“இந்தத் தொழில் மறைந்தால், வேறு மாநிலத்துக்கு செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை,” என்கிறார் அசாமின் தர்ராங் மாவட்டத்தின் நா மாட்டி கிராமத்தை சேர்ந்த மஜேதா பேகம். கூடையின் அடி பாகத்தில் மூங்கில் இழைகளை அவர் பின்னிக் கொண்டிருக்கிறார்.

25 வயது கைவினைத் தொழிலாளரான அவர் தினக்கூலி தொழிலாளர் ஆவார். தனி ஆளாய் 10 வயது மகனை வளர்த்து வருகிறார். நோயுற்ற தாயையும் பார்த்துக் கொள்கிறார். “ஒரு நாளில் 40 கூடைகள் என்னால் செய்ய முடியும். ஆனால் இப்போது வெறும் 20 மட்டும்தான் செய்கிறேன்,” என்கிறார் அவர் மியா வட்டார வழக்கில். மஜேதா நெய்யும் ஒவ்வொரு 20 கூடைகளுக்கும் ரூ.160 சம்பாதிக்கிறார். மாநில அரசு விதித்திருக்கும் குறைந்தபட்ச ஊதியமான ரூ.241.92-க்கும் கீழான தொகை இது ( 2016ம் ஆண்டுக்கான குறைந்தபட்ச கூலி சட்டம், 1998 )

மூங்கில் கூடைகளின் வருமானம், மூங்கிலின் விலை உயர்வாலும் மண்டிகளில் குறைந்து வரும் மூங்கில் கூடைகளின் தேவையாலும் பாதிப்படைந்திருக்கிறது. அசாமின் இரண்டு பெரிய மண்டிகள் தர்ராங்கில் இருக்கின்றன. பெச்சிமாரி மற்றும் பலுகாவோன் ஆகிய மண்டிகளிலிருந்து விளைச்சல் வட கிழக்கு பகுதிகளுக்கும் தில்லி வரையும் செல்கிறது.

கட்டாயப் புலப்பெயர்வு குறித்த மஜேதாவின் அச்சம் உண்மைதான். 80-லிருந்து 100 குடும்பங்கள் வரை ஏற்கனவே “நல்ல வேலை” தேடி சென்றுவிட்டதாக 39 வயது ஹனிஃப் அலி சொல்கிறார், உள்ளூர் மதராசாவுக்கு அருகே இருக்கும் வார்ட் ஏ-வை சுற்றிக் காட்டியபடி. ஒரு காலத்தில் 150 குடும்பங்கள் வரை மூங்கில் கலையில் ஈடுபட்டிருந்தன. ஆனால் தற்போது பலரும் கேரளா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களுக்கு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய புலம்பெயர்ந்து விட்டதால் பல  வீடுகள் காலியாகக் கிடக்கின்றன.

PHOTO • Mahibul Hoque
PHOTO • Mahibul Hoque

இடது: அசாமின் தர்ராங் மாவட்டத்திலுள்ள நா மாட்டி கிராமத்தை சேர்ந்த மூங்கில் கூடை நெசவாளரான மஜேதா பேகம் ஒரு நாளில் 40 கூடைகள் வரை கூடைகள் நெய்வார். ஆனால் தற்போது தேவை குறைந்துவிட்டதால் அதில் பாதி அளவைதான் தயாரிக்கிறார். வலது: ஹனிஃப் அலி கூடை நெய்வதன் முதற்கட்டமான டொலி எனப்படும் கூடையின் அடிபாகத்தை உருவாக்குவதை செய்து காட்டுகிறார்

PHOTO • Mahibul Hoque
PHOTO • Mahibul Hoque

இடது: குடும்பத்தின் மூங்கில் கூடை தொழிலை நடத்தும் சிராஜ் அலி, பிளாஸ்டிக் பாத்திரங்களால்தான் மூங்கில் கூடைகளின் தேவை குறைந்து விட்டதாக சொல்கிறார். வலது: ஜமிலா காதுன், பள்ளிக்கு செல்லும் இரு குழந்தைகள் இருப்பதால் கிராமத்தை விட்டு பிற மாநிலங்களுக்கு புலம்பெயர முடியாது


கோவிட் ஊரடங்கு தொடங்கி, விற்பனை பெருமளவில் சரிந்தது. “தொடக்கத்தில் 400லிருந்து 500 வரை கசாக்களை ஒவ்வொரு வாரமும் விற்போம். ஆனால் இப்போது 100லிருந்து 150தான் விற்க முடிகிறது,” என்கிறார் சிராஜ் அலி. 28 வயதாகும் அவர் குடும்பத்தின் மூங்கில் கூடை தொழிலை நடத்தி வருகிறார். “காய்கறி வியாபாரிகள் பிளாஸ்டிக் தட்டுகளையும் பைகளையும் தொற்றுக்காலத்திலிருந்து பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். எங்களின் துக்ரிகளை (சிறு மூங்கில் கூடைகள்) அச்சமயத்தி விற்க முடியவில்லை,” என்கிறார் அவர்.

வார்ட் ஏ பகுதியில் சிராஜ், ஐந்து பேர் கொண்ட குடும்பமாக வாழ்கிறார். “நாங்கள் அனைவருமே வேலை பார்த்தாலும் வாரத்துக்கு 3,000-லிருந்து 4,000 ரூபாய் வரைதான் எங்களால் சம்பாதிக்க முடிகிறது,” என்கிறார் அவர். “தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் பிற செலவுகள் போக, குடும்பத்தின் வருமானம் நாளொன்றுக்கு 250-லிருந்து 300 ரூபாய் வரைதான் கிடைக்கிறது.” விளைவாக, அவரின் விரிவடைந்த குடும்பத்தை சேர்ந்த பல உறுப்பினர்கள், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியவென கர்நாடகாவுக்கு புலம்பெயர்ந்து விட்டனர். “நிலைமை இப்படியே தொடர்ந்தால், நானும் போக வேண்டியிருக்கும்,” என்கிறார் அவர்.

ஆனால் அனைவராலும் கிளம்பி விட முடியாது. “என் இரு குழந்தைகள் இங்கு பள்ளியில் படிப்பதால் என்னால் கேரளாவுக்கு புலம்பெயர முடியாது,” என்கிறார் இன்னொரு கூடை நெசவாளரான 35 வயது ஜமிலா காதுன், வீட்டில் அமர்ந்திருந்தபடி. கிராமத்தின் பிற வீடுகளைப் போலவே அவரது வீட்டிலும் கழிவறை இல்லை. சமையல் எரிவாயு இணைப்பு இல்லை. “தனியார் பள்ளிகளுக்கு அனுப்புமளவுக்கு வசதி இல்லை. நாங்கள் புலம்பெயர்ந்தால், குழந்தைகளின் படிப்பு நாசமாகி விடும்,” என்கிறார் நா மாட்டியைச் அவர்.

இந்த கிராமத்தின் மூங்கில் நெசவாளர்கள், தற்கால வங்க தேசத்தில் இருக்கும் மைமென்சிங்கிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் வம்சாவளி. அவர்களின் முன்னோர் வரும்போது காலனியாதிக்கத்தின் ஒருங்கிணைந்த வங்காளப் பகுதியாக அந்த நாடு இருந்தது.  ‘மையா’ என்றால் ‘கனவான்’ என அர்த்தம். அசாமிய இனதேசியவாதிகளால், வங்காள மொழி சமூகத்தினரை “சட்டவிரோத குடியேறிகள்” என சுட்டுவதற்காக கீழ்த்தரமாக பயன்படுத்தப்படும் வார்த்தை அது.

PHOTO • Mahibul Hoque
PHOTO • Mahibul Hoque

இடது: மூங்கில் கூடை நெசவாளர்கள் அதிகம் இருக்கும் நா மாட்டி கிராமத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் மையா சமூகத்தை சேர்ந்தவர்கள். வலது: மியாருதீன் இளம் வயதிலிருந்தே கூடைகளை நெய்து வருகிறார். மூங்கில் கூடைகளை விற்று அவர் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்

PHOTO • Mahibul Hoque
PHOTO • Mahibul Hoque

அடிபாகம் (இடது) கூடையின் அளவை முடிவு செய்கிறது. அடிபாகம் தயாரானதும், பெண்கள் சிறு பட்டைகளை அவற்றில் பின்னத் (வலது) தொடங்குகின்றனர்

குவஹாத்தியிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நா மாட்டி கிராமம், மூங்கில் கைவினைப் பொருட்களுக்கான மையமாக இருக்கிறது. காசா என்னும் மூங்கில் கூடைகளை நெய்யுதல் இங்கு பாரம்பரியத் தொழில். மண் சாலைகளும் சந்துகளும் 50 குடும்பங்கள் வசிக்கும் இரு தொகுப்புகளுக்கு இட்டு செல்கின்றன. தங்னி ஆற்றுப்படுகையின் மீது வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள், மூங்கில் கூரை வேயப்பட்ட அல்லது தகரக்கூரை வீடுகளில் வாழ்கின்றனர்.

இப்பகுதியின் பெயரான காசாபட்டி என்பதற்கு ‘மூங்கில் கூடைப் பகுதி’ என அர்த்தம். இங்குள்ள பெரும்பாலான வீடுகளை சுற்றி மூங்கில் கூடை குவியல் கிடக்கிறது. “இங்கு நான் பிறப்பதற்கு முன்பிருந்தே இப்பகுதி மக்கள் மூங்கில் கூடைகளை லால்பூல், பெச்சிபாரி மற்றும் பலுகாவோன் மண்டிகளுக்கு விற்றுக் கொண்டிருந்தனர்,” என்கிறார் 30 வயது முர்ஷிதா பேகம் வீட்டுக்கு வெளியே அமர்ந்து மூங்கில் கூடை பின்னிக் கொண்டே.

ஹனிஃப்ஃபின் குடும்பம் மூன்று தலைமுறையாக இத்தொழில் செய்து வருகிறது. “காசாபட்டி என சொல்லி பாருங்கள். எந்த கிராமத்தை சொல்கிறீர்கள் என மக்கள் புரிந்து கொள்வார்கள். அனைவரும் இத்தொழிலை செய்யவில்லை என்றாலும் இங்குதான் மூங்கில் கூடை செய்யும் முதல் தலைமுறை தன் பணியைத் தொடங்கியது.”

பதிவு செய்யப்பட்ட ஒரு சுய உதவிக் குழுவை மூங்கில் கைவினைஞர்களை கொண்டு உருவாக்கி, அக்கலையை தக்க வைக்க அரசின் ஆதரவை பெறும் முயற்சியில் ஹனிஃப் இருக்கிறார். “அரசாங்கம் எங்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உதவி அளித்து, பட்டறை அமைக்க உதவினால், இத்தொழில் உயிர்ப்புடன் இருக்கும்,” என்கிறார் அவர்.

இத்தொழிலில் பிரதானமாக ஈடுபடும் இஸ்லாமியர் சமூகத்தினர், நிலமற்றவர்களாகவும் விவசாயம் செய்ய முடியாதவர்களாகவும் தாங்கள் இருந்தமையால் இந்த தொழிலை செய்யத் தொடங்கியதாகக் கூறுகின்றனர். “மூங்கில் கூடைகள் காய்கறித் தொழிலின் அங்கம். அப்பகுதியும் விவசாயத்தை சார்ந்த பகுதி ஆகும்,” என்கிறார் 61 வயது அப்துல் ஜலீல். மூங்கில் கூடை முடையும் அவர், வார்ட் ஏ பகுதியை சேர்ந்த சமூகப் பணியாளரும் ஆவார்.

“சந்தைகளுக்கும் வணிகர்களுக்கும் விளைச்சலை எடுத்து செல்ல உள்ளூர்வாசிகளுக்கு துக்ரிகள் தேவை. எனவே இந்த கூடைகளை நாங்கள் பல தலைமுறைகளாக செய்து வருகிறோம்,” என அவர் விளக்குகிறர.

PHOTO • Mahibul Hoque
PHOTO • Mahibul Hoque

இடது: முர்ஷிதா பேகம் பகுதியிலிருந்து பல குடும்பங்கள், கர்நாடகா மற்றும் கேரளா போன்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்திருக்கின்றனர். வலது: கூடை செய்பவரும் சமூக செயற்பாட்டாளருமான அப்துல் ஜலீல், ‘எங்களின் ரத்தமும் வியர்வையும் போட்டு உழைத்தாலும் நல்ல விலை கிடைப்பதில்லை,’ என்கிறார்

PHOTO • Mahibul Hoque
PHOTO • Mahibul Hoque

இடது: முன்செர் அலி, இருபது வருடங்களாக கூடை முடைபவர்களுக்கு மூங்கில் விற்று வருகிறார். வலது: விற்பனை சரிந்ததால், கூடை முடைபவரின் வீட்டில் கூடைகள் குவிந்து கிடக்கின்றன

மூலப்பொருட்களை பெறுவதில் உள்ள அதிக செலவுதான் மூங்கில் கூடைகளின் அதிக விலைக்கான காரணம் என்கின்றனர். 43 வயது மூங்கில் கைவினைஞரான அஜாஃப் உதீன், 50 ரூபாய்க்கு விற்கப்படும் ஒவ்வொரு கூடைக்கும் 40 ரூபாய் வரை மூங்கில், நூல் ஆகியவற்றுக்கும் நெசவாளர்கள் மற்றும் போக்குவரத்துக்கும் செலவு செய்ய வேண்டுமென கூறுகிறார்.

பல இடங்களிலிருந்து முன்செர் அலி மூங்கிலை வாங்கி, இருபது வருடங்களாக பெச்சிமார் பஜாரில் விற்று வருகிறார். 43 வயதாகும் அவர், போக்குவரத்துதான் பிரதான பிரச்சினை என்கிறார். மோட்டார் வாகன திருத்தச் சட்டம், அதிக சுமை ஏற்றப்பட்டால் 20,000 அபராதமும் கூடுதலான ஒவ்வொரு டன் சுமைக்கும் 2,000 ரூபாய் கட்டணமும் விதிக்கிறது.

ஆனால் அசாமின் கைவினைக் கொள்கை ( 2022 )-ன்படி, மூங்கில் வாங்கும் வேலை, மாநில மூங்கில் குழு மற்றும் வனத்துறை, பஞ்சாயத்து ஆகிவற்றின் பிற குழுக்களையும் சேர்ந்தது.

விலைவாசி உயர்வால், மூங்கில் கூடை செய்யும் வாடிக்கையளர்களை முன்செர் அலி இழந்துவிட்டார். “ஒவ்வொரு மூங்கில் கழியையும் அவர்கள் ரூ.130-150 வரை செலவழித்து வாங்க வேண்டும்,” என்கிறார் அவர். “அதை 100 ரூபாய்க்கு அவர்கள் விற்றால் என்ன பயன்?”

*****

காசாக்களை தயாரிக்கும் விரிவான செயல்பாடு மூங்கில் வாங்குவதிலிருந்து தொடங்கும் என்கிறார் அப்துல் ஜலீல். “20, 30 வருடங்களுக்கு முன், நாங்கள் தர்ராங்க் கிராமத்துக்கு மூங்கில் வாங்க செல்வோம். மூங்கில் விவசாயம் சரிவுற்று அங்கு பற்றாக்குறை ஏற்பட்டதும் வணிகர்கள். கார்பி அங்லோங் மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்கள் அல்லது அருணாசல பிரதேசம் மற்றும் பிற மலைப்பகுதிகள் போன்ற பல இடங்களிலிருந்து வாங்கினர்.

காணொளி: மறைந்து வரும் அசாமிய மூங்கில் நெசவாளர்கள்

பல குடும்பங்கள் வரை மூங்கில் கலைகளில் ஈடுபட்டிருந்தன. ஆனால் தற்போது பலரும் கேரளா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களுக்கு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய புலம்பெயர்ந்து விட்டதால் பல  வீடுகள் காலியாகக் கிடக்கின்றன

மூங்கில் மரத்தை நெசவாளரின் வீட்டுக்கு கொண்டு  வந்ததும், குடும்பத்தில் உள்ள ஆண்கள் அதன் பட்டைகளை 3.5 அடி தொடங்கி 4.5 அடி வரை நீளத்தில் வெட்டுவார்கள். அவற்றைக் கொண்டுதான் கூடையின் அடிபாகம் செய்யப்படும். எட்டு, 12 அல்லது 16 அடி நீள பட்டைகள், மரத்தின் நடுவிலிருந்து வெட்டப்பட்டு, இணைத்துக் கட்ட பயன்ப்டுகிறது. கூடையின் மேற்பகுதியை செய்ய, மரத்தின் மேற்பகுதி பயன்படுகிறது.

ஓரளவுக்கு தடிமனான பட்டைகளை கொண்டு தொலி (கூடையின் அடிபாகம்) செய்யப்படுகிறது. ”கூடையின் அளவை தொலிதான் தீர்மானிக்கிறது. அடிபாகம் உருவாக்கப்பட்டதும், குழந்தைகளும் பெண்களும் அதன் மையத்திலிருந்து பட்டைகளை பின்னத் தொடங்குவார்கள். இப்பட்டைகள் பேக்னி பேட்டீ என அழைக்கப்படுகின்றன,” என விளக்குகிறார் ஜலீல்.

“மேலே, இரண்டு அல்லது மூன்று கனமான பட்டைகள் பயன்படுத்தப்பட்டு பேக்னி பின்னப்பட்டு நெசவு பணி முடிவடைகிறது. கூடையை முடிக்க, அடிபாகத்தின் மிச்ச முனைகள் உடைக்கப்பட்டு, மூங்கில் நூல்களுக்கு இடையே செருகப்படுகின்றன. இம்முறையை நாங்கள் முரி பாங்கா என அழைக்கிறோம்,” என்கிறார் அவர்.

மொத்த வேலையும் கையால் செய்யப்படுவதாக முர்ஷிதா சொல்கிறார். “மூங்கிலை தேவையான அளவுகளில் வெட்ட, ஒரு ரம்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். நாங்கள் ஒரு குரைல் (கோடரி) அல்லது டாவோ (வெட்டுக் கத்தி) பயன்படுத்தி மூங்கில் தண்டுகளை வெட்டுவோம். மூங்கில் நூல்கள் செய்ய, நாங்கள் கூரான கத்திகளை பயன்படுத்துகிறோம். கூடைகளின் மேல் முனைகளை கட்ட, நாங்கள் உளி (அரிவாள் போன்ற கருவி) நுழைத்து தொலிர் பேட்டீ மற்றும் பேக்னி பேட்டீ ஆகியவற்றின் முனைகளை செருகுவோம்.”

ஒரு கூடை பின்ன 20-25 நிமிடங்கள் ஆகும். இதில் முரி பங்கா மற்றும் தொலி பங்கா வேலைகள் அடங்காது. வாரச்சந்தைக்கு ஒரு நாள் முன், அதிக கூடைகள் செய்ய பெண்கள் விடிய விடிய வேலை பார்ப்பதும் உண்டு. அவர்களின் உடல்நலத்தை இப்பணி பாதிக்கிறது.

“முதுகு வலி ஏற்படும். கைகளில் தோல் தடிக்கும். மூங்கிலின் கூர் முனைகள் குத்தும்,” என்கிறார் முர்ஷிதா. “சில நேரங்களில் மூங்கிலின் ஊசி போன்ற முனைகள் தோலை குத்தி வலி ஏற்படுத்தும். வாரச்சந்தைக்கு முந்தைய நாள், இரவு முழுவதும் நாங்கள் வேலை செய்வோம். அடுத்த நாள், வலியால் தூங்கவும் முடியாது.”

இந்தக் கதை , மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையின் ( எம்எம்எஃப் ) ஃபெல்லோஷிப் ஆதரவில் உருவானது .

தமிழில் : ராஜசங்கீதன்

Mahibul Hoque

महीबुल हक़ असम में एक मल्टीमीडिया पत्रकार और शोधकर्ता हैं. वह पारी-एमएमएफ़ फ़ेलो हैं.

की अन्य स्टोरी Mahibul Hoque
Editor : Shaoni Sarkar

शावनी सरकार, कोलकाता की स्वतंत्र पत्रकार हैं.

की अन्य स्टोरी Shaoni Sarkar
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan