சிகன்பதாவில் இரவு 10:30  மணிக்கு பூஜை தொடங்கியது. மொத்த கிராமமுமே தூங்கிக் கொண்டிருக்கும் போது சனத் குடும்பத்தினர் மட்டும் பாடல்களையும், மந்திரங்களையும் முழங்கிக் கொண்டிருந்தனர்.

பிளாஸ்டிக் பாயில் காலு ஜங்கலி அமர்ந்தார். அவர் இந்த பூஜையை நடத்த பக்கத்து கிராமமான பாங்ரியிலிருந்து வந்திருக்கிறார். கா தாக்கூர் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த பல விருந்தினர்கள் இந்த மண் வீட்டின் முன் அறையில் கூடி தரையில் அல்லது பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். இரவு முழுவதும் பக்திப் பாடல்களைப் பாடி வாணி தேவியை வணங்கும் இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றனர்.

50 வயதாகும் காலுவின் தலைமையில் தான் இந்த பூஜை நடைபெறுகிறது, அறையின் நடுவில் பூஜைக்கான பொருட்களான, அரிசி, செம்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தேங்காய் சிவப்புத் துணியால் மூடப்பட்டிருந்தது (இதனை ஓர்மால் என்று அவர்கள் அழைக்கின்றனர்) ஊதுபத்திகள் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.

"இந்தச் சடங்கு இறுதிக்கட்டமாக தான் நடத்தப்படுகிறது வைத்தியரின் மருந்துகள் நோயாளிக்கு பலன் கொடுக்கவும் மேலும் தீய கண் திருஷ்டிகளை அழிக்கவும் இது நடத்தப்படுகிறது", என்று காலு உடன் வந்திருந்தவரும், சிக்கன்பதாவில் இருக்கும் பரம்பரை வைத்தியருமான ஜெயித்யா திகா கூறுகிறார்.

Kalu Jangali (left, in a white vest)  had confirmed the diagnosis – Nirmala (centre) had jaundice. But, he said, 'She was also heavily under the spell of an external entity', which he was warding off along with fellow bhagat Jaitya Digha during the jagran ceremony in Chikanpada hamlet
PHOTO • Shraddha Ghatge
Kalu Jangali (left, in a white vest)  had confirmed the diagnosis – Nirmala (centre) had jaundice. But, he said, 'She was also heavily under the spell of an external entity', which he was warding off along with fellow bhagat Jaitya Digha during the jagran ceremony in Chikanpada hamlet
PHOTO • Shraddha Ghatge

காலு ஜங்கலி (இடது, வெள்ளை உடையில் இருப்பவர்) நடுவில் இருக்கும் நிர்மலா என்பவருக்கு மஞ்சள் காமாலை இருப்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால், 'வெளியிலிருக்கும் சக்தி ஒன்று அவளை வெகுவாக ஆட்டுவிக்கிறது', என்று அவர் கூறுகிறார், அதனை அவர் சக வைத்தியரான ஜெயித்யா திகாவுடன் சேர்ந்து சிகன்பதா கிராமத்தில் விரட்டிக் கொண்டிருக்கிறார்

பலவீனமாக இருக்கும் 18 வயதாகும் நிர்மலா, காலுவின் அறிவுறுத்தலை பின்பற்றி பழைய நீல நிற முழு அங்கி மற்றும் சால்வையை போர்த்திக் கொண்டு தரையில் அமர்ந்து, அமைதியாக தலையை அசைத்தபடி இருந்தாள். அறிவுறுத்தப்பட்ட சமயங்களில் எல்லாம் அவள் எழுந்து நின்றாள். "ஏதேனும் தீய சக்திகள் நிர்மலாவை மேலும் பாதிக்குமா என்பதை புரிந்துகொள்ள முன்னோர்களிடமிருந்து பதிலைத் தேடி", ஜெயித்யா தட்டில் இருக்கும் அரிசியினை ஆய்வு செய்தார்.

"அவளுக்கு அதிகமான காய்ச்சல், பசியின்மை, கடுமையான உடல் வலி ஆகியவை இருந்தது", என்று நிர்மலாவின் தந்தையான, ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயியான சத்துரு சனத் கூறினார். நாங்கள் அவளை செப்டம்பர் மாத துவக்கத்தில் மொகதா கிராம மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அவர்கள் கொடுத்த மருந்துகள் எதுவும் வேலை செய்யவில்லை. அவளது நிலைமை மேலும் கவலைக்கிடமானது. அவளது எடை குறைந்து கொண்டே வந்தது, நல்ல உறக்கம் இன்றி தவித்தாள் மேலும் எல்லா நேரமும் பயந்து, மிரண்டு போய், சோர்வாக இருந்தாள். நாங்கள் யாரோ ஒருவர் அவளுக்கு சாபமிட்டுவிட்டார்கள் என்று எண்ணி பயந்தோம். அதன்பிறகு தான் நாங்கள் அவளை காலுவிடம் அழைத்துச் சென்றோம்", என்று கூறினார்.

வைத்தியர் அவளுக்கு ஒரு திருநீறு  நிரப்பப்பட்ட வெள்ளி தாயத்து ஒன்றையும்  மேலும் சில நாட்களுக்கு மூலிகை பொடிகளை உட்கொள்ளும் படி வழங்கினார். “அது நன்றாகவே வேலை செய்தது, இருப்பினும் தீய கண் திருஷ்டிகள் முற்றிலுமாக நீங்குவதற்கு வேண்டி இந்த பூஜையை நாங்கள் ஏற்பாடு செய்தோம்", என்று சத்துரு கூறினார்.

காலுவும் அந்நோயினை கண்டறிந்து, ஆமாம், நிர்மலாவிற்கு மஞ்சள் காமாலை இருக்கிறது என்று உறுதிப்படுத்தி இருந்தார். ஆனால், "வெளியிலிருக்கும் சக்தி ஒன்று அவளை வெகுவாக ஆட்டுவிக்கிறது", என்று அவர் கூறினார். காலு அந்த 'தீய சக்தியை' வெளியேற்றுவதற்கு ஓர்மாலை அவளது முன் வீசினார். கயிறைக் கொண்டு உச்சி முதல் பாதம் வரை மற்றும் முன்னரும் பின்னரும் தொட்டு எடுத்தார்.

சடங்குகளை விட மூலிகைகளைத் தான் நாடுகின்றனர், ஆனால் எங்களது சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற சொல்கிறோம்

காணொளியில் காண்க: சிகன்பதாவில் வைத்தியர்களும், நம்பிக்கைகளும், பதட்டங்களும்

மத்திய மும்பையிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பால்காரின் மொகதா தாலுகாவிலுள்ள சாஸ் கிராம பஞ்சாயத்தின் ஐந்து பதாக்களில் (குக்கிராமங்களில்) சனத் குடும்பத்தினரைப் போல வைத்தியர்களை அழைப்பது சாதாரண காரியம் தான்.

"சாஸில் மட்டும் அல்ல மொகதா தாலுகாவில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள மக்கள் தங்களது முன்னேற்றம், ஒரு தீய சக்தியால் அல்லது கண் திருஷ்டியால் அல்லது சாபத்தால் தடுக்கப்படலாம் என்று ஆணித்தரமாக நம்புகின்றனர்", என்று கூறுகிறார் சாஸ் கிராமத்தினைச் சேர்ந்த கமலாகர் வார்கடே. அவர் உள்ளூர் மக்களின் இந்த நம்பிக்கைகளின் மீது சந்தேகமும் கொள்கிறார், அவர்களின் மீது அனுதாபமும் கொள்கிறார். சனத் குடும்பத்தினரைப் போலவே இவரும் கா தாக்கூர் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவரே, மேலும் இவர் உள்ளூர் நிகழ்ச்சிகளில், ஒரு குழுவில் ஹார்மோனியம் மற்றும் கீபோர்டு வாசிப்பவராக இருக்கிறார். பொதுவாக, ஒரு நபர் நோய்வாய்படுகிறார் அல்லது ஏதோ ஒரு காரியம் தடைபடுகிறது. பிரச்சனைக்கான காரணம் என்ன என்று மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அக்குடும்பத்தினர் வைத்தியர்களை அணுகுகின்றனர்", என்று கூறுகிறார் அவர்.

இப்படி உள்ளூர் வைத்தியர்களை நம்பியிருப்பது மொகதாவிலுள்ள பொது சுகாதார அமைப்பின் நம்பகத்தன்மையில் இருந்து எழுகிறது. இந்த ஐந்து கிராமங்களுக்கும் அருகில் உள்ள சுகாதார வசதி சிகன்பதாவில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அரசு நடத்தும் துணை சுகாதார மையம் ஆகும்.

"செவ்வாய்க்கிழமைகளில் மருத்துவர் வருகை தருவார், ஆனால் நாங்கள் அவரை எப்போது சந்திக்க முடியும் என்பது எங்களுக்கு உறுதியாக தெரியாத ஒன்று", என்று வார்கடே கூறுகிறார். செவிலியர் தினமும் வருகை தருவார் ஆனால் அவருக்கு இருமல், காய்ச்சல் மற்றும் சளிக்கு மட்டுமே மருந்துகளை வழங்கத் தெரியும். முறையான மருத்துவ வசதிகளோ ஊசிகளோ, மாத்திரைகளோ இங்கு கிடையாது. ஆஷா பணியாளர்கள் (அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்), வீட்டிற்கு வருகை தருவர் ஆனால் நோயாளி கவலைக்கிடமாக இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் மொகதாவில் உள்ள மருத்துவமனைக்கு எங்களை அழைத்துச் செல்லும்படி பரிந்துரைப்பார்", என்று கூறுகிறார்.

Left: Nirmala's mother Indu, on the night of the the jagran, says she is relieved. Right: Kamlakar Warghade (here with his daughter Priyanka) of Chas village is sceptical but also sympathetic about the local belief systems
PHOTO • Shraddha Ghatge
Left: Nirmala's mother Indu, on the night of the the jagran, says she is relieved. Right: Kamlakar Warghade (here with his daughter Priyanka) of Chas village is sceptical but also sympathetic about the local belief systems
PHOTO • Shraddha Ghatge

இடது: நிர்மலாவின் தாய் இந்து, பூஜை நடத்தப்பட்ட இரவில், தான் நிம்மதியாக இருப்பதாகக் கூறினார். வலது: சாஸ் கிராமத்தைச் சேர்ந்த கமலாகர் வார்கடே (இங்கே அவரது மகள் பிரியங்காவுடன் வருகை தந்திருக்கிறார்), அவர் உள்ளூர் மக்களின் இந்த நம்பிக்கைகளின் மீது சந்தேகமும் கொள்கிறார், அவர்களின் மீது அனுதாபமும் கொள்கிறார்

எனவே நிமோனியா, மஞ்சள் காமாலை, எலும்பு முறிவுகள், விபத்துகள் அல்லது அவசர பிரசவங்கள் உள்ளிட்ட பெரிய வியாதிகளுக்கு சாஸ் கிராமத்தைச் சேர்ந்த 2,609 மக்களும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் இருக்கும் மக்களும் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மொகதா கிராம மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருக்கிறது.

இதில் சாஸில் இருந்து அருகில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு 3 கிலோமீட்டர் தொலைவிற்கும் அதிகமான தூரத்தை நடந்தே கடக்க வேண்டி உள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஒரு சுற்றுப் பயணத்திற்கு  ஜீப்பை வாடகைக்கு எடுக்க 500 ரூபாய் தேவைப்படுகிறது. சில நேரங்களில், குடும்பங்கள் இங்கு இயங்கும் பலருடன் பகிர்ந்து பயணிக்கும் வாகனத்தை தேடுகின்றனர், இதற்கு சிகன்பதாவில் இருந்து மொகதா வரை செல்ல இருக்கை ஒன்றுக்கு பத்து அல்லது இருபது ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அவை மிகக் குறைவான அளவிலேயே இயக்கப்படுகின்றன.

"இங்குள்ள பெரும்பாலான கிராமவாசிகள், நாளொன்றுக்கு 250 ரூபாய் வரை சம்பாதிக்கும் சிறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களே. மருத்துவமனை செலவுகளை தவிர போக்குவரத்துக்கு மட்டுமே 500 ரூபாய் செலவழிப்பது நிச்சயமாக அவர்களுக்கு ஒரு பிரச்சனையாக தான் இருக்கும்", என்கிறார் கமலாகர்.

இந்த இடைவெளிகளைத்தான் வைத்தியர்கள் நிரப்புகின்றனர், சமூகத்தினரால் நீண்டகாலமாக அறியப்பட்டவர்கள் என்பதால் நம்பகமான பாரம்பரிய வைத்தியர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர். சாஸின் பெரும்பான்மையான ஆதிவாசி மக்களான கா தாகூர், மா தாகூர், கோலி மஹாதேவ், வார்லி மற்றும் கட்கரி போன்ற சமூகங்களச் சேர்ந்த மக்கள் ஒப்பீட்டளவில் சிறிய வியாதிகளான காய்ச்சல் அல்லது வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு, வைத்தியர்களை அணுகுகின்றனர். சில நேரங்களில் தீய கண் திருஷ்டியில் இருந்து பாதுகாப்பதற்கும் மக்கள் அவர்களை நாடுகின்றனர்.

Chas village (left): the Sanad family’s invitation to the bhagats is not unusual in the five padas (hamlets) of Chas gram panchayat. The local PHCs are barely equipped, and Mokhada Rural Hospital (right) is around 15 kilometres away
PHOTO • Shraddha Ghatge
Chas village (left): the Sanad family’s invitation to the bhagats is not unusual in the five padas (hamlets) of Chas gram panchayat. The local PHCs are barely equipped, and Mokhada Rural Hospital (right) is around 15 kilometres away
PHOTO • Shraddha Ghatge

சாஸ் கிராமம் (இடது): சாஸ் கிராம பஞ்சாயத்தின் ஐந்து பதாக்களில் (குக்கிராமங்களில்) சனத் குடும்பத்தினரைப் போல வைத்தியர்களை அழைப்பது சாதாரண காரியம் தான். உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லை, மேலும் மொகதா கிராம மருத்துவமனை இங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

வைத்தியர்களில் பெரும்பாலானோர் உள்ளூர்வாசிகள் (அனைவருமே ஆண்கள்) அவர்களின் உதவியை நாடுகின்ற குடும்பங்களுக்கு நெருக்கமாகத் தெரிந்தவர்களாகத் தான் இருக்கின்றனர். நிர்மலாவிற்கு பூஜைகள் செய்யும் காலு ஜங்கலியும், கா தாக்கூர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் தான். அவர் கடந்த 30 வருடங்களாக வைத்தியராக இருந்து வருகிறார். "இந்த சடங்குகள் எப்போதுமே எங்கள் பழங்குடி கலாச்சாரத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது", என்று பூஜை நடந்த இரவில் என்னிடம் அவர் கூறினார். "நிர்மலா விசயத்தில் இந்த பூஜைக்குப் பிறகு காலையில் நாங்கள் ஒரு சேவலை உயிர்ப்பலி கொடுத்து அவள் முழுமையாக குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். நோயாளியைச் சுற்றி ஒரு எதிர்மறை சக்தி இருப்பதை கண்டறிந்தால் மட்டுமே நாங்கள் இந்த சடங்கினை செய்வோம். அந்த தீய சக்தியை தடுக்கக்கூடிய மந்திரங்களை நாங்கள் அறிவோம்", என்று கூறினார்.

இருப்பினும் பெரும்பாலும் வைத்தியர்கள் மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். "சரியான பூக்கள், இலைகள் ஆகியவற்றைப் பறிக்க நாங்கள் காட்டிற்குச் செல்வோம், மேலும் மரத்தின் பட்டைகளையும் உரித்து எடுத்து வருவோம்", என்று கூறுகிறார் காலு. "பின்னர் நாங்கள் ஒரு கஷாயத்தை தயார் செய்கிறோம் அல்லது சில நேரத்தில் மூலிகைகளை எரித்து அதன் சாம்பலை நோயாளிக்கு உட்கொள்ள கொடுப்போம். அந்த நபரைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் இல்லாவிட்டால் இது வழக்கமாக வேலை செய்யும். ஆனால் எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று இருக்கும்படி தோன்றினால் நாங்கள் அவர்களை மருத்துவ உதவியை நாடும்படி கூறுகிறோம்", என்று கூறினார்.

சுகாதார நிலையங்களின் பங்கை காலு ஒப்புக்கொள்வது போலவே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும் மருத்துவர்களும் பாரம்பரிய வைத்தியர்களை நிராகரிப்பதாகத் தெரியவில்லை. சாஸிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாசலா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும் மருத்துவ அதிகாரி டாக்டர் புஷ்பா கவரி, "எங்களது சிகிச்சையில் அவர்கள் திருப்தி அடையவில்லை என்றால் வைத்தியரிடம் ஆலோசனை பெறுமாறு நாங்கள் (எங்களது நோயாளிகளிடம்) கூறுகிறோம். வைத்தியர்களின் சிகிச்சையில் பழங்குடியினர் திருப்தி அடையவில்லை என்றால் மீண்டும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுகின்றனர்", என்று கூறினார். இது உள்ளூர் சமூகத்துடன் விரோதம் ஏற்படாமல் இருக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது என்று அவர் கூறுகிறார். "மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர்களின் மீதும் மக்களின் நம்பிக்கை மேலோங்கி இருப்பது அவசியம்", என்று கூறுகிறார்.

"அவர்கள் (மருத்துவர்கள்) விளக்க முடியாத காரணங்கள் இருக்கும் பட்சத்தில் எங்களின் உதவியை நாடுகின்றனர்", என்று கூறுகிறார் 58 வயதாகும் வாசலாவைச் சேர்ந்த வைத்தியரான காசிநாத் கடம். "உதாரணத்திற்கு, ஒரு பெண் இருந்தார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எந்த வித காரணங்களும் இல்லாமல் மனநிலை பிறழ்ந்து வெறித்தனமாக நடந்து கொண்டார். அவரை ஏதோ ஒரு சக்தி பீடித்திருப்பது போல தெரிந்தது. நான் அவரை கடுமையாக அடித்து மேலும் சில மந்திரங்களை உச்சரித்தேன், அதன் பின்னரே அவரை அமைதிப்படுத்த முடிந்தது. பின்னர் மருத்துவர்கள் அவருக்கு மயக்க மருந்தினை கொடுத்தனர்", என்று கூறுகிறார்.

Left: Bhagat Kalu Jangali at his home in Pangri village in Mokhada taluka. Right: Bhagat Subhash Katkari with several of his clients on a Sunday at his home in Deharje village of Vikramgad taluka in Palghar district
PHOTO • Shraddha Ghatge
Left: Bhagat Kalu Jangali at his home in Pangri village in Mokhada taluka. Right: Bhagat Subhash Katkari with several of his clients on a Sunday at his home in Deharje village of Vikramgad taluka in Palghar district
PHOTO • Shraddha Ghatge

இடது: வைத்தியர் காலு ஜங்கிலி மொகதா தாலுகாவிலுள்ள பாங்ரி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில். வலது: பால்கர் மாவட்டத்திலுள்ள விக்ரம்காட் தாலுகாவின் தேகர்ஜே கிராமத்தில் உள்ள தனது வீட்டில், ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தனது வாடிக்கையாளர்களுடன் வைத்தியர் சுபாஷ் கட்கரி

மற்ற வைத்தியர்களை போலவே காசிநாத் கடமும் தனது நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கவில்லை. அவர் தனக்கு சொந்தமாக இருக்கும் மூன்று ஏக்கர் நிலத்தில் அரிசி மற்றும் பருப்பு வகைகளை பயிரிடுவதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார். நான் பேசிய அனைத்து வைத்தியர்களும் நோயாளிகள் தங்களால் இயன்றதை அல்லது இருபது ரூபாய் முதலாக  தாங்கள் விரும்புவதை செலுத்துகிறார்கள். சிலர் தேங்காய்கள் அல்லது மதுபானங்களை காணிக்கையாகக் கொண்டு வருகின்றனர். நோயாளி வைத்தியரால் குணப்படுத்தப்பட்டதாக, தீர்வு தேடிய குடும்பத்தினர் நம்பினால் (பூஜையைப் போன்ற) ஒரு விருந்து படைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்குள்ள மற்ற பாரம்பரிய வைத்தியர்களைப் போலவே காசிநாத் கடமும் தான் பயன்படுத்தும் மூலிகை மருந்துகளின் விபரங்களை வெளியிட மறுக்கிறார். "எந்த வைத்தியரும் அதை உங்களுக்கு கூற மாட்டார்", என்று அவர் கூறுகிறார். எங்களது அறிவைப் பற்றி நாங்கள் வேறு யாரிடமும் பேசினால் எங்களது மருத்துவத்தின் சக்தி குறைந்துவிடும். அதுபோக, ஒவ்வொரு நோயாளிக்கும் மருந்து மாறுபடும். சிறுநீரகக் கல், குடல் அழற்சி, மஞ்சள் காமாலை, பல்வலி, தலைவலி, வயிற்றுவலி காய்ச்சல், ஆண்கள் அல்லது பெண்களின் மலட்டுத்தன்மை, கருச்சிதைவுகள் மற்றும் கர்ப்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் போன்ற நோய்களுக்கு  மூலிகைகளின் கலவைகள், கஷாயங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். தீய கண் திருஷ்டியை தடுப்பதற்கும், வசியம் செய்வதற்கும், பாதுகாப்பதற்கும் தாயத்து ஒன்றை வழங்குகிறோம்", என்று கூறினார்.

மொகதாவில் உள்ள ஒசர்வரியா கிராமத்தின், பசோடிப்படா குக்கிராமத்தைச் சேர்ந்த வைத்தியர் கேசவ் மஹாலே கொஞ்சம் மனம் திறந்து பேச முன் வருகிறார். "நாங்கள் மருத்துவ மூலிகைகளாக துளசி, பச்சை இஞ்சி, கற்றாழை மற்றும் பச்சிலை போன்றவற்றை எல்லாவகையான நோய்களுக்கும் பயன்படுத்துகிறோம், பன்னெடுங் காலம் தொட்டு, காட்டில் இருக்கும் அனைவரும் ஆலோசிக்கும் ஒரே மருத்துவர்கள் நாங்கள் தான்", என்று அவர் கூறுகிறார். இன்று மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக மக்கள் மருத்துவர்களை நாடுகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அந்த மருந்துகள் தோல்வியடையும் போது அவர்கள் எங்களைத் தான் நாடி வருகின்றனர். இணைந்து பணியாற்றுவதில் தீங்கு ஒன்றுமில்லை", என்கிறார். கேசவ் இரண்டு ஏக்கர் நிலத்தை வைத்திருக்கிறார் அதில் நெல் விவசாயம் செய்கிறார்.

Keshav and Savita Mahale (left) in Pasodipada hamlet: 'With advances in medicine, people prefer doctors. But they come to us when medicines fail them. There is no harm in co-existing'. Bhagat Kashinath Kadam (right) with his wife Jijabai in Washala village: 'The doctors often seek our help in cases which they can’t explain'
PHOTO • Shraddha Ghatge
Keshav and Savita Mahale (left) in Pasodipada hamlet: 'With advances in medicine, people prefer doctors. But they come to us when medicines fail them. There is no harm in co-existing'. Bhagat Kashinath Kadam (right) with his wife Jijabai in Washala village: 'The doctors often seek our help in cases which they can’t explain'
PHOTO • Shraddha Ghatge

இடது: பசோடிப்படா கிராமத்தில் கேசவ் மற்றும் சவிதா மஹாலே ஆகியோர்: 'இன்று மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக மக்கள் மருத்துவர்களை நாடுகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அந்த மருந்துகள் தோல்வியடையும் போது அவர்கள் எங்களைத் தான் நாடி வருகின்றனர். இணைந்து இருப்பதில் தீங்கு ஒன்றுமில்லை'. வலது: வாசலா கிராமத்தில் வைத்தியர் காசிநாத் கடம் மற்றும் அவரது மனைவி ஜீஜாபாய்: மருத்துவர்கள் அடிக்கடி அவர்களால் விளக்க முடியாத காரணங்கள் இருக்கும் பட்சத்தில் எங்களின் உதவியை நாடுகின்றனர்

பால்கரின் விக்ரம்காட் தாலுகாவிலுள்ள தேகர்ஜி கிராமத்தின் கட்கரிபதாவில் நன்கு அறியப்படும் வைத்தியர் சுபாஷ் கட்கரி, கருத்தரிக்கவோ அல்லது கர்ப்பத்தில் பிரச்சனை கொண்ட பெண்களுக்கு தான் செய்த தீர்வுகள் சிலவற்றைக் கூறுகிறார்:  "இது கர்ப்ப காலம் முழுவதும் பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகளையும், கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியிருக்கிறது. எங்களது மருந்துகளின் மூலம் ஒரு பெண் கருத்தரித்தால், உணவு சமைக்கும் பொழுது எண்ணெய் பயன்படுத்துவதை அவர் தவிர்க்க வேண்டியிருக்கும். அவர் உப்பு, மஞ்சள், கோழி, முட்டை, இறைச்சி, பூண்டு மற்றும் மிளகாய் ஆகியவற்றை உட்கொள்ளக்கூடாது. தண்ணீர் எடுப்பது உட்பட அனைத்து வீட்டு வேலைகளையும் அவரே செய்ய வேண்டி இருக்கும், மேலும் நிறை மாதம் வரை வைத்தியர் கொடுக்கும் மருந்துகளைத் தவிர வேற எந்த மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது. நாங்கள் அந்தப் பெண்ணிற்கும், அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கும் தனி தாயத்தை வழங்குவோம் அது அவர்கள் இருவரையும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும்", என்று கூறினார்.

மொகதா கிராம மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் தாத்தாதிரே ஷிண்டே, துரதிர்ஷ்டவசமாக, இந்த உணவு முறையும், கட்டுப்பாடும் இங்குள்ள ஆதிவாசி கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது என்கிறார். ’பின்னர் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் குறைந்த எடையுடன் பிறக்கின்றது. நான் இத்தகைய நிகழ்வுகளை மொகதாவில் சந்தித்திருக்கிறேன். இன்னமும் அங்கு மூடநம்பிக்கை நிறைந்துள்ளது, வைத்தியர்களை மக்கள் அதிகமாக நம்புவதால் அவர்களை நாங்கள் நம்ப வைப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்", என்று கூறுகிறார். (உண்மையில், பால்கார் மாவட்டத்தில் 37%  பட்டியல் பழங்குடியினர், நீண்ட காலமாக ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் இறப்பது தொடர்பாக செய்திகளில் இருந்து வருகிறது. ஆனால் அது வேறு கதை.)

சிகன்பதாவில் நிர்மலாவின் 40 வயது தாய் இந்து, பூஜை நடத்தப்பட்ட இரவில் தான், தான் நிம்மதியாக இருப்பதாக கூறினார். "இப்போது காலு மற்றும் ஜெயித்யா ஆகியோர் எனது மகளிடமிருந்து தீயசக்தியை வெளியேற்றிவிட்டனர், இனி அவள் விரைவில் குணமடைந்துவிடுவாள் என்று நம்புகிறேன்", என்று அவர் கூறுகிறார்.

நிரூபர், அமெரிக்காவின் தாக்கூர் அறக்கட்டளை அவருக்கு வழங்கிய மானியத்தை வைத்து 2019 ஆம் ஆண்டு பொது சுகாதாரத்தில் ஒரு புலனாய்வு அறிக்கை ஒன்றின் கீழ் இக்கட்டுரைக்காகப் பணியாற்றினார்.

தமிழில்: சோனியா போஸ்

Shraddha Ghatge

ଶ୍ରଦ୍ଧା ଘଟଗେ ମୁମ୍ବାଇର ଜଣେ ସ୍ଵାଧୀନ ସାମ୍ବାଦିକ ଏବଂ ଗବେଷକ

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Shraddha Ghatge
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Soniya Bose