கமலாதேவி, உழைத்துக் கொண்டிருக்கும் நிலத்திலிருந்து, ஏக்கம் மற்றும் வலி அலைகள் போல எழுந்து அவரை சந்திக்கிறது. முன்னர் அவரது குடும்பத்திற்கு 18 ஏக்கர் நிலம் இருந்தது. "அவர்களுக்கு வேலையாட்களும் இருந்தார்கள், இப்போது அவர்களில் ஒருவராக நான் இருக்கிறேன்", என்று அமைதியாகக் கூறினார்.

கமலா, இமயமலையின் வெளிப்புற அடிவாரத்தில் உள்ள வளமான மாவட்டமான உத்தம் சிங் நகரில் அதிக எண்ணிக்கையில் வாழும் பட்டியல் பழங்குடியான தாரு சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உத்தரகாண்டில் ஆரம்பகாலத்தில் குடியேறியவர்கள் என்றும் மிகவும் பின்தங்கியவர்கள் என்றும் கணக்கிடப்படுகின்றனர்.

35 நபருக்கு ஒரு நபர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் இந்த மாநிலத்தில் இவரை போன்ற பல பழங்குடிகள், பழங்குடியினர் அல்லாதவர்களிடத்தில் தங்களது நிலத்தை இழந்துள்ளனர். கமலாவைப் பொருத்தவரை, அவரது குடும்பத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் குறைந்த வட்டியில் காலவரையற்ற கடன்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் மூலம் இழப்பு ஏற்பட்டது.

"எனது மாமனாரின் சிகிச்சைக்காக நாங்கள் கடன் வாங்க வேண்டி இருந்தது. பின்னர் எனது கணவருக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டி தங்கைகள் இருந்தனர்.." என்று கூறும் போது அவரது குரல் தடுமாறுகிறது.

சித்தர்கஞ்ச் தாலுகாவின் பிண்டரி கிராமத்தில் தற்போது 47 வயதாகும் கமலா, 28 ஆண்டுகளுக்கு முன்பு, இளம் மருமகளாக வந்தார், அவரது மாமனார், தோலா சிங், ஒரு வளமான விவசாயி. அவர்களது குடும்பத்தின் செல்வாக்கின் அளவீடாக அவர் வீட்டு முற்றத்தில் நின்று கை அசைக்கிறார். "அறுவடை காலத்தில், இந்த இடம் முழுவதும் தானியங்களால் நிரப்பப்பட்டிருக்கும், எங்களிடமிருந்து கோதுமை மற்றும் நெல் வாங்க வியாபாரிகள் தங்களது ஆட்களையும், லாரிகளையும் அனுப்பி வைப்பர்", என்று அவர் கூறுகிறார்.

Kamla Devi in front of her home in the village of Pindari (Udham Singh Nagar), Uttarakhand. She holds a blank stamp paper signed by her husband Harish Chandra
PHOTO • Puja Awasthi
Kamla Devi stands on her farm in the village of Pindari (Udham Singh Nagar), Uttarakhand
PHOTO • Puja Awasthi

முன்னர் கமலா தேவி குடும்பத்திற்கு 18 ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் இப்போது கூலியாளாக வேலை செய்கிறார். இடது: அவரது கணவர் கையொப்பமிட்ட வெற்று பத்திரத்தை வைத்திருக்கிறார்

குடும்பத்திற்கு முதல்முறையாக கடன் தேவைப்பட்டது எப்போது என்று கமலாவுக்கு நினைவில் இல்லை, ஏனென்றால் இதுபோன்ற விவகாரங்களை ஆண்கள் தான் கவனித்து வந்தனர். ஆனால் 2005ஆம் ஆண்டு குளிர்காலத்தில், அருகில் உள்ள நகரான சித்தர்கஞ்சில் ஒரு துணிக்கடை நடத்திவந்த ஒரு கடன் கொடுப்பவர் தனது வீட்டில் வந்து நின்று கொண்டதை அவர் தெளிவாக நினைவு கூர்கிறார்.

"காலை முதல் இரவு வரை அவர் எனது கணவரின் அருகிலேயே அமர்ந்திருந்தார். அவருடன் உள்ளூர்காரர் ஒருவரும் இருந்தார். 'உங்களது நிலத்தை கொடுத்துவிட்டீர்கள் என்றால் எல்லாம் சுலபமாகிவிடும்', என்று அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். எனது கணவர் படுத்த படுக்கையாக இருந்தார். இரவில் அவரால் எதிர்ப்பு தெரிவிக்க கூட முடியாத அளவிற்கு அவர் சோர்வாக இருந்தார்", என்று அவர் நினைவு கூர்கிறார். அன்று அவரது கணவர் ஹரிஸ் சந்திரா கையெழுத்திட்ட 50 ரூபாய் முத்திரைத்தாளில், அவர் 3.5 பைக்கா நிலத்தை (தோராயமாக .58ஏக்கர்) நிலத்தை பழங்குடி அல்லாத ராம் அவதார் கோயல் என்பவருக்கு 68,360 ரூபாய்க்கு கிரையம் எழுதிக் கொடுத்துவிட்டார். அவ்வாறு மாற்றம் செய்வதற்கு ஆட்சியர் அலுவலகத்தின் சட்டப்பூர்வ அனுமதி பெறப்படாமல் இருந்தது. எந்த விற்பனை பத்திரமும் பதிவு செய்யப்படவில்லை. ஆனாலும் நிலம் பறிபோனது.

2005 முதல் 2011 இல் அவர் இறக்கும் வரை இதுபோன்ற பல ஒப்பந்தங்களில் ஹரிஸ் கையெழுத்திட்டார். குடும்பத்திற்கு சொந்தமான 18 ஏக்கர் நிலம் அனைத்தும் மெதுவாக அடமானம் அல்லது விற்பனை செய்யப்பட்டது. கமலாவிடம் 9 ஏக்கருக்கான 4 ஒப்பந்தங்களின் நகல் மட்டுமே உள்ளது.

"கவனித்துக் கொள்வதற்கு 5 குழந்தைகள் இருந்தனர். எனது மூத்த மகளுக்கு 17 வயது. எங்கள் நிலம் முழுவதையும் இரண்டு கந்து வட்டிக்காரர்களிடம் இழந்துவிட்டோம். சில காலத்திற்கு தான் அடமானம் வைக்கப்படுகிறது என்று தான் நான் எண்ணியிருந்தேன். நிலத்தில் சிலவற்றை விற்று கடனை அடைப்பதற்காக அவர்களிடம் நான் அதை கேட்க சென்ற போதுதான் அதனை அவர்கள் ஏற்கனவே விற்றுவிட்டதாக சொன்னார்கள். இது ஒரு கொள்ளை", என்று அவர் கூறுகிறார்.

Mangola Singh in front of a semi constructed room which she has been trying to build for herself in the courtyard of her home in the village of Nandpur (Udham Singh Nagar), Uttarakhand
PHOTO • Puja Awasthi
Mangola Singh sifts through her legal papers in her home in the village of Nandpur (Udham Singh Nagar), Uttarakhand
PHOTO • Puja Awasthi

மங்கோலா சிங் தனது வீட்டின் முற்றத்தில் தனக்காக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அறையில் இருக்கிறார். வலது: பெருகிவரும் தனது சட்ட ஆவணங்களை துழாவிக் கொண்டிருந்தார்

பிண்டரியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மற்றொரு கிராமமான உத்தம் சிங் நகரில், 31 வயதாகும் மங்கோலா சிங் என்ற புஸ்கா பழங்குடியினத்தைச் சேர்ந்தவரும் இதேபோன்ற இழப்பை சந்தித்திருக்கிறார். "எனது சகோதரர் பூல் இந்த கிராமத்தில் இதுவரை நடைபெறாதது போன்ற ஒரு திருமணத்தை நடத்த விரும்பினார். அவரிடம் குடிப்பழக்கம் மற்றும் சூதாடும் பழக்கம் இருந்தது. திருமணம் நடந்தால் எல்லாம் சரியாகி வடும் என்று நினைத்திருந்தேன்", என்று அவர் குடும்ப நிலத்தில் தனது பங்கை தான் ஏன் அடமானம் வைத்தார் என்று விளக்கும்போது கூறினார்.

அவரது 11 வயதில் தங்களது பெற்றோர் இறந்த பிறகு, மூன்று சகோதரர்களின் மூத்தவரான மங்கோலா, தானே பெற்றோராக பொறுப்பேற்று ,உடனடியாக தங்களது குடும்பத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுணர்ந்தார் "எனக்கு வேறு என்ன வழிகள் இருந்தது?", என்று அவர் கேட்கிறார்.

குழந்தைகளின் இளம் வயதை காரணம் காட்டி, உறவினர்கள் மங்கோலாவிடம் நிலத்தை பிற விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுமாறு பரிந்துரைத்தனர். ஆண்டிற்கு ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபாய் முன்பணம் செலுத்தப்படும் இதேபோல 3 முதல் 5 ஆண்டுகளுக்கு செய்துகொள்ளலாம். உடன் பிறந்தவர்களின் தேவைக்காக ஒரு சிறிய நிலம் ஒதுக்கப்பட்டது. பள்ளி, வீட்டு வேலை மற்றும் விவசாய வேலைகளை சமாளித்தபடி அவர் தனது சகோதரர்களுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்று தன்னை வருத்திக் கொண்டார். ஆனால் மூத்தவரான பூரன் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார், இளையவர் மிகவும் சோம்பேறியாக இருந்தார்.

பின்னர் 2012ஆம் ஆண்டில் பூல் அரை ஏக்கர் நிலத்தை 4.5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டார். "இந்த நிலம் சகோதரர்களான எங்களுக்கு மட்டுமே சொந்தம். உனக்கு எந்த உரிமையும் இல்லை", என்று அவர் திகைத்த மங்கோலாவிடம் கூறினார்.

"எனது போராட்டமும் தியாகமும் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. நான் சிறுவயதில் இருந்தே இந்த நிலத்தை பாதுகாத்தது ஒன்றுமில்லாமல் போய்விட்டது. நான் ஒரு பெண் என்பதே இங்கு விஷயமாக இருக்கிறது", என்று கூறினார் அவர்.

'எனது போராட்டமும் தியாகமும் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. நான் சிறுவயதில் இருந்தே இந்த நிலத்தை பாதுகாத்தது ஒன்றுமில்லாமல் போய்விட்டது. நான் ஒரு பெண் என்பதே இங்கு விஷயமாக இருக்கிறது'

காணொளியில் காண்க: பெண்கள் தங்கள் நிலத்திற்கான போராட்டத்தைப் பற்றி பேசுகின்றனர்

2010 - 11 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய விவசாய கணக்கெடுப்பு அறிக்கையின்படி பெண்களைவிட ஏழு மடங்கு அதிகமான ஆண்களுக்கு விவசாய நிலம் இருப்பதாக கூறப்படுகிறது, மங்கோலா காதர்பூர் தாலுகாவிலுள்ள நந்தபூர் கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்டை வீட்டுக்காரர்கள் அவரை திட்டியபோது ஆச்சர்யம் அடைந்தான். இவர் பூலுக்கு ஆலோசனை வழங்குமாறு அவர்களிடம் மண்றாடினார்.

"அவன் ஒரு ஆண். அவன் வாழ்க்கையை நடத்த அவனுக்கு நிலம் வேண்டும். அதில் நீ ஏன் தலையிட வேண்டும்?", என்று இவர்கள் அவரிடம் கூறினார். மங்கோலாவிற்கு பாரம்பரியமான திருமணத்தின் பாதுகாப்பு இல்லை என்பதைக் கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு பூல் மற்றொரு அரை ஏக்கர் நிலத்தையும் விற்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மங்கோலா உத்தம் சிங் நகரிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் விற்பனைக்கு தடை கோரி மனுத் தாக்கல் செய்தார். தொழில்நுட்ப காரணங்களை காட்டி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மங்கோலா தனது சகோதரரிடம் இருந்து ஒரு சமாதானத் தூதைப் பெற்றார். "என் மீது அக்கறை இருக்கிறது என்பதை காட்டுங்கள். என் விருப்பப்படி எனக்கு திருமணம் செய்து வையுங்கள். நீங்கள் பெற வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஏக்கர் நிலத்தை அடமானம் வையுங்கள் (திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக). நான் அந்த நிலத்தை மீட்டுத் தருகிறேன்", என்று அவரது சகோதரர் அவரிடம் கூறினார். இவரை மதிக்கும் எந்த எண்ணமும் இல்லாமல் அவரது சகோதரர் வழங்கிய சலுகை இது.

"அடமானம் முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. என்னால் நிலத்தை மீட்க முடியாவிட்டால் அது என்றென்றும் இழந்துவிட்டதாகிவிடும். நிலம் இல்லாத நான் என்ன ஆவேன்? நான் திருமணம் செய்துகொள்ள விரும்பினாலும் பணமில்லாமல் நான் எப்படி சமாளிப்பேன்?", என்று விரக்தியில் கூறினார் மங்கோலா.

2012ஆம் ஆண்டு முதல் மங்கோலா தனது மாற்ற சகோதரர் பூரனுடன் பகிர்ந்துகொள்ளும் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் ஒரு மூலையில் வைத்திருந்த சட்ட ஆவணங்கள் நிறைந்த ஒரு கருப்பு பை படிப்படியாக தடிமனாக வளர்ந்து கொண்டே வருகிறது. அவருடைய விரக்தியும் அதிகமாகிவிட்டது.

Kamla Devi with her son Keshav
PHOTO • Puja Awasthi

கமலாவின் இளைய மகன் கேசவ் குடும்பத்தின் நிலப் பதிவேடுகளை கண்டறிவதற்காக கல்லூரிப் படிப்பை இடைநிறுத்திவிட்டார்

காதிமா நகரத்தை சேர்ந்த 41 வயதாகும் வழக்கறிஞர் அனில் சிங் ராணா, தாரு சமூகத்தை சேர்ந்தவர், நில உரிமைகளை தீர்மானிப்பதற்கான சட்ட செயல்பாட்டில் சிறிதளவும் நம்பிக்கை இல்லை. "இதுபோன்ற வழக்குகள் நீடித்துக் கொண்டே போகும். வழக்கமாக எங்கள் சமூகத்தில் பதிவுகள் மற்றும் ஆவணங்களை வைத்திருப்பதில் மோசமாக இருக்கின்றனர் மக்கள். நிலத்தை இழப்பது என்பது எளிதான காரியமல்ல. இது பல அடுக்குகளில் செயல்படுகிறது", என்கிறார்.

உத்தரகாண்டில் உள்ள சுமார் 40 கிராமங்களில் பழங்குடியினரின் உரிமைகளுக்காக பணிபுரியும் கிராம அளவிலான அமைப்புகளின் கூட்டமைப்பான பூமி அதிகார் மஞ்ச் (BAM) உடன் ராணா, கடந்த பத்தாண்டுகளில் பெரும்பகுதியை செலவழித்திருக்கிறார். 2009ஆம் ஆண்டில் BAM தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வனவாசிகளின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கும், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம் 2006ஐ செயல்படுத்த வேண்டி மாநில அரசை வலியுறுத்தியது. மஞ்சின் முறைகளான - விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் பரப்புரை - பழங்குடியினரின் நில உரிமைகள் போராட்டத்தில் சில வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளது.

2012 இல் கமலா இந்த மன்றத்திற்கு தான் சென்றார்.

"நாங்கள் எளிய மனிதர்கள். நீதிமன்றத்தை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. சமூக அழுத்தம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்", என்று அவர் கூறுகிறார். BAM களப்பணியாளர்களில் ஒருவரான அவரது மைத்துனி மினா தேவியுடன், கமலா தனது நிலத்தை திரும்பக் கேட்கத் தொடங்கினார். "நாங்கள் அவர்களுடைய (கடன் கொடுப்பவர்கள்) கடைகளுக்குச் சென்று நின்றோம். என்னிடம் பேசுங்கள், ஆவணங்களை காட்டுங்கள் என்று நான் கேட்டேன். எங்களுடன் நாங்கள் கிராமத்தில் இருந்து வேறு சில பெண்களையும் அழைத்துச் சென்றோம்", என்றார்.

கடந்த ஆண்டு அவரது விடாமுயற்சியின் விளைவாக ஒரு கந்துவட்டிக்காரர் 3.5 ஏக்கர் நிலத்தை திரும்பக் கொடுத்தார். தனது பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் கூறும் போது, நாங்கள் அனைவரும் (கடன் கொடுப்பவர்கள்) இந்த யுத்தியை பயன்படுத்தினால் எங்களது வேலை முடிவடைந்துவிடும். எங்கள் வசம் உள்ள நிலம் அனைத்தையும் இழக்க நேரிடும்", என்று கூறினார்.

கமலாவின் இளைய மகன், 20 வயதாகும் கேசவ், குடும்பத்தின் நிலப் பதிவேடுகளை கண்டுபிடிப்பதில் முழு நேரத்தையும் அற்பணிப்பதற்காக இப்போது கல்லூரியை விட்டு வெளியேறிவிட்டார், இதன் மூலம் தேவையான அழுத்தத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறார். அவரது தந்தையின் கையொப்பமிட்ட வெற்று முத்திரைத்தாளை ஒரு கந்துவட்டிக்காரரிடம் இருந்து மீட்டெடுத்ததே இதுவரை அவர் சாதித்திருக்கும் மிகப்பெரிய சாதனையாகும்.

மங்கோலாவின் போராட்டம் அவர் தனது சொந்த சகோதரருக்கு எதிராகவே போட்டியிடவே வேண்டியிருப்பதால் மிகவும் கடினமாக இருக்கிறது. பிரிந்து சென்ற பூல், "இப்போது அவர் குடும்ப விஷயத்தை வெளியாட்களிடம் எடுத்துச் சென்று விட்டதால், நான் ஏன் அவருடன் தீர்வுகாண வேண்டும்?", என்று கேட்கிறார்.

மேலும் பல பெண்களைப் போலவே மங்கோலாவும் நிலத்தின் மீதான தனது உரிமையை முழுமையாக பார்க்க முடியாது. அந்த எண்ணத்தை விளக்க அவர் போராடுகிறார்: “அனைவரும் மகள்களுக்கு நிலம் கொடுப்பதில்லை. அவர்களுடைய மனோபாவம் எப்படி இருக்கிறது என்றால் அவளுக்கும் கொஞ்சம் கொடுப்போம் ஆனால் குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களின் சம்மதத்துடன். இது சரியா என்று எனக்கு தெரியவில்லை”. ஆனால் “நிலம் எங்களது கலாச்சாரம், எங்கள் மரபு. நாங்கள் அதை வணங்குகிறோம் அதன் மூலமே வளர்கிறோம். மேலும் என்னை போன்ற பெண்களுக்கு இது ஒரு உத்தரவாதமும் கூட”, என்று அவர் மேலும் கூறினார்.

கமலாவின் மனதில் அப்படி ஒரு சந்தேகமே இல்லை. மீட்ட விளைநிலத்தில் நின்று பல வருடங்கள் கழித்து அந்த நிலம் பிறருக்கு செல்வதை மௌனமாக பார்த்ததன் திடத்துடன் பேசுகிறார்.

"இந்த நிலம் என்னுடையது. நான் அதை திரும்பப் பெறுவேன். எனக்கு நானே கடன்பட்டிருக்கிறேன். இதற்காக நான் எவ்வளவு போராடினாலும் பரவாயில்லை", என்கிறார்.

இந்தியாவில் ஏழைகளுக்கு நிலத்தை மீட்டெடுத்தல் மற்றும் சொத்துரிமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செயல்படும் N/Core அறக்கட்டளை வழங்கிய தாக்கம் ஏற்படுதியதற்கான விருதை இந்த எழுத்தாளர் பெற்றிருக்கிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Puja Awasthi

लखनऊ की रहने वाली पूजा अवस्थी, प्रिंट और ऑनलाइन मीडिया की दुनिया की एक स्वतंत्र पत्रकार हैं, और फ़ोटोग्राफ़र हैं. उन्हें योग करना, ट्रैवेल करना, और हाथ से बनी चीज़ें काफ़ी पसंद हैं.

की अन्य स्टोरी Puja Awasthi
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

की अन्य स्टोरी Soniya Bose