ஒரு சிறுமியாக கெகுவே, தாயும் பாட்டியும் சுனைக்காஞ்சொறி தண்டு அல்லது தெவோவுடன் நெய்வதை பார்த்திருக்கிறார். அவரது தாய் பாதி செய்து முடித்த துணியை எடுத்து, அவர் செய்து பார்ப்பார். ஆனால் அதையும் ரகசியமாகதான் செய்தார். ஏனெனில், துணியைத் தொடக் கூடாது என அவரது தாய் எச்சரித்திருந்தார். இப்படித்தான் கெகுவே மெதுவாகவும் ரகசியமாகவும் நாகா சால்வைகளை நெசவு செய்யும் திறனை, யாரும் போதிக்காமல் கற்றுக் கொண்டதாக சொல்கிறார் அவர்.
இன்று அவர் திறன் படைத்த கைவினைக் கலைஞராக திகழ்கிறார். விவசாயம் மற்றும் வீட்டு வேலைக்கு இடையே இந்த வேலையை செய்கிறார். “சாதம் சமைப்பதற்கான நீர் சூடாக காத்திருக்கும் நேரத்திலோ குழந்தைகளை யாரேனும் வெளியே அழைத்து சென்றிருந்தாலோ இந்த அளவுக்கு நாங்கள் நெய்ய முயற்சி செய்வோம்,” என்கிறார் அவர் ஆட்காட்டி விரல் நீளத்தைக் காட்டி.
கெகுவே இரு பக்கத்து வீட்டுக்காரர்களான வெகுசுலு மற்றும் ஈசோட்சோ ஆகியோருடன் ருக்கிசோ காலனியிலுள்ள தன் தகரக் கூரை வீட்டுக்குள் அமர்ந்திருக்கிறார். கெகுவேவின் கணக்குப்படி, நாகாலாந்தின் ஃபெக் மாவட்டத்திலுள்ள ஃபுசேரா கிராமத்தின் 266 குடும்பங்களில் 11 சதவிகிதம் நெசவுப் பணி செய்கிறது. பெரும்பாலும் இதில் சகேசாங் (பட்டியல் பழங்குடி) சமூகத்தின் உட்பிரிவான குசாமி பெண்கள்தான் வேலை செய்கின்றனர். “எங்களின் கணவர்கள் உதவுவார்கள்,” என்னும் கெக்குவே, “சமைக்கவும் செய்வார்கள். ஆனால் பெண்கள் அளவுக்கு சமைக்க மாட்டார்கள். எனவே நாங்கள் சமைத்து, விவசாயம் செய்து, நெசவு பார்த்து, வீட்டு வேலையும் செய்ய வேண்டும்,” என்கிறார்.




















