என்னுடைய வார்த்தைகள்
என் துன்பங்கள்
அவற்றின் மொத்தம் உருவாக்கும் என் கவிதைதான்
எனக்கான அறிமுகம்’

தான் எழுதிய கவிதைகளின் தொகுப்பில் சுயாஷ் காம்ப்ளே தன்னைப் பற்றி இப்படிதான் அறிமுகம் கொடுத்திருக்கிறார். 20 வயதில் 400 கவிதைகள் எழுதிவிட்டார். அவற்றின் சக்தி வாய்ந்த வார்த்தைகள் அவரின் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கின்றன.

சுயாஷ் அவரின் கவிதைகளை ‘புரட்சிகரமானவை’ எனக் குறிப்பிடுகிறார். சாதிய பேதமும் வன்முறையும் அவரது எழுத்தின் மையப்பொருளாக இருக்கின்றன. “தலித் (மகர்) குடும்பத்தில் பிறந்ததால் சாதிய சமூகத்தின் வேர்களை என்னால் பார்க்க முடிந்தது. விடுதலைக்கு பிறகு 71 வருடங்களான பின்னும் அவை அப்படியேதான் இருக்கின்றன,” என்கிறார் அவர். “சமூகத்தில் ஒரு நபரின் அந்தஸ்தை அவரது சாதியே தீர்மானிக்கிறது.”

அவரது பல கவிதைகள், தனிமனித விடுதலை மற்றும் கருத்துரிமை மீது அதிகரிக்கும் தாக்குதல்கள். தலித் சிந்தனைக்கான எதிர்ப்பு முதலியவற்றின் மீதான எதிர்வினைகளாக இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகள், எல்ஃபின்ஸ்டோன் நிலையத்தில் செப்டம்பர் 2017ல் ஏற்பட்ட பதற்றம், நரேந்திரா தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோரின் படுகொலைகள் முதலியவற்றையும் அவரின் கவிதைகள் பேசுபொருளாக கொண்டிருக்கின்றன.

அவருடைய தந்தையான 57 வயது ஷம்ராவ் காம்ப்ளே ஒரு விவசாயி. மகாராஷ்டிராவின் ஷிரத்வாத் கிராமத்தில் குடும்பம் வசிக்கிறது. அவர்களுக்கு இருக்கும் 1.75 ஏக்கர் நிலத்தில் 55-60 டன் கரும்புகளை 15 மாத சுழற்சியில் விளைவிக்கிறார்கள். கடன்களை வாங்கி செலவுகளை சமாளிக்கும் சூழலில், ஓரளவுக்கு லாபத்தை விளைச்சலில் பெறுகிறார்கள். ஊரை சுற்றியிருக்கும் மின்சார நெசவாலைகளில் வேலை பார்த்து எட்டுமணி நேர வேலைக்கு 250 ரூபாய் சம்பாதிக்கிறார் ஷம்ராவ்

Portrait of a man standing in front of a wall
PHOTO • Sanket Jain

சுயாஷ்ஷின் தந்தை ஷம்ராவ் காம்ப்ளே அவரின் மகனை தலித் எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கும் தலித் இயக்கங்களுக்கும் அறிமுகப்படுத்தினார்

சுயாஷ்ஷின் தாயான 55 வயது ஷகுந்தலா வேலைக்கு செல்லவில்லை. 24 வயது சகோதரர் புத்புஷன் மும்பை கல்லூரியில் சட்டம் படிக்கிறார். இன்னொரு சகோதரரான 22 வயது ஷுபம் இச்சல்கரஞ்சி டவுனில் கட்டுமான தொழிலாளராக பணிபுரிகிறார்.

12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இச்சால்கரஞ்சியிலுள்ள இரவு நேரக் கல்லூரியில் 12ம் வகுப்பு படிக்கிறார் சுயாஷ். குடும்ப வருமானத்துக்காக பகல் நேரத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிகிறார். மாத வருமானமாக 2500 ரூபாய் கிடைக்கிறது. “எலக்ட்ரீசியன் வேலைக்காக பல வீடுகளுக்கு செல்ல வேண்டியதிருக்கும்,” என்கிறார் அவர். “முதல் கேள்வியே என் பெயர் என்ன என்றுதான் கேட்கிறார்கள். அடுத்ததாக உன் குடும்பப் பெயர் என்னவென கேட்கிறார்கள். பல நேரங்களில் நான் தலித்தா என்றும் கேட்கின்றனர்.”

ஷிரத்வாத்தில் வசிக்கும் ஓர் உயர்சாதி வீட்டிலுள்ள கோவிலில் இருந்த கோளாறுகளை சரிசெய்ய ஒருமுறை சுயாஷ் சென்றிருக்கிறார். “என்னுடைய சாதியை பற்றி தெரிந்து கொண்டதும் அவசர அவசரமாக கடவுளர் சிலைகளை துணியால் மூடினார்கள்,” என்கிறார் அவர். இன்னொரு இடத்தில், “மொட்டை மாடியில் வேலை பார்த்தபோதும் என்னுடைய ரப்பர் செருப்பை (மின்சாரம் பாய்ந்தால் தடுப்பதற்காக அவற்றை போட்டிருந்தார்) கழற்றச் சொன்னார்கள். நான் மறுத்ததும் அங்கிருந்த பெண், ‘உன் வீட்டில் எதையும் சொல்லிக் கொடுக்கவில்லையா? உங்களை போன்ற தலித்கள் எப்போதும் இப்படிதான் இருந்திருக்கிறார்கள்,’ என்றார்.”

மேலும் அவர், “பிற உயர்சாதி ஊழியர்களுக்கு பாத்திரங்களில் உணவும் நீரும் கொடுக்கப்படுகையில் எனக்கு மட்டும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் தட்டுகளிலும் குவளைகளிலும் வழங்கப்படும். இவையெல்லாம் தினசரி நான் பார்க்கும் சிறு சிறு விஷயங்கள். இத்தகைய பல சாதிய வேறுபாடுகளை நாங்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கும். இவை எல்லாம் பழகிவிட்டது.”

1972ம் ஆண்டு தலித் சிறுத்தைகள் அமைப்பை ஊருவாக்கிய புரட்சிகர கவிஞரான நம்தியோ தாசலின் எழுத்துகளுக்கு முதன்முறையாக ஷம்ராவை அவரின் தந்தை அறிமுகப்படுத்தினார். கொஞ்ச காலத்திலேயே மிக அதிகமாக வாசிக்கத் தொடங்கி தயா பவார், ஷரண் குமார் லிம்பாலே, நாராயண் சுர்வே, லஷ்மண் மனே, ஏக்நாத் அவாத் மற்றும் அஷோக் பவார் முதலிய பல கவிஞர்களின் எழுத்துகளில் ஈர்ப்பு கொண்டிருந்தார் அவர். நாடு முழுவதும் இருந்த தலித் தலைவர்களின் இயக்கங்களை பற்றிய கதைகளை அவரின் தந்தை விவரித்திருக்கிறார். சுயாஷ்ஷும் டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கரின் எழுத்துகளை வாசிக்கத் தொடங்கினார். இளம்கவிஞர் ஐந்து நூலகங்களில் உறுப்பினராக இருக்கின்றனர். இரண்டு அவரின் கிராமத்திலேயே இருக்கின்றன. ஒன்று ஷிவனக்வாடி கிராமத்திலும் இரண்டு இச்சலகரஞ்சியிலும் இருக்கின்றன.

16 வயதில் சுயாஷ் கவிதைகள் எழுதத் தொடங்கினார். மராத்தி மொழியில் கையால் எழுதுகிறார். 180 பக்கம் கொண்ட ஆறு டைரிகள் எழுதி முடித்திருக்கிறார். “பாதிப்பு ஏற்படுத்தும் விஷயம் நடக்கும்போதெல்லாம் நான் கவிதை எழுதுகிறேன். கவிதையின் வழியாக என்னை எளிதாக வெளிப்படுத்த முடிகிறது. நான் காணும் சமூக யதார்த்தங்களை என் கவிதைகள் பேசுகின்றன. ஒடுக்கப்பட்ட சாதிகள் எப்படி வறுமையில் உழலுகின்றன என்பதை எழுதுகிறேன். இப்பிரச்சினைகளை சார்ந்து என் கருத்துகளை கவிதைகளில் வெளிப்படுத்தாமல் என்னால் அமைதியாக இருக்க முடிவதில்லை.”

A man sitting on the floor and writing in a book. A copy of the book 'Baluta' is lying next to him
PHOTO • Sanket Jain
Books on Dalit literature lined up against a wall
PHOTO • Sanket Jain

சாதி மற்றும் சாதிய பிரச்சினைகளை பேசும் பல கவிதைகளை கொண்டு பல டைரிகளை சுயாஷ் நிரப்பியிருக்கிறார். ஐந்து நூலகங்களில் உறுப்பினராக இருக்கிறார். பரந்த அளவிலான தலித் இலக்கியத்தை கொண்டிருக்கிறார்

சுயாஷ்ஷின் ஆரம்பகால கவிதைகள் புரட்சிகரமானவை அல்ல என சொல்லும் அவர், ‘பாபாசாகெப்பின் ‘சாதி ஒழிக்கும் வழி’யை படித்த பிறகு என்னுடைய பாணி மாறியது,” என்கிறார். அம்பேத்கரின் ‘இந்துமதம் கொண்டிருக்கும் புதிர்கள்’ இன்னும் சுயாஷ்ஷை ஈர்த்தது. “இப்போது என் கவிதைகள் தலித்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளை பற்றி இருக்கின்றன. இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவதை பற்றி பேசுகிறார்கள். சாதியை முடிவுக்கு கொண்டு வருவதை பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்?” எனக் கேட்கிறார். “இன்றைய இந்தியாவில் தீண்டாமை இல்லை என யார் சொன்னது? அன்றாடம் நாங்கள் அனுபவிக்கிறோம். தினசரி சாதியத்தை பார்க்கும்போது நான் அமைதியிழந்து விடுகிறேன். இந்த அமைதியின்மை அதிகரிக்கும்போது நான் கவிதை எழுதுகிறேன்.”

ஜனவரி 1 2018 அன்று 290 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பிமா கோரேகோனில் சுயாஷ் இருந்தார். பெஷ்வாக்கள் தலைமை தாங்கிய மராத்தி ராணுவத்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த மகர் சிப்பாய்கள் வீழ்த்திய வரலாறை ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் பல தலித் குழுக்கள் ஒன்றுகூடி நினைவு கூறுவர். “நானும் ஒரு தலித் இயக்கத்தில் இருந்தேன். எங்களின் சமூகத்துக்கு நல்ல விஷயங்களை செய்வதற்கான உத்வேகம் அளிப்பது பிமா கோரகோனில் வருடந்தோறும் நடக்கும் நினைவேந்தல்தான்,” என்கிறார் அவர்.

இந்த வருடம் அரசியல் எதிர்க்குழு பிமா கோரெகோன் செல்லும் தலித்களை தடுத்து நிறுத்தினர். மோதல் வெடித்தது. சுயாஷ் அவரின் கோபத்தை சக்தி வாய்ந்த ஒரு கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறார். கவிதையின் தலைப்பு ‘ஏ கற்களின் நாடே’. (கீழே மராத்தி கவிதையும் அதன் தமிழாக்கமும் இணைக்கப்பட்டுள்ளது.)

எழுதிய எல்லா கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுப்பை பதிப்பிப்பதும் பத்திரிகையாளராவதும் சுயாஷ்ஷின் நோக்கமாக இருக்கிறது. “எங்கள் சமூகத்தை பற்றி எழுத தலித் செய்தியாளர்கள் தேவை. இந்த கொடுமைகளை ஒரு தலித்தால் மட்டுமே சரியாக புரிந்து கொள்ள முடியும். சரியாக எழுத முடியும்,” என்கிறார் அவர். ‘ஜனநாயகத்தின் நான்காவது தூனை அரசாங்கம் கைப்பற்றிவிட்டது. அரசியல்வாதிகள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக ஊடகம் மாறிவிட்டது. ஆனால் ஒரு நல்ல பத்திரிகையாளர் எப்போதும் அமைதியாக இருக்க மாட்டார்.”


ஏ கற்களின் நாடே..

ஏ கற்களின் நாடே.. எப்போதும் போல் நேற்றும் நாங்கள் கற்களையே உண்டோம்!

தலையில் கற்களை கொண்டவர்கள்
ஏதுமறியா எங்களை தாக்கினார்கள்...
சாதி என்னும் விஷக்கொடி
எங்கே நடப்பட்டிருக்கிறது என நான் கேட்கிறேன்...
இந்த முட்களை உள்ளகத்தே கொண்டிருக்கும்
இப்பூமி எப்படி ஆசிர்வதிக்கப்பட்டதாய் இருக்க முடியும்!
கூட்டம் தன் கண்களில்
உண்மையை மட்டுமே கொண்டு
முன் நகர்ந்தபோது திடீரென கலைக்கப்படுகிறது
எதிரியின் சகிப்புதன்மை பஞ்சத்தில் அடிபட்டு பகுத்தறிவை இழக்கிறது
தேசியவாதம் பற்றிய சந்தேகம் ஒவ்வொரு அப்பாவி மீதும்
அதற்குப் பிறகு எழுப்பப்படுகிறது
காரணமின்றி பிறகு நான் கூட பேசத் தொடங்குகிறேன்
இருளை போக்கும் வெளிச்சத்தை
தீமைகளுக்கான எதிர்வினையாக்க பேசுகிறேன்!
பிறகு அச்சூழல் மோதலிலிருந்து
இந்த மக்கள் பெயர் சூட்டியிருக்கும்
கலவரமாக மாறுகிறது..
அப்படித்தான் மக்கள் குறிப்பிடுகிறார்கள்
ஆனால் எங்களின் அனுபவங்கள் அதை விட அச்சமூட்டுவதாக இருந்தன!
மனிதர்களே மனிதர்களை எரிப்பதாக...
சில நேரம், அசோக சக்கரம் இருந்த வாகனங்களை அவர்கள் எரித்ததாக!
ஏ கற்களின் நாடே!
இதை நான் உங்களிடம் ஏன் சொல்கிறேன்?
இந்த கற்களின் நாட்டில் நீங்களும் கல்லாகவில்லை என எப்படி நான்  நம்புவது?
இந்த கற்களின் நாட்டில் மனித இதயங்களும் கற்களாகி விட்டன என்கிறேன் நான்
பெண்கள் மீதும் சிறுமிகள் மீதும் கற்கள் எறிகின்றன
காயங்களிலிருந்து ரத்தம் வழிவதை பார்த்தும்
மனிதமே இன்றி அவர்களை தாக்குகின்றன
கண்கள் மூடி அம்ர்ந்திருந்த பரிசுத்தமான புத்தரை தாக்க
ஆயுதத்துடன் ஓடிய அங்குலிமால்* நினைவுக்கு வருகிறான்
‘ஜெய் பீம் என நீ சொல்வாயா?’ என்கிற கேள்வியுடன்
பொச்சிராமின்** கைகளை வெட்டுகின்றன கோடரிகள்.
ரத்தத்தை உறைய வைக்கும் அச்சம்பவம்
என்னுள் இருக்கும் ‘சந்தரை’ எழுப்பிவிட்டது
நானும் ஒரு கல்லை எடுத்து பிற்போக்குத்தனத்தை நோக்கி எறிந்தேன்
மனிதத்தை மனிதர்களுக்கு நிராகரித்த சாதியத்தை நோக்கி எறிந்தேன்!
கொடுமையான பழியுணர்ச்சியை அவர்கள் கொட்டிக் கொண்டிருந்த பொதுவெளியில்
நானும் இறங்கினேன்
மநுதர்மத்தை காப்பவர்களின் பிரம்மாண்டமான சதியை தகர்க்க இறங்கினேன்!
எல்லா திசைகளிலிருந்தும் கற்கள் வந்து
என் உடலை தொட்டு பறந்து செல்கையில் கேட்டன
‘இந்தியா என் நாடு...
எல்லா இந்தியர்களும் என் சகோதர சகோதரிகள்...’
என திரும்பச் சொல்வாயா என.
... ஏ கற்களின் நாடே.. நீங்கள்தான் உங்களால் மட்டும்தான்
நான் கல்லை எடுக்கும் கட்டாயத்துக்குள்ளானேன்!
நான் கல்லை எடுக்கும் கட்டாயத்துக்குள்ளானேன்!

குறிப்பு: *தொடர் வன்முறைக்கு தவறாக ஆசிரியரால் இட்டுச் செல்லப்பட்ட அகிம்சகாவை அங்குலிமால் என்ற வார்த்தை குறிக்கிறது. 1000 பேரை அவன் கொன்றான். கொன்ற ஒவ்வொரின் விரலையும் குரு தட்சணைக்கு வெட்டிக் கொண்டான். அந்த விரல்களை கொண்டு மாலை செய்து அணிந்து கொண்டான். அந்த மாலையே, ‘அங்குலி மால்’

**அவுரங்கபாத் பல்கலைக்கழகத்தின் பெயரை பாபாசாகேப் அம்பேத்கர் பல்கலைக்கழகமாக மாற்றக் கோரிய தலித் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பொச்சிராம் காம்ப்ளேவும் அவரது மகன் சந்தராவும் இறந்தனர்.

தமிழில்: ராஜசங்கீதன்

Sanket Jain

Sanket Jain is a journalist based in Kolhapur, Maharashtra. He is a 2022 PARI Senior Fellow and a 2019 PARI Fellow.

Other stories by Sanket Jain
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan