35 வயதான ஹிரா நினாமாவும் கல்பனா ராவலும் ஒருவருக்கு ஒருவர் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் வசிக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் ஒரே ஆசைதான். மகன் பிறக்க வேண்டும் என்பதுதான் அது. பன்ஸ்வாரா மாவட்டத்தின் செவ்னா கிராமத்தில் நான் ஹிராவைச் சந்தித்தேன். “மகள்களால் அவர்களின் அம்மா அப்பாவுக்கு என்ன பிரஜோசனம்?” என்று ஹிரா கேட்கிறார். “ குடும்பத்துக்கு வாரிசு வேண்டும் - குறைந்தது ஒரு பையனாவது இருப்பது நல்லது” என்கிறார் கல்பனா.
ராஜஸ்தானின் அதே மாவட்டத்தில் உள்ள வகா கிராமத்தைச் சேர்ந்தவர் அவர்.
அவ்வப்போது விவசாயத் தொழிலாளியாக வேலை செய்பவர் ஹிரா. மற்ற நேரங்களில் வீட்டை நிர்வகிக்கும் பணியைச் செய்கிறார். அவர் 2012 முதலான கடந்த ஏழு ஆண்டுகளில், ஆறு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். கடைசியாக பிறந்த பெண் குழந்தைக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகிறது. “எனது மாமியார் அழுவதைக் கேட்டதும், எனது ஆறாவது குழந்தை ஒரு பெண் என்று எனக்குத் தெரிந்து விட்டது. குழந்தையைப் பார்ப்பதற்கு முன்பாகவே, என் கண்ணீர் வழிந்தோடியது. நான் என் கணவரை விட அதிமாக அழுதேன் ” என்கிறார் அவர்.
“எனது இரண்டாவது மகள் பிறந்ததிலிருந்தே நான் பாபாஜியை வணங்கச் செல்கிறேன். அவர் ஒரு தேங்காய் மீது சில மந்திரங்களை ஓதினார். பின்னர், நான் அதை உடைத்து தண்ணீர் குடித்தேன். ஆனால், எனது அம்மாவைவிட நான் மிகவும் சபிக்கப்பட்டிருக்கிறேன் என்று அவர் பெருமூச்சுடன் கூறுகிறார். வெட்கப்பட்டுகொண்டே பேசுகிற ஹிராவே கூட ஐந்து மகள்களில் கடைசியாகப் பிறந்த கடைக்குட்டிதான்.
ஹிராவின் செவ்னா கிராமத்தில் 1,237 பேர் வசிக்கின்றனர். பில் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர் அவர். எழுத்தறிவு இல்லாத கிராமம் அது. அவளும் இங்குள்ள பிற பெண்களும் பல பிரசவங்களில் தப்பிப் பிழைத்தவர்கள். அவர்களின் உடல்நலத்தை விலையாகக் கொடுத்து அவர்கள் இந்த பிரசவங்களைச் சந்திக்கிறார்கள். ஹிராவுக்கு 35 வயதுதான். ஆனால், அவரது வயதை விட மிகவும் வயதானவர் போன்று, பலவீனமாக அவர் இருக்கிறார். அவரது உடலில் தொடர்ந்து வலிகள் இருக்கின்றன. கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிற அவருக்கு வாழ்க்கை போராட்டமாக இருக்கிறது.
பிரசவத்தின்போது பெண்கள் இறந்துபோகிற சதவீதம் நாடு தழுவிய குறைந்துகொண்டு வருகிறது. 2011-13 மற்றும் 2014-16க்கு இடையில் நாட்டில் 22 சதவீதம் இந்த விகிதம் குறைந்தது. ஆனால், அதோடு ஒப்பிடும்போது, ராஜஸ்தானின் குறைவு விகிதம் 18.3 சதவீதமாக மட்டும்தான் இருந்தது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
2014 முதல் 2016 வரையிலான பிரசவங்களின்போது பெண்கள் இறக்கிற மகப்பேறு மரணங்களைப்
பற்றி மே 2018 இல் இந்தியாவின் பதிவாளர் துறைத்தலைவர் அலுவலகம் வெளியிட்ட சிறப்பு விவர அறிக்கை மேற்கண்ட விவரங்களை அளிக்கிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு பிரசவங்கள் ஆகின்றன என்றால் அவர்களில் இந்தியா முழுவதும் சராசரியாக 130 பெண்கள் இறக்கின்றனர். ஆனால், ராஜஸ்தானில் இந்த எண்ணிக்கை 199 ஆகும்.
பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் பெண்கள் பங்கேற்கும் திறன் தொடர்பாகவும் பெண்களின் பிடியில் பொருளாதார ஆதாரவளங்கள் இருப்பது தொடர்பாகவும் பாலின ஆற்றல்படுத்தல் தொடர்பான அளவீட்டின் பெரும்பாலான அளவுருக்களில், ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிற பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளில் மாநில அரசு மோசமாக முறையில் பின்தங்கியிருக்கிறது. ராஜஸ்தான் தொடர்ந்து பின்தங்கியிருப்பது பற்றி பேசுகிறது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்
2009 ஆம் ஆண்டின் அறிக்கை.
உடல் நலம், கல்வி மற்றும் பொருளாதார வளங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை இந்த அறிக்கை மதிப்பிட்டு வருகிறது.
தனது குழந்தைகளின் பாலினத்தைத் தீர்மானிப்பதில் பெண்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்னும் அறிவியலை ஹிரா ஏற்க மறுத்துவிட்டார் என்கிறார் செவனாவின் சுகாதாரத் துணை மையத்தின் துணை செவிலியரும் பிரசவத்துக்கான உதவியாளருமான நிரஞ்சனா ஜோஷி. ஹிராவின் நல்வாழ்வுக்கான ஆதார வளமாக அந்த சுகாதார துணை மையம்தான் இருக்கிறது. ஹிராவின் கணவர் கெமா ஒரு விவசாயக் கூலி. கட்டுமானத் தொழிலாளியாகவும் இருக்கிறார். உடல்ரீதியாகவும் தவறான வார்த்தைகளாலும் ஹிராவை அவர் துன்புறுத்துகிறார் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். அவர்களின் மகள்களை கணவர் புறக்கணிக்கிறார் என்றும் அவர் கூறுகிறார்.
ஹிராவுக்கும் கல்பனாவுக்கும் பன்ஸ்வாரா சொந்த மாவட்டம். அதன், மக்கள் தொகையில் நான்கில் மூன்று பகுதியாக பில் பழங்குடிகள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கும் 980 பெண்கள் உள்ளனர். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011 இன்படி, மாநிலத்தின் சராசரி ஆண்,பெண் விகிதம் என்பது 1,000 ஆண்களுக்கு 928 பெண்கள். அதைவிட பில் பழங்குடிகள் மத்தியிலான ஆண்பெண் மக்கள்தொகை விகிதம் மிக அதிகம். ஆனால், மாவட்டத்தின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் (56.33 சதவீதம்), ராஜஸ்தானில் மாநில அளவில் எழுத்தறிவு பெற்றவர்களில் சராசரி சதவீதம் 66.11 ஆக இருக்கிறது. அதோடு இதனை ஒப்பிடலாம். மாநில அளவில் 10இல் ஏறத்தாழ 7 பெண்கள் ஏதோ கொஞ்சம் படித்திருந்தாலும், பன்ஸ்வாரா மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை 10இல் 4 ஆக குறைகிறது.
பெண் குழந்தைகள் தொடர்பான, பழமையான மூட நம்பிக்கைக் கருத்துக்களை மாற்றுவதற்காக கல்பனாவும் வேறு சிலரும் பணி செய்கிறார்கள். ராவல் சமூகத்தைச் சேர்ந்தவர் கல்பனா. ராஜஸ்தானில் ஒரு பட்டியல் சாதி அது. 8 ஆம் வகுப்புவரை படித்தவர். பன்ஸ்வாரா மாவட்டத்தின் கல்கியா பஞ்சாயத்தில் 1,397 பேர் வசிக்கும் கிராமமான வாக்காதான் அவரது ஊர். அண்மையில் உருவாக்கப்பட்ட தாஜோ பரிவாரின் (பாகாடி மொழியில் ‘ஆரோக்கியமான குடும்பம்’ என்று அர்த்தம்) உள்ளூர் கிளைக்கு தலைமை தாங்குகிறார். 25 பெண்கள் அடங்கிய குழு அது. பிரசவ கால ஆரோக்கியம் குறித்து, அதிக விழிப்புணர்வை தங்கள் சமூகங்களில் ஏற்படுத்த அது முயற்சிக்கிறது. டெல்லியை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமாக, பி.ஆர்.ஐ.ஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘ஆசியாவில் பங்கேற்பு ஆராய்ச்சி’ எனும் அமைப்பு உள்ளது. அதன் செயல்பாட்டின் ஒரு பகுதியாக ‘அப்னா ஸ்வஸ்தியா, அப்னி பெஹெல்’ (எங்கள் நல்வாழ்வு, எங்கள் முன்முயற்சி) எனும் இயக்கம் 2018 டிசம்பரில் அமைக்கப்பட்டது. இது பிரசவ கால ஆரோக்கியம் பற்றிய தகவல்களை பரப்புகிறது. குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பஞ்சாயத்து அமைப்புககளை வலுப்படுத்துவதற்கும் அது செயல்படுகிறது.
பெண்களின் நல்வாழ்வுக்கு குறைந்த முன்னுரிமை அளிக்கப்படுவதை வெளிப்படுத்தும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தாஜோ பரிவார் அமைப்பின் பணிகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய
ஆய்வை,
பன்ஸ்வாரா மற்றும் கோவிந்த்கர் தொகுதிகளில் ‘ஆசியாவில் பங்கேற்பு ஆட்சி’ எனும் அமைப்பு மார்ச் 2018இல் நடத்தியது. 1,808 பெண்களுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பன்ஸ்வாராவில் கிட்டத்தட்ட 10 பெண்களில் 7 பேருக்கு பிரசவ கால மற்றும் குழந்தை ஆரோக்கியம் குறித்த ஆலோசனை கூற அவர்களுக்கு யாரும் இல்லை. மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு அவசரகால மருத்துவத் தேவைகளுக்குக்கூட பணம் இல்லை. 5 பெண்களில் 3க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான முடிவுகள் எதுவும் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.
"எங்கள் மக்கள் சிதறிக் கிடக்கிறார்கள். அங்கும் இங்குமாக வாழ்கின்றனர். நாங்கள் வீடு வீடாக போகிறோம். ஆணுறைகளை விநியோகிக்கிறோம், நோய்த் தடுப்புக்கு அழைக்கிறோம். தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான எளிய வழிமுறைகளைப் பற்றி பேசுகிறோம். இத்தகைய பல பணிகளைச் செய்கிறோம், ”என்கிற கல்பனா, தாஜோ பரிவாரின் வேலையை விளக்குகிறார். இத்தகைய குழுக்கள் இப்போது பன்ஸ்வாரா மற்றும் கோவிந்த்கர் தொகுதிகளின் 18 பஞ்சாயத்துகளில் செயல்பட்டு வருகின்றன. சராசரியாக, ஒவ்வொரு குழுவிலும் 20 உறுப்பினர்கள் உள்ளனர்.அவர்கள் அனைவரும் தன்னார்வ தொண்டர்கள்.
‘எம்.ஜி.என்.ஆர். இ. ஜி.ஏ’ என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மக்களை வேலைக்கு பதிவு செய்ய மாநில அரசால் நியமிக்கப்பட்டவர் கல்பனா. பெண்கள் வெளியில் சொல்லமுடியாதவகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறார். “ இரவில் தாமதமாகிவிட்டால் அவர்கள் ஆம்புலன்ஸைக் கூட அழைக்க மாட்டார்கள். கல்கியாவிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் போவதற்குப் பதிலாக, கிராமத்தில் உள்ள நாட்டு வைத்தியரை நம்புகிறார்கள் ”என்று அவர் கூறுகிறார்.
ஆனால் கல்வியும் விழிப்புணர்வும் பெண்களுக்கான நல்வாழ்வைக் கொண்டு வருவதில்லை. பெண்கள் தொடர்பான கருத்துகள் மாற்றமடைவது என்பது பல அடுக்குகளாகவும் மிகவும் சிக்கலாகவும் நடைபெறுகிறது என்பதை கல்பனாவின் சொந்த அனுபவம் விளக்குகிறது. அவருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. அவரது கணவர் கோரக் நாத்தும் கல்பனாவைப் போலவே 'எம்.ஜி.என்.ஆர்.ஜி.ஏ.திட்டத்தின் உதவியாளராக பணியாற்றுகிறார். அவர்களுக்கு குழந்தைக்கள் இல்லை. கோரக் நாத்தின் குடும்பத்தினருக்குச் சொந்தமாக உள்ள பரம்பரை நிலம் மூன்று பிக்ஹாக்கள் இருக்கிறது. 1 பிக்ஹா என்பது 0.40 ஏக்கர் ஆகும். குழந்தைகள் இல்லை என்பதால் அதைப் பெறுவதற்கான தகுதி குறித்து கடுமையான வாதங்கள் குடும்பத்துக்கள் ஏற்படுகின்றன.
குழந்தை ஏன் பிறக்கவில்லை என்பதற்கான பரிசோதனைகளை கல்பனாவும் அவரது கணவரும் சோதனைகளை மேற்கொண்டனர். கோரக் நாத்தின் உடலில் குறைந்த எண்ணிக்கையில் விந்தணுக்கள் உள்ளன என்கின்றன சோதனை முடிவுகள். கல்பனாவுக்கு உடலியல் சிக்கல்கள் எதுவும் இல்லை. ஆனாலும், தனது கணவர் இன்னொரு கல்யாணம் செய்துகொண்டால் நல்லது என்று கல்பனா நினைப்பதை இந்த அறிவு தடுப்பதில்லை. “என் கணவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டால் நான் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? குறைந்தபட்சம் ஒரு வாரிசுக்கு ஒரு பையனைப் பெறுவது நல்லது "என்கிறார் கல்பனா.
கோரக் நாத் வேறுவிதமாக நினைக்கிறார். "குழந்தை இல்லாதது என் மனைவியின் தவறு அல்ல என்று எனக்குத் தெரியும்" என்று அவர் கூறுகிறார். “நான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள ஒரு போதும் நினைத்ததில்லை. அவள் வற்புறுத்தினாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. குழந்தைகளைப் பெறுவதில் பெண்களுக்கு மட்டுமே பொறுப்பு இருக்கிறது என்று சமூகத்தில் உள்ள பெரியவர்களும் எனது குடும்பமும் நம்புகிறார்கள். ஆனால், ஆண், பெண் இரண்டுபேருக்கும் இதில் சமமான பொறுப்பு இருக்கிறது என்பதை நான் அறிவேன்” என்கிறார் அவர்.
ஒட்டுமொத்த சமூகத்தால் மட்டுமே இத்தகைய கருத்துக்களைத் திருப்ப முடியும் என்பதை கல்பனாவுக்குத் தெரியும். "நாங்கள் எங்கள் சொந்த தலைவர்களாகிவிட்டோம்," என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், இது தொடர்பான விழிப்புணர்ச்சியை உருவாக்குவதும், பெண்கள் தொடர்பான கருத்துக்களை மாற்றுவதும் பெண்களின் பொறுப்பு என்று அவர் கருதுகிறார். "பிரசவம் போன்ற பிரச்சினைகளைப் பற்றி பெண்களிடம் பேச ஆண்கள் தயங்குகிறார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார். "பெண்கள் அத்தகைய வேலையைச் செய்வதுதான் சிறந்தது" என்கிறார் அவர்.
பெண்கள் தொடர்பான தவறான கருத்துகளை ஒழிப்பதற்கு ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து பணி செய்தால்தான் முடியும் என்பதை கல்பனா தெரிந்துவைத்திருந்தாலும் “பெண்களுக்கான தலைவர்களாக பெண்களே உருவாக வேண்டும்” என்கிறார்.
தமிழில்: த நீதிராஜன்