பல்வேறு துயரங்களைப் பார்த்துவிட்டாலும், அந்த வீட்டில் இன்னும் சிரிப்புச் சத்தம் மறையவில்லை.

தண்ணீரின்றித் தமிழகம் காய்ந்துபோயிருந்தாலும், ஒரு பண்ணையில் இன்னும் பூக்கள் பூக்கின்றன.

மண்வளம் அதிவிரைவாகக் குறைந்துகொண்டிருக்கும் மாநிலத்தில், இந்தச் சிறு நிலம் இன்னும் இயற்கை உரங்களை மட்டுமே தொடுகிறது.

கடுமையான வறட்சிக்கு மத்தியில், கணவனை இழந்த, இரு குழந்தைகளின் தாய் ஒருவர், மனதைரியத்துடன் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறார். இதுவரை ஒரு வெற்றிகரமான விவசாயியாக சாதித்துக்கொண்டிருக்கிறார்.

இவரின் கதையை , வாழ்க்கையோடு இவர் நடத்திய போராட்டத்தை, PARI அமைப்பு முதன்முதலில் பதிவு செய்தது. இந்த வாரம் இவர் சென்னையில் ‘ homepreneur ’ விருதினைப் பெற்றார். வீட்டிலிருந்தே சுதந்திரமாகத் தொழில் செய்வோருக்கான விருது இது.

சிவகங்கை மாவட்டம் முத்தூர் கிராமத்தில் உள்ள மேலக்காடு குடியிருப்பைச் சேர்ந்தவர் சந்திரா சுப்பிரமணியன். ஒரு ஆண் விவசாயியை விட கடுமையாக உழைப்பவர்; ஒரு சிறுவனின் உடைகளை அணிந்தபடி நமக்கு காட்சி தருகிறார். “இது என் மகனின் சட்டை”, என்றபடி களுக்கென்று சிரிக்கிறார். அவர் மகனுக்கு 10 வயது; இவருக்கோ 29. தன்னுடைய இரவு உடைக்கு மேலே அந்த நீல சட்டையை அணிந்து பொத்தானிட்டு, தலைநிமிர்கிறார். உடையின் மேல் உடையாக அணிந்திருந்தாலும் முன்பை விட ஒல்லியாகவே தெரிய, “ஏன் எடை குறைந்துகொண்டே போகிறது?”, என்று வினவுகிறேன். “வேலை”, என்று சன்னமாக பதில் வருகிறது. வயல்களுக்கிடையே தான் எழுப்பிய வரப்பை சுட்டிக் காட்டி, “வரப்பு மிகவும் குறுகலாக இருந்ததா? சரி என்று நானே மண்வெட்டியை எடுத்து அகலப்படுத்திவிட்டேன்”, என்கிறார். கிடுகிடுவென்று வளர்ந்த பல ஆண்களுக்கே அந்த வேலையைப் பற்றி நினைத்தால் வேண்டா வெறுப்பாக இருக்கும். அவர்களின் புலம்பல்களை நானே நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.


Picking tuberose. Chandra's daughter Iniya with tuberose flowers

சம்பங்கிப் பூக்கள் பறிக்கப்படுகின்றன. வலது: சந்திராவின் மகள் இனியா, பையைத் திறந்து பூக்களை நமக்குக் காண்பிக்கிறார்

சந்திராவோ இராப்பகலாக உழைக்கிறார். சேவல் கூவி எழுப்புவதற்கு முன்பாகவே இவர் எழுந்து விடுகிறார். ஜூலை மாதம் நட்டநடுநிசியில் இவர் வீட்டின் கதவைத் தட்டியதும் “இப்பொழுதுதான் எழுந்தேன்”, என்றபடி கதவைத் திறக்கிறார். கடிகாரம் மணி ஒன்று என காட்டுகிறது. “சம்பங்கியைப் பறிக்க இதுதானே சரியான நேரம்?”, என்று கிளம்பத் தயாராகிறார் (டியூப்ரோஸ் வகையைச் சேர்ந்த மலர். தமிழகத்தில் ஏராளமாகப் பூக்கக்கூடியது. திருமண மற்றும் வழிபாட்டு மாலைகளில் கோர்க்கப்படுகிறது).

பூக்களை எப்பொழுது பறிக்கிறோம் என்பதைப் பொறுத்து அதன் விலை மாறுபடும் என்று பாலை ஆற்றியபடி அவர் என்னிடம் விளக்குகிறார். “மாலை நேரங்களில் மொட்டு மொட்டாக இருக்கும்; அவை குறைந்த விலைக்குதான் போகும். காலையில் சென்றால் அவை மொத்தமாக மலர்ந்திருக்கும், அதற்குப் பிறகு அவற்றை விற்பதில் அர்த்தமில்லை. நள்ளிரவில் பறிக்கும் பூக்கள்தான் சிறந்தது. இதோ இந்தப் பாலை அருந்துங்கள்”, என்றபடி கோப்பையை நீட்டுகிறார். ஏராளமாக நுரைத்துப் போயிருந்த மேல்பரப்பில் தாராளமாக சர்க்கரையைத் தூவியிருக்கிறார். சந்திராவுக்குத் தேனீர். அதில் மில்க் பிஸ்கெட்டுகளைத் தோய்த்து விழுங்குகிறார். “காலை சாப்பாடு இதுதான். போகலாம் வாருங்கள்”, என்று முன்னே செல்ல, அதிசயத்துடன் நான் பின்தொடர்கிறேன்.

மேலக்காடு பண்ணையில் சந்திராவை நான் முதன்முதலாக 2014-ல் சந்தித்தேன். அதற்கு ஒரு வருடம் முன்புதான் அவருடைய கணவர் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்திராவின் தந்தை சாலை விபத்தில் இறந்துபோனார். துக்க நிகழ்வுகள் ஒவ்வொன்றாக புரட்டிப் போட, வெறும் 24 வயதில் இரண்டு பச்சிளம் குழந்தைகளோடு தன் பிறந்த வீட்டிற்குத் திரும்பி வந்தார் சந்திரா. தன் விதவைத் தாயுடன் இணைந்து விவசாயம் செய்து பிழைக்க ஆரம்பித்தார்.


Chandra with her son Dhanush and her daughter Iniya. Chandra winning the 'Homepreneur' award

தோட்டத்தில் மகன் தனுஷ் குமாரோடும், மகள் இனியாவோடும் சந்திரா. வலது: சென்னையில் ‘homepreneur' விருதினைப் பெற்ற போது

சந்திரா நான்கு ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். வானம் பொழிந்தபோது நெல்லும் கரும்பும் பயிரிட்டார். ஆனால் அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் பருவ மழை பொய்த்ததும் காய்கறி விளைச்சலுக்கு மாறினார். இவரே அருகில் உள்ள உள்ளூர் கடை ஒன்றிற்கு சென்று அவற்றை விற்றுவிடுவார். இந்த வருடம் பூஞ்செடிகளை வளர்க்கிறார். இரண்டு ஏக்கரில் அவையும், அரை ஏக்கரில் காய்கறிகளும் விளைந்து வருகின்றன. மீதி ஒன்றரை ஏக்கர் தரிசாகக் கிடக்கிறது. தினமும் பூக்களைப் பறிப்பதென்பது சோர்வான வேலை. ஆனால் தனியாக அவற்றை செய்கிறார். பூக்களைப் பறிக்க நாளொன்றுக்கு 150 ரூபாய் கேட்கிறார்கள். “ஜோடி ஜோடியாக அவர்கள் வருகிறார்கள். ஒரு இரவுக்கு 300 ரூபாய் அழுதால் என் பிழைப்பு என்னாவது”, என்று முன்னே சென்றபடி கேட்கிறார்.

ஒரு இடத்தில் நின்று, “அதோ, சம்பங்கித் தோட்டம்”, என்று அவர் கைகாட்ட, அதை பார்ப்பதற்குள் வாசம் மூக்கை எட்டிவிட்டது. இரண்டு ஏக்கர். பச்சைப் பசேலென்று பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. நடக்கையில் உயர்ந்து வளர்ந்த காம்புகள் சந்திராவின் தோள்பட்டையை உரசித் திரும்புகின்றன. சம்பங்கி கண்ணில் தென்படுகிறது. செடிகளின் மேல் கிரீடம் வைத்தாற்போல் கொத்துக் கொத்தாக அவை பூத்துக் குலுங்குகின்றன. ஒவ்வொரு வரிசைக்கும் இடையே சிறு இடைவெளி இருக்கிறது. ஊரே உறங்கி வழிகையில் இரவு உடையுடன், தலையில் ஒரு சுரங்க விளக்கை அணிந்தபடி நான்கு மணிநேரம் பூப்பறிக்கிறார் சந்திரா. “இந்த விளக்கு இருக்கிறதே, 800 ரூபாய்! என்ன வெளிச்சம் பார்த்தீர்களா? அதோ சாரை சாரையாக எறும்பு ஊர்வது கூட தெரிகிறது பாருங்கள்!”

ஊருக்குதானே உறக்கமெல்லாம்? பாம்பு தேள் எல்லாம் முழித்துதானே இருக்கும்? “சமீபத்தில்தான் தேள் கடி ஒன்றை வாங்கினேன்”, என்கிறார் சாதாரணமாக. பதறியடித்து என் கால்களை நோக்கி எதுவும் இல்லை என உறுதிசெய்துகொண்டு, “பிறகு என்ன செய்தீர்கள்”, என்று கேட்டால், “ஒன்றும் செய்யவில்லை. அப்படியே தூங்கி எழுந்துவிட்டேன்”, என்கிறார். அதைக் கேட்டதும் “பூட்ஸ் ஒன்று வாங்கி அணிந்துகொள்ளுங்களேன், ப்ளீஸ்”, என்று நச்சரிக்க ஆரம்பிக்கிறேன். கலகலவென சிரிக்கிறார்.


Chandra's tuberose field

இரண்டு ஏக்கர்களில் பூத்துக் குலுங்கும் சம்பங்கி மலர்கள். சந்திரா தன்னுடைய நிலத்தில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்

ஒவ்வொரு நாளும் அதிகாலை ஐந்தரை மணியளவில் பூப்பறிக்கும் பணி முடிவடையும். சந்திரா பூக்களை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி ரெயில்வே கிராசிங்கில் காத்திருக்கும் லாரிக்கு எடுத்துச் செல்வார். அது அப்பூக்களை மதுரைக்கு எடுத்துச் செல்லும்.

அங்கிருந்து வீடு திரும்பியதும் தன் பிள்ளைகளை கவனிக்கத் துவங்குவார். தனுஷ் குமார் ஐந்தாம் வகுப்பிலும் இனியா இரண்டாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். இருவருக்கும் சாப்பாடு கட்டித் தந்தபடி அவர்களைப் பள்ளிக்குக் கிளப்புவார். “புதிய பள்ளியில் சேர்த்திருக்கிறேன். முந்தைய பள்ளியை விட இருமடங்கு கட்டணம் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் சிறப்பான கல்வியைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வேறு யாருக்காக நான் இப்படி தூக்கமின்றி உழைக்கிறேன்? இவர்களுக்காகத்தான்”, என்று மெல்லிய சோக இழையுடன் புன்னகைக்கிறார். அவர்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை எடுத்து சந்தைக்கு விரைகிறார். “இதில் வருகிற பணம் ‘போனஸ்’! இதை வைத்து குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள் வாங்குவேன். கூடுதல் அரிசியும் இந்த காசில்தான். வரப்பில் தண்ணீர் மட்டும் இருந்தால் எங்களுக்குத் தேவையான அரிசியை நாங்களே பயிரிட்டுக்கொள்வோமே? தண்ணீர் இல்லாத இந்த நேரத்தில் வேறென்ன செய்வது?”, என்று கேட்டபடி வியர்வையைத் துடைத்துக் கொள்கிறார்.

அவர் தாய் இப்பொழுது பேச்சில் குறுக்கிடுகிறார். “காசில்லையென்றால் என்ன, அதோ கூண்டில் சும்மாதானே இருக்கின்றன? அவற்றை விற்றுவிடேன்”, என்று ஒரு கூண்டைக் கைகாட்டுகிறார். கின்னி பன்றிகள்! “செல்லப் பிராணியாம் செல்லப் பிராணி! கோழியோ ஆட்டையோ வளர்த்தால் கூட அடித்துத் தின்னலாம், இதனால் என்ன பயன்?”, என்று அம்மா புலம்ப ஆரம்பிக்க, அன்றைய விவாதம் துவங்குகிறது. ஓரிரு ஆண்டுகளாக அம்மாவுக்கும் மகளுக்கும் இது தொடர்விவாதமாக இருந்தபடி இருக்கிறது. சந்திராவைப் பொறுத்தவரை, “பன்றியாக இருந்தால் என்ன, வேறென்ன மிருகமாக இருந்தால் என்ன, செல்லப் பிராணிகளை சாப்பிடக்கூடாது, அவ்வளவுதான்.”

தூக்கமில்லா இரவுகளை ஈடு கட்ட வேண்டுமே? அதற்காக சில நாட்களில் அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். ஆம், மதிய வேளையில் இரண்டு மணி நேர தூக்கம். இன்று அந்த அதிர்ஷ்டம் அவருக்கு இல்லை. மோட்டாரை பராமரிக்க செல்கிறார். நான் அருகில் இருக்கும் திறந்தவெளிக் கிணற்றை எட்டிப் பார்க்கிறேன். 20 அடி அகலம் இருக்கும். “தண்ணீர் தெரிகிறதா?”, என்று கேட்கிறார். 75 அடி ஆழத்தில் கருநிறத்தில் தண்ணீர் தெரிந்தது. சந்திராவும் அவர் சகோதரரும் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரைப் பிடித்து இதில் சேமித்துவைத்துக்கொள்வார்கள். இதிலிரிந்து வயலுக்கு நீரைப் பாய்ச்சுவார்கள். “என் வீட்டு ஆழ்துளைக் கிணறு 450 அடி. என் சகோதரனின் கிணற்றைப் பற்றிக் கேட்டால் இது எவ்வளவோ தேவலாம் என்பீர்கள். 1,000 அடி தோண்டிய பிறகுதான் தண்ணீரே வந்தது”, என்று மலைக்க வைக்கிறார்.


Chandra wearing a headlamp. Open dug well almost 20 feet in diameter

சந்திரா தன்னிடம் இருக்கும் சுரங்க விளக்கை அணிந்துகொள்கிறார். நள்ளிரவில் சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் எறும்புகளைக் கூட இதன் வெளிச்சத்தில் காண முடியும். வலது: சந்திராவும் அவர் சகோதரரும் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரைப் பிடித்து இந்த திறந்தவெளிக் கிணற்றில் சேமித்துவைத்துக்கொள்வார்கள்

“மழை நன்றாகப் பெய்யும்போது கிணறு நிரம்பிவிடும். சில சமயம் வழியக்கூட செய்யும். ஒருமுறை குழந்தைகளின் இடுப்பில் பிளாஸ்டிக் பக்கெட்டுகளைக் கட்டி ‘நீந்துங்கள்’ என்று தள்ளிவிட்டோம்”, என்று சிரிக்கிறார். அதிர்ச்சியில் குத்திட்டு நின்ற என் கண்களை பார்த்ததும் அவருக்கு மேலும் சிரிப்பு வர, அடக்க முடியாமல் வாயைப் பொத்திக் கொள்கிறார். “ஒன்றும் முழ்கிவிடமாட்டார்கள். பிளாஸ்டிக் பக்கெட்டுகள் அவர்களை மிதக்க வைக்கும். பயந்துகொண்டே இருந்தால் பின்னே எவ்வாறு அவர்கள் நீச்சல் கற்றுக்கொள்வதாம்?”, என்கிறார் மிடுக்குடன்.

எங்கள் பேச்சைக் கேட்டு குழந்தைகள் இருவரும் அருகில் வர, நன்றாக வசை விழுகிறது. “முடியைப் பார்! ஈரமாக, போய் துடைத்துக்கொள் போ! எண்ணெய் தடவி சீவு போ!”, என்று விரட்டுகிறார். பிறகு கொய்யா பழங்களைப் பறிக்க நாங்கள் நடக்கிறோம். “வீட்டிற்கு சிறிது எடுத்துச்செல்லுங்கள்”, என்று சந்திராவும் அவர் தாயும் என்னை அன்போடு வற்புறுத்துகிறார்கள்.

சந்திராவின் சகோதரர் தோட்டத்தில் மல்லிகையைப் பறித்துக்கொண்டிருக்கிறோம். முழுவதுமாகப் பூஞ்செடிகள் வளர்ப்பிற்கே மாறிவிட வேண்டும் என்பது சந்திராவின் எண்ணம். “சம்பங்கியின் விலை ஒரு நிலையில் இல்லைதான், ஏறி இறங்கியபடி இருக்கிறது. இருந்தாலும் உத்திரவாதமாக லாபம் வருகிறது”, என்று சுட்டிக்காட்டுகிறார். ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு போட்டிருக்கிறார். அதாவது மின்விளக்குகளுக்கு 40,000 ரூபாய், சொட்டுநீர் பாசனத்திற்கு சுமார் 30,000 ரூபாய், மீதி பணம் நிலத்தைப் பண்படுத்தவும் விதை விதைக்கவும் பயன்பட்டிருக்கிறது. “இயற்கை உரங்கள், மாட்டு சாணம் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகிறேன். ஒரு செடி வளர்ந்து பூக்கள் பூக்க ஏழு மாதங்கள் ஆகும். அதுபோக அவை நிலையாக பூக்க மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும்”, என்று விளக்குகிறார்.


Chandra plucking guavas with Iniya

தோட்டத்தில் சந்திரா கொய்யாக்களைப் பறிக்க, இனியா அவற்றைப் பையில் வாங்கிக்கொள்கிறார்

இப்பொழுதெல்லாம் ஒருநாளுக்கு அவர் 40 கிலோ பூக்களைப் பறிக்கிறார். சில நன்னாளில் 50 கிலோ கூட கிட்டும். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை தாறுமாறாக வேறுபடும். “சில நாட்களில் கிலோ 300 ரூபாய்க்கும் அதிகமாக விலை போகும். சில நாட்களில் கிலோ 5 ரூபாய்க்கு மேல் வாங்க மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் விலை கிலோவுக்கு 50 முதல் 100 ரூபாய் வரை இருந்தால் எனக்கு லாபம்”, என்கிறார். திருமண நாட்களிலும் திருவிழா காலங்களிலும் விலை சர்ரென்று மேலே ஏறும். விழாக்கள் முடிந்ததும் விலை அதளபாதாளத்திற்கு வீழ்ந்துவிடும். உற்பத்தி செலவு, பராமரிப்பு, வட்டி, போன்றவற்றையெல்லாம் கழித்த பிறகு சந்திராவுக்கு என்ன மிஞ்சுகிறது? இந்த இரண்டு ஏக்கர் விளைச்சலின் மூலம் சந்திரா மாதத்திற்கு சராசரியாக 10,000 ரூபாய் லாபம் ஈட்டுகிறார். “சில மாதங்களில் லாபம் இன்னும் அதிகமாக இருக்கும்”, என்று கணக்கிடுகிறார். காய்கறிகளின் மூலம் இன்னும் 2,000 ரூபாய் சம்பாதிக்கிறார். இதைக் கொண்டுதான் சந்திராவின் குடும்பம் வாழ்க்கை நடத்துகிறது.

ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் கூட சிறிது முதலீடு செய்திருக்கிறார். சிறிது சிறிதாக காய்கறிகளைப் பயிரிடுவதை நிறுத்தப் போகிறார். ஊறுகாய்க்காக அடுத்து வெள்ளரிப் பிஞ்சு பயிரிட இருக்கிறார். “அதோ அந்த ஒன்றரை ஏக்கர் தரிசாகக் கிடக்கிறது பாருங்கள். அவற்றை இப்படி நான் விட்டதே இல்லை. ஆனால் மழை இல்லாமல் அதில் என்ன அறுவடை செய்வது? மழை இல்லாமல் தர்பூசணி, தென்னை இவையே காய்ந்துபோய்விட்டன”, என்று வருந்துகிறார்.

வீடு திரும்பியதும் சில பூக்களை ஒரு நூலில் கோர்த்து, “சூடிக்கொள்ளுங்கள்”, என்று கொடுக்கிறார். “மகளுக்கும் கொஞ்சம் பூ எடுத்துச் செல்லுங்களேன்”, என்று ஒரு முழத்தை நீட்டுகிறார். மும்பை போகும் வரை இந்தப் பூக்கள் தாங்காதே? அவருக்கு என் மகளின் புகைப்படத்தைக் காண்பிக்கிறேன். “இவள் முடியைப் பாருங்கள். ஒட்ட வெட்டியிருக்கிறாள், இதில் எங்கு பூக்களை சூடுவது?”, என்கிறேன். அமைதியாக என்னைப் பார்த்து புன்னகைக்கிறார். அது எந்நேரமும் சிரிப்பாக மாறும் நிலையில் இருக்கிறது. என் கண்களைப் பார்த்து, “என்ன இது? எண்ணெய்யும் சீப்பும் கூடவா உங்களால் வாங்கித் தர முடியவில்லை?”, என்று செல்லக் கோபத்துடன் கேட்க, அதன் பின்னர் எழும் சிரிப்புச் சத்தம், வசந்தகால மழை!

Aparna Karthikeyan

अपर्णा कार्तिकेयन एक स्वतंत्र पत्रकार, लेखक, और पारी की सीनियर फ़ेलो हैं. उनकी नॉन-फिक्शन श्रेणी की किताब 'नाइन रुपीज़ एन आवर', तमिलनाडु में लुप्त होती आजीविकाओं का दस्तावेज़ है. उन्होंने बच्चों के लिए पांच किताबें लिखी हैं. अपर्णा, चेन्नई में परिवार और अपने कुत्तों के साथ रहती हैं.

की अन्य स्टोरी अपर्णा कार्तिकेयन