"நாங்கள் எங்கு சென்றாலும், ஒன்றாகவே செல்வோம்", என்று கீதா தேவி அருகில் நிற்கும் தனது தோழி சகுனியை பாசத்துடன் பார்க்கிறார்.
இருவரும் அருகிலுள்ள காட்டில் குங்கிலிய(ஷோரியா ரோபஸ்டா) இலைகளை சேகரித்து அதன் மூலம் தொன்னைகள் (கிண்ணங்கள்) மற்றும் பட்டல்களை (தட்டுகள்) தயாரித்து பலாமு மாவட்ட தலைமையகமான டால்டன்கஞ்ச் நகரில் விற்கின்றனர்.
கீதாவும், சகுனி தேவியும் கோபி கிராமத்தில் உள்ள நதிதோலா என்ற சிறிய குக்கிராமத்தில் 30 ஆண்டுகளாக அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் உள்ள பல கிராமவாசிகளைப் போலவே, கீதாவும், சகுனியும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு காட்டை நம்பியுள்ளனர்.
ஏழு முதல் எட்டு மணி நேரம் காட்டில் செலவழிக்கும் அவர்கள், கால்நடைகள் மேய்ச்சல் முடிந்து திரும்புவதை பார்த்தவுடன் வீட்டிற்குச் செல்கின்றனர். போதுமான இலைகளை சேகரிக்க அவர்களுக்கு இரண்டு நாட்கள் வரை ஆகும். பல மணிநேரங்கள் வேகமாக கடக்கின்றன, அவ்வப்போது சிறு இடைவேளைகளையும் அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தங்கள் குடும்பத்தைப் பற்றி அரட்டை அடித்தபடியும், உள்ளூர் செய்திகளைப் பேசியபடியும் வேலை செய்கின்றனர்.
தினமும் காலையில், பக்கத்து வீட்டிலிருந்து வரும் அழைப்பிற்காக கீதா காத்திருக்கிறார், "நிகாலே..." சிறிது நேரத்தில், அவர்கள் இருவரும் புறப்படுகின்றனர். ஆளுக்கொரு பழைய சிமெண்ட் சாக்குகளால் செய்யப்பட்ட பை, ஒரு நெகிழி தண்ணீர் பாட்டில், ஒரு சிறிய கோடரி, ஒரு பழைய துண்டு எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்கள். அவர்கள் ஜார்க்கண்டின், பலாமு புலிகள் காப்பகத்தின் இடைப்பட்ட மண்டலத்தில் ஹிஹிகரா என்ற காட்டை நோக்கிச் செல்கின்றனர்.
தோழிகள் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் - கீதா, புய்யா தலித், சகுனி, ஓரான் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். நாங்கள் நடந்து செல்லும்போது, கீதா எச்சரிக்கிறார்: "இங்கே தனியாக வர வேண்டாம்," என்று. "சில நேரங்களில் காட்டு விலங்குகள் குறுக்கிடும். நாங்கள் டெண்டுவாக்களைப் [சிறுத்தைகளை] பார்த்திருக்கிறோம்!" பாம்புகள் மற்றும் தேள்களின் அச்சுறுத்தலும் பெரிதாக உள்ளது, "நாங்கள் பல முறை யானைகளை எதிர்கொண்டுள்ளோம்," என்று சகுனி மேலும் கூறுகிறார். பலாமு புலிகள் காப்பகத்தில் 73 சிறுத்தைகளும், சுமார் 267 யானைகளும் உள்ளன (2021 வனவிலங்கு கணக்கெடுப்பு).






















