தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டம் கும்மடிடாலா வட்டாரத்தில் உள்ள டோமாடுகு கிராம செங்கல்சூளையில் வைதேகியும், அவரது கணவரும் பத்தாண்டுகளாக வேலை செய்கின்றனர். நுவாபடா மாவட்டம் குரும்புரி ஊராட்சியிலிருந்து ஆண்டுதோறும அவர்கள் இங்கு வருகின்றனர். “நாங்கள் சேத்திடம் இருந்து ரூ.20,000 முன்பணம் பெற்றோம்,” என்கிறார் வைதேகி. கூடுதலாக சூளை உரிமையாளர் தினந்தோறும் ரூ.60 உணவுக்கு தருகிறார். “தயவுசெய்து சேத்திடம் குறைந்தது ரூ.80 கொடுக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் நாங்கள் அரை வயிற்றுடனாவது தூங்க முடியும்.”
தெலங்கானாவில் உள்ள ரங்காரெட்டி, சங்காரெட்டி, யாததரி புவனகிரி மாவட்டங்களில் உள்ள செங்கல்சூளைகளுக்கு மறுமுறை சென்றபோது, 2017ஆம் ஆண்டு நான் வைதேகி குடும்பத்தைச் சந்தித்தேன்.
இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன், 1990களில் காலாஹண்டி,(இப்போது நுவாபடா மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது) அருகில் உள்ள பொலாங்கிர் (அல்லது பாலாங்கிர், இப்போது சோனிப்பூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டு சுபர்னப்பூர் என அழைக்கப்படுகிறது) புலம்பெயர்வு குறித்து ஆராய்ந்து, செய்தி சேகரித்தபோது, நான் நான்கு வகையான புலம்பெயர்வுகளை கடந்து வந்தேன்:
தினக்கூலி தொழிலாளர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், உணவக தூய்மையாளர்கள் மற்றும் பிற வடிவிலான வேலைக்கு ராய்ப்பூர் நகருக்கு (இப்போது சத்திஸ்கரின் தலைநகரமாக உள்ளது) புலம்பெயர்ந்தவர்கள்; நல்ல பாசன வசதிகள் நிறைந்த பர்கார், சம்பல்பூர் மாவட்டங்களுக்கும், டெல்லி, மும்பை மற்றும் பிற நகரங்களுக்கு கட்டுமானத் தொழிலாளர்களாகச் சென்ற இளைஞர்கள்; ஆந்திர பிரதேசத்தில் உள்ள செங்கல் சூளைகளுக்குச் சென்ற குடும்பங்கள் (கடலோர ஒடிசாவிற்கும் பிறகு சென்றனர்).
கலாஹண்டி, பாலாங்கிர் பகுதிகளில் பஞ்சம் போன்ற சூழல் ஏற்பட்டதால் 1960களின் மத்தியில் புலம்பெயர்வு தொடங்கியது. 80கள், 90களின் பிற்பகுதியில் வறட்சி, பயிரிழப்பு, கடன் காரணமாக மக்கள் புலம்பெயர்ந்தனர். செங்கல் சூளைகளில், சூளை உரிமையாளர்கள் ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்தோரின் சூழலை சாதகமாக்கிக் கொண்டு, உள்ளூர் தொழிலாளர்களைவிட குறைவான ஊதியத்தை தருகின்றனர். கணவன்,மனைவி, ஒரு மூத்த தொழிலாளரை கொண்டது ஒரு தொகுப்பாக கருதப்படுகிறது. ஒவ்வொரு தொகுப்பும் ரூ.20,000 - ரூ.80,000 வரை முன்பணமாக பெறுகின்றனர்.
இதற்கு மாற்றாக, ஒடிசாவில் உள்ளூர் திருவிழாவிற்குப் பிறகு அக்டோபர் –நவம்பர் மாதங்களில் அறுவடை முடிந்ததும் குடும்பங்களாக அவர்கள் புலம்பெயரத் தயாராகின்றனர். டிசம்பர் – ஜனவரி மாதங்களில் ஒப்பந்தக்காரர்கள் சூளைகளுக்குப் பணியாளர்களை அழைத்துச் செல்கின்றனர். அங்கு அவர்கள் ஜூன் வரை வேலை செய்கின்றனர். பிறகு மழைக்கால தொடக்கத்தில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புகின்றனர். அங்கு அவர்கள் தங்களின் சிறிதளவிலான சொந்த நிலத்தில் அல்லது பிறரது நிலங்களில் விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.
முந்தைய கடன்கள் அல்லது திருமணங்கள், காளைகள் வாங்குவதற்கு, மருத்துவக் கட்டணம் செலுத்த, பிற செலவுகளுக்கு பணியாளர்கள் முன்பணத்தை செலவிடுகின்றனர். சூளையில் ஒவ்வொரு ‘தொகுப்பிற்கும்‘ ரூ.60 குடும்பத்தில் எத்தனை நபர் இருந்தாலும் உணவுத் தொகையாக கொடுக்கப்படுகிறது. பருவத்தின் முடிவில், இத்தொகையுடன் முன்தொகையும், அறுத்த செங்கற்களின் எண்ணிக்கையுடன் கணக்கிடப்படுகிறது.
ஒவ்வொரு 1,000 செங்கற்களுக்கும் ஒவ்வொரு மூன்று நபர் தொகுப்பும் ரூ.220 முதல் ரூ.350 வரை ஈட்டுகின்றனர். சூளை உரிமையாளர் அல்லது ஒப்பந்தக்காரருடன் ஏற்படும் சமரசத்தை பொறுத்து இத்தொகை அமைகிறது. ஒவ்வொரு தொழிலாளர் குழுவும் சுமார் ஐந்து மாதங்களில் 1,00,000 முதல் 4,00,000 எண்ணிக்கையிலான செங்கற்களை அறுக்கின்றனர். மூன்று தொழிலாளர் தொகுப்புடன் வேறு யாராவது உடற்தகுதியுடன் உள்ள குடும்ப உறுப்பினரின் உதவியை சார்ந்து இது அமைகிறது. ரூ.20,000 முதல் மிக அரிதாக அதிகபட்சம் ரூ.1,40,000 வரை வழங்கப்படுகிறது. தினமும் வழங்கப்படும் ரூ.60 படி, மற்றும் முன்தொகை கழிக்கப்பட்டதும், சில தொழிலாளர்கள் கடுமையான சூளை பருவம் முடியும்போது கடனாளி ஆகின்றனர்.
தமிழில்: சவிதா