தலித் காலனிவாசிகளுக்கு தட்டுப்பாடு என்பது புதிதல்ல. 1990-களுக்கு முன்பு வரை இப்பிராந்தியத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்து வந்தனர். அவர்களுக்கு தற்போதைய சூழல் அக்காலத்தை நினைவுப்படுத்துகின்றன. இம்முறை அவ்வளவு மோசமில்லை என்கின்றனர். “ இந்த தட்டுப்பாடு [பணமதிப்பு நீக்கத்தால்] என்பது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அனுபவித்த பஞ்சத்தைவிட குறைவுதான்,” என்கிறார் தற்போது 49 வயதாகும் நாராயணப்பா. “என் 20 வயதுகளில் தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு நாட்கள் பசியோடு இருந்திருக்கிறேன். புளி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து அதை சாப்பிடுவோம் அல்லது உயிர் பிழைக்க பனங்கிழங்கை உண்ணுவோம். நான் அப்போது 14 ஆண்டுகளுக்கு ஜீதாகாது[கொத்தடிமை தொழிலாளி] ஆக இருந்தேன்.”
முன்னாள் கொத்தடிமை தொழிலாளர்களான இவர்கள் தற்போது தங்கள் கிராமத்தில் விவசாய வேலைவாய்ப்புகள் குறைந்து போனதால் வேலை தேடி ஆண்டுதோறும் பல மாதங்கள் புலம்பெயர்கின்றனர். நாராயணப்பா குடும்பத்தில் பலரும் பெங்களூர் இடம்பெயர்ந்துள்ளனர். 3-4 மாதங்களுக்கு ஒருமுறை சில நாட்களுக்கு மட்டும் வீடு திரும்புகின்றனர். நகரின் கட்டுமானப் பணியிடங்களில் பெரும்பாலும் வேலை செய்யும் இவர்கள் வேலை நடைபெறும் கட்டடத்தின் மேல் தளத்தில் உறங்குகின்றனர் அல்லது சாலையோரம் நெரிசல் மிகுந்த அறைகளில் தங்கிக் கொள்கின்றனர். கடுமையான உழைப்பின் பயனாக முழு உணவையும் உண்கின்றனர். “வாரத்திற்கு இருமுறை நாங்கள் கண்டிப்பாக இறைச்சி உண்போம்,” என்கிறார் நாராயணப்பா. பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு இதுவும் மாறிப்போனது.
நவம்பர் முதல் வாரம் நாராயணப்பா குடும்பம் புச்சர்லா திரும்பியபோது, வயல்களில் வேலை கிடைக்கவில்லை. அனைத்து செலவுகளுக்கும் சேமிப்பையே நம்பியிருந்தனர். கிராமத்தில் உள்ள மற்ற சாதியினர் தானியங்களை பகிர்ந்து கொண்டு அல்லது மற்றவர்களிடம் கடன் வாங்கிக் கொண்டு சமாளித்துக் கொள்கின்றனர். நாராயணப்பா சாதி மக்களிடம் குறைவான தானிய சேமிப்பு மட்டுமே உள்ளது. கிராமத்தில் மற்றவர்களிடம் எளிதில் கடனும் பெற முடியாது.
“நாங்கள் அம்பேத்கரின் மக்கள்,” எனும் நாராயணப்பா, எங்களால் கிராமத்தில் மற்றவர்களிடம் பணம் கடன் கேட்கவோ, தானியங்களை பகிர்ந்து கொள்ளவோ முடியாது என விளக்குகிறார். அவர் தனது சாதிப் பெயரை (மடிகா) குறிப்பிட விரும்பவில்லை. தெலுங்கில் சில சமயம் இழிவாகவும் அது பயன்படுத்தப்படுகிறது. மற்றவர்களுக்கு முன் தான் கஷ்டப்படுவதை காட்டிக்கொள்ளவும் அவர் விரும்பவில்லை. “எங்களுக்கும் கவுரவம் உள்ளது,” என்கிறார். “யாராவது எங்களுக்கு உணவுக் கொடுத்தால், நாங்கள் ஏற்பதில்லை. நாங்கள் கொஞ்சமாக கூட சாப்பிட்டுக் கொள்கிறோம். ஆனால் நன்றாக சாப்பிட்டதாக அவர்களிடம் கூறிக் கொள்கிறோம்.”