷமெல்லாம் கலைந்து விடுகிறது’ என அபேத் கூறினார்
44 வயதாகும், திகம்பர், அவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் சோயா பீன் விதைத்துள்ளார். அதேவேளையில்,விவசாயத் தொழிலாளராகவும் உள்ளார். அவர் தனியார் கடன் கொடுப்பவரிடம் இருந்து 2 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஒருவேளை தேவைப்பட்டால் வரதட்சணைப் பெற, மேலும் கடன் பெறவும் விருப்பம் கொண்டுள்ளார். “கடன் பெருகுவது என்பது, கடினமான விஷயம் தான். குறைந்தபட்சம் என் மகளாவது விவசாய நெருக்கடியில் இருந்து விடுபடுவாள். இல்லையென்றால், நான் பணத்தை சேர்த்துக் கொண்டு(வரதட்சணை).என் மகளின் எஞ்சிய வாழ்க்கையும், (இன்னொரு விவசாயியை மணந்து) துயரத்தில் தள்ளியது போன்றதாகும். அவளது கணவன் ,ஒருவேளை குறைந்தபட்சம் 15,000 சம்பாதித்தால் கூட, அது நிலையான வருவாயாகும். இதேவேளையில், நீங்கள் ஒரு விவசாயியாக இருந்தால், இது போன்ற கணக்குகளையெல்லாம் போடமுடியாது. ஏனென்றால்,விவசாயத்தில் உங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நிச்சயமற்றத்தன்மை மட்டும் தான்.“ என்றார்.
இந்நிலையில், தங்களின் மகள்கள் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவரை மணக்கக்கூடாது என்கிற தயக்கம், சஞ்சய் அபேத் போன்ற கிர்வுலி பகுதியைச் சார்ந்த திருமணத் தரகர்களுக்கு, வரன்களைத் தேடுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. “மிகுந்த சிரமத்திற்கு பின்னால், சமீபத்தில் 33 வயதுடைய நபரின் திருமணத்தை நிச்சயித்தோம்,” என்று கூறிய அபேத், “அவரது கதையை வேண்டுமானால் நீங்கள் எழுதிக்கொள்ளலாம். ஆனால்,அவரின் பெயரைக் கூறமாட்டேன். ஏனென்றால்,உண்மையில் அவருக்கு வயது 37” என்று தெரிவித்தார்.
இதுபோன்ற தந்திரங்கள் வேறுவழிகளிலும் தொடர்வதாக அபேத் கூறினார். மேலும், “திருமணம் ஆகும் வரை,போலியான ஆவணங்கள் கொடுத்து ஏமாற்றி நகரில் வேலை வாங்கிய பல ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு, அவர்களின் வேஷமெல்லாம் கலைந்து விடுகிறது. உங்கள் வயதைக் குறைத்துக் காட்டுவதும் கூட நேர்மையற்றது தான், ஆனால் வேலை இருப்பது போல் நடிப்பது, ஒரு பெண்ணின் வாழ்வையே பாழாக்கிவிடும்.’ என அபேத் கூறினார்.
சிலசமயங்களில், விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த மணமகன்களுக்கு பெண் தேடி, இரண்டு வருடங்களுக்கு மேலும் கூட முயன்றதாக அபேத் கூறினார். “முன்பெல்லாம், வரதட்சணை பணம் எவ்வளவு, குடும்பம் எப்படிப்பட்டது என்று தான் உரையாடல் துவங்கும். ஆனால், இன்றெல்லாம், மணமகன் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவரில்லை என்று தெரிந்ததற்கு பிறகு தான் மேற்கொண்டு பேசுகிறார்கள்.”
ராதா ஷிண்டே தனது அனுபவங்கள் குறித்து பேசினார். குடும்பத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர், அம்பேஜோகை தாலுக்காவில் உள்ள விவசாயக் குடும்பத்தில், அவர் திருமணம் செய்து கொண்டார். “எனது பெற்றோர்கள் இரண்டு வருடங்களாக எனக்கு வரன் தேடினார்கள். ஆனால், அவர்கள் என்னை விவசாயிக்கு திருமணம் செய்துவைக்க கூடாதென்பதற்கே முன்னுரிமை அளித்தனர். எனது கணவர் குடும்பத்திற்கு சொந்தமாக 18 ஏக்கர் நிலமிருக்கிறது ஆனால்,அதனை எனது கொழுந்தனார்களே பராமரித்து வந்தனர். எனது கணவர் விவசாயம் செய்யவில்லை. எங்களுக்கு திருமணமான சில நாட்களுக்கு பின்னர் தான், அவர் லதூர் பகுதியில் நகைக்கடை வைத்தார். கடை தொடங்க திட்டமிட்டிருப்பது குறித்து அவர் கூறியதற்கு பின்னரே,எனது பெற்றோர்கள் அவரை ஏற்றுக்கொண்டனர்” என 26 வயதுடைய ராதா கூறினார்.
“எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பல ஆண்களுக்கு திருமணமே ஆகாதோ என்று நான் நினைக்கிறேன்” என்று கூறிய அபேத், “விவசாய நெருக்கடி மற்றும் கடன் ஆகியவற்றோடு தொடர்ந்து நிராகரிக்கப்படுவதும், அவர்களின் மனஅழுத்தத்திற்கு காரணமாகிறது” என்றார் அவர்.
இந்த கிராமங்களில் உள்ள பல விவசாயக்குடும்பங்கள் பெண் தேடுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் அதேவேளையில், இதுகுறித்து பேசுவதற்கு தயாராக இல்லை, ஏன் புகைப்படம் எடுக்கக் கூட அனுமதிக்கவில்லை. மணமகளை தேடுவதில் உள்ள சிரமங்கள் குறித்து கேள்விகளுக்கான பதில்களாக பெரும்பாலும் தெரியாது என்று தோளை உயர்த்துவதுதையும், சங்கடப்பட்டு நாணுவதையுமே சந்திக்க நேர்ந்தது. இதுகுறித்து கூறிய 26 வயதான சந்தீப் பிட்வே “அவர்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து ஒருவரும் உங்களிடம் பேசமாட்டார்கள். ஆனால், அது தானே உண்மை” என்றார். இவருக்கு சொந்தமாக 20 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது.
பிட்வேவும் கூட, திருமணம் ஆகாதவர் தான், மணப்பெண் தேடிக்கொண்டு இருக்கிறார். அவர் கூறுகையில் விவசாயத்திற்கு எவ்வித மரியாதையும் இல்லை என்று கூறினார். மேலும்,”அதை கூறுவதில் எனக்கு எவ்வித வெக்கமும் இல்லை. 10,000 ரூபாய் சம்பாதிக்கும் நபர்களுக்கு கூட திருமணம் ஆகிறது. ஆனால், 10 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளவர்கள் சிரமப்படுகிறார்கள். பெண்ணின் தந்தை; நீங்கள் என்ன செய்கீறிர்கள்? என்று கேட்கிறார். எங்களின் பதிலைக் கேட்டதும்,உங்களை விரைவில் அழைக்கிறேன் என்கிறார். ஒருவேளை அவர் நல்ல வரனைக் கண்டுபிடிக்காவிட்டால், சில மாதங்கள் கழித்து எங்களுக்கு பதில் அளிக்கின்றார். எங்களின் திருமணம் ஆகாத நிலையின் மீது, அவர்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.” எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தக் காவலரான, சஞ்சயிடம் நான் பேசும் போது, மூன்று வருடத்திற்கு முன்னர், அவரது திருமணத்தின் போது, அவரது தந்தை 15 லட்சம் வரதட்சணைக் கேட்டு பெற்றதாகக் குறிப்பிட்டார். இதனை இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், “நான் அரசு வேலை இருக்கிறேன். ஆனால், எனது தம்பி விவசாயியாக உள்ளார். (அவருக்கு) நாங்கள் தற்போது மணப்பெண் தேடி வருகிறோம். அப்போது இருந்து எனது தந்தையின் நடவடிக்கைக்கும், தற்போது உள்ளதற்கும் இடையே நீங்கள் கற்பனைக் கூட செய்து பார்க்கமுடியாது.” என்றார் அவர்.
இந்நிலையில், அவரது நடத்தையில் தெரியும் மாற்றத்தை தான் புரிந்துகொள்வதாக, 45 வயதுடைய, பாபாசாகேப் ஜாதவ் கூறினார். ஜாதவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் நிலம் கொண்ட விவசாயி ஆவார். மேலும் அவருக்கு 27 வயதுடைய விஷால் என்ற மகனும் உள்ளார். "அவன் பல முறை நிராகரிக்கப்பட்டான்," என்று கூறிய அவர், "சில நாட்களுக்கு முன்பு, தாலுகாவில் நடந்த ஒரு திருமண வரன் பார்க்கும் நிகழ்வுக்கு அவனை நான் அழைத்துச் சென்றேன், அங்கு திருமணம் செய்ய விரும்பும் ஆண்களும், பெண்களும் பொருத்தமான வரன்களைத் தேடுவதற்காக கூடினர். அதில் பங்கேற்ற இரண்டு பெண்கள் எந்த மாதிரியான மணமகனை விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு, விவசாயியைத் தவிர வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்’ என்று கூறியதைத் தொடர்ந்து நான் அங்கிருந்து வெளியேறினேன்.” என்றார் அவர்.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்