ஜாம்லோவுக்கு 12 வயது. பிப்ரவரி மாதத்தில் தெலங்கானாவின் மிளகாய் விவசாய நிலங்களில் வேலை பார்க்கச் சென்றார். ஊரடங்கு காலத்தில் வீடு திரும்பவென புலம்பெயர் தொழிலாளர்களுடன் நடக்கத் தொடங்கியவர் மூன்று நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 18ம் தேதி உயிரிழந்தார்.
“சொல்லாமல் கொள்ளாமல் அவளுடைய நண்பர்களுடனும் பிற கிராமவாசிகளுடனும் கிளம்பிவிட்டாள். அடுத்த நாள்தான் எங்களுக்கு தெரிய வந்தது,” என்கிறார் அவரின் தாய் சுக்மதி மட்கம். ஆதிவாசி சமூகமான முரியாவை சேர்ந்த குடும்பம்.
சட்டீஸ்கரின் பஸ்தர் பகுதியின் பிஜாப்பூர் மாவட்டத்திலிருக்கும் ஆதெத் கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார் 12 வயதே ஆன அச்சிறுமி. குழந்தைகளும் இருந்த 11 பேர் கொண்ட தொழிலாளர் குழுவுடன் சேர்ந்து தெலங்கானாவில் இருக்கும் முலுகு மாவட்டத்தின் கன்னைகுதெம் கிராமத்து நிலங்களில் வேலை செய்ய சென்றிருந்தார். (முகப்புப் படத்தில் இருப்பதும் மே 7ம் தேதி நடந்த இதே போன்ற குழுதான்.) அங்கே அவர்களுக்கு மிளகாய் பறிக்கும் வேலை. நாளொன்றுக்கு 200 ரூபாய் அல்லது மிளகாய் மூட்டைகள் சம்பளமாக கிடைக்கும். (பார்க்கவும்
Children of the chilli fields
)
“நண்பர்களுடனும் பிற கிராமவாசிகளுடனும் சேர்ந்து ஜாம்லோ வேலை பார்க்கச் சென்றுவிட்டாள். வேலை நிறுத்தப்பட்டதும், அவர்கள் திரும்பத் தொடங்கினார்கள். பெருரு கிராமத்தை (முலுகு மாவட்டத்தில் இருக்கிறது) விட்டு கிளம்பியதும் எனக்கு தொலைபேசியில் அழைத்தாள். அதற்குப் பிறகு எனக்கு வந்த அழைப்பு பிற கிராமவாசிகளிடமிருந்து. என் குழந்தையின் மரணத்தை சொல்ல அழைத்தார்கள்,” என்கிறாம் ஜம்லோவின் தந்தையான அந்தோராம். அவரும் சுக்மதியும் ஆதெத் கிராமத்தின் பிற ஆதிவாசி மக்களை போலவே காட்டில் விளைந்ததை கொண்டும், சிறு நிலங்களில் கொள்ளு, நெல் மற்றும் பிற தானியங்களை விதைத்தும் விவசாயக்கூலிகளாகவும் கிராமப்புற வேலைத்திட்டத்தின் (MNREGA) கீழ் வேலை பார்த்தும் வாழ்க்கை ஓட்டுகிறார்கள்.
“இரண்டு மாதங்களுக்கு முன் ஜாம்லோ தெலங்கானாவுக்கு தொழிலாளராக சென்றாள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் வேலை நிறுத்தப்பட்டது. நம்பிக்கை இழந்த தொழிலாளர்கள் கிராமத்துக்கு திரும்ப விரும்பினார்கள். கைவசம் வைத்திருந்த சேமிப்பு தீர்ந்து போய் விட்டது. ஒப்பந்தக்காரரும் ஊர் திரும்பச் சொல்லிவிட்டார்,” என்கிறார் பத்திரிகையாளராக இருக்கும் உசெந்தி ரொகடே. பிஜாப்பூரை சேர்ந்த கோண்ட் ஆதிவாசி சமூகத்தவர், ஜக்டல்பூரில் இருக்கும் செய்தித்தாளுக்கு பணிபுரிகிறார்.
ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் கன்னைகுதெமிலிருந்து ஆதெத் கிராமத்துக்கு இருக்கும் 170லிருந்து 200 கிலோமீட்டர் (பாதைகளின் அடிப்படையில் தூரம் மாறும்) தூரத்துக்கு நடக்கத் தொடங்கினார்கள் தொழிலாளர்கள். ஏப்ரல் 16ம் தேதி தொடங்கினார்கள். பிரதான சாலை அடைக்கப்பட்டதால், காட்டு வழியில் நடந்தார்கள். இரவு ஆனதும் வழியிலிருந்த கிராமங்களிலும் காடுகளிலும் தூங்கினார்கள். மிகக் கடுமையான பயணம் என்றபோதிலும் மூன்று நாட்களில் 100 கிலோமீட்டர் தூரத்தை அவர்கள் கடந்திருந்தார்கள்.
ஏப்ரல் 18ம் தேதி காலை 9 மணிக்கு, வீட்டிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில், ஜம்லோ உயிரிழந்தார். வயிற்றுவலி, தலைவலி இருப்பதாக சொன்னாரென்றும் கீழே விழுந்து எலும்பை முறித்துக் கொண்டாரென்றும் பல தகவல்கள் வெளியாகின்றன. அதிகாரப்பூர்வமான மருத்துவ அறிக்கை நமக்கு கிடைக்கவில்லை.
“சிறுபெண் அவள். அதிக தூரத்தை (கிட்டத்தட்ட 140 கிலோமீட்டர்கள்) மூன்று நாட்களில் நடந்து 55லிருந்து 60 கிலோமீட்டர்களில் வீட்டுக்கு சென்றுவிடலாம் என்கிற நிலையில் விழுந்து இறந்துவிட்டாள்,” என பிஜாப்பூரின் தலைமை சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரியான டாக்டர்.பி.ஆர்.புஜாரி தொலைபேசியில் நம்மிடம் கூறினார். சோர்வாலும் தசைச் சோர்வாலும் இறந்திருக்கலாம். அவை பிரேதப் பரிசோதனையில் தெரியாது. முந்தைய நாள் கீழே விழுந்து அவள் காயம் பட்டதாகவும் தொழிலாளர்கள் சொல்லியிருக்கின்றனர்.”
மரணத்தை பற்றிய தகவலை 11 மணிக்கு கிடைக்கப் பெற்றார் டாக்டர் புஜாரி. “நான் ஆம்புலன்ஸ்ஸை அனுப்பியபோது அவர்கள் சடலத்துடன் 5-6 கிலோமீட்டர்கள் நடந்துவிட்டார்கள்,” என்கிறார் அவர். அருகே இருந்த உசூர் மருத்துவமனையிலிருந்து ஜம்லோவின் உடலை பிஜாப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது. “குழுவில் இருந்த 11 பேரும் கொரோனா தடுப்புமுறையின்படி பிறகு தனிமைப்படுத்தப்பட்டனர்,” என ஊடகங்களிடம் தெரிவித்தார் டாக்டர் புஜாரி.
இந்தியாவின் பழங்குடிச் சமூகங்கள் ஊரடங்கினால் சந்திக்கும் நெருக்கடி மிகக் குறைவாகவே ஆவணப்படுத்தப்பட்டன. ஆனால் ஜம்லோ மட்கமின் சம்பவம் ஊடகத்தை பரவலாக சென்றடைந்துவிட்டது.
வழியில் இறந்துபோன புலம்பெயர்ந்த தொழிலாளர் என்பதால் ஜம்லோவுக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர் சுகாதார அதிகாரிகள். அவரிடம் எடுத்த மாதிரிகள் சனிக்கிழமை (ஏப்ரல் 18) காலை ஜக்தல்பூருக்கு அனுப்பப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலையே நெகட்டிவ் என முடிவு வந்ததாக டாக்டர் புஜாரி ஊடகங்களிடம் தெரிவித்தார். திங்கட்கிழமை உடற்கூராய்வுக்கு பிறகு அவருடைய சடலம் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
“எட்டு குழந்தைகள் எனக்கு பிறந்தன. அவற்றில் நான்கு, பிறந்த கொஞ்ச நாட்களிலேயே இறந்துவிட்டன. இப்போது ஜாம்லோவும் இறந்துவிட்டாள்,” என இக்கட்டுரையின் துணை ஆசிரியரான கம்லேஷ் பைங்க்ராவிடம் (பிஜாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகையாளர். வட சட்டீஸ்கரின் கன்வர் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர்) கூறினார் சுக்மதி. அந்தோராமுக்கும் சுக்மதிக்கும் இன்னும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். 14 வயதான புத்ராம் கொஞ்ச காலத்துக்கு முன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். நாங்கள் (பைங்க்ரா) ஜம்லோவின் வீட்டுக்கு சென்றபோது, பீடி இலைகளை கட்டுவதற்கான கயிறு தயாரிக்க, மரப்பட்டை சேகரிக்க சென்றிருந்தார். கிராமத்திலிருக்கும் அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஆறு வயது குழந்தையான சரிதா ஊர்க்கிணற்றில் குளிக்க சென்றிருந்தார். இரண்டு வயது தம்பி வீட்டில் தாயுடன் இருந்தார்.
பத்து பன்னிரெண்டு வருடங்களாக மட்கம் குடும்பத்துக்கு குடும்ப அட்டை இல்லை. அதற்கு முன் இருந்த குடும்ப அட்டை தொழில்நுட்பக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஓரளவுக்கு கிடைத்த வருமானத்தை கொண்டு, சந்தையில் கிடைத்த விலை உயர்ந்த அரிசியையும் பிற பொருட்களையும் வாங்கியிருந்தார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழிருப்பவர்களுக்கான புதிய குடும்ப அட்டை ஜம்லோ இறந்தபிறகு அவர்களுக்கு கிடைத்தது. அதிலும் பிழைகள் இருந்தன. ஐந்து பேர் இருந்த குடும்பத்தில் வெறும் நான்கு பேர் இருப்பதாக பதிவாகியிருந்தது. புத்ராம் மற்றும் சரிதா ஆகியோரின் வயதுகள் தப்பாக இருந்தன. (ஜம்லோவின் ஆதார் அட்டையிலும் அவரின் பெயர் ஆங்கிலத்தில் தவறாக, ஜீதா மட்காமி என குறிக்கப்பட்டிருந்தது.)
கிராமத்து பள்ளியில் ஜம்லோ மூன்றாம் வகுப்பு வரை படித்தார். வீட்டில் வளர்த்த நான்கு மாடுகளை (ஒன்று இறந்துவிட்டது) கவனிப்பதற்காக படிப்பு நிறுத்தப்பட்டது. குடும்பம் சில கோழிகளையும் வளர்க்கிறது.
அவருடைய ஆதெத் கிராமம் ஒரு குக்கிராமம். சட்டீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆதெத்துக்கு செல்ல வேண்டுமெனில் பிஜாப்பூரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டொய்னர் கிராமத்துக்கு கற்சாலையில் செல்ல வேண்டும். அங்கிருந்து தூசி நிரம்பிய சாலை. அந்த வழியில் இரண்டு ஓடைகளை கடக்க வேண்டும்.
42 குடும்பங்களை கொண்ட ஆதெத் கிராமம் மோர்மெட் கிராமப் பஞ்சாயத்துக்கு கீழ் வருவதாகக் கூறுகிறார் கிராமத்தின் வார்டு மெம்பராக இருக்கும் மடியா பழங்குடிச் சமூகத்தை சேர்ந்த புத்ராம் கொவாசி. கிராமம் பிரதானமாக நான்கு சமூகங்களை கொண்டிருக்கிறது. முரியா மற்றும் மடியா பழங்குடி சமூகங்கள். களர் மற்றும் ரவுத் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள்.
“12 வயதாகும் ஜம்லோ முதன்முறையாக ஆந்திராவுக்கு (தெலங்கானா) மிளகாய் பறிக்கும் வேலைக்கு சென்றாள். பொதுவாக மக்கள் (இப்பகுதியை சேர்ந்த கிராமங்களிலிருந்து) வெளி மாநிலங்களுக்கு வேலை தேடிப் போக மாட்டார்கள். அதிகபட்சம் டொய்னருக்கும் பிஜாப்பூருக்கும் போவார்கள்,” எனவும் கூறினார் புத்ராம்.
சட்டீஸ்கரின் முதல்வரான புபேஷ் பகெல் ஜம்லோவின் மரணத்தை குறிப்பிட்டிருக்கிறார். ஏப்ரல் 21ம் தேதி அவரிட்ட ட்வீட்டில், “பிஜாப்பூரை சேர்ந்த 12 வயதான ஜம்லோ மட்கமின் துயர் மரணம் மனதை உடைத்துவிட்டது. இந்த துன்பமான நேரத்தில் உடனடி உதவியாக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாயையும் 4 லட்சம் ரூபாயை தன்னார்வ மானிய நிதியிலிருந்தும் வழங்குகிறேன். சம்பவத்தை குறித்து விசாரித்து அறிக்கை கொடுக்கும்படி பிஜாப்பூர் ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டிருக்கிறார்.
தொழிலாளர் துறையும் இச்சம்பவத்தை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறது. ஜம்லோவின் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் மீதும் தெலங்கானாவின் கன்னைகுதெம் கிராமத்தை சேர்ந்த ஒரு ஒப்பந்தக்காரர் மீதும் மாநிலங்கள் தாண்டி தொழிலாளர்களை அழைத்து சென்றதாகவும், குழந்தைகளையும் தொழிலாளர்களாக பயன்படுத்தியதற்கும், பதிவு செய்யாமல் ஒப்பந்தத் தொழில் செய்ததற்கும் வழக்கு பதியப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
சட்டீஸ்கரில் இருக்கும் பிஜாப்பூர், சுக்மா மற்றும் தந்தெவடா பகுதிகளில் எல்லை கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்களும், நக்சலைட்டு இயக்கத்தால் பாதிக்கப்பட்ட சிலரும் வேலைகள் தேடி புலம்பெயர்கிறார்கள். ஆந்திரா மற்றும் தெலங்கானாவை சேர்ந்த பரந்த மிளகாய் விவசாய நிலங்களுக்கு செல்கிறார்கள். அவர்களின் உணவுகளில் மிளகாய்கள் முக்கியப் பங்கு வகிப்பவை. பலர் அவற்றையே சம்பளமாகவும் பெற்று திரும்புகிறார்கள்.
ஜம்லோவும் தன் வீட்டுக்கு எதையேனும் கொண்டு வர விரும்பிதான் சென்றிருப்பார். வீட்டுக்கு திரும்பும் கொடிய பாதை 12 வயது சிறுமிக்கு மிக நீண்டதாக இருந்திருக்கிறது.
தமிழில்: ராஜசங்கீதன்