சம்ராவ் மற்றும் அஞ்சம்மா கட்டாலே ஆகிய இருவருக்கும் உடல்நிலை சரியில்லை. ஆனால் அவர்கள் இருவரும் அதைப் பற்றி எதுவும் செய்ய முயற்சிப்பதை நிறுத்தி விட்டனர். "மருத்துவர்கள்? சிகிச்சை? இவையெல்லாம் மிகவும் விலை அதிகம்", என்கிறார் சம்ராவ். வார்தாவின் அஸ்தி கிராமத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினர் பல லட்சக்கணக்கான மக்களைப் போலவே இத்தகைய முடிவை எடுத்திருக்கின்றனர். இருபத்தியோரு சதவீத இந்தியர்கள் தங்களுக்கு வரும் எத்தகைய நோய்களுக்கும் எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் பெறாமல் இருக்கின்றனர். (இது கடந்த தசாப்தத்தில் 11 சதவீதமாக இருந்து உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது) அவர்களால் அதற்கு செலவு செய்ய முடியவில்லை. "மேலும் நாங்கள் மருத்துவர்களிடம் சென்றால், மருந்துகள் எப்படி வாங்குவது?" என்று கேட்கிறார் சம்ராவ்.
இவர்களது மகன் பிரபாகர் கட்டாலே கடந்த ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டார். விவசாயத் துறையில் உள்ள பலரைப் போலவே அவரும் அந்தத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். "அவர் கடன் நெருக்கடியால் தனது வாழ்வை முடித்துக் கொண்டார்", என்று சம்ராவ் கூறுகிறார். அவர்களது இரண்டாவது மகனும் இந்த சோகத்தை தொடர்ந்து மன அழுத்தத்தில் உள்ளார் அதனால் அவரும் தனது வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. அவரும் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.
இன்று வளர்ந்துவரும் மற்றும் ஒழுங்கு படுத்தப்படாத தனியார் மருத்துவத்துறை 'ஆரோக்கியமே செல்வம்' என்ற பழமொழிக்கு ஒரு புதிய அர்த்தத்தை அளிக்கிறது. எந்த ஒரு பொது சுகாதார சேவைகளின் வீழ்ச்சியும் ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பயிற்சியாளர்களின் லாபத்தை அதிகரிக்கின்றனர் என்பதையே குறிக்கிறது. நாடு முழுவதும் கிராமப்புற குடும்பங்களை கடனில் ஆழ்த்துவதில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது முக்கிய அங்கமாக ஆரோக்கியம் இருந்து வருகிறது. (இந்தியாவின் தனிநபர் சுகாதார செலவீனம் உலகளவில் மிக குறைவான ஒன்றாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே சுகாதாரத்திற்காக அரசு செலவிடுகிறது.)
அதே மாவட்டத்தின் வைஃபாத் கிராமத்தில் உள்ள விவசாயி கோபால் வித்தோபா யாதவ் தனது நிலத்தை அடமானம் வைத்து மருத்துவச் செலவு செய்தார். "மருத்துவமனையில் வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே இருந்தேன் அதற்கு எனக்கு பத்தாயிரம் ரூபாய் செலவானது", என்று அவர் புகார் தெரிவிக்கிறார். இன்னும் பலர் இதை விட அதிகமாக செலவு செய்து இருக்கின்றனர். ஆனால் யாதவ் தனக்கு பணம் தேவைப்பட்டதால் தனது ஒன்பது ஏக்கர் நிலத்திற்கான தலைப்பு பத்திரத்தை பிரித்தார். அடுத்தடுத்து வந்த மோசமான ஆண்டுகள் அதை உறுதி செய்தன. "நான் தான் நிலத்தை வைத்திருக்கிறேன், ஆனால் தலைப்பு பத்திரம் கடன் கொடுப்பவரிடம் இருக்கிறது", என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.
அவரது அண்டை வீட்டுக்காரரான விஸ்வநாத் ஜாடே 8 உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தை 4 ஏக்கர் நிலத்தை வைத்து நடத்திவருகிறார். தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய அவருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவானது மேலும் எம்ஆர்ஐ ஸ்கேனிற்கு 5 ஆயிரம் ரூபாய் ஆனது, மருத்துவமனையில் அறையில் தங்குவதற்கு 7,500 ரூபாய் ஆனது இதுபோக மருந்துகளுக்கு மட்டும் 20,000 ரூபாய் செலவானது. இதற்கு மேலும் தனியாக பயணச் செலவும் இருந்தது. இந்த ஒரு வருடத்தில் மட்டும் ஜாடேவுக்கான மருத்துவச் செலவு 65 ஆயிரம் ரூபாய்.
துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் இதுபோன்ற பல குடும்பங்கள் இப்படித்தான் ஆரோக்கியத்திற்கும் சேர்த்து செலவு செய்து வருகின்றனர். விவசாய நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நம்தியோ பாண்டே கடந்த வருடம் நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கும் அதிகமான மருத்துவச் செலவுகள் இருந்தது. "அவர் சந்திரபூர், யாவத்மால் மற்றும் வாணி ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார்", என்று யாவத்மாலை சேர்ந்த கொத்துடா கிராமத்திலிருக்கும் அவரது தம்பி பாண்டுரங் தெரிவித்தார். "மொத்தத்தில் அவரது உடல்நல பிரச்சினைகளுக்காக அவர் 40 ஆயிரம் ரூபாய் செலவழித்து உள்ளார்".
நாங்கள் கணக்கெடுத்த மற்ற தற்கொலை நடந்த வீடுகளிலும் மருத்துவச் செலவுகள் பெரும் சுமையாக இருந்திருக்கின்றன. 25 ஆயிரம் ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரையிலான தொகை பொதுவாக மருத்துவ செலவாகியிருக்கிறது. அதுவும் இரண்டு முதல் நான்கு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களில். பெரும்பாலும் பருவத்திற்கு பருவம் பொய்த்துப் போகும் விவசாயத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கும் குடும்பங்களில். அதனால் தான் சம்ராவ் மற்றும் அஞ்சம்மா ஆகியோர் மருந்துகள் வாங்குவதை நிறுத்திவிட்டனர். "அரசு மருத்துவமனையில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது", என்று வைஃபாதிலுள்ள விவசாயிகள் கூறுகின்றனர்.
மறுபுறம், "நாங்கள் நாக்பூருக்கு சென்றால் நாங்கள் பெருந்தொகை செலுத்த வேண்டியிருக்கிறது" என்று மனோஜ் சந்துர்வர்க்கர் தெரிவிக்கிறார். மக்கள் மருத்துவமனைகளை கண்டு அஞ்சுகின்றனர். நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைகள் பெரும்பாலும் வார்தாவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் ரத்தப் பரிசோதனை அறிக்கைகள் அல்லது எக்ஸ்ரேகளை நிராகரிக்கின்றன. அந்த அறிக்கைகள் நன்றாக இருந்தாலும் கூட. பரிந்துரை செய்யப்படுவதற்கான பங்கும் சென்று கொண்டுதான் இருக்கிறது. "எனவே, நாங்கள் மீண்டும் பரிசோதனைகளை செய்ய வேண்டியிருக்கிறது. அனைவருக்கும் அவர்களது பங்கு கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்".
"இந்த சிடி ஸ்கேன் மற்றும் மருந்துகள் வளமான மக்களுக்கானவை", என்று விவசாயியான ராமேஸ்வர் சார்தி கூறுகிறார். கட்டுப்பாடற்ற தனியார்துறை அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு எந்த கட்டணத்தையும் நிர்ணயிக்க முடியும். நிதியுதவி இல்லாத உபகரணங்கள் இல்லாத பாழடைந்து கிடக்கும் அரசு மருத்துவமனைகளை பெரும்பாலான மக்கள் தேர்வு செய்வதில்லை. "சிகிச்சை இலவசம்" என்று மால்வாகாட்டைச் சேர்ந்த சந்தோஷ் இசை சிரிக்கிறார். 'ஆனால் அது சிறிதளவுதான்'. அவர் 35 ஆயிரம் ரூபாய் மருத்துவம் மற்றும் கவனிப்பிற்கு புற்றுநோய் நோயாளியான தனது சகோதரர் அசோக்கிற்கு செலவு செய்துள்ளார். அந்தத் தொகையை ஏற்பாடு செய்வதற்காக இசை யாவத்மால் கிராமத்தில் உள்ள தனது மூன்று ஏக்கர் நிலத்தை விற்றுள்ளார். அதன் பிறகும் அவர்களுக்கு பணம் இல்லாமல் இருந்திருக்கிறது.
அவரது நண்பர் சந்தீப் கடம் நேரடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவர் காசநோயால் இறந்த அவரது தந்தைக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். "அதற்காக அவர் மூன்று ஏக்கர் நிலத்தை விற்றுள்ளார்", என்று அவர் கூறினார். அதாவது அவரது பெரிய குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை விற்றிருக்கின்றனர்.
அண்டை மாநிலமான ஆந்திராவைப் போலவே விவசாய சமூகத்தை முடக்கிவரும் விவசாய நெருக்கடிக்கு மத்தியில் இதுவும் கூடுதலாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெகுசிலராலே பெரிய நோய்களுக்கு கடன் வாங்காமல் தங்களை கவனித்துக் கொள்ள முடிகிறது.
அஞ்சம்மா உடல்நிலை சரியில்லாமல் தரையில் படுத்து இருக்கிறார் மேலும் உட்காருவதற்கு கூட அவருக்கு தெம்பில்லை. சம்ராவ் படுக்கையில் உட்கார்ந்து இருக்கிறார் அவரும் பலவீனமாகவே இருக்கிறார். இறந்துபோன தனது மகனின் கடன் தொகையை முடித்துவிட்டதால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். "நாங்கள் ஒரு வழியாக அந்தக் கடனை அடைத்து விட்டோம் இனியாவது அவரது ஆன்மா அமைதி கொள்ளட்டும்". ஆனால் அவர்களுடைய உடல்நலை சரியில்லை. நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மேலும் முதிர்ந்த வயதில் அவர்களால் வேலை செய்து சம்பாதிக்க முடியவில்லை. ஆனால் ஆரோக்கியம் ஒரு விலையோடு தான் வருகிறது. அந்தத் தொகை இவர்களைப் போன்ற லட்சோபலட்சம் மக்களால் செலுத்த முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
வைஃபாதில், அவர்கள் எங்களை மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தனர். "நீங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால், எங்களது விவசாயத்தைப் பாருங்கள். பிறகு உங்களுக்கு புரியும்", என்று ஒருவர் கூறினார். "விவசாயிகளாகிய நாங்கள் குளுக்கோஸ் போட்டுக்கொள்ளும் நிலையில் இருக்கிறோம். இப்போதிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் ஆக்சிஜன் வைத்துக்கொள்ளும் நிலையில் இருப்போம்", என்று கூறினார்.
பின்குறிப்பு
அக்டோபர் 31, 2005: தேசிய விவசாயிகள் ஆணையத்தின் குழு அஸ்தியில் உள்ள அவரது வீட்டிற்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு சம்ராவ் கட்டாலே இறந்தார். அவரது மனைவியை சந்திக்க இந்த வார்தா கிராமத்திற்குள் கார்கள் அணிவகுப்பு நடத்தின, ஆனால் அவை எதையும் கிரகித்துக் கொள்ளும் நிலையில் அவர் இல்லை. கடந்த ஆண்டு அவர்களது மகன்களில் ஒருவர் செய்ததைப் போலவே அவர்களது மற்றொரு மகனான பிரபாகர் 2004 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். சம்ராவின் மனைவி இன்னும் அவரது கணவர் இறந்துவிட்டார் என்பதையே கிரகித்துக் கொள்ளவில்லை. இவை எதுவுமே நடக்காத ஒரு தனி உலகத்தில் அவர் வாழ்ந்து வருகிறார். விவசாய நெருக்கடியின் போது குடும்பத்தின் கடன் சுமை காரணமாக 31 வயதிலும் திருமணம் ஆகாமல் இருக்கும் அவரது மகள் கங்கா மட்டுமே பேசக் கூடிய நிலையில் இருக்கிறார். மேலும் அமராவதியில் இருந்து வேலை இல்லாமல் திரும்பிய மற்றொரு மகனும் இருக்கிறார். சம்ராவ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் உடல்நலை சரியில்லாமல் இருந்தனர், கடந்த ஒரு வருடமாக அவர்கள் மருந்துகள் உட்கொள்வதையும் நிறுத்திவிட்டனர். "யாருக்கு மருத்துவர்களுக்கு செலவு செய்ய முடிகிறது?", என்று என்னிடம் ஜூன் மாதம் சம்ராவ் கேட்டார். "எங்களால் முடியாது. அதற்கெல்லாம் பெரும் செலவு ஆகும். மேலும் நாங்கள் எப்படி மருந்துகள் வாங்குவது?", என்று கேட்டார்.
இந்தக் கட்டுரையின் சற்று மாறுபட்ட பாதிப்பு முதலில் தி இந்துவில் வெளியிடப்பட்டது.
தமிழில்: சோனியா போஸ்