பிரபாகர் சாவலுக்கு (30), அவரது மாமா சிவாஜி சாவலைவிட (55) கடினமான வேலை. மராத்வாதாவின் பர்பானி மாவட்டத்தில் உள்ள மோர்கானில் இருவரும் விவசாயிகள். இருவரும் முக்கியமாக பருத்தி சாகுபடி செய்பவர்கள். ஆனால், சிவாஜியின் பருத்தி பயிர் நீண்டகாலம் பணப்பயிராக இருந்தது. ஆனால், பிரபாகரின் பயிரோ அதிகளவிலான பணத்தை கொண்டுவரவில்லை.

சாவல்கள் மட்டும் இதை தனியாக செய்யவில்லை. மராத்வாதாவின் பர்பானி, ஹிங்கோலி மற்றும் ஔரங்காபாத் ஆகியவை பருத்தி சாகுபடி பரவலாக நடைபெறும் மாவட்டங்களாகும். இங்கு 17.60 ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுவதாக மாநில வேளாண் துறை கூறுகிறது. இந்தப்பயிர், துவரை, சோயா பீன்ஸ் மற்றும் சோளம் ஆகிய பயிர்களைவிட அதிக லாபத்தை தரக்கூடியது. அதனால், இது பணப்பயிர் என்று அழைக்கப்படுகிறது. எனினும், பருத்தியின் உற்பத்தி விலை கடந்த ஆண்டுகளில் உயர்ந்துவிட்டது. ஆனால், விற்பனை விலை ஒரே மாதிரிதான் உள்ளது. பருத்தியை பணப்பயிர் என்பது பெயரில் மட்டுமே உள்ளது.

பிரபாகர் பருத்திக்கான செலவை தெளிவாக விளக்குகிறார். ஒரு பேப்பர் எடுத்து, அதில் ஒரு ஏக்கருக்கு ஒவ்வொரு நிலையிலும் செய்யப்படும் அனைத்து செலவினங்களையும் ஒவ்வொன்றாக எழுதுகிறார். ஒரு பை விதை ரூ.800 ஆகும். விதைப்பதற்கு முன்னர், ஜீன் மாத மத்தியிலே நிலத்தை தயார் செய்வதற்காக கூலித்தொழிலாளர்களுக்கு ஆகும் செலவு ரூ.1,100. விதைக்கும்போது ரூ.400 கூடுதலாக செலவாகும். பருவமழை நன்றாக பொழிந்தால், 3 முறை களையெடுக்க வேண்டும். அதற்கு கூலி ரூ.3,000. உரங்களுக்கு ரூ.3,000 செலவாகும். பூச்சிக்கொல்லிகளுக்கான செலவு ரூ.4,000. அறுவடை செய்ய ரூ.5,000 தேவைப்படும்.

இவை இத்தோடு முடிந்துவிடவில்லை. கடைசி தடை அவற்றை சந்தையில் விற்பது. ஒரு அறுவடைக்கு போக்குவரத்து, வியாபாரிகளுக்கான கமிஷன் உள்பட செலவு ரூ.3,000 ஆகும்.

“ஒரு ஏக்கருக்கான செலவின் மொத்த தொகை ரூ.20,300 வரை உள்ளது“ என்று பிரபாகர் கூறுகிறார். அவரின் பயிரை அறுவடை செய்யும் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கப்படும் சந்தைவிலை குவிண்டால் ரூ.4,300 (இது கடந்தாண்டு ரூ.4,000மாக இருந்தது). “வருமானம் (அனைத்து செலவினங்களுக்குப்பின்னர்) ரூ.34,800“ என்று அவர் கூறுகிறார். ஒரு ஏக்கருக்கு 8 மாத கடின உழைப்பு மற்றும் முதலீடுகள் பெறுவது ரூ.14,500 மட்டுமே. தண்ணீர் குழாய் மற்றும் ஆழ்துளை கிணறுக்கான மின் கட்டணம் செலுத்த வேண்டும். அவரின் 6 மாடுகளுக்கு மாதமொன்றுக்கு ரூ.14 ஆயிரத்துக்கு மேல் செலவாகும்.

Shivaji Chavhal in his nephews farm
PHOTO • Parth M.N.

15 ஆண்டுகளுக்கு முன்னர், மோர்கன் கிராமத்தின் சிவாஜி சாவல் ஒரு ஏக்கர் பருத்தி சாகுபடிக்கு ரூ.5,000 மட்டுமே செலவு செய்தார். தற்போது அவரது சகோதரரின் மகன் ரூ.20,300 செலவு செய்கிறார்

15 ஆண்டுகளுக்கு முன்னர் சிவாஜி சாவலால் ஒரு ஏக்கர் பருத்தி ரூ.4,500 முதல் ரூ.5 ஆயிரத்தில் பயிரிட முடிந்தது. பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றின் செலவு தற்போது இருப்பதைவிட, பாதியாக இருந்தது.  விவசாயக் கூலித் தொழிலாளிகளுக்கான கூலித்தொகை இருமடங்குக்கும் மேல் அதிகரித்துவிட்டது. மின்கட்டணம் கூட அதிகரித்துவிட்டது.

பிரபாகரின் 15 பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தில் அவரின் மாமா சிவாஜிக்கு சொந்தமாக 30 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 15 ஏக்கர் பருத்திக்காக ஒதுக்கி விடுவார்கள். கடந்த 4 ஆண்டுகளில் அது 7 – 8 ஏக்கர்களாக குறைக்கப்பட்டுவிட்டது. பருத்திக்கு பதில் உணவுப்பயிர்களான துவரை, பாசிபருப்பு மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவை பயிரிடுகின்றனர்.

பருத்தி வறட்சியை தாங்கி வளராத பயிர். அதற்கு உணவுப்பயிரைவிட அதிகளவிலான தண்ணீர் தேவைப்படுகிறது. மராத்வாதாவில் 2012-15 வரை ஏற்பட்ட வறட்சி பருத்திக்கு பேரழிவை ஏற்படுத்தியது. இந்தாண்டும் மழை சீரானதாக இல்லை. வறண்ட ஆண்டுகளில் விவசாயிகள் பாசனத்திற்கு ஆழ்துளை கிணறுகள் தோண்டுவது, தண்ணீர் டேங்குகள் வாங்குவது மற்றும் கிணறுகள் அமைப்பது என்று அதிகளவு செலவு செய்துவிட்டனர்.

ஆனால் பருத்தியின் விலை அதே அளவில் உயரவில்லை. “பருத்திக்கான சந்தை விலை குவிண்டால் ரூ.2,000 (15 ஆண்டுகளுக்கு முன்னர்)“ என்று சாவல் கூறுகிறார். “ஒரு ஏக்கரில் விளையும் 8 குவிண்டாலுக்கு ரூ.16,000 கிடைக்கும். லாபம் ரூ.11 ஆயிரம் கிடைக்கும். இப்போது 15 ஆண்டுகள் கழித்து, கிடைக்கும் லாபத்தைவிட ரூ.3 ஆயிரம் மட்டுமே குறைவு.

உற்பத்தி விலை அதிகரிக்கும் அளவிற்கு குறைந்தளவு ஆதரவு விலை நிர்ணயிப்பதற்கு அரசு மறுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் விலை குறைந்ததற்கு உள்ளன. சர்வதேச சந்தையில் பருத்தியின் விலை பெருமளவில் அமெரிக்காவின் பருத்தி பயிரிடுபவர்களுக்காக மானியமாக்கப்படுகிறது, இது ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளால், இந்தியாவில் விலையில் ஏற்றஇறக்கம் காணப்படுகிறது என்று விஜய் ஜவான்தியா கூறுகிறார். இவர் மூத்த விவசாய தலைவர். “மேலும் கரும்பு மற்றும் பருத்தி ஆகிய இரண்டும் பணப்பயிர்களாக இருப்பதால், அவற்றிற்கு வெவ்வேறு அளவுகோல்கள்தான் பொருந்தும்“ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.  சந்தையில் அதிகம் இருந்தால், சர்க்கரை மானியத்துடன் ஏற்றுமதி செய்யப்படும். அதனால், அது விலையை பெரும்பாலும் பாதிக்காது. பருத்தி ஏற்றுமதிக்கு மானியம் கிடையாது. சர்க்கரைக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி உண்டு. பருத்திக்கு இறக்குமதி வரி கிடையாது என்று விளக்குகிறார்.

“இன்று செய்யப்படும் அனைத்து செலவுகளையும் பாருங்கள்“ என்று சாவல் கூறுகிறார். “அவை கடுமையான அளவு உயர்ந்துவிட்டன. பணிக்கு செல்பவர்களின் சம்பள உயர்வை பாருங்கள் (ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அல்லது வங்கி ஊழியர்கள்) எங்கள் வருமானத்துடன் அவற்றை ஒப்பிட்டு பாருங்கள். இது சரியா?“ என்று கேட்கிறார்.

பருத்தி விவசாயிகள் அனைவரும் உயர்ந்து வரும் உற்பத்தி விலை உயர்வு மற்றும் குறைவான விற்பனை விலைக்கும் இடையில் அல்லாடிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு மருத்துவ அவசரம், குடும்பத்தில் யாருக்காவது திருமணம் அல்லது குழந்தைகளுக்கான கூடுதல் பள்ளிக்கட்டணமோ என்று எதாவது ஒரு செலவு அவர்களை வங்கி கடனுக்கு விண்ணப்பிக்க கட்டாயப்படுத்துகிறது. மேலும் மோசமான நிலையில் அவர்கள் கந்துவட்டி கடன் வாங்குகின்றனர். அவர்கள் மாதத்திற்கு 5 சதவீத வட்டியை செலுத்த வலியுறுத்துகிறார்கள்.

PHOTO • Parth M.N.

பிரபாகர் சாவலின் குடும்பத்தினர் பருத்தி பயிரிடும் நிலத்தின் அளவை குறைத்துவிட்டனர். அவற்றில் துவரை, உளுந்து, பாசிபயறு மற்றும் சோய பீன்ஸ் போன்ற உணவுப்பயிர்களை பயிரிடுகின்றனர்

பிரபாகர் சாவல் அவரது 8 லட்ச ரூபாய் கடனில், ஒரு பகுதியை தனது இரு சகோதரிகளின் திருமணத்திற்கு வழங்கினார். அந்தக்கடன் வறட்சி காலங்களான 2012 – 2015ல் வாங்கப்பட்டது. எஞ்சிய தொகை அவர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட காலங்களில், குடும்ப செலவிற்கு உதவியது. ஆனால், தற்போதைய மாநில அரசு, கடன் தள்ளுபடி செய்யும் அளவை ரூ.1.5 லட்சமாக குறைத்துவிட்டதால், பிரபாகரின் குடும்பத்தினர் அதற்கு தகுதியாகவில்லை. “நான் தனிநபரிடம் இதுவரை கடன் பெறவில்லை. ஆனால் அது எவ்வளவு நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை?“ என்று அவர் கூறுகிறார்.

காங்கிரஸ் அரசால், விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து   2006ல் அமைக்கப்பட்ட சுவாமிநாதன் கமிஷன், தனது அறிக்கையை சமர்பித்தது. அதில் முக்கியமான அறிவுரையே விவசாயிகளுக்கு குறைந்தளவு ஆதரவு விலை, உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அரசு எதுவும் செய்யவில்லை. 2014ல் எதிர்கட்சியான பாஜக, விவசாயிகள் பிரச்னைகளுக்காக கடுமையாக போராடியது, அந்த அறிக்கையின் அறிவுரைகளை நிறைவேற்ற வலியுறுத்தியது. ஆனால் அக்கட்சி ஆட்சிக்கு வந்தபின்னர், அறிக்கையின் அறிவுரைகளை நிறைவேற்றவில்லை.

ஆசாராம் லாம்டே, மூத்த செய்தியாளர், பர்பானியைச் சேர்ந்த சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இதுகுறித்து அவர் கூறுகையில், வழக்கமாக பருத்தி பயிரிடும் விவசாயிகள் மாற்றாக துவரை, சோயா பீன்ஸ் போன்றவற்றை பயிரிடுகின்றனர். ஆனால், அவையும் பெருமளவு லாபம் தருபவை கிடையாது அவற்றிற்கான குறைந்தளவு ஆதரவு விலையும் குறைவுதான்.

இதற்கிடையில், பி.டி. காட்டன், மரபணு மாற்றப்பட்ட, பருத்திக்காய் செம்புழுவை எதிர்த்து வளரக்கூடிய ஒரு வகை பருத்தி இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதற்கு பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுகிறது. “பி.டி. அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், விவசாயிகள் பூச்சிக்கொல்லிக்காக சிறிது செலவு செய்தனர்“ என்று லோம்டே கூறுகிறார். “2000மாவது ஆண்டு முதல் அது கணிசமாக குறைந்தது. எனினும், பி.டி., 4 முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே நன்றாக இருந்தது. அப்போது முதல் விவசாயிகள் பயிரழிவைத்தடுக்க பூச்சி மருந்துகள் உபயோகிக்க கட்டாயப்படுத்தப்பட்டார்கள். பின்னர் அதுவும் அவர்களின் உற்பத்தி செலவு அதிகரிப்பதற்கு காரணமானது.

“இப்போது வரை எங்களால் நகையை திருப்ப முடியவில்லை. லாபம் கிடைத்தால் அது குறைவாகவும், இழப்பு ஏற்படும்போது அது அதிகமாகவும் இருக்கிறது"

வீடியோவை பாருங்கள்: குப்சா கிராமத்தின் சந்தோஷ் தசால்கர், 2012ம் ஆண்டு முதல் பருத்தியில் லாபம் ஈட்ட முடியவில்லை என்று கூறுகிறார்

பிரபானியின் குப்சா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் தசால்கர் 2012ம் ஆண்டு முதல் பருத்தியில் எந்த லாபமும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார். “தற்போது (ஆகஸ்டில்) இந்தப்பயிர் இடுப்பளவு வளர்ந்திருக்க வேண்டும்“ என்று அவர் கூறுகிறார். இப்போதுதான் இது கணுக்கால் வரை மட்டுமே வளர்ந்துள்ளது. “எஞ்சியுள்ள பருவமழை காலத்தில் மழை நன்றாக பொழிந்தால்தான், இல்லாவிட்டால் என்னால் 3 குவிண்டால்களை விட அதிகம் அறுவடை செய்ய முடியாது. கடந்த ஆண்டைத்தவிர, 2012 முதல் இதுதான் நிலை“ என்று அவர் வருந்துகிறார்.

பர்பானி – சேலு நெடுஞ்சாலைக்கு அருகிலேயே பர்பானிக்கு 7 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 5 ஏக்கரில் பருத்தி பயிரிட்டுள்ளார். அவருக்கு 6 மற்றும் 8 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் நகராட்சி பள்ளியில் படிக்கின்றனர். “தனியார் பள்ளிகள் ரூ.5,000 நன்கொடை கேட்கிறார்கள். எனக்கு ரூ.2 லட்சம் வங்கி கடன் உள்ளது“ என்று அவர் கூறுகிறார்.

2015லும் வறட்சி ஏற்பட்டபோது, சவிதா தசால்கர், சந்தோஷின் மனைவி விதைப்பு பருவத்திற்கு பணம் திரட்டினார். “ரூ.70 ஆயிரம் மதிப்பு எனது நகைகளை ரூ.40 ஆயிரத்திற்கு அடகு வைத்து பணம் பெற்றோம்“ என்று அவர் கூறுகிறார். இதைத்தவிர வேறு எதுவும் நாங்கள் விதைக்கவில்லை. எனது திருமணத்திற்காக வாங்கிய நகைகள். எங்களால் இதுவரை மீட்க முடியவில்லை. லாபம் வரும்போது சிறிதளவே வருகிறது. நஷ்டமெனில், பேரிழப்பாகிவிடுகிறது“ என்று அவர் நொந்துகொள்கிறார்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Parth M.N.

पार्थ एम एन, साल 2017 के पारी फ़ेलो हैं और एक स्वतंत्र पत्रकार के तौर पर विविध न्यूज़ वेबसाइटों के लिए रिपोर्टिंग करते हैं. उन्हें क्रिकेट खेलना और घूमना पसंद है.

की अन्य स्टोरी Parth M.N.
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

की अन्य स्टोरी Priyadarshini R.