2023ம் ஆண்டு நிறைய வேலைகள் நிறைந்த ஆண்டு ஆகும்.
ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரை கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் இந்தியா ஏதோவொரு தீவிர வானிலை நிகழ்வை சந்தித்திருக்கிறது. பெண்கள் பலர் மக்களவையிலும் சட்டசபைகளிலும் இடம்பெறும் பொருட்டு, செப்டம்பர் மாதத்தில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 2029ம் ஆண்டில்தான் அது அமல்படுத்தப்படும். இவற்றுக்கிடையே தேசிய குற்ற ஆவண மையம் 2022ம் ஆண்டில் மட்டும் 4,45,256 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதத்தில், பாலின பாரபட்சத்தை களைவதற்கென, பாரபட்சமற்ற வார்த்தைகள் கொண்ட கையேடை உச்சநீதிமன்றம் வெளியிட்டது. எனினும் ஐந்து நீதிபதி கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தற்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்க மறுத்து உத்தரவிடவும் செய்தது. ஒன்பது மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. மதம் மற்றும் சாதியரீதியிலான செய்திகள் பெருமளவில் ஊடகப் பரப்பை நிரப்பின. மார்ச் 2022 மற்றும் ஜூலை 2023-க்கு இடையில், இந்தியாவின் பெரும் பணக்காரர் எண்ணிக்கை 166லிருந்து 174 ஆக உயர்ந்தது. 15-29 வயதுக்குள் இருப்பவர்களில் வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை, வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்கு 17.3 சதவிகித அளவில் இருந்தது.








