“புயல் காரணமாக எனது வீட்டில் பலத்த மழை பெய்தது எனக்கு நினைவு இருக்கின்றது. அப்போது என் கண்முன்னே வீடு இடிந்து விழுந்தது. ஆற்றின் (முரி கங்கா) நீர் வீட்டை அடித்துச் சென்றது” என்கிறார் பூர்ணிமா புயான். இவர் காசிமாராவில் உள்ள தனது வீடு அழிந்ததை நினைவு கூர்கிறார்.
தற்போது 70 வயதுக்கு மேலுள்ள புயானால், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சாகர் தொகுதியில் உள்ள சிறிய கோரமாரா தீவில் உள்ள காசிமாரா கிராமத்தில் வசிக்க முடியவில்லை. இவர் உட்பட கோரமாராவை சேர்ந்த 13 குடும்பங்களுக்கு மேற்கு வங்க அரசாங்கத்தால், சாகர் தீவில் 45 நிமிடப் படகு பயணத்தில் உள்ள கங்காசாகர் கிராமத்தில் 1993ஆம் ஆண்டு சிறிய நிலம் வழங்கப்பட்டது.
காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச இதழில் வெளியானக் கட்டுரையில், 1970களின் மத்தியிலிருந்து கோரமாராவின் நிலப்பரப்பு கிட்டத்திட்ட பாதியாகச் சுருங்கிவிட்டது. 1975-ல் 8.51 சதுர கிலோமீட்டராக இருந்த நிலம் 2012-ல் 4.43 சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுந்தரவனத் தீவு அமைந்துள்ளப் பகுதியில் நதி மற்றும் கரையோர அரிப்பு, வெள்ளம், சூறாவளி, சதுப்புநில இழப்பு, கடல்மட்ட உயர்வு போன்ற பலக் காரணிகள் உண்டு. கோரமாராவிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை. எனினும் சாகர் தீவின் முக்கிய நிலப்பகுதியான கக்த்விப் மற்றும் நம்கானாவுக்கு 4,000 தீவுவாசிகள் இடம்பெயர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
புயான், தனது வீடு இடிந்து விழுந்த அந்த நாளை தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார். ஆனால், அது எந்த ஆண்டு என்பதை அவரால் நினைவுகூர இயலவில்லை. “பக்கத்து வீட்டிலிருந்து எனது வீட்டை பார்த்தபடியே பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தேன். என் கணவர் டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். எனது பக்கத்து வீட்டுக்காரரின் வீடு எங்களது வீட்டைவிட பெரிய வீடு என்பதால், எனது கணவரையும், குழந்தையையும் அங்கு அழைத்து வரச் சொன்னார்கள். மழை பெய்யத் தொடங்கியது. எங்கள் வீடு கட்டப்பட்டிருக்கும் இடத்தை வெள்ளம் சூழ்ந்தது. நீண்ட நேரம் பெய்த மழையை வீடு தாங்கினாலும், கிழக்கிலிருந்து வந்த புயல் மேலும் மழையை கொண்டு வந்தது. இதனால், வீடு அடித்துச் செல்லப்பட்டது. எனது வீட்டை 10 முதல் 12 முறை வெள்ள நீரில் இழந்துள்ளேன்” எனக் கூறினார்.
பல்வேறு காலக்கட்டங்களில் பலமுறை பூர்ணிமாவின் வீடு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால், அவரால் எந்த ஆண்டு என்பதை சரியாகக் கூறமுடியவில்லை. அரசிடமிருந்து தனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்கிறார். 1993ஆம் ஆண்டுதான் கோரமாராவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட குடும்பங்களுக்கு சாகர் தீவில் சிறிய - ஒரு ஏக்கருக்கும் குறைவான - நிலங்கள் ஒதுக்கப்பட்டன.
ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், புயான் இன்னும் கோரமாராவில் வாழ்வார். “நான் ஏன் கோரமாராவை நேசிக்கிறேன் என்று கூறுகிறேன். ஒரு குடும்பம் தனது வீட்டை இழந்தால், மற்றொரு குடும்பம் உடனடியாக தனது நிலத்தை புதிய வீடு கட்டுவதற்கு வழங்குவார்கள். அது இங்கே நடக்காது” என பெருமூச்சுடன் கூறுகிறார். துரதிர்ஷ்டவசமாக, காசிமாரா கிராமம் முற்றிலும் நீரில் மூழ்கியது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்த கிராமத்தின் மக்கள் தொகை பூஜ்ஜியம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. கோரமாரா கிராமப் பஞ்சாயத்துப் பகுதியில் உள்ள மற்ற 6 கிராமங்களில் சுமார் 5,000 பேர் வசிக்கின்றனர்.(பிற்காலங்களில், இந்த மக்கள்தொகையும் குறைந்துள்ளது).
கோரமாராவிலிருந்து மற்றக் குடும்பங்களுடன் 1993ஆம் ஆண்டு கங்காசாகருக்கு வந்த மோண்டு மோண்டோல், சாகர் தீவில் ஆரம்பக் காலக்கட்டத்தில் பட்ட கஷ்டங்களை மறக்கவில்லை. அவருக்கு அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் உப்புத்தன்மை அதிகமாக இருந்ததால், ஆரம்பத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை. தவிர, குடிப்பதற்கும், குளிப்பதற்கும் சுத்தமான நீர் கிடைப்பது பற்றாக்குறையாக இருந்தது. 65 வயதாகும் மோண்டோல், வாழ்வாதாரத்திற்காக உலர் மீன் விற்பனை செய்வது உள்ளிட்ட தினசரி கூலி வேலைகளை செய்தார். சுமார் அரை ஏக்கர் நிலத்தில் வீடு கட்டிய அவர், காலப்போக்கில், நெற்பயிரையும் பயிரிட்டார்.
கோரமாராவில் வசித்த போது மோண்டோலின் வீடு இருமுறை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. “சுமார் 10 – 15 ஆண்டுகளுக்கு முன்புவரை கோரமாராவின் வடக்கிலிருந்து தெற்கே நடக்க 2 – 3 மணிநேரமாகும். இப்போது அந்த தூரத்தை கடக்க ஒரு மணிநேரத்திற்கு குறைவான நேரமே ஆகும்” என்கிறார் அவர்.
கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின், கடல்சார் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சுகதா ஹஸ்ரா கூறுகையில், கோரமாராவிலிருந்து இடம்பெயர்ந்த கிராமவாசிகள், நாட்டிற்குள்ளேயே புலம்பெயர வேண்டியிருந்ததால், அவர்கள் அரசாங்கத்தால் ‘காலநிலை அகதிகளாக’ அங்கீகரிக்கப்படவில்லை என்றார். ”ஆனால், அவர்கள் சுற்றுச்சூழலால் புலம்பெயர்ந்தவர்கள் என அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்தப் பிரிவை அரசாங்கம் உருவாக்க வேண்டும். மேலும், இந்த உதவியற்ற மக்களை கண்ணியத்துடன் நடத்தப்படுவதையும் அவர்களுக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்," என்று கூறினார்.
வரையறுக்கப்பட்ட வாழ்வாதாரத்தைத் தவிர, கோரமாராவில் வசிப்பவர்கள் காய்கறி மற்றும் உணவு தானியங்கள் போன்ற அன்றாடத் தேவைகளுக்காக அரைமணி நேரம் பயணம் செய்து காக்த்வீப் நகரத்தை அடைய வேண்டும். கோரமாராவில் உள்ள ஒரு சுகாதார துணை மையம், தீவில் உள்ள 5,000 மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. கடுமையான நோய்களுக்கு காக்த்வீப் நகரில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவேண்டும்.
“அழிந்து வரும் இந்தத் தீவை விட்டு, என் மனைவி மற்றும் இரு மகன்களுடன் வெளியேறுவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்கிறார் தில்ஜான். ”ஆனால், அரசாங்கம் எங்களுக்கு வேறு இடங்களில் நிலம் தருவதில்லை.” நிலப்பற்றாக்குறை காரணமாக 1993ஆம் ஆண்டுக்குப் பிறகு சாகர் தீவில் மீள்குடியேற்றத்தை அரசு நிறுத்திவிட்டது.
சாகர் தீவில் வேலை இல்லாததால், பல குடும்பங்களில் உள்ள ஆண்கள் வேலைத் தேடி மேற்கு வங்கத்திற்கு வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் அதிகரித்து வருகிறது. மற்றொரு கவலையும் உள்ளது. சாகர் தீவும் ஒவ்வொரு ஆண்டும் அரிக்கப்பட்டு வருகிறது. அதன் குடியிருப்பாளர்களும் தங்கள் வீடு, நிலங்களை மீண்டும் இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
தில்ஜானிடம் பேசிக் கொண்டிருக்கையில், தீவில் உள்ள ஒரு பகுதிக்கு ரிக்ஷாவில் அழைத்துச் செல்கிறார். அங்குள்ள பெரும் நிலப்பரப்பை ஆறு விழுங்கிவிட்டது. ரஞ்சிதா புர்கைத் நம்முடன் உரையாடலில் இணைகிறார். ஒருமுறை நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவரின் வீடு ஆற்றங்கரையிலிருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ளது. “நான் இந்த வீட்டையும் இழக்கலாம். அரசு என்ன செய்தது? ஒன்றும் செய்யவில்லை,” என்கிறார் அவர். குறைந்தபட்சம் கரைகளையாவது பலப்படுத்தியிருக்கலாம். எத்தனையோ பத்திரிகையாளர்கள் வந்து படம் எடுத்துக் கொண்டு காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால், எங்கள் நிலை எப்போதும் மாறாது. எங்களுக்கு வேறு இடத்தில் அரசு நிலம் தருமா? இந்தத் தீவு அழிந்து வீடுகளும் நிலங்களும் அழிந்து வருகின்றன. யாரும் கவலைப்படவில்லை”.
தமிழில்: அன்பில் ராம்