துளு நாட்டின் கர்னால் சாய்பேர் அல்லது பட்டாசுக் கைவினைஞர்கள், கடலோர கர்நாடகத்தின் பல பண்பாட்டு நிகழ்வுகளில் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள். பூத கோலா, திருவிழாக்கள், திருமணங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், புதுமனை புகுவிழாக்கள், இறுதிச் சடங்குகள் ஆகியவற்றில் இவர்களது பங்கேற்பு மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாகும்.

‘கர்னால்’ என்றால் பட்டாசு என்று பொருள். ‘சாய்பேர்’ என்பது முஸ்லிம் நபரை குறிக்கும் சொல்.

தனது தந்தை இந்தக் கலையை தமக்கு கற்றுத் தந்ததாகக் கூறுகிறார் முல்கி நகரைச் சேர்ந்த கர்னால் சாய்பேரான அமீர் உசேன். தமது பரம்பரையில் இந்த தொழிலை ஒவ்வொருவரும் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்து இதுவரை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

“பட்டாசுகளை வீசுவதும், கையாளுவதும் - குறிப்பாக பெரிய பட்டாசுகள் - ஆபத்தான வேலை,” என்கிறார் நிதேஷ் அஞ்சான். இவர் கர்நாடகத்தில் உள்ள மணிபால் உயர்கல்விக் கழகத்தில் ஆய்வு உதவியாளராக இருக்கிறார்.

உடுப்பி மாவட்டம், ஆத்ராடி என்ற ஊரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞரான முஷ்டாக் ஆத்ராடி பட்டாசுகள் செய்து பூதச் சடங்குகளில் வீசுகிறார். குறிப்பாக, இவர் கதோனி எனப்படும் சக்தி வாய்ந்த பட்டாசு செய்வதில் கெட்டிக்காரர். “கதோனி என்பது மாறுபட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு, உருவாக்கும் வெடிக்கும் பொடி,” என்கிறார் இவர். கதோனி வெடித்தால், நிலமே அதிரும் என்று சொல்லப்படுவது உண்டு.

காணொளி பாருங்கள்: துளுநாட்டின் கர்னால் சாய்பேர்கள்

பூத கோலா நிகழ்வுகளில் பட்டாசு வெடிப்பதைக் காணக் கண்கோடி வேண்டும். துளு நாட்டில் பூத வழிபாடு என்பது பல நூற்றாண்டுகளாக நடப்பது. கோலா (நிகழ்த்துதல்) என்பது பூத வழிபாட்டு மரபோடு தொடர்புடைய ஒரு சடங்கு. நாதஸ்வரம், தாசே போன்ற பாரம்பரியக் கருவிகளின் இசையும், கர்னால் (பட்டாசு) வெடிக்கும் சத்தமும் பூத கோலா நிகழ்வின் உள்ளுறையான அம்சங்கள். பார்க்க: துளு நாட்டின் ஒத்திசையும் பாரம்பரிய பூதாக்கள்

கோலா நிகழ்வின்போது, திரி கொளுத்தப்பட்ட பட்டாசுகளை வானத்தை நோக்கி வீசுகிறார்கள் கர்னால் சாய்பேர்கள். இந்த வாண வேடிக்கைகள் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன.

பூத வழிபாடு பல சமூகத்தவர் ஒன்றிணைய வழி செய்கிறது என்கிறார் பேராசிரியர் பிரவீண் ஷெட்டி. “துளு நாட்டின் பூத வழிபாட்டு சம்பிரதாயங்களில் பொதுவாக இன்று இந்து சமூகங்களுக்குத் தரப்படும் விதிமுறைகளும், கடமைகளும்தான் இடம் பெறுகின்றன. ஆனால், கால ஓட்டத்தில், பூத வழிபாட்டில், முஸ்லிம் சமூகங்களும் இடம் பெறத்  தொடங்கின என்பது சுவாரசியம். அவர்கள் இந்த சடங்கில், ஒன்று பட்டாசுகள் வீசுகிறார்கள், அல்லது கோலா நிகழ்வுக்கு இசை வழங்குகிறார்கள்.”

“பட்டாசுகள் அறிமுகமான பிறகு, பூத கோலா சடங்குகள் பிரம்மாண்டமாக, கண் கவரக்கூடியதாக மாறின,” என்கிறார் பேராசிரியர் ஷெட்டி. உடுப்பியில் உள்ள மணிபால் உயர்கல்விக் கழகத்தில் துளு பண்பாட்டு வல்லுநராக உள்ளார் இவர்.

அமீரும், முஷ்டாக்கும் வர்ண ஜாலம் காட்டி இரவு வானத்தை ஜொலிக்க வைப்பதை காணொளியில் பாருங்கள். ஒத்திசைவும், பொது மரபும் கொண்ட, பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை இவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

இந்த செய்தி, மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளை (MMF) ஆய்வுதவித் திட்டத்தின் ஆதரவோடு தயாரிக்கப்பட்டது.

முகப்பு படம்: சித்திதா சொனாவனே

மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்

Faisal Ahmed

উপকূলবর্তী কর্ণাটকের মালপে-নিবাসী তথ্যচিত্রনির্মাতা ফৈজল আহমেদ অতীতে তুলুনাড়ুর জীবন্ত ঐতিহ্য ঘিরে তথ্যচিত্র পরিচালনার কাজে যুক্ত ছিলেন মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশনের সঙ্গে। তিনি ২০২২-২৩ সালের এমএমএফ-পারি ফেলো।

Other stories by Faisal Ahmed
Text Editor : Siddhita Sonavane

সিদ্ধিতা সোনাভানে একজন সাংবাদিক ও পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার কন্টেন্ট সম্পাদক। তিনি ২০২২ সালে মুম্বইয়ের এসএনডিটি উইমেনস্ ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর হওয়ার পর সেখানেই ইংরেজি বিভাগে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে যুক্ত আছেন।

Other stories by Siddhita Sonavane
Translator : A.D.Balasubramaniyan

A.D.Balasubramaniyan, is a bilingual journalist, who has worked with leading Tamil and English media for over two decades from Tamil Nadu and Delhi. He has reported on myriad subjects from rural and social issues to politics and science.

Other stories by A.D.Balasubramaniyan