கிராமத்தின் சந்துகளில் எல்லாம் சுறுசுறுப்பாக நடக்கிறார் வைசாலி யேதே. சிரித்த முகத்தோடு கிராம மக்களை வணங்குகிறார். அவரை ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். “ நான் உங்களின் மகள்” என்று உள்ளூர் இந்தியில் அவர் கைகூப்பி வாக்கு சேகரிக்கிறார்.
தன்னை மக்கள் கவனிக்கிறார்கள் என்பதில் அவருக்கு சந்தோஷம். “ கடவுள்கிட்ட நீங்க பிரார்த்தனை பண்ணும்போது எனக்காகவும் பிரார்த்திங்க. உங்க நினைப்புல என்னை எப்போதும் வச்சுக்கங்க” என்று அவர் வேண்டுகிறார். விவசாயக் குடும்பங்களில் இருக்கிற கணவரை இழந்த பெண்களை மறந்திடாதீங்க. கணவர்கள் இறந்தபிறகு அவங்க அனுபவிக்கிற மனக்கஷ்டங்களையும் பொருளாதார கஷ்டங்களையும் மறந்திடாதீங்க என்று மன்றாடுகிற வேண்டுகோள் அது.
வயதானவர்களைப் பார்த்தால், குனிந்து கால்களைத் தொட்டு மரியாதை செய்கிறார் இந்த 28 வயது வேட்பாளர். இளம் பெண்களின் கைகளைக் குலுக்கி பேசுகிறார். கைபம்புகளிலிருந்து தண்ணீர் கொண்டுவருகிற பெண்களைப் பார்த்து கை அசைக்கிறார். அவரோடு ஆறு,ஏழு வாகனங்கள் உள்ளன. காத்திருக்கிற காருக்குள் ஏறிக்கொள்கிறார். 42 டிகிரியில் கொளுத்துகிற வெயிலில் அடுத்த கிராமத்தில் வாக்குகளை சேகரிப்பதற்காக பயணத்தைத் தொடர்கிறார்.
கிழக்கு மகாராஷ்ட்ரத்தில் உள்ள யாவத்மால் - வாசிம் நாடாளுமன்றத் தொகுதியில் 2019 தேர்தலில் போட்டியிடுகிறார் வைசாலி. ஏறத்தாழ 17.5 லட்சம் பேர் ஏப்ரல் 11 அன்று இங்கே வாக்களிக்கிறார்கள். பிரகார் ஜன்சக்தி பக்சா எனும் அரசியல் கட்சி அவரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. ஓம்பிரகாஷ் (பக்சு) காடு என்பவர் அந்த கட்சியின் தலைவர். 48 வயதான அவர், அம்ராவதி மாவட்டத்தில் உள்ள அகல்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர். விதர்ப்பா பகுதியில் அவரது கட்சி வளர்ந்து வருகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்துகிறது.
விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மேலும் மேலும் அதிகமாகிற காரணத்தால் விதர்பா பகுதியில் தற்கொலைகள் நடைபெறுகின்றன. நில நடுக்கம் ஓரிடத்தில் மையம் கொள்வது போல, விவசாய நெருக்கடியின் மையமாக கடந்த 20 வருடங்களாக, யாவத்மால் பகுதி இருக்கிறது. நூற்றுக்கணக்கான பருத்தி விவசாயிகளும் சோயாபீன்ஸ் விவசாயிகளும் இந்த மாவட்டத்தில் தற்கொலை செய்திருக்கின்றனர். கடன்வலைக்குள் மாட்டிக்கொள்வது, வருமானம் குறைந்துபோவது,கிராம பொருளாதாரம் தேங்கிப்போயிருப்பது உள்ளிட்ட காரணங்கள்தான் அவர்களின் தற்கொலைகளுக்குக் காரணம்.
“ராலேகான் பகுதியில் பிரச்சாரத்தை இன்று முடித்துவிட்டோம்” என்கிறார் வைசாலி. “நாளைக்கு வாசிம் பகுதிக்குப் போகிறோம்” 2000 கிராமங்களும் நகரங்களும் இந்தத் தொகுதியில் உள்ளன. அத்தனை இடங்களுக்கும் போய் பார்ப்பது என்பது சாத்தியமில்லை. அதனால் சில இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி முடித்துவிடலாம் என்பது அவரது திட்டம்.
வைசாலிக்கு சுதாகர் யேதேவோடு 2009ஆம் வருடம் கல்யாணம் ஆகும்போது பதினெட்டே வயதுதான். இரண்டு வருடத்திலேயே சுதாகர் உயிரை விட்டுவிட்டார். சுதாகரின் கிராமத்தின் பெயர் ராஜூர். அது யாவத்மால் தொகுதியில் உள்ள காலாம்ப் தாலுகாவில் இருக்கிறது. அங்கேயிருந்த மூன்று ஏக்கர் கட்டாந்தரை நிலத்தில்தான் அவர் பருத்தியும் சோயாபீன்ஸ்சும் பயிரிடுவார். வைசாலியின் கிராமம் தொங்கர்கர்தாவும் அதே தாலுகாதான். ஆனால், 20 கிலோமீட்டர் தூரம் வித்தியாசம்.
சுதாகர் 2011 அக்டோபர் 2ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அந்த நேரத்தில் வைசாலி அம்மா வீட்டுக்கு வந்திருந்தார். இரண்டாவது குழந்தை ஜன்கவி அப்போதுதான் பிறந்த கைக்குழந்தை. மகன் குணாலுக்கு ஒன்னரை வயது.“ எனது கணவர் விஷம் குடிச்சு செத்த அன்னிக்கு சாயந்தரம்தான் எனக்கு செய்தி வந்தது.” என்று நினைவுகளுக்குள் மூழ்கிப்போகிறார் அவர். “என்னைப் பத்தியோ குழந்தைகளைப் பத்தியோ நினைக்காம, திடீர்னு எங்கள விட்டு அவர் போயிட்டார்” அவர் ஏன் தற்கொலை செய்தார்னு தெளிவா தெரியவில்லை என்கிறார் வைசாலி. சுதாகருக்கு கடன்கள் இருந்தன. அந்த வருஷம் நிலத்தில விளைச்சல் இல்லை. அதுல எது அவரைப் பாதித்தது தெரியவில்லை.....அவரோடு இருக்கிற மற்ற போட்டியாளர்களில் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சிவசேனாவின் பாவனா கவாலி மறுபடியும் தன்னை தேர்வு செய்யவேண்டும் என்கிறார். அவரை எதிர்ப்பவர்களில் பிரதானமானவர் மகாராஷ்ட்ர சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் மானிக்ராவ் தாக்கரே. மகாராஷ்ட்ர மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அவர்.
வைசாலி போட்டியிடுகிற தொகுதியின் மற்ற போட்டியாளர்கள் பயம் தரும் பின்னணி உடையவர்கள். நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிற சிவசேனா கட்சியின் பவானா கவாலி, மகாராஷ்ட்ர சட்டப்பேரவையின் துணை சபாநாயகரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மானிக்ராவ் தாக்கரேதான் அவர்கள். வைசாலியை நிறுத்துவதன் மூலம் யாவத்மாலிலும் வாசிமிலும் உள்ள மாவட்ட பஞ்சாயத்துகள், நகரப்பஞ்சாயத்துகள், கிராம பஞ்சாயத்துகளில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கிக்கொள்ள இந்தக் கட்சி முயல்கிறது. வைசாலிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கின்றன, எந்த எந்த வாக்குச் சாவடிகளில் வாக்குகள் கிடைக்கின்றன என்று அதை ஆராய முயல்கிறது. எவ்வளவு மக்கள் இந்தக் கட்சியை ஆதரிப்பார்கள், யார் யாரை எல்லாம் பஞ்சாயத்து தேர்தல்களில் நிறுத்தலாம் என்றும் அது ஆராய முயல்கிறது.
“ எனக்கு தேர்தலில் போட்டியிடுவதில் விருப்பம் இல்லை” என்கிறார் வைசாலி. “ ஆனால், தலைவர் பக்சா காடு, விவசாயிகளின் தற்கொலைகள் குறையவில்லை. விவசாயிகளின் பிரச்சனைகளை தேர்தல்களின்போது எழுப்புவதற்கு நான் கட்டாயம் போட்டியிடவேண்டும் என்றார். அதற்குப் பிறகுதான் எனக்கு வேகம் பிறந்தது” என்கிறார். “ நான் அரசியல் செய்வதற்காக தேர்தலில் நிற்கவில்லை. சமூகப் பணிக்காக நிற்கிறேன்” என்றார்.
வைசாலி ஊர்வலங்களிலும் தெருமுனைக் கூட்டங்களிலும் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால், விவசாய விளைபொருள்களுக்கு நல்லவிலை கிடைக்கவும் பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலிகள் கிடைக்கவும் தற்கொலை செய்துகொண்டோரின் மனைவிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் மறுவாழ்வு கோரியும் குரல் எழுப்புவேன் என்கிறார் அவர். குடிப் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் பேசுகிறார். மது விலக்கு வேண்டும் என்கிறார்.
பெண்கள் அவர்களின் கஷ்டங்களிலிருந்தும் அவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகளிலிருந்தும் காப்பாற்றப்படுவதற்கு மது விலக்கு மிகவும் முக்கியமானது என்கிறார் வைசாலி. அவரது முன்னுரிமையான பிரச்சனைகளில் ஆதிவாசி இளம் பெண்களுக்கான மறுவாழ்வும் இருக்கிறது. ஆண்களால் பாலியல்ரீதியாகச் சுரண்டப்பட்டு பிறகு கைவிடப்படுகிற பலவேறு சம்பவங்கள் உள்ளூரில் நடக்கின்றன என்று பல செய்திகள் அங்கே வெளியாகியிருக்கின்றன.
“ இந்த பெரிய தலைவர்களை நீங்கள் தேர்வு செய்தால் அவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள்” என்று தொன்கர்கர்தாவில் கிராம மக்களிடம் பேசும்போது கட்சித்தலைவர் காடு சொன்னார். “ ஆனால் உங்களின் மகளை நீங்கள் தேர்வு செய்தால் அவர் நாள் முழுக்க உங்களுக்காக பணியாற்றுவார்” என்றார் அவர்.
வைசாலி காலையில் விவசாயக்கூலியாக வேலை செய்கிறார். மதிய நேரத்தில் ராஜூர் கிராமத்தின் அங்கன்வாடியில் உதவியாளராக இருக்கிறார். மாலையில் கூடுதல் வருமானத்துக்காக தையல் மிஷினில் சிறு வேலைகள் செய்கிறார். மாதம் அவருக்கு 7000 முதல் 8000 வரை கிடைக்கும். “கடந்த ஒன்பது வருடங்களாக ஒரே போராட்டம்தான்” என்கிறார் அவரது மூத்த சகோதரர் சஞ்சய். அவர்தான் வைசாலிக்கு இப்போது பெரிய ஆதரவு.
வைசாலியின் புகுந்த வீட்டுக்காரர்கள் ராஜூர் கிராமத்தில் பெரிய குடும்பம். 50 குடும்பங்கள் இருப்பார்கள் என்கிறார் ஒரு உறவினரான மானிக் யேதே.
வைசாலியின் பெற்றோர்கள் சொந்தமாக நிலம் இல்லாதவர்கள். அப்பா மானிக்ராவ் தோடே ஒரு கொத்தனார். அம்மா சந்திரகலா ஒரு விவசாயக்கூலி. அண்ணன் சஞ்சய், தம்பி வினோத் அலைந்து திரிந்து கிடைத்த வேலைகளைச் செய்பவர்கள். அவர்களுக்கு பழைய கால வீடு ஒன்று இருக்கிறது. அதை இரண்டாகப் பிரித்து ஒரு அறையில் அண்ணன் அவரது மனைவி,மகனோடு வசிக்கிறார். இன்னொரு அறையில் வைசாலியின் பெற்றோர், தம்பி வினோத், வைசாலியின் ஒன்பது வயது மகன் வசிக்கின்றனர்.
ஒன்றாம் வகுப்பு படிக்கிற மகளோடு வைசாலி அவரது மாமியார் பஞ்ச்புலா சேஷ்ராவ்யேதாவோடு ராஜூரில் வசிக்கிறார்.
“ஒரு நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் என்ற முறையில் வைசாலியை நாங்கள் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை” என்கிறார் அவரது அப்பா. “ அவளுக்கு நல்ல வாக்குகள் கிடைக்கும். விவசாயிகள் வாக்களிப்பார்கள்” என்கிறார்.
வைசாலி வேட்பாளராக நிற்பது என்பது பலரை சிக்கலான மனநிலைக்கு தள்ளிவிட்டது. “இதைச் செய்வதா அதைச் செய்வதா என்ற எனது மனநிலை விசித்திரமாக இருக்கிறது” என்கிறார் தொங்கர்கர்தா பஞ்சாயத்தின் தலைவரான நிஸ்சல் தாக்கரே. கிராமத்திலிருந்து வைசாலி நிற்கிறார். மனதின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வைசாலிக்கு பிரச்சாரம் செய்வதா, கிராமத்தின் சாலைகள், தண்ணீர் விநியோகம், பாசனத்துக்கான தேவைகளை மனதில் கொண்டு எது சாத்தியமோ அதை செய்துவிடுவதா என்று சிக்கலான மனநிலைக்குப் போய்விட்டார் அவர்.
“நான் மறுபடியும் என்னை தேர்வு செய்யுங்கள் என்று கிராமத்தினரிடம் கேட்டால் நீ என்ன கிராமத்துக்கு செய்தாய் என்று கேட்பார்கள்” என்கிறார் அவர்.
தற்போது ஆதிக்கத்தில் உள்ள வேட்பாளர் ஜெயித்துவிடுவார் என்கிறார் அவர். அடுத்த ஆறு மாதங்களில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் அது பிரதிபலிக்கும். பஞ்சாயத்து தேர்தல்களிலும் பிரதிபலிக்கும் என்கிறார் அவர்.
“காத்து எந்தப் பக்கம் அடிக்கிதோ அந்தப் பக்கமா போயிட்டா கிராம வளர்ச்சிக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வாங்கிக்கலாம்” என்கிறார் அவர்.
உள்ளூரில் உள்ள பாஜக- சிவசேனா தலைவர்களோடு நெருக்கமானவர் தாக்கரே. அதேநேரத்தில் வைசாலி அவரது சொந்த சாதியைச் சேர்ந்தவர். குன்பி சமூகம் என்றும் காய்ரே குன்பிஸ் என்றும் அழைக்கப்படுகிற இந்த சமூகம்தான் யாவத்மால் மாவட்டத்தின் இந்தப் பகுதியில் ஆதிக்கமுள்ள சமூகமாக இருக்கிறது.
இந்த தொகுதியில் நடக்கிற போராட்டத்தின் களம் மிகவும் பெரியது. உடனடியாக மாற்றியமைக்க முடியாதபடி எல்லாவிதமான ஆற்றலோடும் எதிர்த்தரப்பு இருக்கிறது. ஆனால், வைசாலியிடம் பணமும் இல்லை. பலமும் இல்லை. தேர்தலுக்குப் பிறகு அவர் தனது சாமான்யமான தொழிலாளர் வாழ்க்கைக்குத் திரும்பிப் போகவேண்டி வரலாம். ஆனாலும், அவர் அந்தத் தொகுதியில் உள்ள ஒவ்வொருவரையும் சந்திப்பதற்கான எல்லா முயற்சிகளையும் இந்த நேரத்தில் செய்துகொண்டிருக்கிறார்.
விவசாய சமூகத்திலிருந்து ஒருவர் விவசாயிகளுக்காக பேசவில்லை என்றால் விவசாயிகளின் பிரச்சனைகள் தீராது என்கிறார் அவர். “என்னை விட அதிகமாக விவசாயிகள் பிரச்சனையையும் பெண்கள் பிரச்சனையையும் தெரிந்தவர் யார் இருக்கிறார்? நான் தேர்வு செய்யப்பட்டால், நாடாளுமன்றத்தில் எனது மக்களின் பிரச்சனைகள் பற்றி பேசுவேன்“ என்று உறுதியோடு பேசுகிறார் வைசாலி.